உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

இராஜபாளையம் குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழா

பகுதி 2 · 2 / 2

எனவே, இந்த ஏழு மைல் எனக்கும் குமாரசாமி ராஜாவுக்கும் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. அந்த ஒரு பொருத்தம் கூட நான் இந்த விழாவிலே கலந்து கொள்ள காரணமாக இருக்குமோ என்று கூட, நான் கருதுகிறேன். இன்னொன்று, அவரும் எஸ்.எஸ்.எல்.சி.யிலே

பெயிலானவர். நானும் அவ்வண்ணமே. (கைத்தட்டல்) அவரும் எஸ்.எஸ்.எல்.சி.யில் பெயிலானவுடன் நண்பர்கள் வருத்தப்பட்டார்களாம். அப்போது குமாரசாமி ராஜா “ஏன் வருத்தப்படுகிறீர்கள்? இதற்கெல்லாம் வருத்தப்படலாமா?” என்று சொன்னாராம். அதே மாதிரிதான் நானும் பெயிலானவுடன் சொன்னேன். நான் வருத்தப்படாதது மாத்திரமல்ல. பெரியாரோடு சேர்ந்து சுற்றுப் பயணம் போய்விட்டேன். பெரியாரோடு சுற்றுப் பயணம் போனதினால் தான் அப்போது பெயிலே கூட ஆனேன்.

அதேபோல, பொது வாழ்க்கையில் ஈடுபட்டதன் காரணமாக குமாரசாமி ராஜா அவர்களும் எஸ்.எஸ்.எல்.சி.யிலே பெயிலானவர். அதற்கு யாரும் வருத்தப்படக்கூடாது. நானும் வருத்தப்படமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.

இன்னொன்று அவருக்கு விளையாட்டுக்களிலே கால்பந்து விளையாட்டிலேதான் அதிகப் பிரியம் என்றும் அந்த விளையாட்டிலே கீழே விழுந்து ஒரு பாதிப் பல்லை உடைத்துக்கொண்டேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்; அவருடைய இளமைக்கால வாழ்க்கை வரலாற்றில்.

எனக்கும் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு. திருவாரூரில் படித்த காலத்தில் கால்பந்து பந்தயங்கள் பலவற்றில் கலந்து கொண்டிருக்கின்றேன். பல்லை உடைத்துக் கொள்ளவில்லை. ஆனால், நெற்றியில் ஒரு காயம். இன்றைக்கும் இருக்கிறது. கால்பந்து விளையாட்டின்போது விழுந்ததால் ஏற்பட்ட தழும்பு அது.

இப்படி பலவகையிலும் இளமைக்காலத்திலே குமாரசாமி ராஜா அவர்களின் வாழ்க்கையும் என்னுடைய

வாழ்க்கையும் பொருந்தி இருக்கின்ற காரணத்தால், இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாற்றையும் சேர்த்துப் படித்த இராமசுப்பிரமணிய ராஜா, நான் இந்த விழாவிற்கு வரவேண்டுமென்று என்னை வலியுறுத்தி இருப்பாரோ என்று நான் கருதுகிறேன்.

இந்த மாவட்டத்தை எண்ணிப் பார்க்கிறேன். சுற்று வட்டாரத்தை எண்ணிப் பார்க்கிறேன். குமாரசாமி ராஜா அவர்களுடைய வாழ்க்கையில் அவரே குறிப்பிட்டிருக்கின்ற இன்னொரு சம்பவம் என்னவென்றால், அவருக்கு ஓர் அய்யங்கார் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் நண்பராக இருந்திருக்கிறார். இருவரும் ஒருநாள் கடைவீதிக்குப் போகும் போது, ஓர் அய்யர் கடையில், அந்தக் கடையில் அந்த அய்யங்கார் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் சென்று ஒரு வடையை வாங்கிச் சாப்பிட்டு விட்டாராம்.

