உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

திரைப்பட விருது வழங்கும் விழா

பகுதி 1 · 1 / 2

திரைப்பட விருது வழங்கும் விழா

தேர்தல் வந்தால் அதற்கு முன்பு இதுபோன்ற திரைப்பட விருது வழங்குகின்ற விழா வருகிறதென்று - பஞ்சு அருணாசலம் சொன்னார். அது உண்மையல்ல. நாங்கள் விருது வழங்குகின்ற விழா வைத்தாலே தேர்தல் வந்து விடுகிறது. (பலத்த சிரிப்பு) அதுதான் உண்மை.

இந்த விருதுகள் வழங்குவதற்காக, படங்கள் கடந்த ஐந்தாறு மாத காலமாக நீதியரசர் கோகுல் அவர்கள் தலைமையிலே பார்வையிடப்பட்டு, பரிசுகள் எல்லாம் யார் யாருக்கு என்று வகுக்கப்பட்டு - அந்தப் பட்டியல் எல்லாம் தயாரிக்கப்பட்டு - வெளியிடப்படுகின்ற நேரத்திலேதான் தேர்தல் அறிவிப்பு வந்தது. இதுவும் ஒரு தேர்தல் தானே? விருதுகள் யார் யாருக்கு வழங்கப்படுவது என்று தேர்ந்தெடுப்பதும் ஒரு தேர்தல்தானே? இந்தத் தேர்தலும் அந்தத் தேர்தலும் ஒட்டி வந்திருக்கின்றன.

இந்தத் தேர்தலை முன்னிட்டு இந்தத் திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறவில்லை. அது தேர்தலுக்குப் பயன்படக் கூடாது என்பதற்காகத்தான் தேர்தல் ஆணையத்தினுடைய விருப்பப்படி அல்லது உத்தரவுப்படி இன்றைக்கு வழங்கப்பட வேண்டிய எம்.ஜி.ஆர். விருது வழங்கப்படவில்லை. ஏனென்றால்

தேர்தலிலே வேட்பாளராக நிற்கின்ற ஓர் அரசியல் வாதிக்கு அரசு விழாவிலே விருது வழங்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் விதி வகுத்திருக்கின்ற காரணத்தால் - எம்.ஜி.ஆர். விருது யாருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதோ அவர் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெயரைச் சொல்லுவது கூட ஒருவேளை தேர்தல் விதிமுறைக்கு விரோதமாக இருக்குமோ என்பதால்தான் அரசியல் நாகரிகத்தோடு பெயரையும் சொல்லாமல் விடுகிறேன்.

சிறந்த படங்கள் என்ற வரிசையிலே ‘இந்தியன்’ படம் முதல் பரிசைப் பெற்றிருக்கிறது. நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். தம்பி கமல் அவர்கள் அதனைப் பார்க்குமாறு எனக்கு அன்புக் கட்டளை பிறப்பித்தார். படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தோடு ஒன்றிப் போகின்ற - மெய்மறந்த நிலைக்கு ஆளானேன். அந்தப் படம் முதல் பரிசைப் பெற்றிருப்பதில் வியப்பு ஏதும் இல்லை என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘காதல் கோட்டை’ நான் பார்க்கவில்லை. வயது 74 அதனால் பார்க்கவில்லை (பலத்த கைதட்டல்) அந்தப் படம் இரண்டாவது பரிசு பெற்றிருக்கின்றது. பாராட்டுகிறேன். “புருஷன் பொண்டாட்டி” மூன்றாவது பரிசைப் பெற்றிருக்கின்றது.

‘கருவேலம்பூக்கள்’ சிறப்புப் பரிசு பெற்றிருக்கின்றது.

பெண்களைப் பற்றிய சிறந்த கதை என்பதற்காக மற்றொரு சிறப்புப் பரிசை ‘கோகுலத்தில் சீதை’ என்ற திரைப்படம் பெற்றிருக்கின்றது.

சிறந்த நடிகர் என்பதற்கான விருது கலைஞானி கமல் அவர்களுக்குக் கிடைத்திருப்பதும் ஆச்சரியமான ஒன்றல்ல.

அதைப்போல சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசு தம்பி விஜயகாந்த்துக்குக் கிடைத்திருப்பதும் ஆச்சரியமான ஒன்றல்ல.

திரைப்பட இயக்குநர்களில் புரட்சிகரமான படங்களை எதற்கும் துணிந்து தணிக்கைக்குப் பயப்படாமல், தணிக்கையின் காரணமாகவே தடைப்படுத்தப் பட்டாலும் பரவாயில்லை என்ற இலட்சிய நோக்கோடு படம் தயாரிக்கின்ற - இயக்குகின்ற தம்பி ஆர்.கே. செல்வமணி திரைப்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்த ராஜா சாண்டோ விருதினைப் பெற்றிருக்கிறார்.

நான் முதலிலே குறிப்பிட்டதைப் போல - பஞ்சு அருணாசலம் கவிஞர் கண்ணதாசன் விருதினைப் பெற்றிருக்கிறார்.

அண்ணா விருது தம்பி லியாகத் அலிகானுக்குக் கிடைத்திருக்கிறது. அவர் எழுத்தாளர் என்ற முறையிலே அந்த விருதினைப் பெற்றிருக்கிறார். நானும் ஒரு எழுத்தாளன் என்ற முறையிலே அவர் இந்த விருதினைப் பெற்றதற்காகப் பெருமையடைகிறேன்.

தம்பி சார்லி நகைச்சுவை எப்படி இருக்க வேண்டும், நகைச்சுவையோடு எப்படிக் கருத்துக்களைக் குழைத்துத் தர வேண்டும் என்பதற்கான இலக்கணமாகத் திகழ்ந்த மறைந்த கலைவாணர் - யாருடைய பெயரால் இந்த அரங்கம் அமைந்திருக்கின்றதோ அந்தப் பெயருக்குச் சொந்தக்காரரான கலைவாணர் விருதினைப் பெற்றிருக்கிறார்.

தமிழகத்திலே மாத்திரமல்லாமல், இந்தியத் திருநாட்டிலே மாத்திரமல்லாமல், அனைத்துலக நாடுகளிலும் இசை வெள்ளம் பாய்ச்சிக் கொண்டிருக்கின்ற தம்பி ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்குச் சிறந்த இசை அமைப்பாளர் என்கிற விருது கிடைத்திருப்பது பற்றி

முதல் பதிப்பு 2000