சேலம் பெரியார் பல்கலைக்கழக தொடக்க விழா
பகுதி 2 · 2 / 2
அந்த அளவிற்கு இன்றைக்கு இந்திய பூபாகம் எங்கும் ஒரு சமுதாய எழுச்சியை, ஒரு புரட்சியை மறுமலர்ச்சியை உருவாக்க காரணமாக இருந்த தந்தை பெரியாருடைய பெயரால் இன்றைக்கு இந்தப் பல்கலைக் கழகம் அமைவது - அதுவும் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் வரவேற்புரையிலே சொன்னதைப் போல சேலத்தில் அமைவது மிகமிகப் பொருத்தமுடையதாகும்.
தமிழ்நாட்டில் 1857-ஆம் ஆண்டில்தான் முதல் பல்கலைக் கழகமே - சென்னைப் பல்கலைக் கழகமே அமைந்தது - 1857 இந்திய நாட்டு வரலாற்றில் ஒரு சிறப்பான ஆண்டு. முதல் சுதந்திரப் போராட்டப் பிரகடனம் செய்யப்பட்ட சிப்பாய்ப் புரட்சி நடைபெற்ற ஆண்டு! அந்த ஆண்டில்தான் சென்னைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது.
அப்பொழுது சென்னை மாகாணம் என்றால் "Old Madras Presidency" (ஓல்டு மெட்ராஸ் பிரிசிடென்சி) என்றால் இன்றைக்கு இருக்கின்ற இந்தப் பரப்பளவு அல்ல. இதைவிட பெரிய பரப்பளவு. இன்றைய ஆந்திரம், ஒரிசா, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளையும் சேர்த்துக் கொண்டு "Madras Presidency" (மெட்ராஸ் பிரிசிடென்சி) என்று அழைக்கப்பட்டது. அதற்கு ஆட்சித் தலைவராக வருகிறவருக்கு ‘Premier’ (பிரிமியர்) என்று பெயர்.
ராஜாஜி அவர்கள் 1937-ஆம் ஆண்டு இந்த மாநிலத்தின் ஆட்சித் தலைவராக இருந்தபொழுது, அவருக்குப் பெயர் முதலமைச்சர் அல்ல; ‘பிரிமியர்’ என்றுதான் பெயர்! அப்படிப்பட்ட இந்தப் பெரிய பூபாகமாக இருந்த மாநிலத்தில் 1857-ஆம் ஆண்டு சென்னையிலே தோன்றியதுதான் முதல் பல்கலைக் கழகம்.
இன்றைக்கு இந்தப் பல்கலைக் கழகத்தோடு சேர்ந்து பதினைந்தாவது பல்கலைக் கழகம். இந்த பதினைந்து பல்கலைக் கழகங்களில் - நம்முடைய பேராசிரியர்
அவர்கள் குறிப்பிட்டதைப் போல, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், கோவை வேளாண்மை அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் ஆகியவைகள் எல்லாம் கழக ஆட்சியிலே தொடங்கப்பட்டவை என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்வேன். பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் எல்லாம் இணைந்தவை. கல்லூரிகளின் தொகுப்பாக இருப்பவை பல்கலைக் கழகம்.
பெருந்தலைவர் காமராசர் கல்விக் கண் திறந்தவர் என்று பாராட்டுக்குரியவர். அவர் ஆரம்பப் பள்ளிகளை அன்றைக்கு ஏராளமாகத் திறந்தார். கிராமப்புறத்தில் இருக்கிற பிள்ளைகளுக்கு படிப்பறிவு வேண்டும் என்பதற்காக காமராசர் அந்தச் செயலைச் செய்யத் தொடங்கினார். அது மேலும் இன்றைக்கு பெருகிக் கொண்டிருக்கிறது. என்றாலுங்கூட கிராமப்புறங்களிலே இருந்து ஆங்காங்கு மேல்நிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளில், படித்து வருகிற மாணவர்களுக்கு அங்கிருந்து செல்வதற்கான கல்லூரிகள் இல்லாத சூழ்நிலை கூடாது என்று தி.மு.கழக அரசு கருதியது.
இருநூறு ஆண்டு கால ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ்நாட்டில் - சென்னை மாநிலத்திலே, சென்னை ராஜதானியிலே தொடக்கப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கை வெறும் 24தான். அதற்குப்பின் 20 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட கல்லூரிகள் 68.
