பேராயர் எஸ்ரா சற்குணம் மணிவிழா
பகுதி 1 · 1 / 2
பேராயர் எஸ்ரா சற்குணம் மணிவிழா உரை
இந்த மேடையில் எஸ்ரா சற்குணம் அவர்களையும், திருமதி சற்குணம் அம்மையார் அவர்களையும் காணுகின்ற நேரத்தில் இது எஸ்ரா சற்குணத்தின் மணி விழாவா? மணவிழாவா? என்று ஐயுறும் அளவிற்கு நாமெல்லாம் அகமகிழ்ந்து அவர்களை இனிய உள்ளத்தோடு இதயம் திறந்து புகழ்ந்து பாராட்டி வாழ்த்திக் கொண்டிருக்கின்றோம்.
இங்கே மிகப் புதுமையாக இதுவரையில் இல்லாத வித்தியாசமான முறையில் எங்களுக்கெல்லாம் வரவேற்பு வழங்கப்பட்டது. இசை வாயிலாகவும், நடன வாயிலாகவும் நாங்கள் இங்கே வரவேற்கப்பட்டோம். மாணவிகள் எல்லாம் வித விதமான வண்ண ஆடைகளைப் புனைந்து மலர் மாலைகளை மேடைக்கு எடுத்து வந்து நடனமாடிக் கொண்டே, அவைகளை எங்களுக்கெல்லாம் அணிவித்த அந்தக் காட்சியைப் பார்த்து நாங்கள் மகிழாத அளவுக்கு அதிகமாக ஆற்காடு இளவரசர் அவர்கள் மகிழ்ந்து அதை இங்கே பாராட்டினார்கள்.
ஆற்காடு நவாப் அல்லவா! (சிரிப்பு) அந்தப் பழைய காலத்து தர்பார் காட்சி - கொலு மண்டபத்திலே நடனமாடும் நிகழ்ச்சிகளையெல்லாம் நினைவிற் கொண்டு திரைப்படத்துறையிலே “பிளாஷ்பேக்” என்பார்களே அந்த நினைவோடு அதைப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.
இதுபோன்ற புதுமைகளையெல்லாம் செய்யக்கூடிய அந்தத் திறமையும், அந்த நினைப்பும் பேராயர் சற்குணம் அவர்களுக்குத் தான் வரும். அதைத்தான் நாம் இங்கே கண்டோம்.
அவரை எஸ்ரா சற்குணம் என்று அழைக்கும் போது பல பேருக்கு அவரைத் தெரியும் - அவருடைய தொண்டு தெரியும் - அவருடைய உழைப்பு தெரியும் - பேராயருடைய பேருள்ளம் புரியும். ஆனால் “எஸ்ரா சற்குணம்”, என்று ஏன் அழைக்கிறோம்? “எஸ்ரா” என்றால் என்ன? என்பதையே பல பேர் அறியாமல் இருக்கக்கூடும். எபிரேய மொழியில் எஸ்ரா என்றால் உதவி செய்பவர் என்று பொருள். அதைக்கூட இப்போது நான் மேடையில் அவரைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன்.
ஆனால் ஒரு ஆசைச் சொல்லாக - அடைமொழியாக - ஏதோ இருகுறிப் பெயராக அதை கருதிக் கொண்டு, எஸ்ரா, எஸ்ரா என்று நாம் அவரை அழைத்து வந்தாலும் அதில் பொதிந்து கிடக்கும் பொருள் - அவருடைய வாழ்க்கையை அவருடைய உள்ளத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.
உதவி செய்பவர் என்று தமிழ்ச் சொல்லில் நீளமாகச் சொல்வதற்குப் பதிலாக எபிரேய மொழியில் எஸ்ரா என்று அவர் அழைக்கப்படுகிறார். தமிழிலே அதற்குச் சரியாக ஒரு சொல்லை சொல்ல வேண்டுமேயானால், “தொண்டர்” என்று கூற வேண்டும். அவர் வள்ளல் தன்மை வாய்ந்த தொண்டராக இருக்கின்ற காரணத்தால் வள்ளல் என்று சொன்னாலும் பொருந்தும்.
அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த - ஈகை குணம் படைத்த - ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்களே, அந்த உண்மையான தத்துவத்தை இதயத்திலே பதிய வைத்துக் கொண்டிருக்கின்ற பெருமைக்குரியவர்தான் நம்முடைய பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள்.
