உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சங்ககாலத் தமிழ் நாணயங்கள் நூல் வெளியீட்டு விழா

பகுதி 2 · 2 / 2

நம்முடைய தமிழ்நாட்டினுடைய வரலாறு மன்னிக்க வேண்டும் - தமிழ்நாட்டிற்கென்று ஒரு வரலாறே இல்லை. என்ன இப்படிச் சொல்கிறானே என்று கோபித்துக் கொள்ளக் கூடாது. நான் சொல்வதின் உண்மையான பொருள் - தமிழ்நாட்டிற்கென்று வரலாறே எழுதப்படவில்லை. தமிழ்நாட்டினுடைய

வரலாறு எழுதப்படாததற்குக் காரணம், தமிழ் மன்னர்கள் வாழ்ந்த காலத்திலே வாழ்ந்தவர்கள், அந்த மன்னர்களைப் போற்றவும், புகழவும் பாடல்களை இயற்றினார்களே அல்லாமல், வரலாற்றை எழுத வேண்டுமென்று யாரும் எண்ணவில்லை. அதனால் தான் இந்திய நாட்டு வரலாற்றைப் பற்றி வின்சென்ட் ஸ்மித் சொல்லும் போது, இந்திய நாட்டு வரலாறு காவிரிக் கரையிலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டும்; கங்கைக் கரையிலிருந்து எழுதப்பட்டது தவறு என்று குறிப்பிட்டார்.

அதனையே மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களும் எடுத்துச் சொன்னார்.

அதையேதான் பேரறிஞர் அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே உரையாற்றும் போது “ஆற்றோரம்” என்ற தலைப்பிலே உரையாற்றி இந்திய நாட்டு வரலாறு காவிரிக் கரையிலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். அந்த ஆதங்கம் என்னுடைய உள்ளத்திலே நீண்ட நாட்களாக இருந்த காரணத்தினால், அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிறகு நான் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, டாக்டர் மு.வ. போன்ற பெருமக்களையெல்லாம் அழைத்து, தமிழகத்தின் வரலாற்றை நீங்கள் அனைவரும் சேர்ந்து, ஆய்ந்து, சிந்தித்து, தொகுத்து எழுத வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

“தொல் பழங்காலம்” என்ற அந்தக் காலத்திலே இருந்து அந்த வரலாற்றை அவர்கள் எழுதுவதாக வாக்களித்து எழுதத் தொடங்கினார்கள். தொல் பழங்காலந் தொட்டு இது வரையிலே மூன்று நான்கு பாகங்கள் எழுதி முடிக்கப்பட்டிருக்கின்றன. எந்த வரலாற்றை தமிழகத்தில் எழுத முற்பட்டாலும், அதற்கு பழைய சுவடிகள் எதுவும் நமக்குத் துணையாக இல்லை.

நமக்கு துணையாக நிற்பதெல்லாம் இலக்கியச் சான்றுகள், இலக்கியப் பாடல்கள் - அகநானூறு, புறநானூறு, வேறுபல சங்ககால இலக்கியங்கள் இவைகளை வைத்துத்தான்.

இது இப்படியிருக்கக் கூடுமென்ற யூகத்திலேதான் வரலாற்றை உருவாக்க வேண்டிய சூழ்நிலை தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இருக்கின்றது. அந்தக் குறையைப் போக்குகின்ற அளவில் மேலும் நமக்குத் துணை நிற்கின்ற நிலையில்தான் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அதைப்போல செப்புப் பட்டயங்கள் இருக்கின்றன. நம்முடைய கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெளியிட்டிருக்கின்ற நூலில் காணப்படுகின்ற சங்க காலத்து நாணயங்கள் இருக்கின்றன. இவைகளையெல்லாம் வைத்துத்தான், தமிழ் மன்னர்களுடைய வரலாற்றை, தமிழர்களுடைய நாகரிகத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, தமிழர்களுக்கும் வெளிநாட்டு மக்களுக்கும் இருந்த வாணிபத் தொடர்பையெல்லாம் சொல்ல முடிகிறது.

1956-ஆம் ஆண்டில் திருச்சியில் நடைபெற்ற எங்கள் கட்சியின் மாநில மாநாட்டில் “திராவிடத்தின் உலகத் தொடர்புகள்”, என்ற தலைப்பிலே என்னைப் பேசுமாறு அறிஞர் அண்ணா அவர்கள் பணித்திருந்தார்கள். அவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்காக நான் - திராவிடத்தின் உலகத் தொடர்புகள் என்ற தலைப்பிலே பேசுவதற்காகப் பல நூல்களை எல்லாம் எடுத்துப் படித்தேன். அப்படிப் படித்த நேரத்தில் நம்முடைய உலகத் தொடர்புகளை இதுபோன்ற நாணயங்களின் மூலமாகவும், கல்வெட்டுக்களின் மூலமாகவும், அந்த நாடுகளிலே கிடைக்கின்ற ஆதாரங்களின் மூலமாகவும் அறிந்து கொள்ள முடிந்தது.

