சங்ககாலத் தமிழ் நாணயங்கள் நூல் வெளியீட்டு விழா
பகுதி 1 · 1 / 2
சங்ககாலத் தமிழ் நாணயங்கள்
நூல் வெளியீட்டு விழா
இது ஒரு நல்ல மாலைப்பொழுது! மாலை பெரிதாக அணிவித்ததால் மாலைப் பொழுது என்று கூறவில்லை. (கைதட்டல்). நம்முடைய பழந்தமிழகத்தை எண்ணிப் பார்க்கவும், பழைய மன்னர்களுடைய வரலாற்றுச் சிறப்பை சிந்தித்துப் போற்றவும், மறைக்கப்பட்டுள்ள அந்த கருவூலங்களை எல்லாம் எதிர்காலத்திலாவது இளைய சமுதாயத்திற்குத் தெரியப்படுத்த வேண்டுமென்ற ஊக்கத்தைப் பெறவும் இந்த மாலைப்பொழுதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை அன்பிற்குரிய தினமலர் ஆசிரியர் இரா.
கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அவருக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களையும் இனிய பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தினமலர் கிருஷ்ணமூர்த்தி! அவருடைய நூல் வெளியீட்டு விழா. அதை நான் வெளியிடுகிறேன்! சில பேருக்கு வியப்பாக இருக்கும். (கைதட்டல்) சென்ற ஆண்டு நான் மதுரைக்குப் போயிருந்த போது, என்னுடைய மகன் மு.க. அழகிரியின் வீட்டிற்குச் சென்றேன். அப்போது பத்திரிகைகளைப் பற்றிய பேச்சு வந்தது. அழகிரி சொன்னான், “அப்பா! இதோ இருக்கிற
‘எதிர்த்த வீடு’தான் தினமலர் ஆசிரியரின் வீடு” என்று சொன்னான். (கைதட்டல்) இதிலே உள்ள நயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். “எதிர்த்த வீடு” (பலத்த கைதட்டல்) “எதிர்த்த” என்பது கடந்த காலம் (பாஸ்ட் டென்ஸ்). அவர், அப்படியானால் இப்போது நான் எதிர்க்கவில்லையா என்று கேட்பார். (கைதட்டல்) அந்த எதிர்ப்பிலும் நடைபெற்று கொண்டிருக்கிற ஆட்சிக்கு அறிவுரை இருக்கின்ற காரணத்தால், அந்த எதிர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் நான்.
எடுத்துக்காட்டாக, நான் மதுரைக்குச் சென்றால் - திருச்சிக்குச் சென்றால் அன்றைய தினமலரில் ஒரு பக்கம் எனக்காக ஒதுக்கப்படும். (கைதட்டல்) நான் அங்கே வருகிறேன் என்ற விளம்பரத்திற்காக அல்ல! அந்த நகரத்திலே உள்ள குறைகளை எல்லாம் எனக்கு எடுத்துக் காட்டுவதற்காக வெளியிட்டிருப்பார்கள். (கைதட்டல்)
நான் திருச்சிக்கு சென்றிருந்தேன். அங்கே உள்ள மாநகராட்சி மன்றத்தில் சில அதிகாரிகள் செய்த தவற்றினை தினமலர் எடுத்துக் காட்டியிருந்தது. உடனடியாக அவர்மீது - அந்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்படி இந்தச் செய்தியை வெளியிட்டு விட்டார்களே என்று நான் சினம் கொள்ளவில்லை. மதுரைக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு அதிகாரியின் தவறை தினமலர் சுட்டிக்காட்டியிருந்தது. உடனடியாக அன்றைக்கே அதற்காக விசாரணையை நடத்தி முறைப்படி - சட்டப்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நான் இதைச் சொல்வதற்குக் காரணம் தினமலரின் ஆசிரியரும், நிறுவனருமாக இருந்த ராமசுப்பு அவர்கள் அந்த பத்திரிகையை எப்படி நடத்தினார் என்பது எனக்குத் தெரியும்.