அய்யர் கடை வடையை வாங்கிச் சாப்பிட்டவர் அய்யங்கார். குமாரசாமி ராஜாவின் நண்பர். அந்த அய்யங்கார் பின்னை வடை வாங்கிச் சாப்பிட்டது அவரது தந்தைக்குத் தெரிந்தது. அடாத காரியம் செய்துவிட்டாய். அய்யர் கடை வடையைச் சாப்பிடலாமா என்று அந்த அய்யங்கார் பையனை அடித்து உதைத்தார். அடித்து உதைத்தது மாத்திரமல்ல; தோஷம் கழிப்பதற்காக பால், தண்ணீர் இவைகளையெல்லாம் கலந்து அதிலே சாணத்தையும் கலந்து அதிலே கோமியத்தையும் கலந்து “இதைக் குடி.

அப்போதுதான் தோஷம் கழியும்” என்று சொல்லிக் குடிக்க வைத்திருக்கிறார் - அப்போதே அய்யருக்கும் அய்யங்காருக்குமே ஜாதி துவேஷம் இருந்திருக்கிறது - அதனுடைய சாயல் இன்றைக்கும் இருக்கிறது.

இந்த மாவட்டத்திலும் மற்ற மாவட்டங்களிலும் நூற்றாண்டு காலத்திற்கு முன்பே அய்யரும், அய்யங்காரும் ஜாதித் துவேஷத்திலே இருந்தார்கள் என்பதை குமாரசாமி

ராஜா சொல்லித்தான் நமக்குத் தெரிகிறது. இப்படிப்பட்ட ஜாதி வேறுபாடுகள், மத வேறுபாடுகள், மத மோதல்கள், சாதி மோதல்கள், இவைகளெல்லாம் நூற்றாண்டு காலமாக தமிழகத்திலே இருக்கின்றன. அதற்காக மனம் வெதும்பியவர்கள்; அது தீரவேண்டும், அது அகற்றப்பட வேண்டும் என்று கருதியவர்கள் பலர் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களிலே குமாரசாமி ராஜா போன்றவர்கள் இடம் பெற்றிருந்தார்கள் என்று எண்ணுகின்ற நேரத்திலே நமக்குள்ள பணி எவ்வளவு பெரிது என்பதை நாம் எண்ணிப் பார்க்க முடிகிறது.

இளமைப் பருவத்திலே அவர் நினைத்திருந்தால் - பெரிய இராஜ குடும்பத்திலே பிறந்தவர். செல்வந்தர், செல்வம் செழிக்கின்ற அளவிற்கு நிலபுலன்களும், தோட்டம் துரவுகளும் கொண்டவர். அந்த இனிய வாழ்க்கை, சுக வாழ்க்கை விரும்பாமல் ஒரு முறை ஓராண்டுக் காலமும் இன்னொருமுறை ஒன்பது மாத காலமும் சிறையிலே அடைக்கப்பட்டு நாட்டிற்காக, மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என்கிறபோது இளமைக் காலத்திலே இந்தத் துடிப்பு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

அந்த இளமைக் கால நினைவுகளைப் படித்தால் தமிழகத்திலே இன்றைக்கு உள்ள இளைஞர்கள் திருந்துவார்களா? குமாரசாமி ராஜாவைப் போன்று நாங்களும் ஆக வேண்டும் என்று எண்ணுவார்களா என்ற ஆதங்கம் கூட எனக்கு ஏற்படுகிறது. ஏனென்றால் நான் மிகுந்த வருத்தத்திற்கும் கவலைக்கும் ஆளானவனாக இருக்கிறேன்.

இன்றைக்கு உள்ள இளைஞர்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டையும், சமுதாயத்தையும், மொழியையும், இனத்தையும் காப்பாற்றுவதற்கு எந்த வகையிலே பயன்படப் போகிறார்கள் என்பதுதான் அந்தக் கவலை. ஒரு 50 ஆண்டு காலத்திற்கு முன்பு இளைஞர்கள்

மாணவப் பருவத்தில் அவர்கள் எந்த இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்களாக இருந்தாலும், அது காங்கிரஸ் இயக்கமானாலும், திராவிட இயக்கமானாலும், கம்யூனிஸ்ட் இயக்கமானாலும் அந்த இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்கள் கல்லூரிகளில், பள்ளிகளில் இலக்கியச் சொற்பொழிவுகளில் காவியங்களைக் கற்றல், சரித்திரங்களைப் படித்தல், சரித்திர நாயகர்களைப் பற்றி விமர்சித்தல், அவர்கள் வழி நடக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒருவருக்கொருவர் அளவளாவுதல், உரையாடுதல், விவாதித்தல், இவைகளெல்லாம் பழைய கால இளைஞர்களுடைய பழக்க வழக்கங்களாக இருந்தன. ஆனால் இன்றைய இளைஞர்கள்; நான் எல்லோரையும் சொல்லவில்லை.

