நெல்லிக்குப்பம் புகழேந்தி மணவிழா
பகுதி 2 · 2 / 2
ஆனால் இந்தக்காலத்து இளைஞர்களில் பலர் - எல்லோரையும் சொல்லவில்லை. பலர் எந்தக் கட்சிக்குப் போனால் உடனடியாகப் பதவி கிடைக்கும்; எந்தக் கட்சிக்குப் போனால் உடனடியாகப் பணம் சேர்க்கலாம், எந்தக் கட்சிக்குப் போனால் உடனடியாகச் செல்வாக்குப் பெறலாம் என்று இப்படிக் கணக்குப் போடுகிறான். அப்படிக் கணக்குப் போடும்பொழுது தி.மு.கழகத்தைப் பற்றி என்ன எண்ணுகிறான் என்றால் ‘ஏ அப்பா! ரொம்ப காலமாக இருக்கிற இளைஞர்களெல்லாம் இன்றைக்கு அங்கே பெரியவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் இடம் விட்டால்தானே நாம் அங்கே போனால் நமக்கு இடம் கிடைக்கும். ஆகவே, அந்த இடம் வேண்டாம். காலியாக உள்ள இடம் எது என்று பார்த்து அந்த இடத்திற்குச் செல்கிறார்களே தவிர ஒரு சிந்தனையோ, பகுத்தறிவோ அல்லது கொள்கைப்பிடிப்போ, இலட்சிய உணர்வோ எதுவும் இல்லாமல் இளைஞர்கள் இன்றைக்குத் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்.
காரணம் அவர்கள் தங்களைப்பற்றி சிந்திக்கின்ற காரணத்தால் வருவது இது. மக்களைப் பற்றி - நாட்டைப் பற்றி - சமுதாயத்தைப் பற்றி - மொழியைப் பற்றி - இனத்தைப் பற்றி - இன உணர்வைப் பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கினால் நான் சொன்ன இந்த விவரங்களெல்லாம் இளைஞர்களின் வாழ்க்கையில் நிச்சயமாக வந்து குறுக்கிடாமலே விலகிவிடும்.
அப்படிச் சிந்திக்காமல் கொள்கை ரீதியாக சிந்தித்து இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொண்ட தம்பி புகழேந்திக்கு இப்படிச் சிந்தனை ஏற்பட இன்னொரு காரணம் அவருடைய தந்தையார். அவருடைய தந்தை இந்த இயக்கத்திலே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு எவ்வளவு ஆழமான இலட்சிய உணர்வோடு பாடுபட்டார் என்பதை இங்கே எனக்கு முன்னால் பேசியவர் களெல்லாம் எடுத்துரைத்தார்கள். அப்படிப்பட்ட குடும்பத்திலே பிறந்த தம்பி புகழேந்தி இந்த இயக்கத்திலே இன்றைக்குத் தலைசிறந்த பேச்சாளராக விளங்குகிறார் என்று அவரை அழைத்து வந்து என்னிடத்திலே முதன்முதலாக அறிமுகப்படுத்திய தம்பி துரைமுருகன் மெத்தவும் பெருமைப்பட்டுக்கொண்டார்.
இன்றைய பேச்சாளர்களுக்கு நிறைய கூட்டங்கள் அழைப்புக்கள் வருகின்றன. துரைமுருகன் ஒன்றைச் சொல்ல எண்ணி அதை விட்டு விட்டார் என்று கருதுகின்றேன். அவர் செல்கின்ற இடங்களிலெல்லாம் புகழேந்தி அங்குள்ள கழக நண்பர்களிடத்திலே எளிமையாகப் பழகுகிறார், மீண்டும் அவரைக் கூட்டத்திற்கு அவர்கள் அழைக்கக் கூடிய அளவுக்கு அவருடைய நட்புணர்வு, பழக்கவழக்கங்கள் இருக்கின்றன என்று எடுத்துச் சொன்னார். ஒரு குறை புகழேந்தியிடத்தில் இல்லை; வேறு சில பேச்சாளர்களிடத்தில் உண்டு.
