உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சுதந்திர தின பொன்விழா

பகுதி 1 · 1 / 2

சுதந்திர தின பொன்விழா

பேரன்பு கொண்டோரே, பெரியோரே, பெற்ற தாய்மாரே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே,

சுதந்திரத் திருநாளில் ஆகஸ்டு 15-ஆம் நாள் தேசியக் கொடியேற்றும் உரிமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதலமைச்சர்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென மத்திய அரசுடன் வாதாடி, இந்தக் கோட்டைக் கொத்தளத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்பு 1974-ல் மகிழ்ச்சியுடன் இந்த மணிக் கொடியை ஏற்றிவைத்திடும் வாய்ப்பு பெற்றிருந்த எனக்கு, இப்போது சுதந்திர நாள் பொன்விழா ஆண்டிலும் இந்தக் கொடியை ஏற்றி வைக்கும் பெரும் பேற்றினை வழங்கியுள்ள தமிழகத் திருநாட்டு மக்கள் அனைவருக்கும் என் இதயமார்ந்த நன்றியையும் - பணிவு மிகுந்த வணக்கத்தையும் - பாசம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் அன்னைத் திருநாடு, அடிமை விலங்கை உடைத்தெறிந்து விடுதலை பெற்று ஆயிற்று ஐம்பது ஆண்டுகள் எனினும்; இன்னமும் நாம் முழுமையான சுதந்திர விடியலை எதிர்பார்த்து வைகறைப் பொழுதிலேதான் இருக்கிறோம் என்பதை மறந்து விடுவதற்கில்லை.

விடுதலை வேட்கை கொண்ட வீரன் ஒருவனைப் பார்த்து வெள்ளைக்கார துரையொருவன்,

“தொண்டு செய்யும் அடிமை - உனக்கு சுதந்திர நினைவோடா? பண்டு கண்டதுண்டோ - அதற்குப் பாத்திர மாவாயோ? சாதிச் சண்டை போச்சோ? - உங்கள் சமயச் சண்டை போச்சோ? நீதி சொல்ல வந்தாய் - கண்முன் நிற்கொணாது போடா!”

என்று கூறியதாகப் பாரதியார் பாடினாரே; அந்தப் பாட்டு இந்தச் சுதந்திரப் பொன்விழா ஆண்டிலும் பாடப்பட வேண்டிய நிலை இருப்பதை எண்ணிடும் போது புண்ணில் வேல்பட்டது போன்ற துடிதுடிப்பும் துன்பமுமன்றோ நம்மைத் துளைத்தெடுக்கிறது!

நினைத்துப் பார்க்க வேண்டாமா; நம் நெஞ்சில் நிழலாட வேண்டாமா; தமது தலைக் குருதியில் நனைத்து உயிர் மூச்சை சுதந்திரக் கொடி பறந்திட காற்றாக வழங்கிய தியாகத் திருவிளக்குகள் எத்தனை பேர் இந்த நாட்டு விடுதலைக்கு அடித்தளமாக அமைத்துள்ளனர்!

தென்னாப்பிரிக்காவில் இனவெறி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையேகி மாண்டுவிட்ட மகளிர்குல இள மணிச்சுடர் தில்லையாடி வள்ளியம்மாளின் தியாகம்தான்; இந்திய நாட்டு விடுதலைப் போராட்டத் தீற்கான உணர்வைத் தனக்கு எழுப்பியது என்றுரைத்த உத்தமர் காந்தியடிகளின் தலைமையில் பெற்ற சுதந்திரத்திற்குப் பொன்விழா - சுதந்திரம் வாங்கித் தந்தவருக்கே என்ன பரிசளித்தது இந்த நாடு!

“என்னைப் பற்றிக் கவலையில்லை - நான் வாங்கித் தந்த சுதந்திரத்தையாவது காப்பாற்றுங்கள்”

என்ற வேண்டுகோளுடன் தானே காந்தியடிகள் கடைசியாகக் கண் மூடியிருப்பார்!

அதை நினைத்தாவது நாம் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்திட இந்நாளில் உறுதி பூணுவோம்.

சுதந்திரமுடன் இயங்கிடும் எத்தனையோ நாடுகளின் நிலையோடு ஒப்பிடுகையில் நமது இந்திய நாட்டு நிலைமை, மற்றிலும் வேறுபட்டது. உள்நாட்டு சச்சரவு வாய்ந்த உணவுதான் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டுமென வேறு நாடுகளில் அறிவுரைகள் செயல் வடிவம் பெறுகின்ற போது, எந்தச் சத்து பற்றியும் கவலை இல்லை, எதையாவது போட்டு, கத்துகிற வயிறை அடைப்பதற்கு உணவு என்ற பெயரால் ஒரு பொருள் கிடைக்குமா என ஏங்குகின்ற ஏழைகள் இங்கே அங்கிங்கெனாதபடி அலைந்து கொண்டிருக்கின்றனர்.

காயும் கதிரவனை மறைக்கக் கையையே குடையாகக் கொண்டும், மழையில் ஒதுங்க மரத்தடியையே மாளிகையாகப் பாவித்தும் நமது மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டவனின் புத்திரர்கள் என்று அன்று அழைக்கப்படுகிற அரிசனங்கள் எனப்படும் ஆதிதிராவிடர் லட்சோப லட்சம் பேர் வாழுகின்ற வீடுகள் குக்கிராமத்துக் குப்பைத் தொட்டிகளாக இருக்கின்றன.

