உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

இராஜபாளையம் குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழா

பகுதி 1 · 1 / 2

இராஜபாளையத்தில் குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழா

மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கின்ற பெரியவர், தேசத்தியாகி, தமிழகத்தினுடைய மக்களின் உள்ளங்களை பெருமளவுக்கு ஈர்த்துக் கொண்டிருக்கின்ற நல்லவர், வல்லவர் பி.எஸ்.குமாரசாமிராஜா அவர்களுடைய நூற்றாண்டு விழா நடைபெறுகின்ற நேரத்தில் அதில் பங்கு கொள்கின்ற வாய்ப்பை இன்றைய தமிழக அரசு பெற்றமைக்கும், அந்த வாய்ப்பைப் பெற்ற தமிழக அரசின் தலைமை அமைச்சனாக நான் இருப்பதற்கும் மிகுந்த பெருமை அடைகிறேன்.

இராஜபாளையம் நகரம் இன்றைக்கு விழாக்கோலம் பூண்டிருக்கிறது. இராஜபாளையத்திற்கு வருகின்ற சாலைகளெல்லாம் ஆரத்தெழுந்து அலங்காரம் பூண்டு நிற்கின்றன. எல்லோருடைய இதயங்களிலும் குமாரசாமி ராஜா அவர்களின் பெயர் இன்றைக்கு உச்சரிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றது. மூப்பனார் அவர்கள் எடுத்துக்காட்டியதைப் போல, அவர்களின் நினைவைப் போற்றுகின்ற வகையிலே இங்கே இந்த விழா நிகழ்ச்சி மாத்திரமல்ல; என்றென்றும் நிலையாக இருக்கக் கூடிய அளவிற்கு, மக்களுக்குப் பயன்படக் கூடிய அளவிற்கு,

திருமண மண்டபம், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறந்த நூல்கள் நிறைந்துள்ள ஒரு நூலகம், மற்றும் சில மண்டபங்கள் - இப்படி பலப்பல பயனுள்ள காரியங்கள் நூற்றாண்டு விழாவையொட்டி இன்றைக்கு நடைபெற்று இருக்கின்றன.

இந்த விழாவை இராஜபாளையத்தில் நடத்த வேண்டுமென்று என்னுடைய அருமை நண்பரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அழகர்ராஜா அவர்கள், சட்டப்பேரவையிலே கேட்டபோது, “நடத்தப்படும்” என்று நான் சொன்னேன். “அரசே முன்னின்று நடத்தும்” என்றும் நான் கூறினேன்.

அழகர்ராஜா அவர்களுக்குக்கூட சந்தேகம் வந்திருக்கலாம். அன்றைக்குச் சொன்னாரே, இன்றைக்கு அரசே நடத்த முடியுமா? என்ற சந்தேகம் இருந்திருக்கலாம். காரணம், அதுவரை அரசு இருக்குமா? என்ற சந்தேகம். (கைத்தட்டல்) ஆனால், அரசும் இருக்கிறது. அரசேதான் இந்த விழாவை நடத்துகிறது.

இந்த விழா நடத்துவதற்கு ஒத்துழைக்கின்ற வகையில்; விழாக்குழுவினர் அதிலும் குறிப்பாக, நமது அன்பிற்குரிய இராமசுப்பிரமணிய ராஜா அவர்களும், அவரோடு இணைந்து செயலாற்றுகின்ற பிற உறுப்பினர்களும், சிறந்த முறையிலே தங்களுடைய பங்கை ஏற்று, இந்த விழா எல்லா வகையிலும் சிறப்படையக்கூடிய ஒரு நிலையை இன்றைக்கு உருவாக்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு நான் என்னுடைய நன்றியை, பாராட்டுக்களை, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் பேசும்போது, “தேசத் தலைவர்களை, தேசத் தியாகிகளை மதிக்கின்ற இயல்பு படைத்தவர் முதலமைச்சர் கலைஞர்” என்று குறிப்பிட்டார்.

