உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சேலம் பெரியார் பல்கலைக்கழக தொடக்க விழா

பகுதி 1 · 1 / 2

சேலம் பெரியார்

பல்கலைக்கழகத் தொடக்க விழா

சேலம் நகரத்தில் இன்று காலையிலிருந்து விழாக் கோலம் கண்டு வருகிறோம். இந்த விழாக்கோலத்தை அதிக செலவில் ஏற்பாடு செய்யவில்லை என்று எனக்கு முன்னால் பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். அதிக செலவு செய்யலாமா என்று என்னைக் கேட்டபோது, ‘அடக்கி வாசியுங்கள்’ என்று நான்தான், மூன்று லட்ச ரூபாய்க்கு மாத்திரம் அனுமதி கொடுத்தேன்.

ஆனால், நிறைவேற்றப்பட்டிருக்கின்ற செலவு அதைவிட அதிகம் என்பதை என்னால் உணர முடிகிறது. எப்படி இது என்று தம்பி வீரபாண்டி ஆறுமுகம் அவர்களிடத்தில் கேட்டேன். சுற்றுப்புற 40-க்கு மேற்பட்ட கல்லூரிகளும் அதற்கு மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளும் இவைகளெல்லாம் சேர்ந்து இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ளவை; ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள நல்ல நோக்கம் கொண்டவர்கள் பேராசிரியர்கள் அனைவரும், ஒருங்கிணைந்து குழுக்கள் அமைத்துக் கொண்டு - குழுக்கள் அமைப்பது தனித்தனியாகப் போக அல்ல; ஒற்றுமையாக இருப்பதற்குத்தான் - என்ற வகையில் குழுக்களை அமைத்துக் கொண்டு அந்த குழுக்களின் சார்பில் சேலம் நகரில் பல்வேறு இடங்களில் பல்வேறு கல்லூரிகளின் சார்பில் வரவேற்பு வளைவுகளும், தோரணங்களும், கோதைகளும் இந்த அலங்காரமான பந்தலும், வண்ண

விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன என்று என்னிடம் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் குறிப்பிட்டார்.

இதைத்தான் இன்றைக்கு இந்த அரசுக் கிராமப் பகுதிகளில் ‘நமக்கு நாமே’ என்ற தலைப்பில் நிறைவேற்றி வருகிறது. நம்முடைய காரியங்களை நாமே செய்து கொள்ள வேண்டும். நம்முடைய நன்மைகளுக்காக நம்முடைய மக்களுக்காக நாமே கடமை ஆற்ற வேண்டும் என்ற அந்த உணர்வு வரவேண்டும் என்பதற்காகத்தான் கிராமப் பகுதிகளில் ‘அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்’ என்றும் ‘நமக்கு நாமே திட்டம்’ என்றும் இரண்டு திட்டங்களை கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்து அதை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம்.

நாளைக்குக் கூட அந்தத் திட்டங்களை நாமக்கல் மாவட்டத்தில் நாங்கள் சென்று நிறைவேற்ற இருக்கிறோம். இத்தகைய உணர்வு எல்லா மக்களிடத்திலும் வருகின்ற வகையிலே ஒரு விழாவைக் கூட நமக்கு நாமே என்ற அளவில் நடத்திக் காட்ட முடியும் என்று முதன் முதலாக தமிழகத்திற்கு அறிவித்திருப்பதும் சேலம்தான் என்பதை எண்ணும்போது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

தம்பி வீரபாண்டி ஆறுமுகம் எந்தக் காரியத்தை எடுத்தாலும் சோடை போகாமல், சொத்தையாகாமல், தரத்தனமாக அனைவருக்கும் எடுத்துக்காட்டாக, மற்றவர்கள் கடைப்பிடிக்கக் கூடியதாக, மற்றவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளக் கூடியதாக அமைத்துக் காட்டுவதில் வல்லவர் என்பதை அண்மையில் அவர் நடத்தி முடித்த மாநில மாநாட்டிலேயே இந்த நாடு புரிந்து கொண்டிருக்கிறது.

எந்த மாநில மாநாடு என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. காரணம் கவர்னரை வைத்துக் கொண்டு அதையெல்லாம் பேசக்கூடாது என்பது அரசியல் நாகரிகம். எனவே, அத்தகைய செயல் வீரராக

விளங்குகின்ற தம்பி வீரபாண்டி ஆறுமுகத்தின் ஒத்துழைப்புடன் துணைவேந்தர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், அரசு நிர்வாக அதிகாரிகள், பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அனைவருடைய ஒத்துழைப்போடும் இன்று நடைபெற்ற பேரணியை நான், பேராசிரியர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் முழுவதுமாக ஏறத்தாழ மூன்று மணி நேரம் கண்டோம்.