சில நேரங்களில் முரசொலியைப் பார்த்ததும் எனக்கே அதிர்ச்சி ஏற்படும். ஒரு பேச்சாளர் 5-ஆம் தேதி மாலை
நெல்லிக்குப்பத்திலும் பேசுவார். அதே 5-ஆம் தேதி மாலை நெல்லை மாவட்டத்திலே உள்ள பாளையங்கோட்டையிலும் பேசுவார் என்று செய்தி இருக்கும். நான் கூட முரசொலிக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்வேன். எப்படி இரண்டு ஊர்களிலும் ஒரே தேதியில் பேசுகிறார் என்று செய்தி போட்டீர்கள் என்று கேட்பேன். இரண்டு ஊர்களில் இருந்தும் செய்தி வந்திருக்கிறது. எனவே போட்டுவிட்டோம் என்பார்கள். அது கூடாது. புகழேந்தியைப் பொறுத்தவரையில் அந்த முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
சில பேச்சாளர்களுக்கு முகதாட்சண்யம் என்பார்களே அதைப்போல யார் தேதி கேட்டாலும் கொடுத்துவிடுவது, எந்தத் தேதியிலே எந்த ஊருக்குச் செல்ல வசதி இருக்கிறதோ அந்த ஊருக்கு மாத்திரம் செல்வது என்ற நிலையை, அவர்கள் எண்ணிப்பார்ப்பது இல்லை. அதனால் கூட்டம் நடத்துபவர்கள் எந்த அளவுக்குக் கவலைப்படுவார்கள் என்பதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. கூட்டம் நடத்துகின்றவர்கள் களாகப் பேச்சாளர்கள் இருந்திருப்பார்களேயானால் அந்த நிலையைப் பற்றி எண்ணத் தோன்றும்.
என்னைப் பொறுத்த வரையில் எடுத்த எடுப்பில் மேடை ஏறி பேசியவன் அல்ல நான். பலபேருக்கு மேடை போட்டுக் கொடுத்தவன். பெரியாருக்கும் பேரறிஞர் அண்ணாவுக்கும் மாத்திரமல்ல, நாவலர் நெடுஞ்செழியனுக்கு, பேராசிரியர் அன்பழகனார் அவர்களுக்கு தளபதி அழகிரிசாமிக்கு திருவாரூரில் மாணவப் பருவத்தில் மேடை போட்டுக் கொடுத்தவன்.
எனவே ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட தலைவர் வரவில்லை என்றால் எவ்வளவு சங்கடம் இருக்கும் என்பதை அனுபவ ரீதியாக உணரக் கூடியவன். 1942-ஆம் ஆண்டில் திருவாரூரில் ‘தமிழ்நாடு தமிழ் மாணவர்
மன்றத்தின் மாநாட்டை நடத்தினேன். அந்த மாநாட்டிற்கு சேலம் இராமசாமி கவுண்டர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டிருந்தேன். அவரும் ஒத்துக்கொண்டிருந்தார். அப்பொழுது கலையுலகத்திலே - இந்த இயக்கத்திலே பிரசித்தி பெற்ற நடிகராக விளங்கிய நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களின் நாடகம் நாகப்பட்டினத்திலே நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனவே, அவர் திருவாரூருக்கு வருவது சுலபம் என்று அவரையும் கேட்டிருந்தேன். அவருடைய பெயரையும் போட்டிருந்தேன்.
இன்னும் சில ஆன்றோர்கள், சான்றோர்களையும் அழைத்திருந்தேன்.
இவர்களெல்லாரும் வருவார்கள் என்று அன்று காலையில் இரயிலடியில் போய் நின்று கொண்டிருந்தேன். யாரும் வரவில்லை. அவர்களுக்குப் பதிலாக தந்திகள் தாம் வந்தன. இராமசாமி கவுண்டரின் துணைவியாருக்கு உடல்நலம் சரியில்லை. ஆகவே நான் வரவில்லை என்று அவர் தந்தி கொடுத்துவிட்டார். நடிகவேள் இராதா அவர்கள் நாகப்பட்டினத்திலிருந்து வர முடியவில்லை. காரணம் அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் இராதா அவர்களுக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டு அங்கிருந்து நகர முடியாத ஒரு சூழ்நிலை.
எனவே அவரும் வர முடியவில்லை.
எனவே இப்படி யாரும் வரமுடியவில்லை என்றவுடனே இரயிலடிக்குச் சென்றிருந்த எனக்கு மயக்கமே வந்துவிட்டது. பக்கத்தில் இருப்பவரைப் பிடித்துக் கொள்கிற அளவுக்கு மயக்கம் வந்துவிட்டது. காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி. எல்லோரும் வருவார்களே, எவ்வளவு அவமானமாக இருக்கும்; எத்தனை பேருக்கு ஏமாற்றம் ஏற்படும் என்று எண்ணியவாறு உடனடியாக - குடந்தையில் அன்றைக்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு நம்முடைய பேராசிரியர் அவர்களும், மறைந்த நண்பர் மதியழகனும் வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு உடனடியாக இரண்டு பேரிடம் கடிதம்
கொடுத்து பேருந்தில் அனுப்பி ‘இருவரும் திருவாரூருக்கு வாருங்கள், வருவதாக ஒத்துக்கொண்டவர்கள் வர இயலவில்லை’ என்று கடிதம் கொடுத்து அனுப்பினேன். அவர்களும் வந்தார்கள். வந்து கலந்து கொண்டார்கள். பிறகுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது.
