உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

புரசை கோபாலரத்தினம் இல்ல மணவிழா

பகுதி 2 · 2 / 2

உங்களுக்குத் தெரியும்; 89-ஆம் ஆண்டு நான் மூன்றாவது முறையாக முதலமைச்சராக இருந்தபோதுதான், சொத்துரிமையிலே பெண்களுக்கும் சமஉரிமை உண்டு, ஆண்களைப் போல பெற்றோருடைய சொத்தில் பெண்களுக்கும் சரிபாதி உண்டு என்ற சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினேன். அப்பொழுது சொன்னேன்; “1929-ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் இது. பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை வேண்டும் என்ற தீர்மானம்.

அதை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைக்குப் பெரியாருடைய அந்த எண்ணத்தைச் சட்டமாக நான் நிறைவேற்றி இருக்கின்றேன்” என்று சட்டமன்றத்திலே 89-ஆம் ஆண்டு சொன்னேன்.

பெண்களுக்குச் சொத்திலே சமஉரிமை மாத்திரம் அல்ல; இன்றைக்குக் கடந்த ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த, இந்த அரசு நடத்திய உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் - மாநகராட்சி மன்றம், நகராட்சி மன்றம், ஒன்றியங்கள், வேறு பல ஊராட்சி மன்றங்கள் இங்கெல்லாம் நடைபெற்ற தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு செய்த ஒரே ஆட்சி தி.மு.கழக ஆட்சிதான் என்பதை உங்களுக்கு நான் விளக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

திருச்சியிலே ஒரு பெண் மேயர் (இங்கே சென்னையிலே ஒரு ஆண் மேயர் இருப்பதைப் போல) திருநெல்வேலியிலே ஒரு பெண் மேயர். அந்த அளவிற்குப் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. அது மாத்திரமல்ல; கழக ஆட்சியிலேதான் 89-ஆம் ஆண்டு, திருமணமாகாத பெண்கள் 8-ஆவது வரையிலே படித்திருந்தால் போதும் - படித்து அதிலே பாஸ் பண்ணியிருக்க வேண்டும் என்று கூட அல்ல - படித்திருந்தாலே போதும். அந்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 5000 ரூபாய் நிதி உதவி என்று அறிவித்து, இப்பொழுது நான்காவது முறையாக நான் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த 5000 ரூபாய் போதாது என்பதற்காக 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து இந்த ஒன்றரை ஆண்டுக் காலத்திலே மாத்திரம், 46,000 தம்பதிகளுக்கு 46 கோடி ரூபாய் செலவிலே திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இது இந்த ஆட்சி.

இதற்கு முன்பிருந்த ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பதை நீங்கள் அறிவீர்கள். அதை இங்கே நம்முடைய பேரவைத் துணைத் தலைவர் தம்பி பரிதி. இளம்வழுதி விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார். வளர்ப்பு மகன் கல்யாணத்திற்கு நூறு கோடி ரூபாய் செலவழித்தார் என்று சொன்னார்கள். நாம்கூட சொல்ல

வில்லை. அவர்களே, அவர்களுடைய சொந்த டி.வி.யிலே “வரலாறு காணாத திருமணம்” என்று வருணித்தார்கள். “உலகத்திலே இதுவரை இப்படி ஒரு திருமணம் நடக்கவுமில்லை. இனிமேல் நடக்கப் போவதுமில்லை” என்று அவர்களுடைய டி.வி.யிலேயே ஒளிபரப்பினார்கள். இது ஊரறிந்த உண்மை.

ஆனால் என்ன ஆனது? அடுத்த வருடம் அந்த அம்மையார் சொல்லிவிட்டார்? “அவர் என்னுடைய வளர்ப்பு மகனே அல்ல” என்று! வளர்ப்பு மகன் சுதாகரனுக்குத் திருமணம் என்று பத்திரிகை அடித்து, இங்கே இருக்கின்ற பாமர மக்களுக்கு மாத்திரமல்ல; பாரதப் பிரதமருக்கு, ஜனாதிபதிக்கு எல்லாம் கொடுத்து விட்டு இங்கே அமர்க்களமாகத் திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு, ஓராண்டு கழித்துச் சொல்கிறார்கள், “அவன் வளர்ப்பு மகனே அல்ல” என்று.