சிலர் இன்றைக்கும் அந்த முனைப்போடு இருக்கிறார்கள்.

இந்தச் சமுதாயத்தைக் காக்கும் ஈட்டி முனைகளாக, இந்தச் சமுதாயத்திற்குப் பாடுபட வேண்டும் என்று தொண்டு உள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் பலர் இன்றைக்குக் கேளிக்கைகள், கூத்துகள், சினிமாக்கள், ஆடம்பரங்கள், இதில் தங்கள் நேரத்தைச் செலவழித்தால் போதும் என்று உல்லாச புரியே தங்களது வாழ்க்கையின் குறிக்கோள் என்று எண்ணுகின்ற காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது மாற வேண்டும்.

இது மாறுவதற்கு குமாரசாமி ராஜா போன்றவர்களுடைய இளமைக்கால வாழ்க்கை பாடமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

அத்தகைய ஒரு பாடத்தை நமக்கு வழங்கியவர் முன்னாள் முதலமைச்சரும், ஒரிசா மாநில முன்னாள் ஆளுநருமான பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்கள். இந்த “பி.எஸ்.” என்கிற அவருக்கு முன்னால் இருக்கின்ற அந்த இனிஷியல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள், அது அவருடைய குடும்ப - தகப்பனாருடைய

பெயர்களாக நான் எண்ணவில்லை. பி.எஸ். என்பது பப்ளிக் சர்வண்ட் என்ற முறையிலே அவர் பப்ளிக் சர்வண்ட்டாகவே வாழ்ந்து காட்டினார். அவர் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாதவர். பரிட்சையிலே மாத்திரமல்ல; பதவியிலே மாத்திரமல்ல; அவர் ஈடுபட்ட அரசியலிலே கூட வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்த நேரத்தில் இரண்டையும் ஒன்றுபோல் கருதி நாடு முக்கியம், சமுதாயம் முக்கியம் என்ற அளவிலே பாடுபட்டவர். அப்படிப்பட்ட அந்தப் பெரியவருடைய புகழை இன்றைக்கு நாம் நினைத்து மகிழ்ந்தால் மட்டும் போதாது.

எதிர்கால இளைஞர்களுக்கு நல்ல பாடமாக அமையவேண்டும் என்று வேண்டி இந்த விழாவை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

இங்கே சில கோரிக்கைகளை நம்முடைய இராமசுப்பிரமணிய ராஜா அவர்கள் வைத்திருக்கிறார்கள். இரண்டு, மூன்று கோரிக்கைகள் இருக்கின்றன. அதற்கெல்லாம் உடனடியாக நான் இங்கு பதில் அளிக்க முடியாவிட்டாலும் முக்கியமான ஒரு கோரிக்கை சென்னையிலே அமைச்சர்கள் வாழ்கின்ற இடம் கிரீன்வேஸ் சாலை. அந்தச் சாலையின் பெயரை மாற்றி குமாரசாமி ராஜா சாலை என்று பெயர் வைக்க வேண்டும் என்று நம்முடைய வரவேற்புக் குழுத்தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு விரைவில் இன்னும் இரண்டொரு நாளில் அந்தப் பெயர் மாற்றப்படுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்.

(பலத்த கைத்தட்டல்) இதற்குச் சென்னை மாநகராட்சி மன்றமும் ஒத்துழைக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து வாழ்க குமாரசாமி ராஜாவின் புகழ் என்று உரைத்து விடைபெறுகிறேன்.

8-7-98 அன்று இராஜபாளையத்தில் குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழாவில் ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000