உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

முரசொலி அறக்கட்டளை விருது வழங்கு விழா

பகுதி 2 · 2 / 2

‘ராஜகுமாரி’ படத்திலே எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்து வெளிவந்த அந்தக் கால கட்டத்தில் ஏ.எஸ்.ஏ. சாமி அவர்கள் எனக்கு மாதந்தோறும் தந்த ஊதியம் 150 ரூபாய். ஈரோட்டிலே 40 ரூபாய். கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவில் 150 ரூபாய் பிரமோஷன்! அதற்குப் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸில் வசனம் எழுத வந்தேன். மாதம் 500 ரூபாய் சம்பளம். 40, 150, 500 என்ற அளவிலே திரைப்படத் துறையில் சம்பளம் பெற்றேன்.

சென்னைக்கு வர வேண்டும். இயக்கப் பணிகளிலே தொடர்ந்து ஈடுபட வேண்டும், இடையறாது ஈடுபட வேண்டும் என்று எண்ணி, சென்னைக்கு வந்த பொழுது கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் என்னை “சென்னைக்கு வந்து விடுங்கள்” என்று அழைத்தபோது, பராசக்தி படம் எடுப்பதற்காக நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் அழைத்தபோது, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.

சுந்தரம் அவர்கள், “வேண்டாம், சென்னைக்குச் செல்ல வேண்டாம். சேலத்திலேயே இந்த ஸ்டுடியோவில் இருந்து படங்களை இயக்கும், டைரக்டராக இருங்கள். மாதம் 10,000 ரூபாய் தருகிறேன்” என்று குறிப்பிட்டார். 10 ஆயிரம் சாதாரணமானதல்ல அன்றைக்கு.

நான் அங்கே கட்டுப்பட்டு விடுவேன், ஆட்பட்டு விடுவேன், கழகப் பணிகளில் ஈடுபட முடியாத அளவிற்குக் கட்டுண்டு விடுவேன் என்பதற்காக “இயலாது” என்று கூறிவிட்டு சென்னைக்கு வந்தவன் தான் நான். அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும். நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும்.

இந்த இடைக்காலத்தில் ஏ.எஸ்.ஏ. சாமி அவர்கள் கோவையிலே நான் இருந்தபொழுது என்னிடத்திலே காட்டிய அன்பு, என்னிடத்திலே காட்டிய பாசம், வைத்திருந்த பற்று இவைகளையெல்லாம் என்னால் மறக்க முடியாது. எனக்கும், அவருக்கும் சில கருத்து மாறுபாடுகள் எல்லாம் கூட ஏற்பட்டதுண்டு. அதைப் பெரிய அளவில் வெளியிலே இருந்தவர்கள் பூதாகரமாக எடுத்துச் சொன்னதெல்லாம் கூட உண்டு. ஆனாலும் எங்களிடையே இருந்த அன்பு என்றைக்கும் பட்டுப் போகவில்லை.

அவருடைய இல்லத்திலே நான் பல நாட்கள் உணவருந்தி இருக்கின்றேன். அவர் என்னை மிகுந்த அன்போடு நடத்தி இருக்கின்றார். என்னுடைய திறமையை அவர் என்றைக்கும் குறைத்து எடை போட்டதில்லை. அப்படி இருந்த அவர் இன்றைக்கு அவருடைய வாழ்க்கையிலே அந்த அளவிற்கு ஒளி பெறாத சூழ்நிலையிலே இருந்தாலும்கூட, அவருடைய குடும்பத்தார் என்னிடத்திலே காட்டுகின்ற மரியாதை, அன்பு எந்த அளவிலும் குறைந்திடவில்லை.

எனவேதான் அவருக்கு ஆற்ற வேண்டிய நன்றிக் கடன் மாத்திரமல்ல, திரைப்படத் துறையிலே அறிஞர் அண்ணா அவர்களுடைய ‘வேலைக்காரி’ படத்தை அந்தப் புரட்சிகரமான சித்திரத்தை அவருடைய அருமையான இயக்கும் தன்மையினால் அந்தத் திரைப்படத்தினால் நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டி, திரைப்படத் துறையிலே முதல் முதலாக ஒரு புரட்சியை ஏற்படுத்திய அந்தப் படத்தின் இயக்குநர் என்ற முறையிலே ஏ.எஸ்.ஏ. சாமி அவர்களைப் பாராட்ட வேண்டும் என்ற என்னுடைய நெடுநாளைய எண்ணம், என்னுடைய நெடுநாளைய ஆசை; அவைகளுக்கெல்லாம் மீறி, எனக்குத் திரைப்படத்துறையிலே ஆரம்பகால ஆசிரியராகவும் இருந்தார் என்ற அந்த அன்பை திரும்பக்