உணவு வழங்கும் உழவன் மானங்காக்க உடை தரும் நெசவாளி - வியர்வைத் துளிகளை தன்னைப் பெற்றெடுத்த இந்திய மண்ணுக்குப் பன்னீர் துளிகளாகத் தெளித்துக் கொண்டிருக்கும் தொழிலாளி - சுரங்கம் தோண்டுவோன் - முத்துக் குளிப்போன் - மீனவன் - உலைக்கூடத்தில் வதைபடுவோன் - மண் சுமப்போன் - மரம் ஏறுவோன் - உடை வெளுப்போன் - முடி திருத்துவோன் - ஏதோ இரண்டெழுத்துப் படித்து எழுத்தா பணி புரிவோன் - இன்னோரன்ன மக்கள் தொகுதியினர் வாழ்விலே இன்பத் தென்றல் வீசிடவில்லை. அதற்காக முயற்சிகள் எடுக்கப்படாமல்

இல்லை. ஆனால், அந்த முயற்சிகள், முழுப் பயனையும் அளித்திடத்தக்க வண்ணம் அமைந்திடவில்லை. ஐந்து பேருக்காகத் தயாரிக்கப்படும் விருந்து, பரிமாறப்படுகிற நேரத்தில் பத்துப் பதினைந்து பேருக்கு என்ற நிலை பெற்று விடுமேயானால், அதனை அருந்தி மகிழ்வதில் முழுமை எப்படி இருந்திட இயலும்?

“எல்லையுடைய புவியின் மீது எல்லையற்ற வளர்ச்சி, சாத்தியமன்று”

என்பதை ஒவ்வொரு தனி மனிதனும் உணர்ந்து, அதற்கேற்ப நடந்தால்தான், வளர்ச்சித் திட்டங்களில் முழுப் பயனைச் சமுதாயம் பெற்றிட முடியும். எத்தகைய பொருளாதார முன்னேற்றத் திட்டங்களைத் தீட்டினாலும், கட்டுக்கடங்காத வகையில் மக்கள் பெருக்கம் செல்லுமேயானால், திட்டப்பட்ட பொருளாதாரத் திட்டங்கள், காட்டில் காய்ந்த நிலவாகத்தான் ஆகிவிடும்.

இத்துணை சிரமங்களுக்கிடையே மக்கள்பணி நடைபெறும் போது அரசின் முயற்சிகளைத் தகர்த்தெறியும் பொருளாதாரக் குற்றவாளிகள் - சமூக விரோதிகள், சாதி சமய வெறி பிடித்தோர்; எரியும் வீட்டில் பிடுங்கியவரை ஆதாயம் என்பதுபோலத் தங்கள் கைவரிசையைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த மக்கள் நல விரோதிகளைத் தடுத்து நிறுத்த - அரசு எடுத்திடும் நடவடிக்கைகளில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பைத் தந்திட வேண்டும்.

கடத்தல்காரர் - கருப்புப் பண முதலைகள் - வரி ஏய்ப்போர் - கலப்பட வணிகர் - பதுக்கல் மனிதர் - ஊழல் பெருச்சாளிகள் - வன்முறை விரும்பிகள் - இவர்களைச் சமுதாயத்தின் ஓர் அங்கம் என்று கூறக்கூட நா கூசுகிறது. சமுதாயத்தை அழிக்கும் புற்று நோயாக அவர்கள் வளர்ந்து வருகிறார்கள். அந்தக் கொடிய நோய் தடுக்கப்பட - அதன் கோரப்பிடியிலிருந்து நமது மக்கள் விடுவிக்கப்பட சபதம் ஏற்கும் ஆண்டாக இந்தப் பொன்விழா ஆண்டு அமைந்திடல் வேண்டும்.

இருள் - மழை - புயல் இவற்றுக்கிடையே மின்னல் வெளிச்சத்தில் வழி தெரிந்து நடப்பதைப் போல இந்த ஐம்பதாண்டு காலமாக இடையில் வந்த நெருக்கடி நெருப்பாற்றையும் கடந்து நிற்பதுதான், நமது இந்திய நாட்டின் ஜனநாயகமாகும்.

ஒரு துணைக் கண்டம் எனக் கூறப்படும் இந்தப் பெரிய நாடு, பெரிய ஜனநாயக நாடாகவும் திகழ்ந்து, மற்ற பல நாடுகளுக்கு மத்தியில் தனது மதிப்பை உயர்த்திக் கொண்டிருப்பதை இந்தப் பொன் விழா ஆண்டில் நினைத்துப் பூரிப்புக் கொள்கிறோம்.

மக்களாட்சியின் மாண்புக்கு தமிழகத்தில் சங்க காலத்திலேயே அடையாளம் உண்டு என்பதை நமது இலக்கியங்கள் அறிவிக்கின்றன. ஊராட்சித் தலைவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டதை உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.

உள்ளாட்சி மன்றங்களில் ஊனமுற்றிருந்த ஜனநாயகத்தைக் குணப்படுத்தி, கடந்த ஆண்டு நடமாட வைத்த பெருமை உங்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசுக்கு உண்டு. அந்த உள்ளாட்சிகளுக்குத் தேவையான நிதியும் - போதுமான அதிகாரப் பொறுப்புகளும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன.

முதற் பதிப்பு : மே 2000