உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

நாடக தாசர்

பகுதி 2 · 2 / 2

அவர்கள் எந்தப் பொருள் பற்றிப் பாடினார்கள் என்பதில் எனக்கும் அந்தப் பாடல்களுக்கும் இடையே கருத்து வேற்றுமை இருந்தாலும், அந்தப் பாடல்களில் கொஞ்சிக் கொண்டிருக்கிற தமிழின்பால், எழுத வேண்டும் என்று எழுந்த சுவாமிகளுடைய தமிழ் உணர்வின்பால் என்றைக்கும் மதிப்பு வைத்திருப்பவன் நான். அதனால்தான் அழைத்தவுடன் தயங்காமல் ஒப்புதல் அளித்து இந்த விழாவிற்கு வந்தேன். இந்த விழாவில் நல்ல சொற்பொழிவுகளையும் மன்றத்தினர் சேர்த்து அமைத்திருக்கிறார்கள்.

முன் காலத்தில் எல்லாம் எப்படி நாடக மேடையை அமைக்க வேண்டும். எந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும், எத்தனை அடி பரப்பளவு உடையதாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டார்கள். இந்தக் காலத்தில் நாடகம் நடப்பதே அருமையாக இருக்கிறது. இப்படிப்பட்ட கடுமையான விதிமுறைகளை வைத்தால் நடக்கிற நாடகங்களும் நடக்காது. ஆனால் அந்த அளவிற்கு அறுதியிட்டு ஒவ்வொன்றையும் சிந்தித்து அந்தக் காலத்தில் நாடகக் கலையை வளர்த்திருக்கிறார்கள் என்பதை எண்ணி நாம் மகிழ்ச்சி அடையலாம்.

நாடக மேடை அமைக்கப்படும் இடம் இடைநிலமாக இருக்க வேண்டும். மண் கூடத் துவர்ப்பாக இருக்கக் கூடாது. இனிக்கிற மண்ணினை உடைய

இடமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். கிருஷ்ணலீலா நாடகம் நடத்துவதற்கு அப்படிப்பட்ட மண் தேவையாக இருக்கலாம். அந்த நாடகத்தில் கிருஷ்ணன் மண்ணை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான்; உடனே தாயாரும் மற்றவர்களும் வாயைப் பிளந்து மண்ணைக் கீழே போடச் சொல்லும்போது, அந்த வாயில் அனைத்துலகமும் தெரிந்ததாகச் சொல்வார்கள். அந்த நாடகம் நடத்த வேண்டுமானால் இனிப்பான மண் இருக்கிற நாடகமேடை அமைய வேண்டுமோ, என்னவோ?

இப்போது நாடக வல்லுநர்கள் மண் என்று வாயால் கூறிவிட்டுச் சர்க்கரையையே வாயில் போட்டுக்கூடும்.

நாடகக்கலை இன்று அழிந்து கொண்டு வருகிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.

அவர்கள் பேசுகையில் நாடகக்கலை ஒரு சேவையைப் பெற்றது. அதுதான் திரைக்கலை. அடையாறு ஆலமரத்தைப் போல ஆளுக்கு விழுதாகத் திரைக்கலை இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். நான் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் நம்முடைய நாட்டில் மட்டும் கூறுகிறேன். நாடகக் கலைக்குச் சேயாகப் பிறந்ததாகச் சொல்லப்படுகிற திரைக்கலை இன்று ஆளுக்கு விழுதாக இல்லாமல், வாழைக்குக் கன்றாக ஆகிவிட்டது!

பல்வேறு நாடகங்களில் நன்றாக நடிக்கும் நல்ல நடிகர்களை எல்லாம் திரைப்பட அதிபர்கள் அதிக ஊதியம் தருவதாக அழைத்துச் சென்றுவிட, அதன் காரணமாகப் பல நாடகக் குழுக்கள் மூடப்பட்டதை அனைவரும் அறிவீர்கள்! அப்படிப்பட்ட புயலுக்குத் தப்பியவர்கள் டி.கே.எஸ். சகோதரர்கள்.

ஒரு நாடகம் நாட்டு மக்களிடம் ஒரு கொள்கையைப் பரப்புவதற்கு எடுத்துக் கொள்கிற நேரத்தைவிட, ஒரு திரைப்படம் குறைவான நேரத்தை எடுத்துக் கொள்ளும். ஒரு நாடகத்தின் மூலம் ஆயிரம் பேர் பயனடைகிறார்கள் என்றால் அதே நேரத்தில் 10,000 பேர் பயனடைகிற

அளவிற்குத் திரைப்பட வாயிலாகக் கொள்கையை எடுத்துச் சொல்ல முடியும். கொள்கையைச் சொல்கிற நாடகங்களையும் படங்களையும் நான் சொல்கிறேன். இப்போது வருகிற ஒரு சில திரைப்படங்கள் நாடகங்கள் பற்றி நான் சொல்வதில்லை. புராண நாடகமாக இருந்தாலும், சமூக நாடகமாக இருந்தாலும், அவற்றின் மூலம் ஒரு கருத்தைச் சொல்ல வேண்டுமென்ற எண்ணம் அந்தக் காலத்திலும் சில நாடக நிறுவனங்களில் இருந்தது. அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக டி.கே.எஸ்.

