உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பிடில் கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை நூற்றாண்டுவிழா

பகுதி 2 · 2 / 2

அப்போது இராஜமாணிக்கம் பிள்ளை தனக்கேயுரிய பெருந்தன்மையோடு சொன்ன பதிலை இங்கே நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். “அவர் ஒத்துக் கொள்கிறாரா என்று கேளுங்கள்?” என்றார். செளடய்யாவிடம் சென்று கேட்டபோது, அவர், “இராஜமாணிக்கம்பிள்ளை ஒத்துக் கொண்டால் நானும் ஒத்துக்கொள்கிறேன்” என்றார்.

அதற்கு இராஜமாணிக்கம் பிள்ளை, “சரி நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை, பதினைந்தாயிரம் ரூபாய் பணத்தை நீங்கள் சேர்த்து - (அப்போது பதினைந்தாயிரம் ரூபாய் என்றால் இன்றைய கணக்கிற்கு எவ்வளவு மதிப்பு என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்) - அந்த பண முடிப்பை ஒரு நடுவரிடம் கொடுத்து மேடையிலே அமர வைத்துவிடுங்கள். நாங்கள் இருவரும் வயலின் வாசிக்கிறோம். அதிலே யார் தோற்றுப் போகிறோமோ அவர்களிடம் அந்தப் பதினைந்தாயிரத்தைக் கொடுத்து ஊருக்கு அனுப்பி விடுங்கள்.

அவர் ஊருக்குச் சென்ற

பிறகு யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களை அழைத்து ஆண்டுதோறும் நீங்கள் சிறப்பு செய்யவேண்டும்” என்று கூறினாராம். “ஆனால் பதினைந்தாயிரம் ரூபாய் பெற்று தோற்றுப் போனவர் மீண்டும் காரைக்குடிக்கு வரவே கூடாது. வெற்றி பெற்றவரை மட்டுமே அழைக்கவேண்டும்,” என்று சொன்னாராம்.

அதற்கு என்ன பொருள்? அந்தப் பொருளை காரைக்குடி பெருமக்கள் புரிந்து கொண்டார்கள். என்னவென்றால், “நாங்கள் இருவரும் சமம்தான். நீங்கள் ஒருவரை வெற்றி பெறச் செய்து ஒருவரை தோற்கச் செய்து - ஒருவருடைய சங்கீதத்தை காரைக்குடி பகுதியே கேட்காமல் செய்துவிடாதீர்கள். எனவே இந்தப் போட்டி வேண்டாம்” என்று அவ்வளவு அருமையாக, ஜாடையாக தன் கருத்தை அன்றைக்கு இராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்திலே அவருக்கு யானை பரிசளிக்கப்பட்டது பற்றி கூறப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக இருக்கின்ற பெருமையும் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போதுதான், “உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்?” என்று அவரிடம் கேட்டபோது, “யானை பரிசாக வேண்டும்” என்று அவர் கேட்டார்.

யானையைப் பரிசாகப் பெற்றவுடன், அவருடன் நெருங்கிய நிலையிலே இருந்த முத்தையா பாகவதர் அவர்கள், இராஜமாணிக்கம் பிள்ளையைப் பார்த்து “என்னய்யா உமக்கு ஏதாவது புத்தியிருக்கிறதா, போயும் போயும் யானையைக் கட்டி தீனி போடப் போகிறீரே?” என்று கேட்டபோது அதற்கு அவர், “யானையை எனக்கா கேட்டேன், கும்பகோணம் கும்பேஸ்வர சுவாமி கோவிலுக்கல்லவா கேட்டேன்,”

என்று சொல்லி, கோவிலிலே அந்த யானையை அவர் ஒப்படைத்தார் என்பதும் அவருடைய வரலாற்றுச் சிறப்புகளில் ஒன்றாகும்.

அவர் சங்கீத வித்வான்களுக்கு - பாடகர்களுக்கு எவ்வளவு அனுசரணையாக, துணையாக - பட்டம்மாள் அம்மையார் குறிப்பிட்டதைப் போல் நிழலாக விளங்கினார் என்பதை நான் சொல்வதற்கு முழுத் தகுதியும் பெற்றவனல்ல. அதற்கு முழுத் தகுதியும் பெற்றவர்கள்தாம் இங்கே உரையாற்றிய சங்கீத விற்பன்னர்கள்.

