உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

நாகர்கோவில் ஜீவானந்தம் மணிமண்டபத் திறப்புவிழா

பகுதி 2 · 2 / 2

அந்தக் கைராட்டைச் சின்னத்தை என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாளே எடுத்து விட்டார்கள். ஏன் எடுத்துவிட்டார்கள் என்றால், அது காமராஜ் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் சின்னமாக இருந்த காரணத்தால் கைராட்டைச் சின்னம் கூடாது என்று எடுத்து விட்டார்கள். பிறகு ஜனதா ஆட்சி வந்தபிறகு அதற்காகக் குரல் கொடுத்து மீண்டும் அந்தக் கைராட்டைச் சின்னம் அங்கே வைக்கப்பட்டது.

காமராஜருக்கும் எங்களுக்கும் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாங்கள் ஏற்றுக் கொண்ட தியாகச் சுடர், தியாகச் செம்மல் பெருந்தலைவர் காமராஜர், அவரை நாங்கள் பெருமைப்படுத்தினோம். அவரைப் பெருமைப்படுத்துவது, நாம்

நம்மைப் பெருமைப்படுத்திக் கொள்வது போலாகுமே என்ற காரணத்திற்காக.

அதைப்போலவே மூதறிஞர் ராஜாஜி மறைந்த போது, அவருக்காக ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. சில பேர் சொன்னார்கள்; “ஏற்கனவே ராஜாஜி மண்டபம் பெரிய அளவில் இருக்கிறது” என்று. இருந்தாலும் அவருடைய மறைவுக்குப் பின்னர் ஒரு நினைவுச் சின்னம் வேண்டும் என்று அதையும் கிண்டியிலே காந்தி மண்டபத்திற்கு இன்னொரு பக்கத்திலே - ஒரு பக்கத்திலே காமராஜர் மண்டபம் - இன்னொரு பக்கத்திலே ராஜாஜி மண்டபத்தை எழுப்பியவனும் நான்தான்.

“அதற்கு என்ன சின்னம் வைக்கலாம்” என்று கேட்டபோது நான் சொன்னேன்: “எனக்கும் இராமாயணத்துக்கும் எவ்வளவு தூரம் என்று உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் கூட, ‘ராஜாஜி இராமாயணத்திலே மிகுந்த பற்றுடையவர். “சக்கரவர்த்தி திருமகன்” என்ற ஒரு தொடரோவியமே எழுதியவர். எனவே அந்த மண்டபத்தினுடைய முகப்பு ராமருடைய கிரீடம் போல் இருக்க வேண்டும்” என்று அதற்கு வரைபடம் வரைந்து கொடுத்தவனே நான்தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்படி தேசத்தியாகிகள் யாராக இருந்தாலும் அண்மையிலே கூட பெரியவர் பக்தவத்சலம் அவர்களுக்கு நினைவு மண்டபத்தை எழுப்பித் திறந்து வைத்தேன். இன்றைக்கு எப்படி ஜீவா அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டிருக்கிறார்களோ, அதைப் போல பக்தவத்சலம் அவர்களுடைய குடும்பத்தாரும் அந்த விழாவிலே கலந்து கொண்டு நன்றிப் பெருக்குடன் நினைவு கூர்ந்தார்கள். உரையாற்றினார்கள்.

பக்தவத்சலம் அவர்களுக்கும் எனக்கும் எந்த அளவிற்கு உறவு என்பது உங்களுக்குத் தெரியும்.

ஆனால் அவர் ஆற்றிய தொண்டு, அவர் செய்த தியாகம், அவர் நாட்டு விடுதலைக்காகச் சிறைப்பட்ட அந்த நாட்கள் இவைகள் எல்லாம் மதிக்கத் தகுந்தவை, மரியாதைக்கு உகந்தவை என்பதால்தான் பெரியவர் பக்தவத்சலம் அவர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டிருக்கின்றது.

அண்ணன் ஜீவானந்தம் அவர்களை நான் இளமைக் காலம் தொட்டு அறிவேன். அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடைய வழியில் சுயமரியாதைக் காரராக விளங்கியவர். அவர் அரசியலிலே காங்கிரஸ் இயக்கத்திலே இருந்து, பின்னர் பொதுவுடைமை இயக்கத்திலே இருந்து பணியாற்றினார் என்றாலும் கூட, இறுதிக் காலம் வரையிலே சுயமரியாதைக்காரராக வாழ்ந்தவர்தான் அண்ணன் ப. ஜீவானந்தம் அவர்கள். அவரோடு நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பை நான் பெற்றவன்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஜீவானந்தம் அவர்களிடத்திலே பெரு மதிப்புக் கொண்டவர்கள். இன்னும் சொல்ல வேண்டுமேயானால், அவருடைய எளிமையான வாழ்க்கை பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கின்ற அரசியல்வாதிகள் அத்தனை பேருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்.