அவருடைய வாழ்க்கைக் குறிப்பைப் படிக்கும்போது, ஒரு நாள் ஒரு நிருபர் அவசர அவசரமாக அலுவலகத்திற்குள் நுழைந்து, தான் கொண்டுவந்த செய்தியை வெளியிட வேண்டுமென்று பரபரப்பு காட்டியிருக்கிறார். “அது என்ன செய்தி?” என்று நிறுவனர் ராமசுப்பு கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நிருபர், “ஒரு பயங்கரமான கொலைச் செய்தி”, என்றார். “இதற்கா, இவ்வளவு அவசரம் காட்டுகிறாய்? இந்தக் கொலைச் செய்தியை வெளியிடுவதால், நாளைய தினம் இதைப் படிக்கின்ற மக்களுக்கு உடனடியாக என்ன பயன் விளையப் போகிறது; எனவே, இப்படிப்பட்ட செய்திகளில் எல்லாம் அவசரப்படாதீர்கள், பரபரப்பு காட்டாதீர்கள்; மக்களுக்குத் தேவையான பிரச்சினைகள், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள், அதிலே அரசு காட்டுகின்ற தாமதம், அதை எடுத்து விளக்குகின்ற அளவிற்கு செய்திகள் வெளியிட வேண்டும்; அதிலே அவசரம், ஆர்வம் காட்டுங்கள்” என்று அவர் சொன்னதாக அவருடைய வாழ்க்கைக் குறிப்பு இருக்கிறது.
ராமசுப்பு அவர்களை நான் நன்றாக அறிவேன். அவர்கள் நேற்றைய தினம் நடைபெற்ற மதுரை தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் எந்த ஒரு ஆழ்ந்த கருத்துக்காக நாங்கள் எல்லாம் பணியாற்றத் துணை மேற்கொண்டோமோ, அவ்வழியில் நின்று அந்தக் காலத்திலே பணியாற்றியவர். தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட மக்களை அரவணைத்து தன்னுடைய பொது வாழ்க்கையை நடத்தியவர். அவர்களோடு அமர்ந்து ஆலயங்களிலே சமபந்தி விருந்து அருந்தியவர். உடல் நலிவுற்றிருந்த நேரத்திலேகூட, ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் நடத்திய விழாவிற்கு மருத்துவர்களுடைய ஆணையை மீறிச் சென்று அதிலே கலந்து கொண்டவர் என்பதெல்லாம் அவருக்குரிய தனிச் சிறப்புக்களாகும்.
அவர்களுடைய அருமை மகன் நண்பர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள இந்த நூலின் மேன்மை குறித்து எனக்கு முன்னால் பேசிய விழாத் தலைவர் அவர்களும் நூலைப் பெற்றுக் கொண்ட நீதியரசர் அவர்களும் மற்றும் பேராசிரியப் பெருமக்களும், நண்பர் நாகசாமி அவர்களும் தங்களுடைய அருமையான பாராட்டுக்களை எல்லாம் இங்கே வழங்கியிருக்கிறார்கள்.
இங்கே நாகசாமி அவர்கள் பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். “பழைய நாணயமாக இந்தப் பாண்டியனின் சின்னத்திலே புலிச்சின்னம் இருக்கிறது. முதலமைச்சர் எப்படியாவது மத்திய அரசை வலியுறுத்தி கப்பல் படையின் கொடியில் புலிச் சின்னத்தைப் பொறிக்கச் செய்ய வேண்டும்” என்று என்னை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
இருக்கின்ற வம்பு போதாதா? (பலத்த கைதட்டல்) ஏதோ நாகசாமிக்கு என்னை வம்பிலே இழுத்து மாட்டிவிட வேண்டுமென்று எண்ணம் இருப்பதாக அறிகிறேன். (பலத்த சிரிப்பு) ஆனால் அவர் வரலாற்று ரீதியாக அதை எடுத்துச் சொன்னார்.
வரலாற்றுக்கும் சூழ்நிலைக்கும் வேறுபாடு புரியாத, மாறுபாடு புரியாத மக்கள் - ஆட்சிகள் - நாட்டிலே இருக்கிறது என்பது தெரிந்திருந்தும்கூட, அவருக்குரிய அந்த ஆசையின் காரணமாக இதனைச் செய்ய வேண்டுமென்று அவர்கள் இங்கே எடுத்துக் காட்டினார்கள்.
