நெல்லிக்குப்பம் புகழேந்தி மணவிழா
பகுதி 1 · 1 / 2
நெல்லிக்குப்பம் புகழேந்தி மணவிழா உரை
இந்த மணவிழாவில் உளமார்ந்த பெரு மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்ற நேரத்தில் இந்த இனிய விழாவிற்கு முன்னிலை ஏற்றுள்ள கழகப் பொருளாளர் அருமை நண்பர் ஆர்க்காடு வீராசாமி அவர்களும் அமைச்சர் பெருமக்களும் வரவேற்புரையாற்றிய மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பன்னீர்செல்வம் அவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளில் ஒருவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான அருமைத் தோழர் கோவிந்தராசன் அவர்களும் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களும், இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய அன்பான இதயங்கனிந்த வாழ்த்துக்களை மணமக்களுக்குத் தெரிவித்து, மணமகனுடைய பெயரில் எப்படிப் புகழேந்தி என்கிற எழுத்து இருக்கிறதோ அதைப்போல அவர் புகழ் பெற்று வாழ்கிறார்.
அவர் மேலும் புகழ் பெற வேண்டுமென்ற ஆர்வம் கலந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
இந்த வாழ்க்கைத்துணை - ஆவலைத் தெரிவிக்க எனக்கு முன்னால் பேசிய அமைச்சர் பெருமக்கள், நண்பர்கள் யாருக்கும் நான் குறைந்தவன் அல்ல புகழேந்தியை வாழ்த்துவதில் - போற்றுவதில் -
புகழ்வதில்! புகழேந்தி தி.மு.கழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர். பல சிறந்த பேச்சாளர்கள் நூற்றுக்கணக்கிலே தி.மு.கழகத்திலே இருக்கிறார்கள் என்று சொல்ல மாட்டேன். அதற்காக மிகக் குறைவான எண்ணிக்கைதான் இந்தக் கழகத்தின் பேச்சாளர்களின் எண்ணிக்கை என்றும் கூற மாட்டேன். ஓர் அளவோடு கழகத்தின் சொற்பொழிவாளர்கள் அதுவும் தலைமைக் கழகத்தின் சொற்பொழிவாளர்கள் என்ற முத்திரையோடு இருக்கின்ற அந்தப் பட்டியலில் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற ஒரு பெயர் தம்பி புகழேந்தியின் பெயர் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இளைஞர் சமுதாயம் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியது. எதிர்காலத்தை வென்றெடுக்கக் கூடியது. அந்தச் சமுதாயத்தின் உயர்விலேதான் தமிழர் நலன் - தமிழ் இன உணர்வு - ஏன் நாட்டின் நலன் அத்தனையும் அடங்கியிருக்கின்றது. தி.மு.கழகத்தைப் பொறுத்த வரையில் பேரறிஞர் அண்ணாவின் அரும் முயற்சியினாலும் அவர் இளைஞர்களிடத்தில் கொண்டிருந்த பேரன்பின் காரணமாகவும் தந்தை பெரியாரின் கொள்கைகளை அண்ணா வழியில் ஏற்றுக் கொள்வதற்காக ஏராளமானவர்கள் இந்த இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்டார்கள்.
அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளை பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் மாத்திரமல்லாமல்; மாணவர் அரங்கங்களிலும் குறிப்பாக பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளிலெல்லாம் எடுத்துரைக்கின்ற வாய்ப்பைப் பெற்றார்கள். அப்படி அவர் வாய்ப்பைப் பெற்று வருகின்ற நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்த ஒரு நிகழ்ச்சி அன்றைக்கு - அன்றைக்கு என்பதில்
எத்தனையோ பொருள் இருக்கிறது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா அவர்கள் உரையாற்றுகிறார். அப்படி உரையாற்றும்போது மேடையில்தான் அண்ணா அவர்களுக்கு தலைப்பு தரப்பட்டது. ‘ஆற்றோரம்’ என்ற தலைப்பில் பேசுங்கள் என்ற தலைப்பு தரப்பட்டது. தலைப்பு தந்தவர்களும் சரி, மண்டபத்தில் குழுமியிருந்தவர்களும் சரி ஆற்றோரம் என்ற தலைப்பிலே என்ன பேசப்போகிறார் என்றுதான் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அண்ணா அவர்கள் ஏறத்தாழ ஒருமணி நேரம் ஆற்றோரம் என்ற தலைப்பில் உரையாற்றும் போது, கங்கை ஆற்றோரத்தின் கலாச்சாரம், காவிரி ஆற்றோரத்தின் கலாச்சாரம் இந்த இரண்டிற்குமுள்ள வேறுபாடுகள், முரண்பாடுகள் இவைகளைப் பற்றியெல்லாம் எடுத்துரைத்து அந்த ஆற்றோரம் என்ற தலைப்பு தமிழகம் முழுவதும் பரவுகின்ற வழிவகையை அன்றைக்குச் செய்தார்.
