முரசொலி அறக்கட்டளை விருது வழங்கு விழா
பகுதி 1 · 1 / 2
முரசொலி அறக்கட்டளை விருது வழங்கு விழா
இந்த நல்ல விழாவில் முரசொலி அறக்கட்டளையின் சார்பில் இயக்குநர் சாமி அவர்களுக்கும், பத்திரிகை ஆசிரியர் சாவி அவர்களுக்கும், கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கும் விருது வழங்கி அவர்களைப் பாராட்டுகிற நேரத்தில் நம்முடைய கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள், “நான் இட ஒதுக்கீடு செய்து கொள்கிறேன்; கவிஞர் என்ற முறையிலே தமிழன்பனை பற்றி மாத்திரம்தான் அதிகம் பேசுவேன். மற்ற இரண்டு இடங்களையும் தமிழ்க் குடிமகனுக்கு ஒதுக்குகிறேன்” என்று அவர் இஷ்டத்துக்கு ஒதுக்கி விட்டுப் போக, இவர் இஷ்டத்துக்கு இவர் இரண்டு தொகுதிகளை எடுத்துக் கொண்டு - ஒரு தொகுதி அப்துல் ரகுமானுக்கு ஒதுக்கப்பட்டதாகவே ஒரு கற்பனை செய்து பேசிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
என் பாடு என்னவென்றால், யார் எந்தத் தொகுதி ஒதுக்கிக் கொண்டாலும், எல்லாத் தொகுதிக்கும் போக வேண்டியவன் நான் (பலத்த சிரிப்பு, கைத்தட்டல்) என்ற முறையில், நான் இந்தத் தொகுதிகளைப் பற்றி பேச வேண்டியவனாக இருக்கிறேன்.
இங்கே உடல் தளர்ந்த நிலையில் கண்கலங்க - ஆனால் அதே நேரத்தில் உள்ளத்தில் களிப்பு பொங்க, இந்த மேடையிலே வந்து விருதினையும், முரசொலி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியையும் பெற்றுக் கொண்ட ஏ.எஸ்.ஏ. சாமி அவர்கள் வடார்க்காடு மாவட்டம் திருப்பத்தூரிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர் இங்கே வர வேண்டுமென்று விரும்பி அவரை அழைத்து வருகின்ற முயற்சியிலே ஈடுபட்டு இந்த அறிவிப்பையும் அவருக்குச் சொல்லி, அவர் வர வேண்டும், வந்து எங்களை எல்லாம் காண வேண்டும், என்ற விழைவோடு வந்தார் என்றாலும் கூட, வந்த இடத்தில் பயணம் செய்ததன் காரணமாக நலிவுற்று, உடல் களைப்புற்று சென்னையிலே இன்று மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டு, “நீங்கள் இங்கு வரத் தேவையில்லை, ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்” என்று எவ்வளவோ சொல்லியும் கேளாமல், இந்த மேடைக்கு வந்து நம்மை எல்லாம் பார்த்து நம்முடைய முன்னிலையிலே அவருக்கு வழங்கப்பட்ட அந்த விருதினைப் பெற்றுச் சென்றிருக்கின்றார்கள்.
நம்முடைய பத்திரிகை ஆசிரியர் நீண்டகால எழுத்து வேந்தர் சாவி அவர்கள், விருதைப் பெற்றுக் கொண்டு சுருக்கமாக ஆனால் சுவையாக அவருடைய நன்றியை ஏற்புரையாக இங்கே வழங்கியிருக்கின்றார்கள்.
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத ஒரு கவிதையை இந்த இலட்ச ரூபாய்க்கே நம்முடைய ஈரோடு தமிழன்பன் (கைத்தட்டல்) இங்கே நமக்கெல்லாம் தனது ஏற்புரை என்ற பெயரில் வழங்கி இருக்கின்றார்.
முரசொலி அறக்கட்டளை தம்பி மாறன் குறிப்பிட்டதைப் போல, முரசொலி இதழின் பொன்விழா நேரத்தில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற
நிகழ்ச்சியிலே அறிவிக்கப்பட்டு, அந்த அறக்கட்டளையின் சார்பில் - தமிழறிஞர்களை, கவிஞர்களை, தமிழ் மொழியிலே திறமை பெற்றவர்களை, விருது வழங்கிப் பாராட்டுவது என்ற ஒரு குறிக்கோளோடு ஆண்டு தோறும் இந்த நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றது.
‘முரசொலி’க்குப் பொன்விழா 92-ஆம் ஆண்டு என்று நான் குறிப்பிட்டேன். 1942-ஆம் ஆண்டு முரசொலி திருவாரூரிலே தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டபோது - இன்று பெரிய அளவில் வருகின்ற நாளிதழாகத் தொடங்கப்படவில்லை. இன்னும் சொல்ல வேண்டுமேயானால் வார இதழாகக் கூட அது தொடங்கப்படவில்லை. துண்டு அறிக்கையாக, மாதம் ஒரு முறை - தேவைப்பட்டால் மாதமிருமுறை, மேலும் தேவைப்பட்டால் மாதம் மூன்று முறை திருவாரூரில் இருந்து வெளியிடப்படுகின்ற துண்டு அறிக்கையாக முரசொலி வெளிவந்தது.