அந்தத் தலைப்பிலே இந்தச் செய்திகளையெல்லாம் அன்றைக்கு நான் எடுத்துச் சொன்னேன்.

குறிப்பாக நம்முடைய தமிழ்நாட்டு வரலாற்றை இன்றைக்கும் சுட்டிக் காட்டுகின்ற அளவிற்கு நம்முடைய நாணயங்கள் இருக்கின்றன. இந்த நாணயங்களை எல்லாம் கண்டுபிடிப்பதற்கு நம்முடைய கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார் என்பதை இந்த நூலைப் படிக்கும்போதும், அவர் இங்கே பேசிய அந்த உரையைக் கேட்கும்போதும் நம்மால் உணர முடிகிறது.

அவர்கள் எப்படியெல்லாம் இந்த நாணயங்களைத் தேடி கண்டுபிடித்திருக்கிறார் என்பதை அவரே இப்படிக் குறிப்பிடுகிறார். அதுவும் தற்காலத்திலே - நாணயத்தைத் தேடுவது என்பது சாதாரண காரியமல்ல. நான் அவர் தேடிய நாணயத்தைத்தான் சொல்கிறேன். நீங்கள் எண்ணுகிற நாணயத்தை அல்ல. (கைதட்டல்) அவரே கூறிய வாசகத்தைப் படிக்கும்போது அவர் எவ்வளவு இன்னல்களை இதற்காக ஏற்றுக் கொண்டார், எத்தகைய முயற்சிகளிலே ஈடுபட்டார் என்பது நமக்குத் தெளிவாகின்றது.

அவர் சொல்கிறார்:

“மதுரையில் ஒரு நாணயச் சேகரிப்பாளரிடமிருந்து சில நாணயங்கள் வாங்கினேன். அந்த நாணயத் தொகுப்பில் தமிழ் பிராமி எழுத்துள்ள நாணயம் ஒன்று இருப்பதைக் கண்டேன். இந்த நாணயத்தைப் பார்த்தவுடன் பெருமகிழ்ச்சி அடைந்தேன். இரண்டு குகைக்குள் செல்ல ஏதோ ஒரு ஒளி விளக்குக் கிடைத்தது போல உணர்ந்தேன். பல்லாண்டுகளாகத் தொல் எழுத்து ஆய்வில் ஈடுபட்டிருந்ததால் இந்த நாணயத்தில் உள்ள எழுத்தை என்னால் படிக்க முடிந்தது.

தமிழகத்தில் தமிழ் - பிராமி எழுத்தைப் படிக்க தெரிந்தவர்கள் வெகு சிலரே உள்ளனர். தமிழ்த்தாயின் அருளாலேயே இந்த நாணயம் என் கைக்குக் கிடைத்ததாகக் கருதுகிறேன். அழுக்கும் பாசியும் பிடித்திருந்த நாணயத்தை மதுரையில் வைத்தே

தூய்மை செய்து பல மணி நேரம் எழுத்துக்களின் அமைப்பை உற்று உற்று நோக்கினேன். பிறகு சென்னைக்குத் திரும்பி உருப்பெருக்குக் கண்ணாடி கொண்டு (எவ்வளவு அழகான தமிழ்ச்சொல் - பூதக் கண்ணாடி என்பதற்குப் பதிலாக) பல மணி நேரம் எழுத்துக்களை வரிசைப்படுத்தி எழுதிப் பார்த்தேன். ‘பெருவழுதி’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்ததை உறுதிப்படுத்திக் கொண்டேன்.”

இப்படி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட பெருவழுதி என்ற பெயர்தான் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆவான். இது சங்ககால பாண்டிய மன்னனைக் குறிப்பதாகும். அந்தப் பாண்டிய மன்னன் பெருவழுதி காலத்து நாணயம்தான் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கண்டுபிடித்த அந்த நாணயம் என்பதை எண்ணும்பொழுது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