அப்படித்தான் அதே பல்கலைக்கழகத்தில் ‘ஏ தாழ்ந்த தமிழகமே’ என்ற தலைப்பில் அண்ணா பேசிய பேச்சுத்தான் தாழ்ந்த தமிழகத்தைத் தலைநிமிர வைத்தது. இப்படி இளைஞர்கள் ஈட்டி முனைகளாக இந்த இயக்கத்திலே வந்து சேருவதற்கு அண்ணா அவர்களின் ஆற்றல் மிகு சொற்பொழிவுகள் - கருத்துக்கள் - சிந்தனைகள் - அந்தச் சிந்தனைகளால் பெற்ற செயல் வடிவங்கள் இவைகள்தாம் காரணங்களாகும். அதைப் பின்பற்றித்தான் இன்றைக்கு தி.மு.கழகம் மேலும் மேலும் இளைஞர்களை இந்த இயக்கத்திலே இணைப்பதற்குப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.
அப்படி இளைஞர்களும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
ஆனால் ஒரு வருத்தத்தை என்னால் தெரிவிக்காமல் இருக்க முடியாது. பொதுவாகவே இளைஞர் சமுதாயம்
இன்றைக்குச் சமுதாய உணர்வை - மொழி உணர்வை - இன உணர்வை - நாட்டு உணர்வைப் பெரிதும் மதித்து கொள்கை அடிப்படையிலே தங்களை ஓர் இயக்கத்திலே ஒப்படைத்துக்கொண்டு பணியாற்ற வேண்டுமென்று எண்ணுகின்ற காலம் ஒன்று இருந்தது. அது இன்றைக்குத் தலைகீழாக மாறிவிட்டது என்று சொல்ல மாட்டேன். ஓரளவு பின்தங்கிவிட்டது என்பதைத்தான் நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
அப்பொழுதெல்லாம் இளமைப்பருவத்தில் எங்களைப் போன்றவர்கள் எவ்வளவு ஈடுபாட்டோடு கொள்கை ரீதியிலே எங்களை இந்த இயக்கத்திலே இணைத்துக் கொண்டோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இணைத்துக் கொண்ட நாங்கள் அதே உறுதியோடு இன்றளவும் இந்த இயக்கத்திலே இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஒருசிலர் மாறியிருக்கலாம். அது அவர்களுடைய இயல்பாக இருக்கலாம். அல்லது சந்தர்ப்பவாதத்தால் ஏற்பட்ட கோளாறாக இருக்கலாம். ஆனால் அண்ணா அவர்களின் தலைமையில் அன்றைக்கு இளைஞர் பட்டாளம் முகிழ்த்தெழுந்தபோது அவர்களுடைய கரம் பிடித்து வளர்ந்த நான், நம்முடைய கழகத்தின் பொதுச் செயலாளர், இனமானப் பேராசிரியர் போன்றவர்கள் இன்னமும் அதே உறுதியோடு பெரியாரின் கொள்கை அடிப்படையில் பேரறிஞர் அண்ணாவின் இலட்சிய வழியில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு இளைஞர்களின் சிந்தனை பொதுவாக எப்படி இருக்கிறதென்றால், படித்து முடித்து விட்டு மாணவப்பருவம் முடிந்தவுடன் சிந்திக்கத் தொடங்குகிறான். தங்களுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்பதற்காகப் பலர், என்ன படிக்கலாம் என்று திட்டமிட்டு, படித்து முடித்து விட்டு என்ன தொழில் கல்வி பெறலாமென்று சிந்தித்து அதிலே
தேர்ச்சி பெற்று பல அலுவல்களில் பல்வேறு துறைகளில் விற்பன்னர்களாக ஆகிற அந்த முயற்சியிலே ஈடுபடுகிறார்கள்.
வேறு சில இளைஞர்கள் சமுதாயத்துறையில் ஈடுபடலாமா, அரசியல் துறையில் ஈடுபடலாமா என்று எண்ணுகிற நேரத்தில் ஓர் இளைஞன் இப்போது எப்படிச் சிந்திக்கிறான் என்றால்; அந்தக் காலத்திலெல்லாம் அந்தக் கட்சியின் கொள்கை என்ன, இந்த இயக்கத்தின் கொள்கை என்ன, இது யாருக்காகப் பாடுபடுகிறது, எந்த இலட்சியத்தின் அடிப்படையில் செயல்படுகிறது என்றெல்லாம் சிந்தித்து அப்படிப்பட்ட ஓர் இயக்கத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவனாகத்தான் அந்தக் காலத்து இளைஞன் இருந்தான்.
