உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பிடில் கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை நூற்றாண்டுவிழா

பகுதி 1 · 1 / 2

பிடில் கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை நூற்றாண்டுவிழா

இந்தச் சிறப்பான விழாவில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும் உங்கள் அனைவரோடும் சேர்ந்து கும்பகோணம் பிடில் இராஜமாணிக்கம் பிள்ளை அவர்களுடைய புகழ் போற்றுவதிலும் நான் மிகுந்த பெருமையும் பேருவகையும் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் எனக்குப் பெரும் ஆனந்தம் என்றே சொல்ல வேண்டும். மகிழ்ச்சி என்று சொல்வதை விட ஆனந்தம் என்று சொல்வதில் பொருள் இருக்கின்றது. ஏனென்றால் இசையிலே தோய்ந்தவர்கள், இசை இலக்கணத்தை முழுமையாக உணர்ந்தவர்கள், இசை பாரம்பரியத்தை உருவாக்கியவர்கள் இன்றைக்கும் தங்களுடைய இசை மழையால் தமிழ்மக்களுடைய இதயத்தை நனைய வைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த மேடையிலும் எதிரிலும் பல பேர் இருப்பதை நான் காண்கிறேன்.

அதனால்தான் ஆனந்தம் கொள்கிறேன் என்று குறிப்பிடுகிறேன். செம்மங்குடி அவர்களுடைய மொழியிலே சொல்ல வேண்டுமென்றால் ஆனந்தம் மாத்திரமல்ல. பிரமானந்தம் என்று கூடச் சொல்லலாம். அப்படிப்பட்ட

ஓர் உணர்வோடு நான் உங்கள் மத்தியில் நின்று கொண்டிருக்கிறேன்.

செம்மங்குடி அவர்களும், பட்டம்மாள் அம்மையார் அவர்களும், இலால்குடி ஜெயராமன் அவர்களும் ஆற்றிய உரைகளைக் கேட்டோம். இவர்கள் எல்லாம் சங்கீதத்தை முறையாகப் பயின்று, அந்த இலக்கணம் தெரிந்து தங்களுக்கு பல வழித்தோன்றல்களை உருவாக்கி இருப்பவர்கள். இப்படிப்பட்டவர்களுடைய உரைகளை எல்லாம் கேட்கும்போது, அதிலும் குறிப்பாக பெரியவர் செம்மங்குடி அவர்களுடைய உரையைக் கேட்கும்போது எனக்குத் தோன்றிய எண்ணம் - இவ்வளவு பழங்காலச் செய்திகளையெல்லாம் சொல்கிறாரே, நேரம் மாத்திரம் இருந்தால், ஓய்வு மாத்திரம் கிடைத்தால் ஒரு நாள் முழுதும் அவரோடு அமர்ந்து (கைத்தட்டல்) இந்தச் சங்கீத உலகச் செய்திகளை எல்லாம் கேட்டு அனுபவிக்கலாமே என்ற அளவிற்கு என் மனம் துடித்தது.

எனக்கு ஓய்வு எங்கே கிடைக்கப் போகிறது? நேரம் எங்கே வாய்க்கப் போகிறது?

ஆனால் எனக்கு மாத்திரம் அல்ல. தமிழகத்திலே உள்ள அனைவருக்கும் சேர்த்து செம்மங்குடி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இங்கே சொன்னீர்களே பல செய்திகளை, இதைப்போல மறைந்த மாமேதை நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என். இராஜரத்தினம் பிள்ளை விழாவிலே விரிவாகப் பல செய்திகளைச் சொன்னீர்களே, அதைப்போல இன்னும் உங்களுடைய உள்ளக் கிடக்கையிலே ஊறித் திளைத்துக் கொண்டிருக்கின்ற தேன்பாகு போன்ற பல செய்திகளை எல்லாம் நீங்களே ஒரு புத்தகமாக வெளியிடுவீர்களேயானால் (பலத்த கைத்தட்டல்) அது நிகழ் காலத்திற்கு

மாத்திரமல்ல, எதிர்கால இசை உலகத்திற்கும் பெரும் பயனுடையதாக இருக்கும்.

நான் எங்கே எழுதுவது? என் வயதென்ன? என்னால் எழுத முடியுமா? கண்ணொளி சரியாக இருக்கிறதா? கைவிரல் எழுத முடியுமா என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடும். நீங்கள் சொன்னால் அதைக் கேட்டு எழுதுவதற்கு அரசாங்கம் சார்பிலேயே ஒரு உதவியாளரை (பலத்த கைத்தட்டல்) நியமிக்க நான் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் அப்படிப்பட்ட பெரும்புதையலை உங்களுடைய உள்ளத்திலிருந்து அள்ளியெடுத்து இசை உலகத்திற்குத் தரவேண்டுமென்ற பெரும் விருப்பத்தோடுதான் இந்த வேண்டுகோளை பெரியவர் செம்மங்குடி முன்னால் வைக்கிறேன்.

