உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

தமிழிசை இயக்கம்

பகுதி 2 · 2 / 2

தமிழிசை இயக்கம் முன்னேறியிருக்கிறதா என்றால், இல்லை என்றே ஒப்புக்கொள்ள வேண்டும்.

இந்த இயக்கம் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது? ஆண்டுக்கொருமுறை அண்ணாமலை மன்றத்தில் ஐந்தாறு நாட்கள் தமிழிசை விழாவோடு இருக்கிறதே தவிர, அகில இந்தியாத் தமிழிசையை நாம் வளர்க்கவில்லை.

சென்னையில் நடைபெற்ற தமிழிசை விழாவில் கலந்து கொண்டு நான் பேசியபோது “சங்கீதத்திற்கு மொழியில்லை, சாதியத்திற்குத்தான் மொழியுண்டு” - என்று பேசினேன்.

சங்கீதத்திற்கு மொழியில்லை என்று நான் பேசியதைச் சாதகமாக எடுத்துக் கொண்டு சில ஏடுகளில் என் பேச்சைப் போட்டிருக்கிறார்கள். இதுவரை என் பேச்சை அவ்வளவு அதிகமாக அவர்கள் போட்டதில்லை. இத்தனைக்கும் நான் செய்த குற்றம் என்ன என்று பார்த்தால் - (தமிழினத்திற்கு ஏதாவது குற்றம் செய்திருந்தால்தான் அங்கே நம்முடைய பேச்சு வரும்) சங்கீதத்திற்கு மொழியில்லை. சாதியத்திற்குத்தான் மொழியுண்டு என்று சொன்னதுதான்.

சங்கீதம் நாதசுரத்தின் வழியாக வருகிறபோது மொழியில்லை.

புல்லாங்குழல் வழியாக வருகிறபோது மொழியில்லை!

வீணையில் பிறக்கிறபோதும், மொழியில்லை; பிடிலில் வருகிறபோதும் மொழியில்லை.

ஆனால், இசைவாணரின் குரலில் வருகிறபோது அந்த சங்கீதத்திற்கு மொழி உண்டு.

இந்த மொழி சொந்த மொழியாக இருக்க வேண்டும் - அந்த மொழி தமிழ்மொழிதானே!

சங்கீதத்திற்கு மொழியில்லை என்று நான் சொல்கிறேன் என்ற முறையில் சிலர் உபதேசம் செய்யப் புறப்பட்டிருப்பதற்காக வருத்தப்படுகிறேன்.

தமிழிசையில் இப்போது சொல்லப்படுகின்ற சொற்கள் பழந்தமிழில் இருக்கின்றன.

சுரங்கள், ராகங்கள், பாவங்கள், தாளங்கள் இவைகளெல்லாம் வேறு மொழி; தமிழுக்குச் சொந்தமல்ல என்பவர்களும் இருக்கிறார்கள்.

காலையில் பாடுகின்ற பாடல் பூபாளம், அது பழந்தமிழ் இலக்கியத்தில் ‘மருதப்பண்’ என்று கூறப்படுகிறது.

மாலையில் பாடப்படுவது சங்கராபரணம் - அது செவ்வழிப்பண் என்று கூறப்படுகிறது.

ஆரோகணம் - அவரோகணம் - கமகம் என்பவைத் தமிழில் ஏற்றம் - இறக்கம் - அலுக்கல் எனக் கூறப்படுகிறது.

நமக்குப் பெரும்பாலும் புரிந்த மொழியில் சொல்வது புரியாது; புரியாத மொழியில் சொல்வதுதான் புரியும்.

தமிழர்களுக்கு மத்தியில் தமிழிசையைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழிசையை வளர்க்கும் முறையில் தமிழகமெங்கும் தமிழிசை விழாக்கள், மாநாடுகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்தாக வேண்டும்.

1972-ஆம் ஆண்டு சனவரி 29-ஆம் நாள் மதுரை தமிழர் இசை இயக்க மாநாட்டில் பேசியது.

முதற் பதிப்பு : மே 2000