எனவே கூட்டம் நடத்துபவர்களுக்குத்தான் தெரியும் கூட்டத்திற்கு ஒருவர் ஒத்துக்கொண்டு வராவிட்டால் ஏற்படுகின்ற அந்த வேதனை. எனவேதான் பேச்சாளராக மாத்திரம் நம்முடைய தோழர்கள் இல்லாமல் செயலாளர்களாகவும் விளங்க வேண்டும். அதற்காக புகழேந்தி நாளைக்கே நெல்லிக்குப்பத்திலே நகரச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறேன் என்று வந்து விட வேண்டுமென்று நான் அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை.
செயலாளர் என்றால் செயல்புரிகின்றவர்களாக இருக்க வேண்டும். வெறும் கச்சேரிக்கு மாத்திரம்தான் போவேன் என்று கச்சேரி நடத்துபவர்களாக மாத்திரம் நம்முடைய பேச்சாளர்கள் இருக்கக்கூடாது. செயல்புரிபவர்களாகவும் இருக்க வேண்டும். ஆங்காங்கு சென்று நம்முடைய கிளைக் கழகங்கள், ஒன்றியக் கழகங்கள், மாவட்டக் கழகங்கள், வட்டக்கழகங்கள், நகரக் கழகங்கள் இங்கெல்லாம் கூட்டம் முடிந்தபிறகு அமர்ந்து பேசி, எப்படி எப்படி இங்கே பணிகள் நடைபெறுகின்றன என்பதையெல்லாம் கேட்டு உறுப்பினர்கள் சேர்த்து விட்டீர்களா?
தலைவரும், பொதுச்செயலாளரும் அடிக்கடி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்களே? உறுப்பினர் படிவம் வாங்கி வந்தீர்களா? எத்தனை படிவங்கள் வாங்கி வந்தீர்கள், எவ்வளவு உறுப்பினர் சேர்த்திருக்கின்றீர்கள்? எப்போது தலைமைக்கழகத்திற்கு அனுப்பப் போகிறீர்கள்? - என்றெல்லாம் அத்தகைய செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டும்.
எனவே பேச்சாளராக இருந்தால் மாத்திரம் வளர்ந்து விட முடியாது. அந்தப் பேச்சாளர் செயலாளராக - செயல்புரிபவராக இருக்க வேண்டும். இன்றைக்கு நான் உங்கள் முன்னால் தி.மு.கழகத் தலைவனாக இருக்கிறேன் என்றால் நான் பேச்சாளராக மாத்திரம் வளர்ந்திருந்தால் இந்த நிலை எனக்கு ஏற்பட்டிருக்க முடியாது. தி.மு.கழக தலைமைத் தொண்டனாக நான் இன்றைக்கு இருப்பதற்குக் காரணம் அன்றைக்கு என்னுடைய வாழ்க்கை, தொண்டனாக ஆரம்பிக்கப்பட்ட காரணத்தால்தான் இன்றைக்கு இந்தக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் இருக்கிறேன்.
இதைத் தம்பி நெல்லிக்குப்பம் புகழேந்தி மூலமாக கழகத்திலுள்ள எல்லாப் பேச்சாளர்களுக்கும் எடுத்துச் சொல்லி எப்படி பேசினேன் தெரியுமா’ என்று பேச்சைப் பற்றி மற்றவர்களிடத்தில் கேட்பதை விட நம்முடைய செயல்பாடுகளைப் பாராட்டுகின்ற அளவுக்கு நம்முடைய கழகக் கண்மணிகள் நடந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டு இதையே இந்தத் திருமண விழாவிலே தம்பி புகழேந்தி - டெல்சி வாழ்க்கை ஒப்பந்த விழாவிலே கழகத்திலே உள்ள இளைஞர்களுக்கெல்லாம் விடுக்கின்ற ஒரு செய்தியாக விடுத்து மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
6-7-98 அன்று நெல்லிக்குப்பம் புகழேந்தி மணவிழாவை நடத்தி வைத்து ஆற்றிய உரை
