நாகர்கோவில் ஜீவானந்தம் மணிமண்டபத் திறப்புவிழா
பகுதி 1 · 1 / 2
நாகர்கோவில் ஜீவானந்தம் மணிமண்டபத் திறப்புவிழா
இன்று நடைபெறக் கொண்டிருக்கின்ற இந்த நிகழ்ச்சி நீண்ட நேரம் நடைபெற்று நான் உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு நெல்லை வழியாக வாகைக்குளம் சென்று 4-30 மணிக்குள் சென்றால்தான் வாகைக்குளத்திலிருந்து சென்னைக்குப் புறப்படுகின்ற தனி விமானத்தில் புறப்பட இயலும், அதற்குப் பிறகு புறப்பட இயலாது என்ற சூழ்நிலையில் உங்கள் முன்னால் விரைவில் விடைபெற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு நின்று கொண்டிருக்கின்றேன்.
இன்றைக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ள அண்ணன் ஜீவானந்தம் அவர்கள் பெயரால் அமைந்துள்ள மணிமண்டபம் இது எப்படியும் அமைந்திட வேண்டுமென்ற கோரிக்கையைப் பலமுறை சட்டமன்றத்திலும், என்னிடத்திலே தனிப்பட்ட முறையிலும் வலியுறுத்தியவர் இந்த மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மணி ஆவார். அவருடைய பெரும் முயற்சியின் காரணமாகவும் அண்ணன் ஜீவானந்தம் மீது எனக்குள்ள அன்பின் காரணமாகவும் அவருடைய
வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கும், எதிர்கால இளைஞர்களுக்கும் ஒரு பாடமாக அமைவதற்கு இது ஒரு நல்ல சின்னமாக அமைந்திடும் என்ற எண்ணத்தின் காரணமாகவும் அமைக்கப்பட்டு இன்றைக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நினைவு மண்டபத்திற்குப் பதினைந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவு ஆகியிருக்கின்றது. அதே நேரத்தில் இந்த மாவட்டத்தில் ஏறத்தாழ 38 லட்சம் ரூபாய் செலவில் கண் மருத்துவமனை கட்டிடம் ஒன்றும் இன்றைக்குத் திறக்கப்படுகிறது. 10 லட்சம் ரூபாய் செலவில் நகராட்சிப் படிப்பகம் திறந்து வைக்கப்படுகிறது. நாகர்கோவில் நகரில் குடிநீர் வினியோகத்திற்காக 49 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ள ஏழு ஊர்திகள் இயக்கி வைக்கப்படுகின்றன.
ஒருங்கிணைந்த பால்பெருக்குத் திட்டம் 91 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றப்படுகிறது. எனவே இந்த வகையில் ஏறத்தாழ 2 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படத் தொடங்கி வைக்கப்படுகின்றன.
அஃதன்னியில் தொடங்கப்பட வேண்டிய திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டுகின்ற நிகழ்ச்சியில் மாவட்ட நெஞ்சக நோய் கட்டிடம் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டுவிழா இன்றைக்கு நடைபெறுகிறது. 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட வேண்டிய மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கீழமணக்குடி, மேலமணக்குடி இணைப்புப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர் நல விடுதி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஏறத்தாழ
5 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்திற்கு 360 பெண்களுக்கு 36 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் 300 பயனாளிகளுக்கும் 40 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 37 பயனாளிகளுக்குச் சற்றொப்ப 4 லட்ச ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு ஆறே முக்கால் லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 25 தொகுப்பு வீடுகள் இன்று வழங்கப்படுகின்றன.
சிங்காரவேலர் நினைவு வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 77 லட்சம் ரூபாய் செலவில் 240 வீடுகள் மீனவர்களுக்கு இன்று இலவசமாக வழங்கப்படுகிறது. அதிக விளைச்சல் காட்டிய இரண்டு விவசாயிகளுக்கு ஊக்கப் பரிசுத் தொகையாக முதல் பரிசு எட்டாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு நான்காயிரம் ரூபாய் மொத்தம் பனிரெண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மூன்று சக்கர வண்டிகள் ஐந்து பயனாளிகளுக்குப் பதினைந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இப்படிப் பல்வேறு நலத்திட்டங்கள் இன்றைக்கு ஏறத்தாழ ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில் இந்த மாவட்ட மக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன. இவ்வளவு திட்டங்கள் இன்றைக்கு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டாலும் கூட இங்கே பேசிய பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்கள் நாடாளுமன்ற மக்களவை அல்லது மாநிலங்களவையின் பிரதிநிதிகளாக இருந்தாலும் அல்லது சட்டப்
பேரவையின் பிரதிநிதிகளாக இருந்தாலும் அல்லது உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளாக இருந்தாலும் பல கோரிக்கைகளை இங்கே முன்வைத்திருக்கிறார்கள்.
