உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

தமிழிசை இயக்கம்

பகுதி 1 · 1 / 2

தமிழிசை இயக்கம்

தமிழிசை வளர வேண்டும் - வாழ வேண்டும் - என்று பாடுபட்டு வருகின்ற இந்த நேரத்தில் தமிழர் இசை இயக்கம் என்ற புதிய பெயரில் மாநாடு நடத்தப்படுவது வியப்பைத் தருகிறது.

தமிழ்நாட்டில் வழங்குகின்ற இசையில் தமிழ் இசை எதுவென நிர்ணயிக்க முடியாத நிலை வளர்ந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

தமிழ் இசைக்கும் - தமிழர் இசைக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

தமிழர் இசை என்பது, தெலுங்கு இசை வேறு பல மொழிகளின் இசையாக இருந்து வருகின்ற இந்தக் காலத்தில், துணிச்சலாகத் தமிழ் இசை என்றே அழைப்பதுதான் நல்லது.

இதுபோன்ற மாநாடுகளைக் கூடும்போது தமிழ் இசை என்னும் பெயரிலேயே கூட்ட வேண்டும்.

“தமிழிசைதானே தமிழரிசை! தமிழர்கள்தானே பாடுகிறார்கள்! ஆகவே அது தெலுங்கு இசையாக இருந்தாலும் அதுவும் தமிழர் இசைதானே என்பார்கள்!”

ஆகவே தமிழிசை என்றே அழைக்க வேண்டும்.

1940-ஆம் ஆண்டுவரை தமிழிசைக்குப் பணிபுரிய யாரும் துணிந்து முன்வந்திடவில்லை.

1940-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தபோது, இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பொற்றமிழை அளித்துத் தமிழிசை ஆக்கத்திற்காகப் பணியாற்ற வேண்டும்; தமிழிசையை வளர்க்க வெற்றிகரமாக ஈடுபட வேண்டும் என்று சொன்னார்.

அதைத் தொடர்ந்து தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றவர்களும் இசையை வளர்க்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்கள்.

இன அடிப்படையிலும், அரசியல் ரீதியிலும் அதை எடுத்துக் கொண்டார்கள் என்பதை அரசியல் வரலாற்றை அறிந்தவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.

தமிழிசை இயக்கத்தில் அரசியலைக் கலக்க விரும்பவில்லை; எண்ணிடவில்லை. ஆனால் தமிழிசை இயக்கம் தொடங்கிய காலத்தில் எவ்வளவு எதிர்ப்புகளைத் தாங்கியிருக்கிறார்கள் என்பதை அறிவீர்கள்.

நான் ஈரோட்டில் “குடியரசு” அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திருவையாறு தியாகேசர் திருநாளையொட்டி இசை விழாக்கள் நடைபெற வழக்கம்போல்!

விழாவில் பங்குகொண்ட இசைவாணர் ஒருவர் அன்றைய தினம் மேடையில் அமர்ந்ததும், தமிழிசைப் பாடல்களையே பாடி நிகழ்ச்சியை முடித்துவிட்டு இறங்கினார்.

அடுத்து, ஒருவர் இசை நிகழ்ச்சியை நடத்த வந்தவுடன் “இந்த மேடையைச் சுத்தம் செய்து புண்யா வசனம் நடத்தித் தோஷம் கழித்தால்தான் மேடை ஏறுவேன்” என்று கூறி அந்தக் காரியங்கள் எல்லாம் நடந்த பிறகு தமது இசையைப் பொழிந்து முடித்தார்.

அதை வைத்துத்தான் ‘தீட்டாயிடுத்து?’ என்று தலையங்கம் எழுதினேன்.

“தமிழிசை நடத்திய மேடையைத் தோஷம் கழித்த காரியம் நடக்கிறது. தமிழர்கள்தான் வாழ்கிறார்களா?” என்று எழுதி முடித்திருந்தேன்.

அந்த அளவு எதிர்ப்புகளைத் தாங்க வேண்டியிருந்தது.

முதற் பதிப்பு : மே 2000