காட்ட வேண்டும். நன்றிக் காணிக்கை செலுத்த வேண்டும் என்ற அந்த எண்ணமும் நிறைவேற தம்பி முரசொலி மாறனும் மற்றும் முரசொலி அறக்கட்டளையிலே உள்ள நண்பர்களும் என்னுடைய எண்ணத்தை ஈடேற்றச் செய்கிற வகையிலே அவருக்கு விருதும், ஒரு லட்ச ரூபாய் பொற்கிழியும் அளித்தமைக்காக என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் அறக்கட்டளையிலே உள்ள அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து, நம்முடைய ஆசிரியர் சாவி அவர்கள். அவருக்கும் எனக்கும் உள்ள நட்பைப் பற்றி இங்கே பாராட்டிப் பேசியவர்கள் அனைவரும் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். நகைச்சுவை எழுத்தாளர் மாத்திரமல்ல; நாட்டுப்பற்று மிக்க கொண்ட எழுத்தாளர். உத்தமர் காந்தியடிகளோடு பழகக் கூடிய அத்தகைய வாய்ப்பையும் பெற்றவர். காந்தியடிகள் வடபுலத்திலே தியாக யாத்திரை மேற்கொண்டபோது, பத்திரிகை ஆசிரியராக அவரைப் பார்க்கச் சென்ற சாவி அவர்கள், காந்தியடிகளோடு நடத்திய உரையாடல்களையெல்லாம் தொகுத்து, அந்தப் பயணத்தைப் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.

படிக்கப் படிக்க நம்முடைய இதயத்திலே ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய நூல் அந்த நூல். அவர் எழுதிய வாஷிங்டன் திருமணத்தைப் பற்றி துக்ளக் சான்றிதழிலே குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அந்த நாடகம் எத்தனை தடவைகள் தமிழ்நாட்டிலே நடைபெற்றிருக்கின்றன? தமிழ்நாட்டிலே மாத்திரமல்ல; பம்பாய் போன்ற இடங்களில், வெளிமாநிலங்களிலே கூட எத்தனை நாடகங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை எண்ணிச் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு அந்த நாடகங்கள் நடத்தப் பெற்றிருக்கின்றன. நானே ஒரு ஐந்தாறு முறை சாவி எழுதிய வாஷிங்டன்

திருமணம் என்ற அந்த நாடகத்தைப் பார்த்து பரவசப் பட்டிருக்கின்றேன்.

‘வேதவித்து’ என்று ஒரு சிறிய நூல். ஒரு புதினம், ஒரு குறுநாவல். அதை ஒரு இரவிலே படித்து முடித்து மறுநாள் காலையிலே அதற்கு அணிந்துரை எழுதி அனுப்பினேன். அருமையான கதை.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலே உள்ளவர்களைப் பாத்திரங்களாக அமைத்து, மேட்டுக் குடியிலே பிறந்த ஒரு கதாபாத்திரத்தையும் உருவகப் படுத்தி, அவர் அமைத்திருக்கின்ற அந்தப் பாங்கினைப் பார்த்தால் திரு. சாவி அவர்கள் எந்த அளவிற்கு முற்போக்கு எண்ணம் கொண்டவர் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அவர் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காக சிறைச்சாலையில் இருந்தவர். பலமாத காலம் சிறைச்சாலையில் இருந்தவர்.

பலமாத காலம் சிறைச்சாலையிலே பல்வேறு தலைவர்களோடு வாடியவர். சுதந்திரம் பெற்ற பிறகும் கூட அவருக்கு ஒரு நாள் சிறைச்சாலை வரவேற்பளித்தது; கடந்த நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு!