சட்டமன்றம் நடைபெறும் பொழுது எந்தவொரு அறிவிப்பையும் வெளியில் செய்யக் கூடாது என்பது மரபு. இந்த மரபு தெரியாதவர்களா நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் என்று கேட்டால் அவர்களுக்குத் தெரியும், இருந்தாலும் கூட உங்களுக்கு நேராக சில கோரிக்கைகளை வைத்து, பார்த்தீர்களா நான் சட்டமன்றத்திலே வாதாடவில்லை என்று சொன்னீர்களே நான் வாதாடி அது பத்திரிகைகளில் வராமல் இருந்திருக்கலாம், வாதாடுவேன் என்பதை நிரூபிப்பதற்காகத்தான் இங்கு ஒருமுறை உங்கள் முன்னால் இந்தக் கோரிக்கைகளை வைக்கிறேன் என்ற வகையிலே பல கருத்துக்களை, பல கோரிக்கைகளை இங்கே எடுத்து வைத்திருக்கின்றார்கள்.
நான் அந்தக் கோரிக்கைகளை நிராகரிப்பவன் அல்ல. அவைகள் நிறைவேற்றப்படும் என்று மாத்திரம் தான் சொல்ல முடியுமே தவிர, என்றைக்கு நிறைவேற்றப்படும் என்றெல்லாம் அறிவித்தால் இவர்களே நாளைக்கு யாரையாவது சட்டமன்றத்தில் தூண்டிவிட்டு “சட்டசபை நடைபெறும்போது முதலமைச்சர் எப்படி வெளியே இவைகளை எல்லாம் அறிவித்தார்?”
என்று கேளுங்கள் என்று கேட்கச் செய்தாலும் செய்வார்கள். அந்தப் பயத்திலேதான் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறுமா நிறைவேறாதா என்று திட்டவட்டமாக நான் இங்கே அறிவிக்கவில்லை. அறிவிக்கவில்லை என்றாலும் கூட, அவைகள் எல்லாம் நிச்சயமாக விரைவில், அதே நேரம் உரிய காலத்தில் நிறைவேற்றப்படும் என்பதைக் கூறிக்கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
மருத்துவக் கல்லூரியைப் பற்றி அனைவருமே பேசியிருக்கின்றார்கள். “இந்த ஆண்டே அறிவித்து விடுங்கள்” என்று வேலாயுதம் அவசரப்படுவதிலே அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு இவர் ஆட்சியிலே இருப்பாரோ, இல்லையோ என அதைக் கணிக்கக் கூடிய கட்சியிலே இருப்பவர் அவர். எனவே அவர், “இந்த ஆண்டே அறிவித்து விடுங்கள் அடுத்த ஆண்டு அறிவிக்க இயலாது” என்று சொல்வாரேயானால், ஒருவேளை அப்படி ஏதாவது ஏற்பட்டால் அடுத்த ஆண்டு வந்து நான்தான் அறிவிப்பேன் என்பதை (பலத்த கைதட்டல்) இங்கே நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டு தூத்துக்குடி, வேலூர் ஆகிய இரண்டு இடங்களுக்கு அறிவிக்கப்பட்டபோதே சட்டமன்றத்தில் நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி “மேலும் இரண்டு கல்லூரிகள்” என்று சொன்னதில் நாகர்கோவிலையும் இணைத்துத்தான் சொல்லியிருக்கிறார்.
நாகர்கோவில் என்று சொல்லும் பொழுது “அது இந்த ஆண்டு வசதி இல்லாத காரணத்தால் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டிருக்கின்றார். அதற்குள் ஒருவேளை வசதி வருமேயானால், இந்த ஆண்டிலே கூட, அதை அறிவிக்காமலே கூட தொடங்க முடியும் என்ற அந்த வாய்ப்பு இருப்பதை நான் இங்கே கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
இன்னொன்று ஒரு பொதுவான பிரச்சினை மற்றும் பல பிரச்சினைகள். தண்ணீர்ப் பிரச்சினை. அணைக்கட்டு பிரச்சினை, இந்தப் பிரச்சினைகளை எல்லாம் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். நம்முடைய நண்பர் குமாரதாசும், நாடாளுமன்ற
உறுப்பினர் டென்னிசும், மோசசும் மற்றும் உரையாற்றிய நமது நண்பர்கள் அனைவருமே பெருந்தலைவர் காமராஜருடைய நினைவு மண்டபம் அவருடைய அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் கன்னியாகுமரியில் கடற்கரைப் பகுதியிலே அமைவதுதான் சிறப்பு என்று எடுத்துரைத்திருக்கின்றார்கள்.
கடற்கரைப் பகுதியிலே அமைய வேண்டும் என்பதிலே எனக்கு இருவிதமான கருத்து இல்லை. ஒரு முறை அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் என்னிடத்திலும் சொன்னார். பொதுவாகவும் அறிவித்தார். “கடற்கரை ஓரத்தில் கட்டடத்தை ஒட்டினாற்போல் அதிகமான கட்டிடங்கள் இருந்தலாகாது” என்று அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பிற்குப் பிறகு உச்சநீதிமன்றத்திலே கூட, ஒரு கருத்து வெளியிடப்பட்டு, “கடற்கரை ஓரத்திலே கட்டிடங்கள் இருந்தலாகாது” என்பது ஒரு நியதியாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பெருந்தலைவர் காமராஜரிடத்திலே பல்வேறு கொள்கை வேறுபாடுகளுக்கிடையே நாம் வைத்துள்ள மரியாதை பற்றி இவைகளை எல்லாம் நீங்கள் அறியாதவர்கள் அல்ல.
உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மறைந்தவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் நாட்டுக்காக, மொழிக்காக, இனத்துக்காக, சமுதாயத்துக்காகப் பாடுபட்டவர்கள் என்றால், பொதுநலவாதிகள் என்றால் அவர்களை நான் சார்ந்திருக்கின்ற கட்சி ஆனாலும் அல்லது என்னுடைய ஆட்சி ஆனாலும் என்றைக்கும் மறந்ததே கிடையாது.
1969-ஆம் ஆண்டு நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது முதல் தடவையாக தில்லையாடி வள்ளியம்மாளுக்கு - தென்னாப்பிரிக்காவிலே மகாத்மா காந்தியோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட
தில்லையாடி வள்ளியம்மாளுக்கு தஞ்சை மாவட்டம் - தில்லையாடியில், “தில்லையாடி வள்ளியம்மாள் நகர்” என்ற ஒரு நகரத்தை நிர்மாணித்தவனே நான்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அங்கே நாகப்பன், நாராயணசாமி என்ற இரண்டு ஆதி திராவிட இளைஞர்களுடைய பெயரால் வீடுகளைக் கட்டித் தந்தவனும் நான்தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நீங்கள் அறிவீர்கள், சிதம்பரனார் இந்த நாட்டினுடைய விடுதலைக்காகச் செக்கு இழுத்தார், சிறைப்பட்டார், சித்ரவதைகளை ஏற்றுக் கொண்டார் என்பதை எல்லாம் நீங்கள் படித்திருக்கிறீர்கள். அறிவீர்கள். ஆனால் நான் கேட்கிறேன். நண்பர் குமாரசாமி உள்பட எல்லா தேசியவாதிகளையும் கேட்கிறேன். அவர் இழுத்த செக்கு எங்கே இருக்கிறது என்றாவது இருபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியிலே தேடிப் பார்த்தீர்களா? இல்லை. இருபது ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் வெள்ளைக்காரர்கள் காலத்தில் சிதம்பரனார் இழுத்த செக்கு எங்கே இருக்கிறது என்று யாரும் தேடிப் பார்க்கவில்லை.
அதைத் தேடிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது இந்தக் கருணாநிதிக்குத்தான் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது.
நான்தான் அதைத் தேடி அலைந்து கோவை சிறைச்சாலையிலே அந்தச் செக்கு இருக்கிறது என்பதை அறிந்து உடனடியாக அதைக் கொண்டுவரச் சொல்லி, ராஜாஜி மண்டபத்திற்குப் பக்கத்திலே தனியாக அதற்கு ஒரு மண்டபம் எளிமையான முறையிலே கட்டச் செய்து அங்கே அந்தச் செக்கினை வைத்து - “சிதம்பரனார் இழுத்த செக்கு” என்று எழுதி அதை ஒரு கண்காட்சியாக ஆக்கிய அந்தச் செயல் தி.மு.கழக ஆட்சியிலே என்னால் தான் நிறைவேற்றப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜருடைய நினைவு மண்டபம் சென்னையிலே - கிண்டியிலே இருக்கிறது ராஜ்பவனுக்குப் பக்கத்திலே. ஏன் அங்கே வைக்கப்பட்டது என்றால், அங்கேதான் அவருடைய உடல் எரியூட்டப்பட்டது. அந்த இடத்திலே ஏன் எரியூட்டப்பட்டது என்றால், கிண்டியிலே அந்த ராஜ்பவனுக்குப் பக்கத்திலே தான் காந்தி மண்டபம் இருக்கிறது. காந்தி மண்டபத்திற்குப் பக்கத்திலே காமராஜர் மண்டபம் இருப்பதுதான் சிறப்பு என்பதற்காக காமராஜருடைய உடலை அங்கே தகனம் செய்து அந்த மண்டபத்தை அங்கே கட்டினோம்.
அந்த மண்டபத்தைக் கட்டி முடிக்கும்போது, மண்டப முகப்பிலே என்ன சின்னம் வைக்கலாம் என்ற பிரச்சினை எழுந்தபோது, “கைராட்டைச் சின்னம் வைக்க வேண்டும்” என்ற அந்தக் கருத்தை வழங்கியவனும் நான்தான். கைராட்டைச் சின்னத்தை வைத்துவிட்டு இரவு 12 மணிக்கு வீட்டுக்குத் திரும்பியவனும் நான்தான். மறுநாள் ஆட்சி கலைக்கப்பட்டது. அந்தச் செய்தியை அறிந்தவனும் நான்தான்.