நம்முடைய கவர்னர் அவர்கள் இடையில் ஒரு மணி நேரம்தான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார் என்றாலும் கூட நாங்கள் பார்த்த அந்தக் காட்சி மாணவர் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கின்ற எழுச்சியை - உற்சாகத்தை - உத்வேகத்தை - ஒரு கட்டுப்பாட்டை எங்களுக்கு உணர்த்தியது.

சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகரத்தில் தீண்டாமை ஒழிப்புக்காக நடைபெற்ற மாநாட்டையொட்டி எல்லா கல்லூரி, பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் அடங்கிய மனிதச் சங்கிலி ஒன்று ஏறத்தாழ 15 கிலோமீட்டர் நீளத்திற்கு நடைபெற்றது.

அது பெரிய மனிதச் சங்கிலி; தமிழ்நாட்டில் நடைபெற்ற எல்லா மனிதச் சங்கிலியையும் விட - எல்லா மனிதச் சங்கிலிகளையும் வெல்லக்கூடிய அளவிற்கு நடைபெற்ற மனிதச் சங்கிலி. அதிலே பெரும்பாலும் 90 சதவிகிதம் கலந்து கொண்டவர்கள் மாணவ - மாணவியர்கள்தான்.

எனக்கொரு நம்பிக்கை. இப்பொழுதுகூட அங்கே இங்கே சிறுசிறு சலசலப்புகள் இருக்கிறதே, அந்த சலசலப்புகளுக்கு எல்லாம்கூட இடமில்லாமல் மதுரையில் மாணவ - மாணவிகள் மிகுந்த அடக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு கைகோத்து நின்ற காட்சியைக் கண்ட போது - சேலத்திலும் இன்றைக்கு அதே காட்சியைக்

கண்ட காரணத்தால் என்னுடைய நம்பிக்கை இரட்டிப்பாயிற்று. இது தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அந்தப் பேரணியில் அணிவகுத்து வந்த மாணவியர் - மாணவர்கள் - அவர்களுடைய எண்ணிக்கை ஏறத்தாழ லட்சம் பேர் இருக்கலாம். அந்த லட்சம் மாணவ - மாணவிகளுடைய கரங்களில் தந்தை பெரியாருடைய உருவம் பொறித்த கொடிச் சின்னங்கள் இருந்ததை பார்க்கும்போது, நான் மெய்சிலிர்த்துப் போனேன். புல்லரித்தது எனக்கு. பெரியாருடைய பெயரைக் கேட்டாலே வெறுப்பு கொண்ட சிலருடைய மத்தியில் - பெரியாருடைய பெயரைக் கேட்டாலே ஏதோ ஒரு பயங்கரமான பெயர் என்று அஞ்சி நடுங்கிய இந்த பூமியில், மாணவச் செல்வங்கள், எதிர்கால வாரிசுகள், எதிர்கால மன்னர்கள் - எதிர்காலத் தலைவர்கள் - எதிர்கால சிந்தனையாளர்கள் - எதிர்கால விஞ்ஞானிகள் - அவர்களுடைய கரங்களில் தந்தை பெரியாரின் உருவம் பொறித்த கொடிகள் லட்சக்கணக்கானவை இன்றைக்கு இருந்ததை நான் கண்டபோது, 1945-ஆம் ஆண்டு தந்தை பெரியாருடைய மாணவனாக ஈரோடு குருகுலத்தில் படித்த நேரத்தில் அய்யா பெரியாருக்கும், அவருடைய கொள்கைகளுக்கும் இப்படிப்பட்ட ஒரு ஏற்றம் கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டிருந்த என்னைப் போன்ற, பேராசிரியர் போன்ற, பெரியாருடைய மாணவர்களுக்கெல்லாம் இன்றைக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை. அந்த அளவிற்கு இந்த நாட்டை எதிர்காலத்தில் உருவாக்கக்கூடிய சிற்பிகளாகிய இளைஞர்கள் - மாணவர்கள் கொடி எடுத்து வந்த காட்சியைப் பார்த்தேன்.

அது எந்தக் கட்சியின் கொடியுமல்ல. எல்லா கட்சியிலும் சுயமரியாதை வேண்டும் என்று சொன்ன சுய

மரியாதை இயக்கத்தின் சுடரொளி தந்தை பெரியாருடைய கொடி. அந்தக் கொடியைத்தான் எடுத்து வந்தார்கள்.