முன்னால் பேசியவர்கள் எல்லாம் இங்கே எடுத்துக் காட்டியதைப்போல - தமிழ்நாட்டிற்குக் கிறித்தவ சமுதாயப் பெரியவர்களோடு மிகுந்த தொடர்பு உண்டு. நம்முடைய அடிகளார் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டினார், ஆற்காடு இளவரசரும் சுட்டிக் காட்டினார். எத்தனை கிறித்தவ அறிஞர்கள் தமிழுக்காகப் பாடுபட்டார்கள்? தமிழை வளர்த்தார்கள்; தமிழை உலகத்திலே அறிமுகப்படுத்துகின்ற அளவிற்குப் பணியாற்றினார்கள் என்பதையெல்லாம் எடுத்துக்காட்டினார்கள் அல்லவா?
இந்தியாவிலே கிறித்தவ மதம் பரவத் தொடங்கினாலுங்கூட மொழியைக் காப்பதற்காகப் பாடுபட்ட நிலை தமிழகத்திலேதான் உண்டு என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது.
அச்சு எழுத்துக்களைக் கூட கிறித்தவ சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கண்டுபிடித்தார்கள் என்றும், அவர்கள் தரங்கம்பாடியில் ஒரு காலத்திலே வாழ்ந்தார்கள் என்பதும் வரலாறு. இந்த அருமையான நிகழ்ச்சிகளையெல்லாம் கிறித்தவப் பெரியார்கள், பாதிரியார்கள் எப்படித் தமிழுக்குத் தொண்டாற்றினார்கள் என்பதையெல்லாம் எங்கள் கழகப் பொதுச் செயலாளரும், பேராசிரியருமான அன்பழகனார் அவர்கள் ஒரு பெரிய புத்தகத்தின் வாயிலாக எழுதி காட்டியிருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு ஒரு பெரும் பக்கம் வெளிப்படக் கூடிய அளவிற்குக் கிறித்தவ சமுதாயத்தைச் சேர்ந்த அறிஞர்கள் - பெரியவர்கள் - அந்தச் சமுதாயத்தின் பேராயர்கள் தமிழோடு தங்களுடைய தொடர்பை வளர்த்துக் கொண்டு - தாங்களும் வளர்ந்து தமிழையும் வளர்த்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டது இந்த நாடு என்பதற்கு அடையாளமாகத்தான் உலகத் தமிழ் மாநாடு
நடைபெற்றபோது சென்னைக் கடற்கரையில் ஜி.யு.போப் அவர்களுடைய சிலையையும், கால்டுவெல் அவர்களுடைய சிலையையும், வீரமாமுனிவருடைய சிலையையும் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையிலே நாம் திறந்து வைத்தோம். அந்த அளவிற்கு தமிழகத்திலே உலகத் தமிழ் மாநாட்டிலே பலருக்குச் சிலை வைப்பதென்றால், அதிலே கிறித்தவப் பெரியவர்களை விட்டு விட்டு சிலைகளை அமைத்தால், அது நிறைவாக இருக்காது என்ற எண்ணத்தோடுதான் அந்த மூன்று பேருடைய சிலைகள் சென்னைக் கடற்கரையிலே வைக்கப்பட்டன.
அதைப்போல தமிழுக்காக - தமிழ்தான் இந்தியாவினுடைய பொதுமொழியாக இருக்க வேண்டும் என்று சொன்ன கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களுக்கும் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்று எண்ணி - அவர்களுடைய மார்க்கம், அவர்கள் மதக் கொள்கைப்படி - அவர்களுக்குச் சிலை வைக்க இயலாத காரணத்தால்தான், காயிதேமில்லத் பெயரால் பல கல்லூரிகள், பல பள்ளிகள் அவருடைய நினைவாக தமிழகத்திலே எழுப்பப்பட்டது. இதைச் சொல்வதற்குக் காரணம் தமிழ்நாட்டிலே தமிழை வளர்ப்பதற்கு சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மெத்தவும் பணியாற்றியிருக்கிறார்கள், பாடுபட்டிருக்கிறார்கள் - அவர்களைத் தமிழ்ச் சமுதாயம் மறந்ததில்லை.