ஓராண்டுக்கு முன்பு சொன்னதை, அடுத்த ஆண்டு மாற்றிக் கொள்ளக் கூடிய அவ்வளவு சாமர்த்தியசாலி உலகத்திலேயே ஜெயலலிதாவைத் தவிர வேறு யாருமே இருக்க முடியாது. ஒரு நாளைக்கு உயிர்த்தோழி என்பார்கள். அடுத்த நாள், “தோழி அல்ல, உடன்பிறவாச் சகோதரி” என்பார்கள். “அவரை விட்டு என்னால் பிரிந்திருக்க முடியாது” என்பார்கள். சில மாதம் மந்திரிகள் எல்லாம் போய் கேட்டார்கள்; “அம்மா அவர்களால்தானே உங்களுக்குக் கெட்ட பெயர்.

கொஞ்சம் அவர்களை விட்டுப் பிரிந்து இருங்களேன்” என்று கேட்டார்கள். அந்த அம்மா திருப்பிக் கேட்டார்கள்; “நீ உன் மனைவியை விட்டுப் பிரிந்திருப்பாயா?” என்று! தடாலடிக் கேள்வி, அதிரடிக் கேள்வி! அசந்து போய் விட்டார்கள் எல்லா அமைச்சர்களும்! “உன்னால் எப்படி உனது மனைவியை விட்டுப் பிரிந்திருக்க முடியாதோ அதைப்போல நான் சசிகலாவை விட்டுப் பிரிந்திருக்க முடியாது” என்று ஒரே

வார்த்தையிலே பதிலளித்து - அவர்களை எல்லாம் விரட்டிய பெருமாட்டிதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

அவருடைய ஆட்சியிலே நடைபெற்ற ஊழல்களை எல்லாம் நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொன்றாகச் சொல்ல நான் விரும்பவில்லை. உதாரணத்திற்கு ஒன்றை மாத்திரம் சொல்கிறேன், நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

என் மீதும், சிதம்பரத்தின் மீதும் அந்த அம்மாவுக்கு ரொம்ப கோபம். மறுபடியும் அந்த அம்மா ஆட்சிக்கு வருவார்களாம். என்னையும், சிதம்பரத்தையும், மூப்பனாரையும் கூண்டில் நிறுத்துவார்களாம். விசாரணை செய்வார்களாம். தண்டிப்பார்களாம். என்னவோ, இவர்களே நீதிபதிகள் மாதிரி, எல்லாம் இப்பொழுதே சொல்லி விட்டார்கள்.

சிதம்பரத்தின் மீது என்ன கோபம் தெரியுமா? இந்த அம்மாவிற்கு மூன்று லட்சம் அமெரிக்க டாலர் வெளிநாட்டிலிருந்து வந்தது. மூன்று லட்சம் டாலர் என்றால், நம்முடைய இந்தியப் பணத்திற்கு 1 கோடி ரூபாய். இதைக் கண்டு பிடித்து விட்டார் சிதம்பரம். அதிகாரிகளை விசாரிக்கச் சொன்னார்; “பணம் எங்கே என்று கேளுங்கள்” என்று!

அதிகாரிகள் வந்து கேட்டார்கள். “மூன்று லட்சம் டாலர் வந்ததா?” என்று. “ஆமாம் வந்தது” என்றார். “இல்லை” என்று சொல்ல முடியாது - ஏன் என்றால், தனது பெயரிலேயே இந்த அம்மா வங்கியில் போட்டிருக்கிறார். அதனால், ‘இல்லை’ என்று சொல்ல முடியவில்லை.

“வந்தது” என்றார். “யார் அனுப்பியது?” என்று கேட்டார்கள். “தெரியாது” என்றார்.

தெரியாத ஒருவர் அமெரிக்காவில் இருந்து அம்மையார் ஜெயலலிதாவிற்கு ஒரு கோடி ரூபாய்

அனுப்புகிறார். தெரியாதவர். அட்ரஸ் தெரியாதவன் அனுப்புகிறான். தெருவில் போகிறவன் அனுப்புகிறான், ஒரு கோடி ரூபாயை!