கடந்த கால ஆட்சியில் திடீரென்று ஒரு செய்தி வந்தது எங்களுக்கு. சாவி கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வந்தது. ஏன், என்று வினவினோம். அவருடைய பத்திரிகையிலே ஒரு அட்டைப்படம். அது ஆபாசப் படமாம். அதற்காகக் கைது என்று சொன்னார்கள். உடனடியாக அவர் எங்கே இருக்கிறார் என்று தேடி நானும், நண்பர் வீராசாமியும் மற்றவர்களும் சென்றோம். அண்ணா நகரில் காவல் நிலையத்தில் அவரை வைத்திருந்தார்கள். அங்கே சென்று பார்த்த பொழுது, அவர் அப்பொழுதும் புன்னகையோடு தான் இருந்தார்.

நான் கூட கேட்டேன். “என்ன, பழைய காலத்திலே நாட்டு விடுதலைக்காகப் போராடி சிறைச்

சாலைக்குச் சென்றதைப் போல சிரித்த முகத்தோடு அமர்ந்திருக்கின்றீர்களே?” என்று கேட்டேன். சொன்னார்: “நீங்களெல்லாம் வந்திருக்கிறீர்களே, என்னைக் காண. அதனால், இந்தக் குறை எனக்குத் தெரியவில்லை” என்று சொன்னார். ஆனால், அவருடைய நெஞ்சுக் குமுறல் நன்றாக வெளிப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அப்பொழுது சொன்னார்: “சாவி’ பத்திரிகையில் ஒரு அட்டைப்படம் போட்டதற்காக இந்த நிலை, இந்த தண்டனை எனக்கு” என்று சொன்னார். நாங்கள் அவரை ஜாமீனில் எடுத்து வெளியே கொண்டு வந்தோம். இது அவருடைய வாழ்க்கையிலே ஏன் ஏற்பட்டதென்றால் எனக்கும், அவருக்கும் இருந்த நட்பின் காரணமாகத்தான் இது அவருக்கு ஏற்பட்டது. நட்புக்காக இந்தத் துன்ப துயரங்களையெல்லாம் கூட அவர் தாங்கிக் கொள்ளக் கூடிய இயல்பு படைத்தவராக இருந்தார்.

இன்றைக்கும் இருக்கின்றார்.

எத்தனையோ சுற்றுப் பயணங்களில் என்னோடு நண்பர் சாவி அவர்கள் வந்திருக்கின்றார். ஏன் வருகிறார் என்றால் சுற்றுப்பயணத்தில் மக்களுடைய எழுச்சியை, மக்களுடைய ஆர்வத்தை நேரடியாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல். எனவே எல்லா சுற்றுப் பயணங்களிலும் அந்தக் காலத்திலே என்னோடு திரு. சாவி அவர்கள் வருவது வாடிக்கை. எங்கள் இரண்டு குடும்பத்திலே உள்ள பெண்களும் கூட - அவருடைய வீட்டாரும் என்னுடைய வீட்டிலே உள்ளவர்களும் நல்ல முறையில் நெருங்கிப் பழகக் கூடிய அளவிற்கு இரண்டு குடும்பங்களும் ஒரே குடும்பம் என்ற அளவிற்குப் பழகக் கூடிய குடும்பங்கள்.

அவர் அமெரிக்கா சென்றாலும், உலகத்திலே எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அங்கிருந்து என்னோடு

தொடர்பு கொள்ளத் தவற மாட்டார். இங்கேயும் சென்னையிலே இருக்கும்பொழுது நாள்தோறும் நானும், அவரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டுதான் இருக்கின்றோம். அப்படிப்பட்ட இனிய நண்பர். எளிய நண்பர். என்றைக்கும் எந்த நிலையிலும் மாறாத நட்புணர்வு கொண்ட நண்பர், சாவி அவர்களுக்கு - நண்பர் என்ற முறையிலே அல்ல. அவர் நல்ல எழுத்தாளர். பல எழுத்தாளர்களை உருவாக்கிய, எழுத்தாளர்களெல்லாம் போற்றுவதைப் போல, ‘எழுத்தாளர்களின் பிதாமகன்’ என்று பாராட்டப் படுகின்ற அவருக்கு இந்த விருதை அளித்து முரசொலி அறக்கட்டளை பெருமைப்படுகிறது.