அவர் இறுதியாக மறைந்தபோது மருத்துவமனையில் பக்கத்திலே கூட யாரும் இல்லாத சூழ்நிலையில் இரவு அவர் மறைந்து விட்டார். விடியற் காலையில் எனக்குச் செய்தி வந்தது. “ஜீவா மறைந்து விட்டார். சென்னை மருத்துவமனையில் அவருடைய உடல் இருக்கிறது” என்ற செய்தி வந்தது. உடனே நான் அண்ணாவினுடைய வீட்டிற்கு காரிலே சென்று, அண்ணாவை அழைத்துக் கொண்டு நானும் அண்ணாவும், என்.வி. நடராசனும் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனையிலே அந்த

எளிய மனிதர், அந்த இரும்பு மனிதர், எழுச்சி யுகம் காண்பதற்கு புரட்சிக் கீதங்களைப் பாடிய அந்தப் பெருமகன் ஜீவானந்தம் அவர்களுடைய உடல் மார்ச்சுவரியிலே (பிணக்கிடங்கு) வைக்கப்பட்டிருந்தது. மார்ச்சுவரியிலே வைக்கப்பட்டிருந்த உடலை வெளியே கொண்டு வந்ததைப் பார்த்து மாலை அணிவித்து விட்டு அவருடைய உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை எல்லாம் கவனித்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர்களுக்கெல்லாம் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை அன்றைக்குத் தெரிவித்துக் கொண்டோம் என்றால், எந்த அளவிற்கு பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கிடையிலும் அண்ணன் ஜீவானந்தம் அவர்களிடம் மதிப்புக் கொண்டிருந்தோம், அன்பு வைத்திருந்தோம் என்பதற்கு இது எடுத்துக் காட்டு.

காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும், கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும், வேறு எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை மதிக்கக் கூடிய அந்த மாண்பினை, பண்பினைப் பெற்றுள்ளது இந்த இயக்கம். அறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம். இன்னும் சொல்ல வேண்டுமானால், பச்சையாகச் சொல்ல வேண்டுமானால் மற்றவர்களை மதிக்கக் கூடிய இயக்கம். ஆனால் பொதுவாக நமது சமுதாயத்தில் இந்தப் பண்பாடு ஒருவழிப் பாதையாக இருக்கக் கூடாது.

இதை நான் எல்லாக் கட்சியிலேயும் உள்ள தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கும் காமராஜருடைய பிறந்தநாளில், நினைவு நாளில் நாங்கள் சென்று மலர்வளையம் வைக்கின்றோம். மாலை அணிவிக்கின்றோம். இன்றைக்கும் மூதறிஞர் ராஜாஜியினுடைய நினைவு

நாளில் நாங்கள் சென்று மலர் வளையம் வைக்கின்றோம். அவருடைய சிலைக்கு மாலை அணிவிக்கின்றோம். அம்பேத்கருக்கு அனைவரும் சென்று மாலை அணிவிக்கின்றோம். ஆனால் சில கட்சிக்காரர்கள் பெரியார் பிறந்தநாளில், பெரியார் மறைந்த நாளில் அவருடைய நினைவிடத்திற்குச் சென்று அல்லது அவருடைய சிலைக்கு மாலை அணிவிக்கின்ற அந்த மன இயல்பைப் பெற்றிருக்கின்றார்களா என்றால் இல்லை. அதைப் போல அண்ணா பிறந்தநாளில், அண்ணா மறைந்த நாளில் அவரை நினைவு கூர்கின்ற, அல்லது அவருக்கு அஞ்சலி செலுத்துகின்ற, அல்லது அவருடைய சிலைக்கு மலர் மாலை அணிவிக்கின்ற அந்த ஒரு வழிமுறையைப் பின்பற்றுகிறார்களா என்றால் இல்லை.

எனவேதான் சொல்லுகின்றேன். சமுதாயத்திலே ஒருவர் மறைந்து விடுவாரேயானால் கட்சிகளை மறந்து விட்டு அவர் எல்லோருடைய மனதிலும் நிறைந்தவர் என்கின்ற உள்ளத்தோடு நம்முடைய பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும். அது ஒருவழிப் பாதையாக இருந்து விடக் கூடாது என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜீவானந்தம் அவர்களுடைய மணி மண்டபத்தைத் திறந்து வைக்கின்ற இந்த நேரத்தில் அவருடைய வாழ்க்கை இளைஞர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ள வாழ்க்கை. இளம் பிராயத்தில் அவர் பூதப்பாண்டியிலே உள்ள கிராமத்திலே சிறுவனாக, மாணவனாக இருந்தபோது, அந்தப் பூதப்பாண்டி கோயிலிலே சுண்டல் வழங்குவது வாடிக்கையாம். அப்படி வழங்குகின்ற சுண்டலைக் கூட அவர் தான் ஒருவரே தின்று மகிழாமல் பலரையும் அழைத்து வந்து பல மாணவர்களையும், சிறுவர்களையும், ஏழைச்