ஒரு பக்கவாத்தியம் அது பிடிலாக இருந்தாலும் அல்லது மிருதங்கமாக இருந்தாலும் அல்லது கஞ்சிராவாக இருந்தாலும் அவர்கள் எப்படிப் பாடுபவரோடு ஒத்துழைக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் - எனக்குப் பாட்டுகளை ரசிக்கத்தான் தெரியும்; மூப்பனார் அவர்கள் என்னை விட அதிகமாக அதை உணர்ந்து ரசிக்கக் கூடியவர். நான் உணர்ந்து ரசிக்கக் கூடியவனல்ல. ஏனென்றால் இளமைக் காலத்திலேயே என்னை இசை கற்றுக் கொள்ள அனுப்பியபோது வேறு காரணங்களுக்காக அதை மறுத்தவன்.

இசையையே ஆரம்பத்தில் வெறுத்தவன். அதை ஏன் வெறுத்தேன் என்று இன்றைக்கு எனக்கு நானே வருந்துகிற அளவிற்கு இதுபோன்ற இசைவிழாக்களில் அது போன்ற உணர்வை நான் பெறுகிறேன்.

எனவே பக்கவாத்தியம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கல்ல - எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியை அமைத்திருந்தார்.

கலைவாணர் என்.எஸ்.கே. அந்தப் படத்தில் ஒரு பெரிய பாகவதர். அவரை ஒரு கச்சேரிக்கு

அழைத்திருக்கிறார்கள். திடீரென்று மிருதங்கக்காரர் வரவில்லை. ஊரெல்லாம் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. “யாரையாவது ஒரு ஆளைப் பிடித்து வாருங்கள்” என்கிறார். ஒருவர் சாலையில் தம்பட்டம் அடித்துக் கொண்டு போகிறார். அவரை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். “சரி, இவனைப் பக்க வாத்தியமாக உட்கார வை” என்று கூறி, “நான் பாடுகிறேன்.

நீ தம்பட்டத்தையாவது மிருதங்கத்திற்குப் பதிலாக ஒழுங்காக அடி” என்கிறார்.

என்.எஸ்.கே. “ராம... நீ... சமா” என்று பாடுவார். ஆனால் அந்த புதிய ஆள் அதற்குக்கூட ஒழுங்காக அடிக்கத் தெரியாமல் “டங்கு - டங்கு - டங்கு” என்று அடிப்பார். ஐந்தாறு முறை திரும்பத் திரும்ப என்.எஸ்.கே. ஒழுங்காகப் பாடிக் காட்டுவார். ஆனால் பக்க வாத்தியம் ஒத்துழைக்கவில்லை.

கடைசியாக என்.எஸ்.கே. அவர்களே பக்க வாத்தியத்திற்கு ஏற்ப “ராம... நீ... சமா”, ராம... நீ... சமா” என்று இவர் பாட ஆரம்பித்து விடுவார் (பலத்த கைத்தட்டல்)

எதற்காக இந்தக் காட்சி என்றால், பக்கவாத்தியம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்காக அல்ல, எப்படி இருக்கக் கூடாது என்பதற்காக கலைவாணர் என்.எஸ்.கே. ஒரு படத்திலே அந்தக் காட்சியை அமைத்தார். பக்கவாத்தியம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் மறைந்த பெரியவர் இராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள்.

அவர்களோடு எனக்கு நெருங்கிய பழக்கமில்லா விட்டாலுங்கூட பலமுறை அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஒருமுறை அறிஞர்

அண்ணா அவர்களும் நானும் குடந்தையிலே இராஜமாணிக்கம் பிள்ளை அவர்களுடைய இல்லத்திற்குச் சென்று அவரோடு உரையாடி மகிழ்ந்திருக்கிறோம். அதன் பின்னர் ஒருமுறை நான் அமைச்சரான பிறகு அவரிடம் வாழ்த்துப் பெறுவதற்காக அவரிடம் சென்று உரையாடியிருக்கிறேன்.

அவருடைய குடும்பத்தில், அவருடைய குலவிளக்குகளில் ஒரு விளக்காகத் திகழ்கின்ற தம்பி தியாகு இன்று தன்னுடைய பாட்டனாருடைய புகழ் போற்றி திரையுலகத்திலே பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற ஒளி விளக்காகத் திகழ்கிறார். அவருடைய அரும் முயற்சியால் எல்லா சங்கீத விற்பன்னர்களும் கூடுகின்ற ஒரு சபையை இங்கே கூட்டி, அவருடைய அருமைத் தாத்தா, நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கின்ற இராஜமாணிக்கம் பிள்ளை அவர்களுக்குப் புகழைச் சேர்த்திருக்கின்ற இந்த விழாவிலே கலந்துகொண்டு அவரை நானும் போற்றிப் பாராட்டுகிறேன்.

26-11-98 அன்று சென்னையில் பிடில் கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை நூற்றாண்டு விழாவில் ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000