சகோதரர்கள் நிறுவனம் இருந்தது.

நாடகம், திரைப்படம் என்று பார்த்தால், உள்ளபடியே திரைப்படத்தில் நடிப்பது எளிதானது. நாடக நடிகர் ஒரு தவறு செய்துவிட்டால் தவறு தவறுதான். ஆனால் திரைப்படத்தில் அப்படியல்ல. அவர்கள் பத்து முறை தவறு செய்தாலும், அதைத் திருத்திச் சரியாக வருகிறவரை எடுக்க வசதியிருக்கிறது. முதல் நாள் மகாபாரத நாடகத்தில் நடித்த ஒருவர், மறுநாள் ராமாயண நாடகத்தில் நடிக்கும்போது, தவறி முதல்நாள் கூறிய கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லிவிட்டால் அந்தத் தவற்றை நிச்சயமாகத் தீர்த்துக் கொள்ள முடியாது.

உடனடியாக மக்கள் கைக்கலிப்புச் செய்து திரையை விட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடும்.

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகத்தில், “நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன்”, என்று சொல்ல வேண்டுமேயானால் வாயால் சொன்னால் மட்டும் போதாது, கையால் சைகையின் மூலமும் அதைக் காட்ட வேண்டும். அப்போதுதான் கடைசி வரிசையில் உள்ளவர்களும் அதைக் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறுவார். ஆனால் திரைப்படத்தில் ‘குளோசப்’ என்ற அண்மைக் காட்சி மூலம் காட்டுகிற சாதனங்கள் இருக்கின்றன. எதிரிலே நடிகர் இல்லாமலேகூட அவருடன் பேசுவது

போல எடுக்கக்கூடிய வாய்ப்புகள் திரைப்படத்தில் இருக்கின்றன.

நாடகம் இன்று புதுமையாகப் புரட்சியாக விஞ்ஞான யுகத்திற்கு ஏற்பப் படிப்படியாக மெருகேறி வருகிறதென்றாலும் மறைந்த நாடக மாமேதை சங்கரதாஸ் சுவாமிகள் அந்தக் காலத்தில்கூடப் பழமையில் புதுமையைச் சேர்த்து நாடக உலகில் ஒரு புத்தொளியைப் பரப்பினார் என்று கொண்டால் அது மிகையாகாது.

பாட்டு எழுதுகிறவர்கள் கடைசி வரியில் தங்கள் முத்திரையைப் பதிக்காமல் இருக்க மாட்டார்கள். வேறு யாராவது அதை எடுத்துக் கையாள்ந்து விடுவார்களோ என்ற ஐயத்தில் அப்படி எழுதினார்கள். பாரதிதாசன் கூட, இப்படிப்பட்ட முத்திரை அடிகள் வைத்து முடித்திருக்கிறார். அந்தக் காலத்தில் இதற்கு விதிவிலக்காக இருந்த பெருமகன் சங்கரதாஸ் சுவாமிகள். அவர் எழுதிய பாடல்களில் தன் முத்திரையை அவர் பதிக்காமல் எழுதி இருக்கிறார்.

ஆனால் ஒவ்வொரு பாடலில் அவர் தன்னுடைய பெயர் வருமாறு தந்திரமாகப் புகுத்தி இருக்கிறார்.

கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் பாடிய ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்ற பாடல் பிரசித்தி பெற்றது. அந்தப் பாடலைக் கேட்கிற நேரத்தில் எல்லாம் அந்த அம்மாவின் பெயர்தான் ஞாபகத்திற்கு வரும் தவிர, எழுதியவர் ஞாபகம் நமக்கு வரவில்லை. அந்த ஓர் அருமையான பாடலின் கருத்தில் நான் நுழைந்தேனா இல்லையோ அது வேறு விஷயம்; அந்தத் தமிழில் சொக்கிப் போய் பல நேரங்களில் இதை யார் எழுதினார்கள் என்று எண்ணியதுண்டு. இன்றுதான் அந்தப் பாடலை எழுதியவர் சங்கரதாஸ் சுவாமிகள் என்ற குறிப்பைப் பார்த்தேன்.

அந்தப் பாட்டின் முடிவில்

தந்திரமாக இருபொருள் படும் விதத்தில் தன்னுடைய பெயரை இணைத்து முத்திரை அடியை வைத்திருக்கிறார்.

இன்னொரு பாடலைப் பார்த்தேன். புராணங்களில், இடையிடையே கலகம் மூட்டுகிற நாரதர் பற்றிக் கதை கேட்டிருக்கிறோம். அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், ‘கலகமுனி’ என்ற அழகான வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். இப்படி அந்தக் காலத்திலேயே நல்ல தமிழ் எடுத்துப் பாடல்களை எழுதிய அந்த மாமேதையின் புகழைத் தொடர்ந்து பாராட்ட வேண்டும்.

1972-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள் சங்கரதாஸ் சுவாமிகள் விழாவில் ஆற்றிய சொற்பொழிவு.

முதற் பதிப்பு : மே 2000