அவர்களைப் பெருமைப்படுத்தியிருக்கிறது என்பதை வரலாற்றுப் பூர்வமாக நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை நான் குறிப்பிடுகிறேன்.
இந்த நல்ல நிகழ்ச்சியில் எஸ்ரா அவர்களுடைய ஒரு அருமையான நினைவில் தோன்றிய காரியம் ஒன்று
இங்கே செயல்படவும் பெற்றிருக்கின்றது. அதுதான் இந்திய சமூக நீதி இயக்கத்தை இன்றைக்கு இங்கே நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். அந்தப் பலகையை நான் திறந்து வைத்தேன் என்பது சம்பிரதாயம்தான். இங்கே வீற்றிருக்கின்ற நம்முடைய மக்கள் தலைவர் மூப்பனார் உட்பட எல்லாத் தலைவர்களுக்கும் உடன்பாடான - எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உடன்பாடான ஒன்றுதான் இங்கே இந்த நிகழ்ச்சியோடு இணைக்கப்பட்டிருக்கின்றது. இந்திய சமூக நீதி இயக்கம் என்கிற அந்தத் தலைப்போடு பேசிவிட்டு சென்ற தம்பி பாலசுந்தரம் சொன்னார், கலைஞர் அவர்களே, உங்கள் காலத்தில் முழுமையான சமூகநீதி - ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் தமிழகத்திலே உருவாகாவிட்டால், பிறகு எந்தக் காலத்திலும் அது நடக்காது என்று சொன்னார்.
அவர் அப்படிச் சொன்னதற்கு காரணம், என்னால் தான் செய்ய முடியுமென்பதல்ல. என் காலத்திற்குள்ளாக யாவது செய்து முடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தால் அதைச் சொல்லியிருக்கிறார். ஆனால் நான் குறிப்பிட விரும்புகிறேன். இது ஏதோ குறிப்பிட்ட ஓராண்டு காலம் இரண்டாண்டு காலத்திற்குள் செய்து முடித்துவிடுகின்ற ஒரு காரியம் அல்ல. ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சமுதாயத்தைத் தாக்கிய கொடுமைகளை - இந்தச் சமுதாயத்தையே அன்றைக்கு அழுத்துகின்ற அளவிற்கு - அடித்தளத்திலே தள்ளுகின்ற அளவிற்குக் கலந்து விட்ட குப்பைகளையெல்லாம் அகற்றுவதென்றால் அது ஓரிரண்டு ஆண்டுக் காலத்தில் முடியக்கூடியதல்ல.
ஐந்தாண்டுக்கால குப்பைகளையே இரண்டாண்டு காலத்திலே முழுமையாக அகற்ற முடியவில்லையென்றால் (பலத்த கைதட்டல்) ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தை அழித்து, கெடுத்து விட்ட சாதி, மத பேத குப்பைகளை, சம்பிரதாயங்களை,
சாத்திரங்களை, சாத்திரக் கொடுமைகளை, சமூக அநீதிகளை ஒரே ஆண்டில் அல்லது இரண்டே ஆண்டில் தொலைத்துவிட முடியும் என்பது முடியாத காரியம்.
இந்தியா முழுமையும் அத்தகைய காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காகக் கௌதம புத்தர் பாடுபட்டார்; மகாவீரர் பாடுபட்டார்; எத்தனையோ சமணத் துறவிகள் பாடுபட்டார்கள். சைவப் பெரியவர்கள் பாடுபட்டார்கள்; ஆழ்வார்கள் பாடுபட்டார்கள்; புரட்சிக்காரர்களாகத் தோன்றிய பெரும் தலைவர்கள் எல்லாம் பாடுபட்டார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்கள் எல்லாம் பாடுபட்டார்கள்.
பாடுபட்டும்கூட முடியாத ஒரு காரியத்தை நான் ஓரிரண்டு ஆண்டுகாலத்தில் செய்து முடித்துவிட முடியுமென்று எண்ணுவது சரியல்ல! ஆனால், எப்படி முடியுமென்று, கை பிசைந்து - கைகட்டி நாம் சும்மாயிருந்து விடக்கூடாது. நாம் தொடர்ந்து நம்முடைய பணியை ஆற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று துளிர்த்து சமூக நீதியை நிலைநாட்ட நாடெல்லாம் புறப்பட்டாக வேண்டும்.
