உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

‘நாம்’ – ஜனநாயகம்! ‘நான்’ – சர்வாதிகாரம்!!

பகுதி 2 · 2 / 2

தேர்தல் நேரத்திலே நான் பூம்புகாரிலுள்ள அண்ணா மாளிகையில் தங்கும் விடுதியில், ஓரிரவு தங்கிய பொழுது பூம்புகார் பகுதி எவ்வாறு இருக்கிறது என்று சுற்றிப் பார்த்த நேரத்தில் மழை பொழிந்தால்தான் அங்கே புல்லே கூட பசுமையாக இருக்கும் - இல்லாவிட்டால், புல்லுக்குக் கூட தண்ணீர் ஊற்ற யாரும் இருந்திடவில்லை.

பூம்புகார் என்பதை மறந்து விடுகிறார்கள்; அது கருணாநிதியால் அமைக்கப்பட்டது என்கிற எண்ணமே வருகின்ற காரணத்தால், அவர் அமைத்தது,

அவருடைய காலத்திற்குள்ளாகவே அழிந்து போகட்டுமே என்று எண்ணுகின்ற காரணத்தால், அவைகளுக்கு நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் நடக்காமலே போய் விடுகின்றன.

அரசியலாகட்டும், சமுதாயத் துறையிலாகட்டும், இலக்கியத் துறையிலாகட்டும், ஒரு நாட்டை வளப்படுத்துகின்ற செயல்களை தனி மனிதனை வைத்துக் கணக்கிடாமல், சமுதாயத்தினுடைய மற்ற தன்மைகளை வைத்துக் கணக்கிட வேண்டும்.

தனி மனிதர்களைப் பழிவாங்குவது தனி மனிதர்களைத் தூற்றிப் பேசுவது, தனி மனிதர்களை சரித்திரத்தில், வரலாற்றில் இல்லாமல் அழித்துவிடுவது என்று எண்ணுகின்ற நிலை, யாராக இருந்தாலும், அவர் எவ்வளவு பெரிய வீராதி வீரர்களாக வெற்றித் திருவுருவங்களாக இருந்தாலும், அவர்களால், நீண்ட நாளைக்கு தங்களுடைய ஆணவத்தை நாட்டில் நிலை நாட்ட முடியாது என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்கள் நீங்கள் படிக்கின்ற சரித்திரங்களிலேகூட சந்தித்திருப்பீர்கள்.

நான் ஏதோ அரசியல் நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டுவதாக நீங்கள் நினைத்திடக் கூடாது. நீங்கள் படித்த சரித்திரங்களைத்தான் நான் சுட்டிக் காட்டுகின்றேன்.

எனவே, தான் என்கிற ஆணவமும், நான் என்கிற விலங்கும் பட்டொழிந்து போய் ‘நாம்’ என்கிற அந்தப் பரந்த மனப்பான்மை நமக்கெல்லாம் உண்டாக வேண்டும்.

அந்த ‘நாம்’ என்கிற பின்னணியில்தான் நம்முடைய மொழியின் வளர்ச்சியும், நம்முடைய இனத்தின் வளர்ச்சியும், நம்முடைய நாட்டின் வளர்ச்சியும் நம்முடைய மக்களின் முன்னேற்றமும் அடங்கிக் கிடக்கின்றது.

‘நாம்’ என்பதை விட்டு ‘நான்’ என்று சொன்னால் அகந்தைதான் மிஞ்சும். அதற்காக ‘நான்’ என்ற சொல்லையே அகராதியிலிருந்து எடுத்து விடுவோமா என்று கேட்டால் நான் அத்தகைய அறிவுரையை உங்களுக்குச் சொல்லத் தயாராக இல்லை.

‘நான்’ என்பது சுட்டிக் காட்டுவதற்குப் பயன்படுத்தும் ஒரு சொல்லாக இருக்க வேண்டும். நான் இன்று காலையிலே வந்தேன் என்று சொல்லும் போது ‘நான்’ பயன்படுத்தப் படலாம். ‘நான்தான் இவைகளை எல்லாம் செய்தேன்’ என்று சொல்லுகின்ற நேரத்தில் ‘நான்’ என்பதற்கு பதிலாக ‘நாம்தான் இவைகளை எல்லாம் செய்தோம்’ என்று சொன்னால் அகந்தை மறைந்து, அங்கே அடக்கம் தலைகாக்குகிறது.

எனவே, தலைதூக்க வேண்டிய அகந்தை மறைந்து விடுகிறது; மறைந்து கிடக்கின்ற அடக்கம் தலை தூக்குகிறது, ‘நான்’ மறைந்து, ‘நாம்’ உருவாகின்ற நேரத்தில்!