அது மாத்திரமல்ல, அவர் பேசும்போதும் நீதியரசர் மோகன் பேசும்போதும் என்னைப் பற்றி சில புகழுரைகளைச் சொன்னார்கள். நம்முடைய கிருஷ்ணமூர்த்தி அவர்களும் சொன்னார்கள். கலையிலே எனக்கு
ஈடுபாடு உண்டு என்பது உண்மைதான் என்றாலும், நான் எல்லாவற்றையும் விமர்சிக்கக்கூடிய அளவிற்கு ஆற்றல் பெற்றவன் அல்ல. ஆர்வம் படைத்தவன். ஆனால் ஆற்றல் பெற்றவன் அல்ல. எல்லாம் எனக்குத் தெரியுமென்று சொல்லி, உங்கள் முன்னால் எதுவும் தெரியாதவனாக நிற்க நான் விரும்பவில்லை. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை மிக்குடைய நான் - ஆனால் எல்லாம் எனக்குத் தெரியும் என்கிற ஆணவம் எனக்கு என்றைக்கும் கிடையாது என்பதை இந்த மாமன்றத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
சில பேருக்கு சிலவற்றில்தான் ஆழ்ந்த பற்றும், அக்கறையும், ஆர்வமும், திறமையும் இருக்க முடியும். சிலவற்றைப் பற்றி தெரிந்து வைத்திருக்க முடியும். இது அவரவர்களுக்கு உரியது என்று விட்டுவிட வேண்டும்.
உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டுமேயானால் ஒரு கதை உண்டு. கிரேக்க தேசத்தில் ஒரு ஒப்பற்ற ஓவியன். அவன் தன்னுடைய ஓவியங்களைத் தீட்டி, வீட்டு வாசலிலே - தெருவிலே போவோர் வருவோர் எல்லாம் பார்த்துச் செல்லும் வண்ணம் - நாள்தோறும் வைப்பது வழக்கம். அப்படி ஒரு நாள் ஒரு ஓவியத்தைத் தீட்டி தன் வீட்டு வாசலிலே வைத்திருந்தான். வீதி வழியே ஒரு செருப்பு தைக்கின்ற தொழிலாளி போனான். போனவன் அந்த ஓவியத்தைப் பார்த்து நின்றான்.
ஓவியன் அவனைப் பார்த்து, “என்ன பார்க்கிறாய்” என்று கேட்டான். “ஒன்றுமில்லை, நன்றாகத்தான் ஓவியம் எழுதியிருக்கிறாய்; ஆனால் கால் செருப்பிலே, ஒரு செருப்பிற்கும் இன்னொரு செருப்பிற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தாயா?” என்று கேட்டான். ஓவியன் தவறைப் புரிந்து கொண்டு,
“மன்னிக்க வேண்டும். திருத்தி விடுகிறேன்” என்று சொல்லி, உடனடியாக அதைத் திருத்தி விட்டான்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அதே ஓவியன் ஒரு பெண்ணின் ஓவியத்தை எழுதி வைத்திருந்தான். அதே செருப்பு தைக்கிற தொழிலாளி அந்த வழியாக வந்தான். வந்தவன், அந்த ஓவியத்தை பார்த்து விட்டு நின்றான். ஓவியன் அவனைப் பார்த்து, “என்ன இன்று பார்க்கிறாய்” என்று கேட்டான்.
“இல்லை, இந்தப் பெண்ணுக்கு நீ எழுதியிருக்கின்ற புருவம் சரியில்லை” என்றான். ஓவியனுக்கு கோபம் வந்துவிட்டது. “ஏய், நீ செருப்போடு நில்லு. (பலத்த சிரிப்பு) இதற்கெல்லாம் வராதே”, என்று கூறிவிட்டான்.
அது மாதிரி எனக்கு எல்லாம் தெரியுமென்று சொல்லி, கல்வெட்டைப் பற்றி எனக்குத் தெரியும், சங்க கால நாணயங்களைப் பற்றி எனக்குத் தெரியும், இலக்கியங்களைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியுமென்று சொல்லி, நான் அந்த ஓவியனுக்கு முன்னால் குட்டுப்பட்ட, அந்தத் தொழிலாளியாக மாற விரும்பவில்லை என்பதையும் முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, எனக்கு எல்லாம் தெரியுமென்று என்னைப் புகழ வேண்டாமென்று நாகசாமியை - நீதியரசரை - அவரைப் போன்றவர்களையெல்லாம் கேட்டுக் கொள்ளவும் நான் விரும்புகிறேன்.
