பேராயர் எஸ்ரா சற்குணம் மணிவிழா
பகுதி 2 · 2 / 2
சமூக நீதியை எத்தனையோ வழிகளில் நாம் இன்றைக்கு நிலைநாட்ட முடியும். மண்டல் கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு பல ஆண்டுகாலம் நாம் காத்திருக்க வேண்டியிருந்தது. அதை அறிவிக்க வி.பி.சிங் அவர்களின் ஆட்சியே கவிழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்குப் பிறகு வி.பி.சிங் அன்றைக்கு விதைத்த விதை பிறகு காங்கிரஸ் ஆட்சியிலே, பிரதமர் நரசிம்மராவ் அவர்களால் ஓரளவு பின்பற்றப்பட்டு இன்றைக்கு மண்டல் கமிஷன் பயனை இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்
பட்ட மக்கள் பெறுகின்ற அளவிற்கு இருக்கிறது. ஆனால் முழுமையாக இல்லை. முழுமையாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான் நம்முடைய தீரன் சொன்னதைப்போல, நாம் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.
எனவே, சமூக நீதியைப் பெறுவதற்கு பல ஆண்டு காலம் போராட வேண்டிய காலக் கட்டத்தில் நம்மால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கின்றோம். அதற்கு எத்தனையோ இடையூறுகள். நாம் பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மைச் சமுதாயத்து மக்கள் என்று இவர்களுக்காகப் பாடுபடுகிறோம் என்றால் - அவர்களுக்காக சமூக நீதி கோருகிறோம் என்றால், ஏற்கனவே முன்னேறிய சமுதாய மக்களுக்குச் சமூக அநீதி வேண்டுமென்று நாம் கருதவில்லை.
அப்படி யாரும் பொருள் கொள்ளக் கூடாது.
ஏற்கனவே முன்னேறியவர்களைக் காலை பிடித்து இழுத்து கீழே தள்ளாமல் - முன்னேறியவர்களோடு போட்டி போடுகின்ற அளவிற்குப் பின் தங்கியிருக்கின்ற மக்களை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் சமூக நீதிக் கொள்கையின் தாத்பரியம். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல், ஏதோ பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், சிறுபான்மை சமுதாயத்தினரும் முன்னேறி ஏற்கனவே முன்னேறிய மக்களையெல்லாம் அழித்து விட வேண்டும், அந்தச் சமுதாயத்தையே வீழ்த்திவிட வேண்டும் என்று எண்ணத்தோடு சமூக நீதியைப் பற்றி நான் பேசவில்லை.
வளர்ந்தவர்கள் மேலும் வளருவதற்கு நாம் தடையாக இல்லை. அதே
நேரத்திலே அவர்களைப் போல மற்றவர்களும் வளர வேண்டும் என்று கூறுவது யாருக்கும் விரோதமாக - யாருக்கும் பகையாகக் கூறுகின்ற கருத்து அல்ல. யாருக்கும் முரண்பாடான கருத்தும் அல்ல.
அந்த எண்ணத்தோடுதான் நான் ஒன்றை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். 1989-ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது பொருளாதாரத் துறையிலும் சட்டப் படிப்புக்குச் செல்ல முடியாமல், தொழிற்கல்விக்குச் செல்ல முடியாமல், மருத்துவக் கல்விக்குச் செல்ல முடியாமல் இருந்த கிராமப்புறத்து மக்கள் - ஒரு பட்டதாரி கூட தங்கள் குடும்பத்திலே இல்லை என்ற நிலையிலே உள்ள மக்களின் நிலையை உணர்ந்து ஒரு பட்டதாரி கூட இதுவரை இல்லை என்ற நிலையிலே உள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் மருத்துவக் கல்லூரியிலோ, பொறியியல் கல்லூரியிலோ சேர வேண்டுமென்றால் - உங்களுடைய சமூக நீதி இடைஞ்சலாக இருக்கிறதே என்று முன்னேறிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முணுமுணுத்த போதுதான் ஒரு திட்டத்தை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தினேன்.
அது ஓராண்டுக் காலம் நடைமுறையிலே கூட இருந்தது.