நான் - என்பதை, ஒன்றைச் சுட்டிச் சொல்லத்தான் பயன்படுத்த வேண்டுமே அல்லாமல் ‘நான் இப்பொழுது பேசுகிறேன்’ என்று சொல்லலாம்; ‘நாம் இப்பொழுது பேசுகிறோம்’ என்று சொன்னால் இங்கு கூச்சல்தான் மிச்சப்படும் ‘நான் இப்பொழுது பேசுகிறேன்’ என்று சொல்லப்படுகிற நேரத்தில் சுட்டிச் சொல்லப்பட்ட ஒரு சொல்.

ஆனால், இந்தக் கல்லூரியை, மற்ற அனைவரும் புகழ்கின்ற அளவுக்குச் செய்திட வேண்டும் என்று ஒரு முடிவெடுத்தால் அதை ‘நாம்’ தான் செய்திட வேண்டும்.

இங்கே முதல்வர் அவர்கள் தலைமையுரை ஆற்றுகின்ற நேரத்தில் குறிப்பிட்டார்கள்; இந்தக் கல்லூரி கட்டப்படுவதற்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு செங்கல்லும், மாணவர்களால் எடுத்து வைக்கப்பட்டது என்பதையும், அந்தச் செங்கலைப் பதிப்பதற்கு வைக்கப்பட்ட சிமெண்ட், ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டது என்பதையும் அவர் எடுத்துச் சொன்னபோது அங்கேதான் ‘நாம்’ என்பது அழகுற, தலை நிமிர்ந்து, சிறப்புடன் நம்மையெல்லாம் பார்த்து மகிழ்ச்சியடைகின்றது.

எனவே அந்த ‘நாம்’ என்ற உணர்வு நமக்கெல்லாம் ஏற்பட வேண்டும். ‘நான்’ என்ற ஆணவம் மறைந்ததாக வேண்டும். ‘நாம்’ என்ற நிலை இருந்தால் தான் அந்த ‘நாமாலே’ ஒரு ‘நான்’ அழிந்து விட்டால்கூட ‘நாம்’ மிஞ்சப்படும். அதுதான் ஜனநாயகம்.

‘நாம்’ என்பது ஜனநாயகம்; ‘நான்’ என்பது சர்வாதிகாரம்; யதேச்சாதிகாரம். அந்த ‘நாம்’ வேண்டும் என்பதற்காகத்தான் ‘நாம்’ பாடுபட்டோம். ‘நாம்’ வெற்றி பெற்றோம். ‘நாம்’ தொடர்ந்து வெற்றிகளைப் பெறுவோம். அந்த வெற்றிகளுக்கு நீங்கள் முன்னுதாரணமாகத் திகழுகின்றீர்கள். நீண்ட நேரம் உங்களோடு இருக்க வேண்டும்; பேச வேண்டும் என்ற ஆசை வராமலே போனால் எவ்வளவு பெரிய சாபம் கொடுப்பார்கள் என்பது தெரியும். அதனால்தான் நான் இங்கே பேச வரவில்லை!

உங்களைப் பார்க்க வந்தேன். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. இருந்தாலும், விரைவிலே வருகிறேன். மீண்டும் இந்தக் கல்லூரிக்கு வருவேன்; கோரிக்கைகளை வைக்கலாம் என்று எண்ணுகிறீர்கள்.

இப்பொழுது கோரிக்கைகளை வைத்தால், நிறைவேற்றக்கூடிய இடத்திலே இருக்கிறேனா என்ற ஐயப்பாட்டால், எழுப்பாமல் இருந்து விட்டீர்கள். விரைவிலே எழுப்புவீர்கள். எழுப்புகின்ற காலத்தில், அவைகளை நிறைவேற்றுகின்ற இடத்திலே நாமெல்லாம் இருந்தோமேயானால், அவைகளை நிறைவேற்றுவோம்; இந்தக் கல்லூரி, இந்தியத் திருநாட்டிலேயே ஓங்கு புகழ் எய்திடப் பணியாற்றுவேன்; இது பல்கலைக் கழகமாகக் கூட ஆகிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

கல்லூரியாக இருந்து கொண்டே பல்கலைக் கழகம் பெறுகின்ற பெயரை, பெறக்கூடிய அளவுக்கு, இங்குள்ள மாணவர்கள் இங்கே பரஸ்பரம் நடந்து காட்டுகிறார்கள் என்பதை நான் கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

நீங்கள் இங்கே கடைப்பிடிக்கின்ற அமைதியும், கட்டுப்பாடும், கண்ணியமும் தொடர்ந்து வலுவடைக என்று வாழ்த்துரைத்து விடைபெறுகிறேன்.

11.2.80 அன்று பூம்புகார் கலைக் கல்லூரியில் ஆற்றிய உரை.

முதற் பதிப்பு : மே 2000