சிறுமிகளையும் அழைத்து வந்து அந்தச் சுண்டலை அவர்களுக்கெல்லாம் பகிர்ந்து கொடுத்துத்தான் தின்பார் என்பது அவருடைய இளம்பிராய வாழ்க்கையிலேயே கோடிட்டுக் காட்டப்படுகின்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும்.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

என்றார் வள்ளுவர். அந்த வள்ளுவருக்குத்தான் குமரி முனையிலே சிலை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அந்த வள்ளுவரின் வழிநின்று தனக்குக் கிடைத்ததைப் பகிர்ந்து உண்ணுகின்ற அந்தப் பகுத்ததை இளம் பிராயத்திலேயே அண்ணன் ஜீவா அவர்கள் பெற்ற காரணத்தால்தான் எல்லோருக்கும் சமத்துவம், சமதர்மம் வேண்டும் என்ற கொள்கை உடைய பொதுவுடைமை இயக்கத்தில் அவர் தன்னை இணைத்துக் கொள்ள முடிந்தது!

தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று இளம் பிராயத்திலேயே அவர் கொண்ட கொள்கையின் காரணமாகத்தான் வைக்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் தீண்டாமையை ஒழிப்பதற்காக நடத்திய போராட்டத்தில் அண்ணன் ஜீவானந்தமும் அன்றைக்கே கலந்து கொள்ள வேண்டிய நிலமை இருந்தது.

இவைகள் எல்லாம் நம்முடைய சமுதாயத்திலே எதிர்கால மன்னர்களாக விளங்க வேண்டிய இளைஞர்கள் படித்துப் பின்பற்ற வேண்டிய கொள்கைகளாகும். இந்தக் கொள்கைகளை எல்லாம் இந்த மாவட்டத்திலே உள்ள மக்களுக்குப் புதிதாக நான் சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில

மாவட்டங்களைப் போல அறிவில் சிறந்த மாவட்டம். எதையும் தெளிந்து தீர்க்கமாக முடிவெடுக்கக் கூடிய மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம். அதனால்தான் இந்தத் தேர்தலிலே கூட ஒரு தீர்க்கமான ஒரு முடிவை கன்னியாகுமரி மாவட்டம் எடுத்தது என்பதை (கைதட்டல்) எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள் எல்லாம் எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள். “அப்படிப்பட்ட மாவட்டத்திற்கு ஏதாவது செய், ஏதாவது செய்” என்று என்னை அடிக்கடி கேட்கிறார்களே!

நான் கேட்கிறேன்; காமராஜர் மண்டபம் கட்டச் சொல்லிக் கேட்கிறார்கள். உங்கள் விருப்பப்படியே அவருடைய அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் கடற்கரையில் அந்த மண்டபம் கட்டப்படும் என்ற உறுதியை (பலத்த கைதட்டல்) இங்கே அளிக்கின்றேன்.

“இது சட்டசபையிலே அறிவிக்க வேண்டிய உறுதி அல்லவா?” என்று கேட்கத் தேவையில்லை. சட்டசபை நிகழ்ச்சிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. எனவே அந்த உறுதியை அளிக்கின்றேன்.

திருவள்ளுவர் சிலை அங்கே அமைகிறது. 1975-ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக அன்றைக்கு இருந்தபோது அமைச்சரவைக் கூட்டத்திலே எடுத்த முடிவுதான் இங்கே திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்பதாகும். அதற்குப் பிறகு அதன் பணி தொடங்குகின்ற விழா, நான் 1989-ஆம் ஆண்டு முதலமைச்சராக வந்த பிறகு, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை ஓரத்தில் நடைபெற்றது. ஏறத்தாழ 20 அல்லது 25 ஆண்டு காலப்பணி அது. அதனால்தான் ஒரு கோடி ரூபாய், இரண்டு கோடி ரூபாய் செலவிலே முடிவடையக் கூடிய அந்தச் சிலை இன்றைக்கு 8 கோடியைத் தாண்டி செலவாகும் போல் தெரிகிறது.

8 கோடி ஆனாலும் எத்தனை கோடி ஆனாலும் அங்கே அமைக்கப்படுகின்ற

சிலை, உலகத்து மக்களெல்லாம், சுற்றுலாப் பயணிகள் எல்லாம் வந்து காண்கின்ற ஓர் அற்புதமான சிலையாக அங்கே அமையும் என்ற அந்த மகிழ்ச்சி எனக்கு இருக்கின்றது. அந்தச் சிலையினுடைய திறப்பு விழாவும் இந்த ஆண்டு இறுதியிலே அல்லது அடுத்து ஆண்டுத் தொடக்கத்திலே நிச்சயமாக நடைபெறும் என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

எடுத்து வைத்துள்ள இந்த மாவட்டத்தைச் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான பரிசீலனையில் இந்த அரசு ஈடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, கோரிக்கைகள் வைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

19-4-98 அன்று நாகர்கோவிலில் ஜீவானந்தம் மணிமண்டபத் திறப்பு விழாவில் ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000