அது என்ன திட்டம் என்றால் - ஒரு குடும்பத்திலே அவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும், தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் - முன்னேறிய சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் - அய்யராக இருந்தாலும், அய்யங்காராக இருந்தாலும், செட்டியாராக இருந்தாலும், முதலியாராக இருந்தாலும், வன்னியராக இருந்தாலும்,
முக்குலத்தோராக இருந்தாலும், யாதவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் - ஒரு குடும்பத்திலே பட்டதாரிகள் அல்லது பட்டயதாரிகள் இல்லாமல் இருந்து முதல் பட்டதாரியாக ஒருவன் வருகிறான் என்றால், அவன் மருத்துவக் கல்லூரியிலோ, பொறியியல் கல்லூரியிலோ சேருவதற்கு ஐந்து மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றிருந்தாலும் அவனைச் சேர்க்க வேண்டும் (கை தட்டல்) அவன் தேர்வு செய்யப்பட வேண்டுமென்று ஒரு திட்டத்தை அறிவித்து, அது செயல்முறைக்கு வந்து அதன் காரணமாக அந்த ஆண்டு ஏறத்தாழ 300 முதல் 400 பேர் வரை அதிலே இடம் பெற்றார்கள். அப்படி இடம் பெற்றவர்களில் பிற்படுத்தப்பட்டோரும் உண்டு; தாழ்த்தப்பட்டோரும் உண்டு; மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் உண்டு; நான் சொன்ன முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்களும் உண்டு.
அப்படி இடம் பெற்றவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். நன்றி தெரிவித்தார்கள். ஆனால் சிலபேர் அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார்கள். அந்த வழக்கு நடைபெறக் கொண்டிருக்கும்போது 1991-ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. நடைபெற்ற வழக்கு நீதிமன்றத்திலே அரசாங்கத்தின் அந்தத் திட்டத்திற்கு எதிராக தீர்ப்பு கூறப்பட்டு அது கைவிடப்பட்டது. பிறகு ஐந்தாண்டு காலம் யாரும் அதைப் பற்றி எண்ணிப் பார்க்கவில்லை.
அதற்குப் பிறகு இங்கே தீரன் குறிப்பிட்டதைப் போல கிராமப்புறத்திலே உள்ள மாணவர்கள் தொழிற் கல்வி மருத்துவமானாலும், பொறியியல் ஆனாலும், வேளாண்மைக் கல்வியானாலும் - அதிலே சேருவதற்குக் கிராமப்புறத்திலே உள்ள மாணவர்களுக்குப் பதினைந்து
சதவிகிதம் இடம் ஒதுக்கப்பட்டு - சென்ற ஆண்டு பொறியியல் கல்லூரியிலும், இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியிலும், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு ஆபத்து வந்தது. நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். வழக்காடினார்கள். என்ன தீர்ப்பு வருமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தோம். நல்ல வேளையாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தீர்ப்பு - கிராமப்புறத்திலே உள்ள மாணவர்களுக்கு 15 சதவிகிதம் என்று அரசு ஒதுக்கீடு செய்திருப்பது செல்லும் (பலத்த கைதட்டல்) என்று கூறப்பட்டுள்ளது.
எனவே சமூக நீதிக்குத் தடையாக நீதிமன்றத்திற்கே சிலபேர் சென்றிருக்கிறார்கள் என்றால் இந்த சமூக நீதியை நாம் எளிதாகப் பெற்று விட முடியுமா? என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்னொன்று: நான் சொன்னது கல்வித் துறை; பொருளாதாரத் துறை. இதைத் தவிர சமுதாயத் துறையிலே இன்றைக்குச் சாதி வேறுபாடுகள், மத வேறுபாடுகள், மதக் கலவரங்கள், சாதிக் கலவரங்கள் - இவைகள் எல்லாம் ஓய வேண்டுமேயானால், சமூக நீதி முகிழ்த்திட வேண்டும். சமூக நீதி பரவிட வேண்டும். இல்லையேல் யார் தேர் இழுப்பது என்பதிலேயிருந்து போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். அவைகளை அடக்குவதற்கு அரசு சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்துதான் தீரும்.