இன்று நேற்றல்ல, என்றைக்குமே எத்தனை ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட, நாட்டிற்காக, மொழிக்காக, இனத்திற்காக தங்களை ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் போற்றுவதிலும், புகழ்வதிலும், அவர்களுடைய நினைவு என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணி காரியமாற்றுவதிலும், நான் என்றைக்கும் யாருக்கும் பின்வாங்கியவன் அல்ல என்பதை நீங்களெல்லாம் மிக நன்றாக அறிவீர்கள்.

அந்த வகையிலே எத்தனை நினைவுச் சின்னங்கள் தமிழகத்திலே தி.மு.கழக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதையெல்லாம் இங்கே பட்டியலிட்டுக் காட்டி இருக்கின்றார்கள். அதிலும், இலக்கியச் செல்வர் அவர்களும், அவரே வேண்டுகோள் என்ற பெயரால் விடுத்து, எப்போதுமே இத்தகைய வேண்டுகோள்களை ஆணைகளாக ஏற்றுக்கொள்கிற நான், அந்த ஆணையை நிறைவேற்றுகின்ற வகையிலே, விஸ்வநாத்தாஸ் அவர்களுக்கான நினைவு மண்டபம் பெரிய அளவிலே மதுரை திருமங்கலத்திலே இன்றைக்கு உருவாகிக் கொண்டிருக்கின்றது.

அதைப்போலவே சென்னையில் அவர் ஒரு விழாவிலே எடுத்துச் சொன்னதை ஏற்றுக் கொண்டு கிண்டி பகுதியில் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. நான் நேற்றைக்குக்கூட அவர் ஒரு தொலைக்காட்சியிலே சொன்னதைப் பார்த்தேன். அந்த மணிமண்டபத்திலே வைப்பதற்கான தியாகிகளின் படங்களெல்லாம் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்று சில படங்களைக் கூட தொலைக்காட்சியிலே காட்டியபொழுது, எனக்குப் பெருமிதமாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது.

விரைவிலேயே தியாகிகளுடைய மணிமண்டபம் தயாராகும்.

இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன்.

“குமாரசாமி ராஜா அவர்களுடைய பெயரை இந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சூட்ட வேண்டும் என்று இராமசுப்பிரமணியராஜா குறிப்பிட்டு, அந்த வேண்டுகோளை நான் 89-90-இல் ஏற்றுக் கொண்டதை நன்றிப் பெருக்கோடு வரவேற்புரையில் இங்கே குறிப்பிட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவரின் அலுவலக வளாகத்திற்கு 89-ஆம் ஆண்டிலேயே குமாரசாமி ராஜா அவர்களுடைய பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். குமாரசாமி ராஜாவைப் போல, இன்னொரு பெயர் சொன்னால், நீங்களெல்லாம் நினைவில் கொள்ளக்கூடிய பெயர்தான். தமிழகத்திலே, அதிக காலம் ஆட்சி நடத்தாவிட்டாலும்கூட, அதிக காலம் மக்களுடைய உள்ளத்திலே இடம் பிடிக்கின்ற அளவிற்கு, அந்தக் குறைந்த காலத்தில் ஆட்சி நடத்திய, திராவிட இயக்கத் தலைவர்களால், தாடி இல்லாத பெரியார் என்று அழைக்கப்பட்டவர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்.

அந்த இராமசாமி ரெட்டியாருடைய நூற்றாண்டு விழா 1995-ஆம் ஆண்டு வந்தது. நான் ஆட்சியில் இல்லாத காலம் அது. 95-ஆம் ஆண்டு அவர்களுடைய நூற்றாண்டு விழா வந்தது. அந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக அப்போது இருந்த அரசு ஏதாவது முயற்சியில் ஈடுபட்டதா என்று நான் பழைய கோப்புகளையெல்லாம் புரட்டிப் பார்த்தேன். முயற்சியிலே ஈடுபட்டு, அதற்காக மூன்றரை இலட்ச ரூபாய் செலவு செய்வது என்று கோப்பிலே குறிப்பிட்டு, ஆனால், நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

ஒதுக்கப்பட்ட மூன்று லட்ச ரூபாய் செலவு செய்யப்படவில்லை. நான் சில பேர் செய்த நல்லவைகளைத் தொடர்ந்து செய்யக்கூடியவன். எப்படியாவது

செய்துகாட்டக் கூடியவன். அது என்னுடைய பெருமையைக் காட்டுவதற்காக அல்ல. பெரியவர்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்வதற்காக. அந்த வகையில் ஆகஸ்டு மாதம் 25-ஆம் தேதி மறைந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களுடைய பிறந்த நாள் வருகிறது. அந்த நாளில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழா 95-இல் நடத்துவதாக இருந்து நடத்தாமல் விடப்பட்ட அந்த விழா 98-ஆம் ஆண்டு ஆகஸ்டு 25-ஆம் தேதி சென்னை மாநகரில் மிகச்சிறப்பாக நடைபெறும்.