ஒரேயொரு வருத்தம் எனக்கு உண்டு - இந்த மேடையில், அந்த அழுக்குப் படிந்த நாணயத்தை முதன் முதலாக இவருடைய கையிலே கொடுத்தவர் - மதுரையைச் சேர்ந்த ஒரு நண்பர். இங்கே மற்றவர்களுக்கெல்லாம் பெரிய வெள்ளிக் கட்டுக் கொடுத்து விட்டு - அவருக்கு மாத்திரம் சின்ன வெள்ளித் தட்டை இந்த நிறுவனத்தின் சார்பில் வழங்கியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை உருப்பெருக்கும் கண்ணாடியால் (பலத்த கைதட்டல்) நாணயத்தைப் பார்த்த மாதிரி - இந்த சின்ன வெள்ளித் தட்டையும் அவர் பார்த்துக் கொள்ளட்டும் (பலத்த கைதட்டல்) என்பதற்காக கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு நகைச்சுவையாக அதனை அளித்திருப்பாரோ என்று நான் எண்ணுகிறேன்.

அதன் பிறகு பாயும் புலி உள்ள நாணயங்களையும் கண்டுபிடித்து, அவை சங்ககாலச் சோழர் நாணயங்கள் என்பதையும் கிருஷ்ணமூர்த்தி உணர்த்தியிருக்கிறார்.

தொடர்ந்து 86-ம் ஆண்டு கரூரிலிருந்து வில், அம்பு பொறிக்கப்பட்ட சங்க காலச் சேரர்களின் செப்பு நாணயங்களும் இவரால்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது தமிழ்நாட்டிலே உள்ள சில அறிஞர்கள் எல்லாம் தென்னகத்திலே குறிப்பாக தமிழகத்திலே இந்த நாணயங்கள் பழக்கத்திலே இல்லை என்கிற ஒரு தவறான கருத்தை வெளியிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அந்தக் கருத்தை முறியடிக்கும் வகையில் இந்த நாணயங்களை எல்லாம் கண்டுபிடித்து வெளியிட்ட பெருமை நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவர்களைச் சாரும் (கைதட்டல்) என்பதை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

நாறாண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய அறிஞர் வால்டர் எலியட் என்பான் தமிழக நாணயவியல் துறைக்குச் செய்த பணி பாராட்டுக்குரிய பணி என்று அனைவரும் போற்றுவார்கள். அந்த வால்டர் எலியட், லண்டன் மாநகரிலிருந்து 1886-ஆம் ஆண்டில் “தென்னிந்திய நாணயங்கள்”, என்னும் நூலை வெளியிட்டார். அந்தச் செய்தி நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இனிக்கிறதோ; அதைப் போலத்தான் இன்று கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெளியிட்ட இந்த நூலும் நமக்குச் சந்தோஷமாக இனிக்கிறது என்பதை நான் இங்கே எடுத்துக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அது மாத்திரம் அல்ல. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய ஆற்றலால் தட்டச்சு இயந்திரத்திலே தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தும் போது உருவாகின்ற நடைமுறைச் சிக்கல்களையெல்லாம் சீர்படுத்த முனைந்து வரிவடிவ சூத்திரத்தையும் அவர் கண்டுபிடித்திருக்கிறார். அதையே பயன்படுத்தி ‘லைனோ-டைப் மெஷின்’ என்ற அச்சுக் கோப்பு முறையை

அறிமுகப்படுத்தியவரும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தான் என்பதை எண்ணும்பொழுது நான் அவரை மேலும் மேலும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

கம்ப்யூட்டரிலே, கணிப்பொறியிலே தமிழ் வரிவடிவங்களைப் பயன்படுத்துவதற்குரிய சூத்திரம் (பார்முலா) இல்லாத காரணத்தால், கணிணியில் தமிழைப் பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது. அதற்குரிய கம்பி வரி வடிவ சூத்திரத்தை கம்ப்யூட்டர் பொறியாளர்களின் தொழில் நுட்ப ஒருங்கிணைப்போடு கண்டுபிடித்துக் கொடுத்து மிகப் பெரிய சாதனை இவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இவருடைய கண்டுபிடிப்பு முறை - கிருஷ்ணமூர்த்தி டிசைன் - என்று அழைக்கப்படுகிறது ஒன்றே அதற்குப் பொருத்தமான ஒன்றாகும்.

அவரது இந்த நூல் அழகானது. அறிவுப்பூர்வமாக ஆய்வு செய்து அகழ்ந்தெடுத்து, நம்முடைய கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழர்களுடைய வரலாற்றுக்கு புதிய வரலாற்றைத் தொடங்குவதற்கு இந்தப் பழைய வரலாறு பயன்படும் என்ற என்னுடைய நம்பிக்கையைத் தெரிவித்து - வாழ்க கிருஷ்ணமூர்த்தி என்று வாழ்த்துகிறேன்.

- முரசொலி 2.9.97

முதற் பதிப்பு : மே 2000