புரசை கோபாலரத்தினம் இல்ல மணவிழா
பகுதி 1 · 1 / 2
புரசை கோபாலரத்தினம் இல்ல மணவிழா
பரசுராமன் அவர்களுடைய சகோதரர் கோபாலரத்தினத்தின் செல்வி மலர்விழி என்ற செந்தமிழ்ச் செல்விக்கும், சேலம் மாவட்டம் - மேட்டூர் வட்டம் எல்லைக்குடையூர் சுப்பிரமணியம் அவர்களுடைய செல்வன் முரளிதரனுக்கும் நம் அனைவருடைய இனிய நல்வாழ்த்துக்களோடு மணவிழா நிகழ்ச்சி இங்கே நிறைவேறியிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி யாருடைய குடும்ப நிகழ்ச்சி என்பதை எனக்கு முன்னால் பேசியவர்கள் எல்லாம் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.
நம்முடைய பரசுராமன் அவர்கள் எப்பொழுதுமே வஞ்சம் இல்லாத நெஞ்சம் படைத்தவர். கள்ளங்கபட மற்றவர். கிராமத்துக்காரர்கள் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். அதனால் அவர், விளிக்கும்போது, “கலைஞர் அவர்களே” என்று சொல்லிவிட்டு, பேராசிரியர் இங்கு வந்திருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிக் கூட தெரிந்து கொள்ளாமல், “பேராசிரியர் அவர்களே” என்று சொன்னதை நீங்கள் எல்லாம் கேட்டு மேடையை உற்று உற்றுப் பார்த்தீர்கள்; ஒருவேளை நமக்குத் தெரியாமல் பேராசிரியர் வந்து
எங்காவது உட்கார்ந்திருக்கிறாரோ என்று! அப்படிக் கள்ளங்கபடமற்றவர் பரசுராமன். அவருடைய இல்லத்தில் நடைபெறுகின்ற இந்த மணவிழா நிகழ்ச்சியிலே நான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவது மாத்திரமல்ல; இப்படிப்பட்ட வெள்ளை உள்ளம் படைத்தவர்களை எல்லாம், கள்ளமில்லாத உள்ளம் படைத்தவர்களை எல்லாம் நீங்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கடமையை உணர்த்துவதற்காகவும் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில் மத்திய சென்னையில் திமுக வேட்பாளராக தம்பி முரசொலி மாறன் நிறுத்தப்பட்டிருக்கிறார். இங்கே உங்களை யெல்லாம் பார்த்து, “மத்திய சென்னைத்தொகுதிக்கு மாத்திரம் வாக்களியுங்கள்!” என்று நான் கேட்க முடியாது. நீங்கள் சேலம் மாவட்டத்திலிருந்து வந்திருக்கின்றீர்கள். செங்கற்பட்டிலிருந்து வந்திருக்கின்றீர்கள். சென்னை, வடசென்னை பகுதியிலிருந்து வந்திருக்கின்றீர்கள். குறிப்பாக வந்திருக்கின்றவர்களில் பெரும்பாலோர் யார் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
இட ஒதுக்கீட்டில் தி.மு.க. ஆட்சியில் 20 சதவிகித இட ஒதுக்கீடு பெற்றவர்கள்தாம் பெரும்பாலும் இங்கே இருக்கின்றீர்கள் என்பதையும் நான் நன்றாக அறிவேன். (பலத்த கைதட்டல்)
போராடிப் போராடிப் பார்த்து பல பேரை, துப்பாக்கி ரவைகளுக்கெல்லாம் பலி கொடுத்தும் கூட கிடைக்காத அந்த இட ஒதுக்கீட்டை, 89-ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், யாரை அழைத்துப் பேச வேண்டுமோ அவர்களையெல்லாம் அழைத்துப் பேசி - “மிகவும் பின்தங்கிய மக்களுக்கு 20 சதவிகிதம் இனி வழங்கப்படும்” என்ற ஆணையை
பிறப்பித்தவன்தான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள்.
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக 1916-ஆம் ஆண்டுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டதுதான் திராவிட இயக்கமாகும்.
அந்தத் திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலாக அரசியல் பரிணாம வளர்ச்சி பெற்று, இன்றைக்குப் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகமாகும்.
