உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

நாடக தாசர்

பகுதி 1 · 1 / 2

நாடக தாசர்

நாடக உலகில் புகழும் பெருமையை நிலைநாட்டுகிற அளவுக்கு ஏற்றமும் வெற்றியும் பெற்றிருந்து மறைந்த சங்கரதாசின் சுவாமிகளுடைய 105-வது பிறந்தநாள் விழாவினை இந்த மன்றத்தினர் உணர்வு பூர்வமாக நடத்துவதைக் காண மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சங்கரதாசின் ஆவி வந்து இதைக் காணும் என்பதற்காக இந்த சங்கரதாசர் விழா நடத்தப்படவில்லை. நம்மை எதிர்காலத்தில் ஊக்கப்படுத்திக் கொள்ள, நாம் செய்ய வேண்டிய பணிகளுக்கு நம் உள்ளத்தில் தெம்பை உருவாக்கிக் கொள்ள, நம் உள்ளத்தை உறுதியாக ஆக்கிக் கொள்ள, அந்தச் சுயநலம் காரணமாகத்தான் மறைந்த பெரியவர்களைப் பாராட்டுகிறோம். அந்தப் பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

உள்ளபடியே எனக்கு ஆவியில் நம்பிக்கை கிடையாது. அதில் நம்பிக்கை கொண்டவர்கள் கூட இன்று அதில் வேறுபடக் கூறுகிறார்கள்.

தந்தை இறந்து விட்டால் ஆண்டுதோறும் திவசம், திதி கொடுக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். ஏனென்று கேட்டால், அவர்களுடைய ஆவி இருந்து, நாம் கொடுப்பதைப் பெற்றுக் கொள்கிறும் என்று சொல்கிறார்கள். அவர்களே உன்னுடைய தந்தை இன்ன பிறவியாகப் பிறந்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

ஒன்று மறுபிறவியை மறுக்க வேண்டும் அல்லது ஆவியை மறுக்க வேண்டும்.

இரண்டில் ஒரு முடிவிற்கு வந்துவிட்டால் நான் ஒன்றை ஒத்துக் கொள்ளக்கூடத் தயாராக இருக்கிறேன். அதுவரை இரண்டையும் ஒத்துக் கொள்ளத் தயாராக இல்லை.

மறுபிறவி என்று சொன்ன பிறகு ஆவி என்று ஒன்று எப்படி இருக்க முடியும்? ஆவிக்குக் கொடுப்பதற்காகத் திவசம், திதி என்று நாம் கொடுப்பதெல்லாம் எங்கே போகிறது என்று எனக்குத் தெரியும்.

இன்னும்கூடச் சிலர், யாராவது இறந்து விட்டால், இன்னார் சிவலோக பதவி அடைந்து விட்டார் அல்லது வைகுண்ட பதவி அடைந்து விட்டார் என்று செய்தி போடுகிறார்கள். மனிதனுக்கு இறந்தும் பதவி ஆசை விடவில்லை என்பதற்கு இது ஓர் உதாரணம். எல்லாரையுமே இப்படிப் போட்டு விட்டால் யார்தான் நரகலோகத்திற்குப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

பொய் பேசுபவர்கள் நரகத்திற்குப் போவார்கள் என்று சொன்னால் பத்திரிகை போடுகிறவர்கள் தவறாக - பொய்யாக - சிவலோகத்திற்குப் போவதாகப் போடுவதே பொய். அதுவே ஒரு குற்றச்சாட்டு.

இப்படிப்பட்ட குழப்பத்தில் போய் மாட்டிக் கொள்ள வேண்டாமென்றுதான் “உண்டு என்பார் சிலர், இல்லை என்பார் சிலர், நமக்கில்லை அந்தக் கவலை” என்று நாங்கள் இருக்கிறோம்.

சங்கரதாஸ் சுவாமிகள் மறைந்தும் மறையாமல் இருக்கிறார்; செத்தும் சாகாமல் இருக்கிறார்; அவருடைய எழுத்துக்களில், பாடல்களில், நாடகங்களில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரால் உருவாக்கப்பட்ட நடிகர்களின் புகழின் இழையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நாட்டிற்குப் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்களை மறந்துவிடாமல் அவர்களுடைய வாரிசுகளாக நின்று அவர்களைத் தாங்களும் நினைத்து, மற்றவர்

களையும் நினைக்கச் செய்யும் அரும்பணியை மேற்கொள்வது என்பது சாதாரணமான ஒன்று அல்ல. அந்தப் பணியைக் கலைஞர் டி.கே. சண்முகம் அவர்களும், மற்றவர்களும் செய்து வருகிறார்கள். கலையுலகத்திலும், ஏனைய மக்கள் உள்ளத்திலும் சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களை நினைவுபெறச் செய்கிற அளவுக்குப் பெரும் தொண்டை டி.கே.எஸ். சகோதரர்கள் ஆற்றி வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதை மறுப்பார் யாருமில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய பெருமுயற்சியின் காரணமாகச் சங்கரதாஸ் சுவாமி அவர்களுடைய சிலை ஒன்று மதுரையில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து ஆண்டுதோறும் அவர்களுடைய நினைவு நாள் விழாவினை நடத்தி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட பெரியவர்களின் நினைவு விழாக்களில் கலந்து கொள்ள வருகிறவர்கள் யார் என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த விழாக்களில் எடுத்துக் கொள்ளப்படுகிற பொருள் என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சங்கரதாஸ் அவர்களிடம் கலந்து பழகியவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய நாடகங்களில் நடித்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள் சிலர் இருக்கிறார்கள். பார்த்தோ அல்லது கேள்விப்பட்டாமலோகூடத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் இங்கே சிலர் அமர்ந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களுடைய எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாக ஆக வேண்டும் என்பதுதான் என் ஆசை.

அந்த ஆசையை நிறைவு செய்கிற வகையில் இந்த மன்றத்தினர் தங்கள் பணியை மேலும் முழுமையாக நடத்த வேண்டும் என்றும், அதற்கு என்னால் இயன்ற உதவிகளை நிச்சயமாகச் செய்வேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐம்பது ஆண்டு காலத்திற்கு முன்பு நாடக உலகில் பெரிய புரட்சியை நவீன முறையில் அவர் செய்தார் என்று நாம் சொல்லாவிட்டாலும், அந்தக் காலத்திற்கு ஏற்ற வகையில் அந்தக் கால மக்களுக்கு என்னென்ன அறிவுரைகளை எடுத்துச் சொல்ல வேண்டுமோ அதற்கு ஏற்புடைய தளம் இது எனக் கண்டு, அந்தத் தளத்திலே களம் அமைத்து அதன் மூலம் மக்களுக்குத் தேவையான நல்லுரைகளை எடுத்துச் சொல்லி வெற்றி கண்ட பெருமகன் சங்கரதாஸ் சுவாமிகள்.

முதற் பதிப்பு : மே 2000