அதன்பின் 1967 முதல் 1975 வரை எட்டாண்டு காலம் நடைபெற்ற தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கை 97.
கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தொடங்கப்பட்ட கல்லூரிகள் 4.
இதை எல்லாம் புள்ளி விவரத்திற்காகச் சொல்கிறேன் - விமர்சனத்திற்காக அல்ல. இந்தக் கணக்கு மனதிலே பதிய வேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன்.
சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் என்று எடுத்துக் கொண்டால் 1984 முதல் 1988 வரை என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் 15 கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
88-89 கவர்னர் ஆட்சியில் 15 கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
89-91 இரண்டாண்டுக் கால தி.மு.கழக ஆட்சியில் 5 கல்லூரிகள். பிறகு 91 முதல் 96 வரையிலான கடந்த கால ஆட்சியில், ஐந்தாண்டுகளில் தொடங்கப்பட்ட சுயநிதிக் கல்லூரிகள் 65, 96-க்குப் பிறகு இந்த 15 மாத காலத்தில் தொடங்கப்பட்ட சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் 59, (கைத்தட்டல்) இதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பொறியியல் கல்லூரிகள் என்று எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டு இந்தக் கழக ஆட்சியிலே 10 கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை 39 கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் 10,000 மாணவர்கள் கூடுதலாக பொறியியல் கல்லூரிகளில் படிக்கக்கூடிய வசதி வாய்ப்பை இந்த அரசு செய்து கொடுத்திருக்கிறது.
அது மாத்திரமல்ல; பொறியியல் கல்லூரியிலே சேருவதற்கு கிராமப்புறத்து மாணவர்களுக்கு வாய்ப்பு குன்றிப் போயிருந்தது. குறைந்து போயிருந்தது. அந்த வாய்ப்பை அதிகப்படுத்துவதற்காக முதல் கட்டமாக பொறியியல் கல்லூரிகளில் கிராமப்புறத்து மாணவர்களுக்கு கட்டாயம் 15 சதவிகிதம் இடமளித்தே ஆக வேண்டும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தி - அதை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு எல்லாம் சென்றாலுங்கூட கடைசியாக அரசின் கருத்துத்தான் வெற்றி பெற்றது
என்ற அளவிலே - 15 சதவிகித கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நிலைமையும் இன்றைக்கு உருவாகியிருக்கிறது.
அது மாத்திரமல்ல; இந்த அரசினுடைய இன்னொரு அறிவிப்பும் உங்களுக்குத் தெரியும் என்று கருதுகிறேன். அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டு இப்பொழுது அமலாக்கப்பட்டுள்ள அந்த முக்கியமான அறிவிப்பு என்னவென்றால், எந்த ஒரு குடும்பத்திலும் பட்டதாரிகளே இல்லாமலே இருந்து - முதல் பட்டதாரி இவர்தான் என்கிற அளவிற்கு இருக்கிற பட்டதாரிகள் வந்தால்; அவர்கள் வாங்குகின்ற மதிப்பெண்களை வைத்து ஒவ்வொரு தொழிற் படிப்பிலும் பத்து பட்டதாரிகளுக்கு அவர்கள் ஒன்று, இரண்டு, மூன்று என்று பத்து என்று வருகின்ற வரை - ஒவ்வொரு பாடப்பிரிவிலும் பரிசுத் தொகை மாத்திரமல்ல; அவர்கள் மேலும் உயர் தொழிற்கல்வி பெறுவதற்கு ஆகிற செலவை இந்த அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்து, அதுவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
இவைகள் எல்லாம் கல்வியை மேலும் மேலும் பரப்ப வேண்டும்; கல்வியைப் பெற்றால்தான் கண் திறக்கும்; கண் திறந்தால்தான் கருத்துக்கள் நிலைக்கும், கருத்துக்கள் நிலைத்தால்தான் இந்த நாடு உய்யும் என்ற தந்தை பெரியாரின் கொள்கைகளை அண்ணாவின் இலட்சியங்களை ஈடேற்றத்தான் நாங்கள் கல்விப் பயிரை மேலும் மேலும் வளர்ப்பதிலே தொடர்ந்து பல்வேறு வகையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
பெரியார் அவர்கள் போதித்த கருத்துக்களை எல்லாம் இன்றைக்கு நாங்கள் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். பெரியார் சமுதாயத் தொண்டாற்றினார். அவருக்கு அரசியல் அவ்வளவாகப் பிடிக்காது.