“என்ன செய்தீர்கள்?” என்றால், “வங்கியில் போட்டேன்” என்றார். “ஏன் போட்டீர்கள்? தெரியாத ஒருவர் அனுப்பும்போது, அதை நீங்கள் அவருக்கே திருப்பி அனுப்ப வேண்டியதுதானே?” என்று கேட்டார்கள். “அனுப்பியவர் முகவரி தெரியவில்லை. ஆகவே உடனே ஆடிட்டரைக் கூப்பிட்டுக் கேட்டேன். ‘என்ன செய்யலாம்?’

என்று. ஆடிட்டரிடம், “இப்படி ஒரு கோடி ரூபாய் வந்திருக்கிறது. யார் அனுப்பியது என்று தெரியவில்லை, என்ன செய்வது தெரியவில்லை” என்று கேட்டேன். ஆடிட்டர் சொன்னார்; உங்கள் பெயரிலேயே பாங்கில் போட்டுக் கொள்ளுங்கள், என்று சொன்னார்” என்கிறார் ஜெயலலிதா. ஆடிட்டரை கூப்பிட்டு கேட்டுத் தெரிந்து கொண்டு வங்கியிலேயே போட்டுக் கொண்டார்களாம். கிராமத்திலே சொல்வார்கள்; “ஒண்ணும் தெரியாத பாப்பா, போட்டுக் கிட்டாளாம் தாழ்ப்பாளை” என்று அந்த மாதிரி, இந்த அம்மா தன் பெயரிலேயே போட்டுக் கொண்டாராம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இது கல்யாணம். இங்கே அ.தி.மு.க.வினரும் வந்திருப்பார்கள். பரசுராமன், அவர்களைக் கூட அழைத்திருக்கக் கூடும். தேர்தல் நேரத்தில் எல்லோரையும் அழைத்திருப்பார். அவர்கள் கூட வந்திருக்கலாம்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த தம்பிகள் யோசித்துப் பார்க்க வேண்டும். சரி, ஒரு கோடி ரூபாய் வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் ஆடிட்டரைக் கூப்பிட்டுக் கேட்டார். அதற்குப் பதிலாக அந்த ஒரு கோடி ரூபாயை கட்சி நிதியிலேயே ஏன் போட்டிருக்கக் கூடாது? யோசித்துப் பார்த்தீர்களா? அந்த அம்மையார் முதல்வராக

இருந்தபோதுதானே இந்தப் பணம் வந்தது? முதலமைச்சர் நிவாரண நிதியிலே ஏன் அந்தப் பணத்தைப் போட்டிருக்கக் கூடாது. கட்சி நிதி ஞாபகத்திற்கு வரவில்லை. முதலமைச்சர் நிவாரண நிதி மூளையில் படவில்லை. சொந்தத்தில், பாங்கில் தனது பெயரிலேயே அந்தப் பணத்தைப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட ஊழல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல; பலகோடி ரூபாய்க்கு ஐந்தாண்டு கால ஆட்சியில் நடைபெற்றிருக்கின்றது. அவைகளை எல்லாம் களைந்து விட்டுத்தான், 96-ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.கழகத்திற்கும், த.மா.க.விற்கும் மற்ற தோழமைக் கட்சிகளுக்கும் உங்களுடைய ஆதரவைத் தந்து வெற்றி பெற வைத்தீர்கள். உங்களுடைய கட்டளைப்படிதான் நாங்கள், அந்த அம்மையாரையும் மற்ற அமைச்சர்களையும் நீதிமன்றத்திலே நிறுத்தி விசாரித்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த விசாரணை தொடர வேண்டும் என்பதற்காகவும், மத்தியிலே ஒரு நல்ல ஆட்சி இருந்து - ஒன்றரை ஆண்டுக் காலத்திலே அந்த ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அந்த நல்லாட்சி மீண்டும் அங்கே மலரவும், உங்களுடைய மேலான வாழ்த்துக்களை மணமக்களுக்கு அளியுங்கள். வாக்குகளை மாறனுக்கு வழங்குங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

புரசை கோபாலரத்தினம் இல்ல மணவிழாவில் ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000