அதிலும் நம்முடைய மூப்பனார் அவர்களும், மற்ற கட்சித்தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என்று இப்போதே நான் அறிவிக்கிறேன். ஏனென்றால், குமாரசாமி ராஜா அவர்கள் எந்த அளவிற்குச் சாதாரண சாமான்ய மக்களிடத்தில் பரிவு கொண்டு ஆட்சி நடத்தினாரோ, பொது வாழ்க்கையில் ஈடுபட்டாரோ; அதைப்போல ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களும், எளிமையாக எல்லோரிடத்திலும் பழகுவதில் இனிமையாக வாழ்ந்தவர். அதே நேரத்தில், தான் கொண்ட கொள்கைக்காக பதவி போனாலும் பரவாயில்லை என்று இங்கே உள்ள தலைவர்களிடத்தில் அல்ல, ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு அவர்களிடத்திலேயே எடுத்துச் சொல்லி, தான் கொண்ட கொள்கையை நிறைவேற்றிக் காட்டியவர்.

அப்படிப்பட்ட ஓமந்தூராருக்கு ஆகஸ்ட் மாதத்திலே நூற்றாண்டு விழா - விடுபட்டுப் போன நூற்றாண்டு விழா, இரண்டு மூன்றாண்டு காலம் தாமதித்தாலும் நிச்சயமாக நடைபெறும் அது என்பதை இந்த விழாவிலே தெரிவிப்பது பொருத்தம் என்று கருதுகிறேன்.

ஏனென்றால், ஒரு முன்னாள் முதலமைச்சருக்கு நடைபெறுகின்ற நூற்றாண்டு விழாவில், இன்னொரு

முன்னாள் முதலமைச்சருடைய நூற்றாண்டு விழா நடைபெறும் என்று இந்நாள் முதலமைச்சராகிய நான் அறிவிப்பது மிகமிகப் பொருத்தம் என்பதற்காகத்தான் இதை நான் சொல்கிறேன். குமாரசாமி ராஜா அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால், அதை ஒரு வரி விடாமல் படித்துப் பார்த்தால், இங்கே நம்முடைய முல்லைவேந்தன் பேசும்போது குறிப்பிட்டார்.

‘குமாரசாமி ராஜாவும் சில கொள்கைகளுக்காகத் தன்னுடைய பதவியை இழக்க நேரிட்டது. கலைஞரும் அவ்வாறே இழக்க நேரிட்டது’ என்று குறிப்பிட்டார். இந்த ஒரு சம்பவம் மாத்திரமல்ல. இளமைக்காலத்திலேயே பல சம்பவங்கள் எனக்கும் அவருக்கும் பொருத்தமாக இருக்கின்ற சம்பவங்களை நான் காண்கிறேன். குமாரசாமிராஜா உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, இராஜபாளையத்திலிருந்து, திருவில்லிபுத்தூருக்கு ஏழு மைல் தூரம் நடந்தே வந்துதான் படித்தார் என்று அவரே தன்னுடைய வாழ்க்கைக் குறிப்பில் எழுதி இருக்கிறார்.

மூப்பனார் அவர்களுக்குத் தெரியும். நான் பிறந்த திருக்குவளைக்கும் திருவாரூருக்கும் 15 கல் தொலைவு. அங்கே உள்ள திருநெல்லிக்காவல் என்ற ஊருக்குச் சென்று, இரயிலேற ஏழு மைல் தூரம் நான் நடந்தே செல்லவேண்டும். நானும் ஏழு மைல்தூரம் நடந்துசென்றுதான் இரயிலேறி திருவாரூர் சென்று படித்தேன்.

முதல் பதிப்பு 2000