இன்னொன்று; நம்முடைய கவர்னர் அவர்கள் பார்க்கத் தவறி விட்டார்கள். காரணம், அந்த ஊர்வலம் வந்து கொண்டிருந்தபோது தொலைதூரத்தில் இரண்டொரு கட்சிக் கொடிகளை நான் பார்த்துவிட்டேன். அந்தக் கொடிகள் கவர்னருக்கு அருகே வந்தால், நாளைக்குப் பத்திரிகையிலே - “இந்த விழாவையே மறைத்து விட்டு கட்சி கொடிகளோடு ஊர்வலம்! கவர்னர் வந்து பார்த்தார்” என்று செய்தி போட்டு விடுவார்கள் என்பதற்காக - “இதுவரையிலேதான் அரசாங்க விழா ஆளுநர் அவர்களே!

அடுத்து பொதுமக்களும் கட்சிக்காரர்களும் கொடிகளை எடுத்து வருகிறார்கள், நீங்கள் மேடையிலே இருப்பது நல்லதல்ல” என்று நான் அவர்களிடம் சொன்னவுடன், அவர்களும் “ஆமாம்” என்று சென்றுவிட்டார்கள்.

அவர்கள் சென்ற அரைக் கணத்திற்கெல்லாம், அரைநொடிக்கெல்லாம் நூறு இளம் மாணவர்கள் பெரியாரைப் போல வேடமணிந்து கொண்டு வரிசையாக வந்தார்கள் - மிக உயரக் குறைவானவர்கள், குள்ள மாணவர்கள் - அவர்கள் வெண்தாடி வைத்துக் கொண்டு, கருப்புச் சால்வை போர்த்திக் கொண்டு, ஒரு கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு, இன்னொரு கையிலே ஒரு தடியை வைத்துக் கொண்டு நூறு பெரியார்கள் வந்தார்கள்.

நாங்கள் எண்ணுவது இந்த நாட்டிலே நூறு பெரியார்கள் அல்ல. தமிழகத்திலே இருக்கிற ஆறு கோடி மக்களும் பெரியார்களாக ஆக வேண்டும் என்ற அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு அடையாளமாக அந்த அணிவகுப்பு வந்ததாகத்தான் நான் கருதினேன்.

எனவே, சேலத்தில் நடைபெறுகின்ற அந்தப் பேரணியும், நடைபெறக் கொண்டிருக்கின்ற இந்த பெரியார் பல்கலைக் கழகத்தின் தொடக்க விழாவும் - தமிழ்ச் சமுதாயத்தின் எழுச்சிக்கும் ஏற்றத்திற்கும் வழிகாணக் கூடியவைகள் என்ற நிலைமையை நாம் இன்றைக்குப் பெற்றிருக்கிறோம்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னார்:

“வயதில் அறிவில் முதியார்; நாட்டின் வாய்மைப் போருக்கு என்றும் இளையார். உயர் எண்ணங்கள் மலரும் சோலை தூயதாடி நெஞ்சில் விழும் அவர் மண்டைச் சுரப்பை உலகு தொழும்”

என்று சொன்னார்.

மண்டைச் சுரப்பை என்றால், அவருடைய அறிவாற்றலை, மூளைத்திறனை உலகமே தொழும் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அன்றைக்குப் பாடினார்.

இன்றைக்கு தந்தை பெரியாருடைய புகழை அல்ல. அறிவை, ஆற்றலை, அவர் கொண்டிருந்த துணிவை, அவர் சண்ட மாருதமாகச் சீறி சாதிமத வேறுபாட்டை எல்லாம் களையத் துடித்த அந்த தூய செயலை இன்றைக்கு உலகம் போற்றிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிலே எந்த மாநிலத்திற்குச் சென்று கேட்டாலும், சமூக நீதியைப் பற்றி பேசினாலும், சாதிச் சண்டை களையப்பட வேண்டும் என்று எடுத்துச் சொன்னாலும், மதச்சார்பற்ற தன்மை வேண்டும் என்று கூறினாலும், அங்கெல்லாம் பேசுகிற தலைவர்கள் முதலில், தங்களுக்கு வழிகாட்டியாகக் கொண்டிருப்பது தந்தை பெரியாரைத்தான் என்பதை, கடந்த இரண்டாண்டு காலத்திற்கு மேலாக வடபுலத்திலும் நான் சென்று பார்க்கின்ற காரணத்தால் என்னால் உணர முடிகிறது.

முதற் பதிப்பு : மே 2000