‘நாம்’ – ஜனநாயகம்! ‘நான்’ – சர்வாதிகாரம்!!
பகுதி 1 · 1 / 2
‘நாம்’ – ஜனநாயகம்! ‘நான்’ – சர்வாதிகாரம்!!
பூம்புகார் கலைக்கல்லூரியினுடைய மாணவர் பேரவையினுடைய சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென பல நேரங்களிலே என்னை வலியுறுத்தி வருவதற்கு எனக்கு பெரு விருப்பம் இருந்தாலும்கூட தவிர்க்கவொண்ணாத சூழ்நிலைகள் காரணமாக வர இயலாமல் போயிற்று. இன்று வருவதற்கு ஏற்ற உடல்நிலை இல்லாமல், நேற்று மாலை இன்றைய நிகழ்ச்சிகளை எல்லாம் ஒத்திவைப்பது என்றின்ற முடிவினை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது, எப்படியும் வந்து உங்களைச் சந்தித்து விட்டுப் போக வேண்டும் என்ற முனைப்போடு நான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன்.
நாளை காலையில் சட்டப் பேரவையில் ஆளுநர் உரையின் மீது நடைபெறுகின்ற விவாதத்திற்கு கடைசி நாள் என்று சொல்லப்படுகிறது.
அதிலே எதிர்க்கட்சித் தலைவர் என்கிற வகையில் நான் பேசிய பிறகு ஆளும் தரப்பிலிருந்து பதில் சொல்ல வேண்டும்.
எனவே இன்று மாலைக்குள்ளாக நான் சென்னை சென்றால்தான் நாளைக் காலை பேரவை நிகழ்ச்சியிலே கலந்து கொள்ள இயலும். அதற்கு உடல்நிலை இடம்
தருமா? என்று ஐயுறுகின்ற நிலையிலேதான் நான் இங்கே நின்று கொண்டிருக்கின்றேன்.
மாயவரத்தில் நடைபெற்ற ஒரு மணவிழா நிகழ்ச்சியில் ஐந்து நிமிடம்கூட என்னால் பேச இயலவில்லை. இங்கு மாணவர் தலைவர் ஒரு மணி நேரம் நான் இங்கே பேச வேண்டும் என்று குறிப்பிட்டார். ஏன் குறிப்பிட்டமாட்டார்? உடல்நிலைக் கோளாறு அவருக்கு அல்லவே? எனக்கு அல்லவா?
எனவே, என்னுடைய உடல் நிலையையும் கடந்த ஆர்வப் பெருக்குத்தான் அவர் அவ்வாறு நான் இங்கே என்னுடைய கடமையை ஆற்றிட வேண்டும் என்று சொல்லத் தூண்டியது என்றால் அது மிகையாகாது.
பூம்புகார் எனக்குப் புதிய இடம் அல்ல; பூம்புகார் அடிக்கடி நான் வராத இடமும் அல்ல. இந்தக் கல்லூரியைப் பொறுத்த வரையில் இது தமிழகத்திலே ஒரு தலைசிறந்த கல்லூரியாகத் திகழவேண்டும் என்பதுடன் இந்தியத் திருநாட்டிலேயே ஒரு எடுத்துக்காட்டான கல்லூரியாக இடம் பெற வேண்டும் என்பதிலே எனக்குத் தனியாத ஆசை.
அதை நிறைவேற்றுவதற்கு - தொடர்ச்சியாகப் பணியாற்றுவதற்கு இயலாமல் இடையிலே தொய்வு ஏற்பட்டுவிட்டிருந்தாலும், அந்த தொய்வு நீங்கித் தொடர்ந்து பணியாற்றுகின்ற நிலை - என்னுடைய ஆசை - பூம்புகார் கல்லூரியிலே நிறைவேறுகிற நிலை நிச்சயமாக ஏற்படும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
இந்தப் பேரவை நிகழ்ச்சியில் முன்னேற்றக்கழக மாணவர்களும், இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணவர்களும், ஜனதா கட்சியைச் சேர்ந்த மாணவர்களும், வேறு சில மாணவர்களும் எனக்கு மாலை
அணிவித்து தங்களுடைய மகிழ்ச்சியை கட்சி சார்பற்ற முறையிலே தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் மாணவர் பேரவையினுடைய தலைவர், நிர்வாகிகளுடைய தேர்தலைப் பொறுத்து, தமிழ்நாட்டில் அரசியல் உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பே, நீங்கள் இந்தக் கல்லூரியிலே உடன்பாடு செய்து கொண்டவர்கள். அந்த வகையிலே எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக அமைந்திருப்பதை நான் நன்கு அறிவேன்.
மாணவப் பருவத்தில், உங்களுடைய உள்ளத்திலே எழுகின்ற அந்த ஆர்வக் கனல் அரசியல் ரீதியாகக் கொழுந்துவிட்டு எரிவதை நீங்கள் காணுகின்றீர்கள்.
பூம்புகார் உருவாக்கப்பட்ட பிறகு, இங்கு எழுநிலை மாடமும், கலைக் கூடமும், இலஞ்சி மன்றமும், பாவை மன்றமும், இன்னோரன்ன நம்முடைய வரலாற்று, நடன அரங்குகளும், இலக்கிய குறிப்புகளும் இந்தப் பகுதியில் அமைக்கப்பெற்று நம்முடைய சரித்திர நாயகர்கள், இலக்கியச் சித்தர்கள் இவர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் பல்வேறு புராண நாயகர்கள் எல்லாம் இங்கு அமைக்கப் பெற்று அதைத் தொடர்ந்து கலங்காமல் காப்பாற்றப்பட வேண்டும். ஆட்சிகள் மாறலாம்.
ஆனால் ஆட்சிக்கு வருகின்றவர்கள் ஆர்வம் மாறாது - என்ற நம்பிக்கையோடுதான் இவைகள் எல்லாம் உருவாக்கப்பட்டன.
ஆனால் இன்று அவைகள், சரியான முறையிலே பேணிக் காக்கப்படுகின்றனவா என்று எண்ணினால், நமக்கு விடுகின்ற பெருமூச்சுதான் அதற்குப் பதிலாக அமைகிறது.
வருகின்ற வழியிலே, ஏற்கெனவே அமைக்கப்பட்ட கரிகால் சோழனுடைய தோரண வாயில்களானாலும், வேறு பல தோரண வாயில்களானாலும் இவைகள் எல்லாம் கவனாகா வண்ணம் அழிந்து எழில் குறைந்து காணப்படுகின்ற காட்சியை நான் கண்டேன்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, இங்கே இப்படி பராமரிப்புகள், கவனாக உள்ளவைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும். சீர்ப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் இந்தப் பகுதியிலே ஏற்படாமல் போயிற்றோ, அதைப் போலத்தான் கவனாகிக் கிடக்கின்ற தமிழகத்தையும் சீர்ப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் - ஏற்படாமல் ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
அவைகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் - அவைகளை வலுப்படுத்த வேண்டும் - வளர்க்க வேண்டும் - அந்தப் பராமரிப்புகள் ஒழுங்காகப் பேணப்பட வேண்டும் என்ற ஆசை நான் இங்கு வருகின்ற நேரத்திலும் சரி, வராமல் சென்னையில் இருந்து எண்ணுகின்ற நேரத்திலும் சரி - எனக்கு ஏற்படுவது உண்டு.