அதை அவர் தட்டாமல் செய்வார் என்று நம்புகிறேன். இது அரசு ஆணையல்ல. அரசின் வேண்டுகோள் - அரசின் வேண்டுகோள் கூட அல்ல. கருணாநிதியினுடைய முறையீடு, கோரிக்கை என்று நான் அவருக்குச் சொல்ல விரும்புகிறேன்.

அத்தகைய செய்திகளையெல்லாம் இதுபோன்ற விழாக்களில்தான் அவரிடமிருந்து, நம்மால் கேட்க முடிகிறது. அந்தப் பெரியவர் - மறைந்தும் மறையாமல் இருக்கின்ற கும்பகோணம் வயலின் இராஜமாணிக்கம் பிள்ளை அவர்களைப் பற்றி ஆற்றிய உரையில் அள்ளித் தெளித்த பல செய்திகளை நாமெல்லாம் கேட்டோம்.

இசை என்றாலே சங்கீதம் என்று மாத்திரம் பொருள் அல்ல. புகழ் என்றும் அதற்கு ஒரு பொருள் உண்டு. ஈதல், இசைபட வாழ்தல் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். இசைபட வாழ்தல் என்றால் புகழோடு வாழ்வது என்ற பொருளில்தான் அங்கே இசை

வருகின்றது. அத்தகைய இசைக்கும் ஏந்தலாக - புகழுக்கும் உரியவராக வாழ்ந்து மறைந்து நம் நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கின்றவர் கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை அவர்கள்.

அவர் கையாண்ட இசைக்கருவி பிடில். நாம் ஒரு செய்தி கேட்டிருக்கிறோம் - இந்தப் பிடிலைப் பற்றி! ரோம் நகரம் பற்றி எரிகின்ற போது நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்பதாக. இப்பொழுது தான் எனக்குப் புரிகிறது. எவ்வளவு பெரிய துக்ககரமான சம்பவம் நடைபெற்றாலும் பிடில் வாசித்துக் கொண்டிருந்தால், அந்தத் துக்கம் மறைந்து விடும் என்பதை எடுத்துக்காட்டத்தான் ரோம் எரிந்த போது நீரோ பிடில் வாசித்தான் என்ற சொற்றொடர் பிறந்திருக்குமோ என்று நான் எண்ணுகிறேன்.

1948-ஆம் ஆண்டு கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை அவர்களுக்குச் சென்னை சங்கீத வித்வ சபையில் “சங்கீத கலாநிதி”, என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது பல நகரங்களில் இசைவாணர்கள் எல்லாம் கூடி அவருக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். அன்றைக்குத் திருவாரூரில் இசைவேளாளர் சங்கத்தின் சார்பில் தெற்கு வீதியும் கீழவீதியும் சந்திக்கும் முனையில் இராஜமாணிக்கம் பிள்ளைக்கு சங்கீத கலாநிதி பட்டம் பெற்றமைக்காக விழா நடைபெற்றபோது, அதில் நான் இளைஞனாக நின்று பேசியது, இன்னும் எனக்குப் பசுமையாக நினைவிலே இருக்கின்றது.

அப்போது நான் சொன்னேன் - “இந்தப் பட்டத்தினால் இராஜமாணிக்கம் பிள்ளைக்குப் பெருமையல்ல; இந்தப் பட்டத்தை இவருக்கு அளித்த சென்னை சங்கீத வித்வ சபை பெருமையைத் தட்டிக்கொண்டு போயிருக்கிறது” என்று குறிப்பிட்டேன்.

அவரைப் பற்றி பல குறிப்புகள் உண்டு. இங்கே செம்மங்குடி அவர்கள் மைசூர் வயலின் வித்வான் செளடய்யா அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.

காரைக்குடியில் ஒருமுறை இரண்டு நிகழ்ச்சிகளில் - ஒரு நிகழ்ச்சிக்கு இராஜமாணிக்கம் பிள்ளை அவர்களும், இன்னொரு நிகழ்ச்சிக்கு செளடய்யா அவர்களும் சென்றிருந்தபோது, காரைக்குடியில் இருந்த சங்கீத அபிமானிகள் எல்லாம் இராஜமாணிக்கம் பிள்ளையையும், செளடய்யா அவர்களையும் சந்தித்துக் கேட்டார்கள். “நீங்கள் இருவரும் ஒரே மேடையில் பிடில் வாசிக்க வேண்டும், அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்குப் பெரிய பரிசளிக்கக் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

முதல் பதிப்பு 2000