சுதந்திர தின பொன்விழா
பகுதி 2 · 2 / 2
கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்று காந்தியடிகள் சொன்ன வாசகத்தை மறவாமல் - நாடு, நகரம், கிராமம், குக்கிராமம், பட்டி தொட்டி அனைத்திலும் இந்த அரசின் பணிகள் பரவலாக நடைபெறுவதற்கு கட்சிச் சார்பற்ற முறையில் அனைத்து மக்களின் அன்பான ஆதரவும் வேண்டப்படுகிறது.
அடிப்படை வசதிகளான பாதுகாக்கப்பட்ட குடி தண்ணீர், சாலை வசதி, மின்சாரம், மருத்துவ வசதி, உணவு, உடை, உறையுள் போன்ற மக்களின் குறைந்த பட்ச தேவைகளை நிறைவு செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கித்தான் இந்த அரசின் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
தியாகங்கள் பல செய்து இந்தத் திருநாட்டை மீட்டவர்கள் நாட்டின் நலிவு போக்க நாளும் உழைத்திடும் நல்லவர்கள் - அனைவரும் காணும் கனவுகளை நிறைவேற்றிடத் தொடர்ப்பயணம் மேற்கொண்டிருக்கும் நாம், அந்தத் தியாக சீலர்களைப் போற்றிப் புகழ்வதுடன் நில்லாமல், அவர்தம் வாழ்வில் வறுமைத் தேள் கொட்டாமலும் பாதுகாத்திடும் பொறுப்பையும் ஏற்றுள்ளோம்.
அந்த தியாகிகளின் ஓய்வூதியமாக மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கி வருகிறது தமிழக அரசு!
சுதந்திரம் அடைந்த ஐம்பதாம் ஆண்டு பொன் விழா நினைவாக - இனிமேல் விடுதலைப் போர்த் தியாகிகளுக்கு மத்திய அரசு இந்தப் பொன்விழா ஆண்டில் அறிவிக்கும் ஓய்வூதியப் பயன் எவ்வளவோ - அந்த அளவுக்குச் சமமான பயனை மாநில அரசு ஓய்வூதியம் பெறும் தியாகிகளும் பெற்றிட வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியோடு இங்கே அறிவிக்கிறேன். (பலத்த கைதட்டல்)
சிதம்பரனார் சிறையில் இழுத்த செக்கைத் தேடிக் கண்டுபிடித்து அதனைச் சென்னையில் காட்சிப் பொருளாக வைத்து முதல் ... தியாகத் தலைவர்களின் நினைவாக எத்தனையோ செயல்களை ஆற்றியுள்ள இந்த அரசு; ஆகஸ்டு 31-மதுரையில் நடத்த இருக்கும் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டையொட்டி, அதே நாளில் தியாகச் செம்மல் முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் சிலையமைப்பு விழாவை நடத்த இருக்கிறது. (கைதட்டல்)
நீண்ட காலக் கோரிக்கையாக இருந்துவரும் விசுவநாததாஸ் அவர்கள் வாழ்ந்த மதுரை திருமங்கலம் இல்லத்தை அரசு நினைவகமாக இந்தப் பொன்விழா ஆண்டில் மாற்றிட இருக்கிறது என்பது மட்டுமல்ல; கட்டபொம்மன் வாரிசுகளுக்கும், மருதுபாண்டியர் வாரிசுகளுக்கும், சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கும்
உதவிடுவது போல விசுவநாததாஸ் வாரிசுகளுக்கும் உதவிடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (கைதட்டல்)
சுதந்திர தின வெள்ளிவிழா 1972-ஆம் ஆண்டு நான் அறிவித்தது போலவே; இந்தப் பொன்விழா ஆண்டிலும் சிறைவாழ் கைதிகளுக்கு சலுகைகள் சிலவற்றை அறிவிக்கிறேன்.
பத்தாண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றோருக்கு ஓராண்டு காலத் தண்டனைக் குறைப்பு. இந்தச் சலுகை மூலம் 139 சிறைக் கைதிகள் விடுதலை பெறுவார்கள்.
ஐந்தாண்டுகளுக்கு மேல் பத்தாண்டுகளுக்குள் தண்டனை பெற்றோருக்கு ஓராண்டு காலம் தண்டனைக் குறைப்பு. இதன் மூலம் 24 கைதிகள் விடுதலை பெறுவார்கள்.
ஓராண்டுக்கு மேல் ஐந்தாண்டுகள் வரை தண்டனை பெற்றோருக்கு நான்கரை மாதம் தண்டனைக் குறைப்பு. இதன் வாயிலாக 64 சிறைக் கைதிகள் விடுதலை பெறுவார்கள்.
மூன்று மாதங்களுக்கு மேல் ஓராண்டு வரை தண்டனை பெற்றோர் பாதிக் கால தண்டனை அனுபவித்திருந்தால் மீதிக் காலத் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலையாவார். இதன் மூலம் 166 கைதிகள் விடுதலை அடைவார்கள்.
இதே கைதிகள் பாதிக் காலத் தண்டனை அனுபவிக்காமல் இருந்தால், அவர்களுக்கு மூன்று மாதம் தண்டனைக் குறைப்பு. இந்தச் சலுகை காரணமாக 72 கைதிகள் விடுதலை அடைவார்கள்.
மூன்று மாதமும் அதற்குக் குறைவாகவும் தண்டனை பெற்றோர் அனைவருமே விடுதலையாவார். இந்த வகையில் 89 சிறைக் கைதிகள் விடுதலை ஆவார்கள்.
எனவே தற்போது அறிவிக்கப்படும் இந்தச் சலுகைகளின் பலனாக 554 சிறைக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படுவதோடு, சுமார் 3,300 சிறைக் கைதிகள் தண்டனை குறைப்புப் பயனையும் அடைவார்கள் என்பதை இந்தப் பொன்விழா நாளில் அறிவிப்பதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த அறிவிப்புகள் தேன் குடங்கள் அல்ல; வெறும் தேன் துளிகள்தான் என்பதை நானறிவேன்.
தாழ்த்தப்பட்ட மக்கள் - பிற்படுத்தப்பட்ட மக்கள் - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் - நடுத்தர மக்கள் - அலுவலர்கள் - அனைத்துத் தொழிலாளர்கள் - எல்லோரது பிரச்சினைகளையும் மையமாக வைத்து, அரசின் சக்கரம் சுழல வேண்டுமென்று அண்ணா அவர்களின் வழிநின்று, நாளும் செயல்படும் இந்த அரசு என உறுதி அளிக்கிறேன்.
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை காத்து, தமிழர் கொற்றம் சிறக்கப் பணியாற்றுவோம்!
நாட்டுக்குழைத்த நல்லோர் வழியில் நடை போடுவோம்!
உத்தமர் காந்தியடிகள் - உண்மையே கடவுள் என்றார்!
அறிஞர் அண்ணா - ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார்!
கைமாறு கருதாமல் கடமையைச் செய் என்றார் தந்தை பெரியார்!
உழைப்பே உயர்வு தரும் என்றார் பெருந்தலைவர் காமராசர்!
இவர்கள் எண்ணமெல்லாம் தமிழர் வாழ்வில் வண்ணமாகப் பொலிவுற, இந்தச் சுதந்திரப் பொன்விழா நாளில் தொண்டாற்ற தூய சபதம் ஏற்றிடுவோம்!
- முரசொலி 16-8-97