இவைகளையெல்லாம் சட்டத்தால் மாத்திரம் அடக்கி விட முடியாது. மனம் பக்குவப்படுத்தப்பட வேண்டும். சாதிச் சண்டை, மதச் சண்டை, இவைகள் எல்லாம் ஓய வேண்டுமேயானால், மனம் பக்குவப்பட வேண்டும்.
மனத்தளவிலேதான் இவைகளிலே தூய்மையான வெற்றியை நாம் காண முடியும். அதற்காகத்தான் இந்த அரசு சமத்துவபுரங்களை மாவட்டந்தோறும் இன்றைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
சமத்துவபுரத்திலே நூறு வீடுகள் கட்டப்படுகின்றன என்றால் அவைகளில் பெரும்பாலான வீடுகள் தாழ்த்தப்பட்டோருக்கும், விகிதாசார முறையிலே மற்ற எல்லா மக்களுக்கும் - முன்னேறிய சாதியைச் சேர்ந்தவர்கள் உட்பட - அதிலே இடம் உண்டு. சமத்துவபுரத்திற்காக வீடுகள் கட்டத் தொடங்கிய போது ஒரு சந்தேகம். யாரும் அங்கே குடியேற வருவார்களா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
வேலூரில் பொய்கை என்ற கிராமத்தில் சமத்துவபுரத்தில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். இன்னும் ஒரு மாதத்தில் அதன் திறப்புவிழா நடைபெறவிருக்கிறது. அப்போதே அந்த வீடுகளிலே குடியேற பலபேர் விண்ணப்பித்துப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்றால், அவர்களிலே தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்; பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்; அதிசயமாக நான் சொல்கிறேன்; முன்னேறிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் - குறிப்பாக பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த சில குடும்பங்களும் அவர்களோடு சேர்ந்து சமத்துவபுரத்திலே வாழ சம்மதித்து வந்திருக்கிறார்கள் என்றால், இன்றைக்குப் படிப்படியாக நம்முடைய எண்ணங்கள் வெற்றி பெற்று வருகின்றன.
ஆனால் முழுமையாக அல்ல. அது முழுமையாக வெற்றி பெற முடியாமல் சில விஷமிகள் சில சமூக விரோதிகள் ஏதாவது தகராறு வந்தால் தான் தாங்கள் வாழ முடியும் - தாங்கள் அதற்குத் தலைமையேற்று நடத்த முடியும் என்று எண்ணுகின்ற சில நச்சு எண்ணம்
படைத்தவர்கள் அதற்கு இடம் தர முன்வருவதில்லை. அவைகளையெல்லாம் வேரறுத்து சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் காண்பதற்குப் பாடுபடுவதற்காக உள்ள பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நாமனைவரும் இந்த ஒரு பிரச்சினையிலே ஒரே இயக்கமாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதனால்தான் நம்முடைய ஆர்.எம்.வீ. அவர்கள் மனம் திறந்து சொன்னதைப் போல, இன்றைக்கு நம்முடைய பேராயர் அவர்கள் இந்திய சமூக நீதி இயக்கத்தை நம்மனைவருடைய ஒத்துழைப்போடு அனைவருடைய உடன்பாட்டுணர்வோடு இங்கே தொடங்கி வைத்திருக்கிறார்கள். இந்தச் சமூக நீதி வெற்றி பெற வேண்டுமேயானால், இன்னும் பல பேராயர்கள் நமக்குத் தேவை. பேராயர் என்றால் அந்த மதத்திலிருந்து தான் தேவை என்று சொல்ல மாட்டேன். பேராயர் போன்ற பெரும் குணம் படைத்தவர்கள் சமுதாயத்திலே இன்னும் பல்லாயிரம் பேர் தேவை, தேவை என்று கூறி அந்தத் தேவையை நிறைவு செய்யக் கூடிய வகையிலே ஆரம்பக் கட்டமாக, ஆரம்பக் கர்த்தாவாக நம் முன்னால் - நம்முடைய இனிய வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்ற பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்களுக்கும், அவருடைய துணைவியாருக்கும் உங்கள் அனைவரின் சார்பாக தமிழகத்தின் சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
18-7-98 அன்று பேராயர் எஸ்ரா சற்குணம் மணிவிழாவில் ஆற்றிய உரை