அந்த விருதை வழங்கியதன் மூலம் நான் பெருமைப்படுகிறேன் என்பதை இங்கே எடுத்துக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஈரோடு தமிழன்பன்; அவர் இங்கே சொன்னார். “ஈரோடு என்கிற அடைமொழியையே, கருணாநிதி தான் என்னோடு ஒட்ட வைத்தார்” என்று குறிப்பிட்டார். இங்கே தமிழன்பனின் கவிதைகளையும் கேட்டீர்கள். அவர் எழுதிய கவிதைகளைப் பற்றி விமர்சனங்கள் செய்த நம்முடைய கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுடைய பேச்சையும் கேட்டீர்கள். எப்படிப்பட்ட ஆற்றலாளர்கள் தமிழகத்திலே தமிழை வாழ வைக்க, தமிழர்களுக்குத் தொண்டாற்ற, தமிழ்ப் பணியை தொடர்ந்திட கிடைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணி எண்ணி நாம் பெருமையடையலாம்.

அவர்கள் எடுத்துக் காட்டியதைப் போல, ஒவ்வொரு கவியரங்கமும், பல்லாயிரக்கணக்கான மக்கள் நிரம்பி வழியக் கூடிய அளவிற்கு நடைபெற்றதென்றால், அடுத்து நடைபெறுகின்ற கவியரங்கத்திற்கும் அதே போன்று பெருந்திரளாக மக்கள் வந்தார்கள் என்றால், அதற்கெல்லாம் காரணம், தமிழன்பனைப் போல அப்துல்

ரகுமானைப் போன்றவர்கள் அந்தக் கவியரங்கத்திலே காட்டிய திறமைதான் அதற்குக் காரணம்.

நான் 1967-ஆம் ஆண்டு முதன் முதலாக திருச்சி வானொலியிலே கவியரங்கத்திற்குத் தலைமை வகித்து விடுதலை வீரர்கள் என்ற தலைப்பிலே பாடத் துவங்கிய அந்தக்காலம் தொட்டு இதுவரையிலே அப்துல் ரகுமான் அவர்களும், ஈரோடு தமிழன்பன் அவர்களும் இல்லாத கவியரங்கம் என் தலைமையிலே நடைபெற்றதே இல்லை என்று சொல்லலாம். இடையிடையே சிலர் நெருக்கடியின் காரணமாக விலகிக் கொண்டதுண்டு. ரொம்ப நெருக்கமாக இருந்தால் விலகிக் கொள்வோம் என்று விலகிக் கொள்வதைப் போல, நெருக்கடி நேரத்திலே சிலர் விலகிக் கொண்டதுண்டு.

ஆனால், நெருக்கடி காலத்திலும், நெருக்கிக் கொண்டு என்னோடு இருந்தவர்கள் அப்துல் ரகுமானும், ஈரோடு தமிழன்பனும் என்று சொன்னால் அது மிகையாகாது. (பலத்த கைத்தட்டல்)

அப்படிப்பட்ட இருவரில் ஒருவருக்கு விருது வழங்கவும் இன்னொரு கவிஞர் ரகுமான் அவர்கள் விருது வழங்கப்பட்டவரைப் பாராட்டவுமான ஒரு சூழ்நிலை இந்த மேடையில் அமைந்ததை எண்ணி எண்ணி நான் பூரிக்கிறேன். எத்தனையோ அரசியல் வெப்பத்திற்கிடையே எவ்வளவோ அலுவல்களுக்கிடையே இன்று இந்த மாலை நேரம் இந்த இரண்டு கவிஞர்களுடைய உரையையும் கவிதையையும் கேட்டதன் காரணமாக பயனுள்ள நேரமாக அமைந்திருக்கின்றது.

நான் அடிக்கடி சொல்வதுண்டு. அரசியல் வெப்பத்தைத் தணிக்க இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் தான் எனக்குப் பெரிதும் உதவுகின்றன என்று! அந்த உதவியை இன்றைக்கு அப்துல் ரகுமானும், ஈரோடு தமிழன்பனும் செய்திருக்கின்றார்கள். அந்த

வகையிலும் அவர்களுக்கு நான் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விருதுகள் மிகவும் பொருத்தமானவர்களுக்குப் பொருத்தமானவர்களாகிய உங்கள் முன்னிலையில் வழங்கப்பட்டிருக்கின்றன. அவர்களை வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துகின்றேன்.

13-1-98 அன்று முரசொலி அறக்கட்டளை விருது வழங்கும் விழாவில் ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000