தேர்தல் பிடிக்காது. தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரித்துப் பிரச்சாரம்கூட செய்வார். ஆனால் அவருக்குத் தேர்தல் பிடிக்காது. தேர்தலிலே அவரும் நிற்க மாட்டார். அவருடைய இயக்கத்தையும் நிற்கவிட மாட்டார். ஆனால், அவர் சமுதாயத் தொண்டு புரிந்தார்.
அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரிடமிருந்து மாறுபடவில்லை. பெரியாருடைய கருத்துக்களை செழிக்க வைப்பதற்காக, செயல்படுத்துவதற்காக - பெரியாரிடம் இருந்து பிரிந்தாலும்கூட அவருடைய கொள்கைகளில் இருந்து பிரியாமல் ஒரு அரசியல் இயக்கம் கண்டு, அந்த அரசியல் இயக்கம் ஆட்சிப் பொறுப்பு ஏற்கின்ற நிலைமையை உருவாக்கி - பெரியாருடைய கொள்கைகளான சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்படி செல்லுபடியாக்குவது; இருமொழித் திட்டம்; இந்த நாட்டிற்கு ‘சென்னை ராஜ்யம்’ என்ற பெயரை மாற்றி ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைப்பது; அதைப்போல 1929-ஆம் ஆண்டு செங்கற்பட்டு மாநாட்டில் பெரியார் நிறைவேற்றிய தீர்மானம் - பெண்களுக்கும் ஆண்களைப்போல சொத்துக்களிலே சம உரிமை வேண்டும் என்பதாகும் - அந்தத் தீர்மானத்தை 89-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் நான் நிறைவேற்றியபோது சொன்னேன்.
“அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்தை இன்றைக்கு சட்டமாக்குகிறோம்” என்று சொன்னேன்.
அதைப்போல உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். பெண்களுக்கு விகிதாச்சாரம் வேண்டும் என்று. அதைச் செயல் மூலம் காட்டி, முப்பது சதவிகிதம் உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்து பெரியாரின் கொள்கைகளை நாம் நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம்.
மேலும் நிறைவேற்றுகிற நேரத்தில், இளம் பயிர்களெல்லாம் தந்தை பெரியாரின் அந்த அறிவுக் கருத்துக்களைப் பெற்று செழிக்கத்தான் இந்தப் பல்கலைக் கழகம்.
தம்பி வீரபாண்டி ஆறுமுகம், அவர் அமைச்சர் என்றாலும்கூட முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைக்க வேண்டும், கல்வி அமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைக்க வேண்டும், ஆளுநருக்கு ஒரு கோரிக்கை வைக்க வேண்டும் என்ற முறையில் எங்கள் மூவர் முன்னிலையிலே ஒரு கோரிக்கை வைத்தார்.
“பெரியார் பல்கலைக் கழகத்திற்கு இருக்கின்ற பாடத் திட்டங்களிலே பெரியாரின் கொள்கைகளைப் பரப்புகின்ற அளவிற்குப் பாடத் திட்டங்கள் வேண்டும்” என்றார்.
தம்பி, நீ சொல்லித்தானா நாங்கள் இவைகளைச் செய்ய வேண்டும். நிச்சயமாக நாங்கள் செய்வோம் என்ற நம்பிக்கையை நீ பெறலாம் (கைத்தட்டல்) என்று தம்பி வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சொல்லிக் கொள்கிறேன்.
மேடையிலும் சொன்னார். வந்து பக்கத்தில் அமர்ந்தும் சொன்னார். “முதல் கட்டப் பணிகளுக்கு 10 கோடி ரூபாய் ஆகும். உடனடியாக நீங்கள் அதை ஒதுக்கித் தந்தால்தான் வேலை விரைவாக நடைபெறும். கட்டிடங்கள் எழுப்பப்படும்” என்று கேட்டார். “ஆகட்டும்” என்று சொல்லியிருக்கிறேன்.
ஆகட்டும் பார்க்கலாம் அல்ல. ஆகட்டும்! நிச்சயமாக ஆகும்! என்ற உறுதியை அளித்து, வளர்க தந்தை பெரியார் பல்கலைக் கழகம் என்று வாழ்த்துகிறேன்.
- முரசொலி 18-9-97