1967-ஆம் ஆண்டு அண்ணா அவர்களுடைய தலைமையிலே தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்று என்றாலும் கூட, அதற்கு முன்பு ஒருமுறை - 20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்கு முன்பு, தமிழ்நாட்டை என் கேரளத்திலே சில பகுதிகளையும் ஆந்திரத்திலே சில பகுதிகளையும், கர்நாடகத்திலே சில பகுதிகளையும் உள்ளடக்கிய சென்னை மாகாணத்தை, சென்னை ராஜ்யத்தை ஆளுகின்ற பொறுப்பை ஏற்றிருந்து நீதிக்கட்சி என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த நீதிக்கட்சியின் பாரம்பரியம்தான், அதனுடைய அரசியல் வாரிசுதான் தி.மு.
கழகமாகும்.
நீதிக் கட்சியின் கொள்கை என்ன? சமத்துவம், சமதர்மம் - அதனால்தான் நீதிக்கட்சி தன்னுடைய கொடியிலே அன்றைக்குத் தராசு சின்னத்தை பொறித்திருந்தது. எல்லோருக்கும் சமத்துவம் வேண்டும், சமதர்மம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் கொடியைப் பொறித்து, நீதிக்கட்சி, ஆங்கிலத்திலே 'Justice Party' (ஜஸ்டிஸ் பார்ட்டி) என்று அழைக்கப்பட்ட அந்த இயக்கம் இன்றைக்கு அதனுடைய அரசியல் வாரிசான தி.மு. கழகமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உங்களுக்கு நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.
தந்தை பெரியார் அவர்கள் இந்த இயக்கத்திற்குத் தலைமையேற்று, அதன் பின்னர் பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை ஆட்சிப் பொறுப்பிலும் அமர்த்த வேண்டும். அதற்கும் மக்களுடைய ஆதரவைப் பெற வேண்டும் - பெரியார் சொல்லுகின்ற சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை எல்லாம் சட்டமாக ஆக்க வேண்டுமேயானால், நாம் ஆட்சிப் பொறுப்புக்குச் சென்றாக வேண்டும். ஏனென்றால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே பெரியாருடைய சமூகச் சீர்திருத்தக் கொள்கைகளை, பெரியாருடைய கோரிக்கைகளை, திராவிடர் கழகத்தின் எண்ணங்களை, கருத்துக்களை; பெரியாரின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றிருந்தாலும்கூட, காங்கிரஸ் அமைச்சரவையில் அதை எல்லாம் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
பெரியார் போராடிப் பார்த்தார். பெரியாருக்காக நாங்கள் சட்டமன்றத்திலே வாதாடிப் பார்த்தோம். சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாக வேண்டும் என்று தனிநபர் தீர்மானம் எல்லாம் கொடுத்தோம். அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறன் குறிப்பிட்டதைப் போல, அண்ணா முதலமைச்சராக வந்த பிறகுதான், “சுயமரியாதை திருமணம் சட்டப்படி செல்லுபடியாக ஆகும்” என்ற தீர்மானமே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த மண்ணுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக, சங்கரலிங்க நாடார் போன்ற தியாகிகள் எல்லாம் தங்களுடைய உயிரையே விட்டார்கள்; உண்ணா நோன்பிருந்து! அப்பொழுதும் இந்த மண்ணுக்கு அந்தப் பெயர் வைக்கப்படவில்லை. அறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று, தி.மு.கழக ஆட்சியிலேதான் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை இந்த மண் பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அதைப் போலவே இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து, 1937-38-ஆம் ஆண்டுகளில் இருந்து போராடி பல உயிர்களை அதற்குப் பலியாகக் கொடுத்து, கிடைக்காத அந்த வெற்றி - அண்ணா அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்று தி.மு.கழக ஆட்சி வந்த பிறகுதான், “இனிமேல் தமிழ் நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை” என்ற ஒரு நிலையான ஆணை பிறப்பிக்கப்பட்டு “தமிழ்நாட்டுப் பள்ளிக் கூடங்களில் இனிமேல் தமிழ், ஆங்கிலம் இரண்டும்தான் - இந்திக்கு இடமில்லை” என்று இந்தியாவிலே அறிவித்த ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடுதான், அதற்குக் காரணம், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்; அறிஞர் அண்ணா அவர்கள்தான் என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.
எனவே சமூக சீர்திருத்த இயக்கமாக இருந்த திராவிட இயக்கம், அரசியல் ரீதியாகவும் பங்கு பெற்று சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் பலவற்றைச் சட்டமாக்குகின்ற அந்தப் பெரும் பணியிலே வெற்றி கண்டிருக்கின்றது.