மாணவனாக இருந்த காரணத்தால், ‘சேரன்’ என்ற புனைபெயரோடு அந்தத் துண்டறிக்கை வெளியிடப்பட்டு ஒரு நான்காயிரம் அல்லது ஐயாயிரம் பிரதிகள் அச்சியற்றப்பட்டு, ஆங்காங்குள்ள நமது இயக்க அமைப்புகளுக்கு இலவசமாகவே அனுப்பி வைக்கப்பட்டு, கொள்கையைப் பரப்புகின்ற அந்த முயற்சியிலே நாங்கள் ஈடுபட்ட காலம் அந்தக் காலம்.
அதற்குப் பிறகு அது வார ஏடாகத் திருவாரூரிலே மலர்ந்தது. அப்படி மலர்ந்த நேரத்தில் முரசொலி அச்சியற்றப்பட்டு, அச்சகத்திலே இருந்து குறிப்பிட்ட நாளில் எடுக்க முடியாத அளவிற்குக் கடன் தொல்லை, பணமுடை இவைகள் எல்லாம் என்னை வருத்தியதுண்டு. அந்த நேரங்களில் என் வீட்டிலே சகோதரிகளின் நகைகளை அடமானம் வைத்துவிட்டு பணம் திரட்டி
அச்சியற்றப்பட்ட அந்த முரசொலி வார இதழ்களை எல்லாம் எடுத்துச் செல்ல, ஒரு வண்டி வைக்கக்கூட இயலாத நிலையில், தலையிலே சுமந்து நானும், முரசொலியின் மேலாளரும், என்னுடைய நண்பன் தென்னனும் திருவாரூரின் குறுக்கே ஓடிக் கொண்டிருக்கின்ற ஓடம் போக்கி ஆற்றில், இடையே இருந்த மூங்கில் பாலத்தில் நடந்து வந்து, தெற்கு வீதியிலே இருந்த முரசொலி அலுவலகத்திலே அவைகளை எல்லாம் முகவர்களுக்கும், அனுப்ப வேண்டியவர்களுக்கும் அனுப்புகின்ற பணியிலே ஈடுபட்டு, அப்படிப் பரவியது முரசொலி!
அந்த முரசொலிதான் பின்னர் சென்னையிலே இருந்து நாளேடாக வெளிவந்தது. நாளேடாக வெளிவந்த அந்தக் கால கட்டத்தினைத் தொடர்ந்து தான் அதனுடைய ஐம்பதாவது ஆண்டு விழாவை, பொன் விழாவை சென்னையிலே நடத்தி, அந்த விழாவிலேதான் இந்த அறக்கட்டளை அறிவிக்கப்பட்டு அந்த அறக்கட்டளையின் சார்பாக இன்றைக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அறக்கட்டளை என்று சொன்னால் போதாது; இந்த முரசொலி அறக்கட்டளைக்கு ஒரு வரலாறு உண்டு என்பதற்காகத்தான் இந்த வரலாற்றை நான் உங்களுக்குச் சுருக்கமாகச் சொன்னேன்.
ஏதோ எடுத்த எடுப்பில், பல்லாயிரக்கணக்கான இதழ்கள் அச்சிடப்படுகின்ற வகையிலே வசதியோடு, வளர்ச்சியோடு, வாய்ப்போடு தொடங்கப்பட்டதல்ல முரசொலி ஏடு!
அந்த ஏடு இன்றைக்கு வளர்ந்திருக்கின்றது. இங்கே பேசியவர்கள் எல்லாம் முரசொலியைப் பாராட்டினார்கள். இன்றைக்கு இலட்சக்கணக்கான பிரதிகள் மற்ற ஏடுகளைப் போல முரசொலி செல்லா விட்டாலும் கூட,
இலட்சக்கணக்கான ஏடுகள் உருவாக்குகின்ற தாக்கத்தை எதிர்கொள்ளக்கூடிய அந்த வலிமையைப் பெற்றிருக்கின்ற ஏடாக முரசொலி திகழ்கிறது என்றால்; (பலத்த கைத்தட்டல்) அது முரசொலிக்கு மாத்திரம் உள்ள வலிமை அல்ல; ஆற்றல் அல்ல; அந்த முரசொலி நடத்தப்படுகின்ற இயக்கத்தின் பின்னால் இருக்கின்ற உங்களைப் போன்ற இலட்சோப இலட்சம் உடன்பிறப்புகளுடைய வலிமை தான் முரசொலியின் வலிமை (பலத்த கைத்தட்டல்). அந்த வலிமையின் காரணத்தினால்தான் இன்றைக்கு அந்த அறக்கட்டளை, வித்தகர்களுக்கு, மேதைகளுக்கு, தமிழறிஞர்களுக்கு, கவிஞர்களுக்கு இந்த விருதை வழங்குகின்ற அளவுக்கு ஒரு பெருமையைப் பெற்றிருக்கின்றது.
1942-ஆம் ஆண்டில் முரசொலியைத் துண்டறிக்கையாக நான் வெளியிட்ட அந்தக் கால கட்டத்தில் அதனுடைய ஆண்டு விழா திருவாரூரில் நடத்தப்பட்டது. அந்த ஆண்டு விழாவிற்குப் பேராசிரியர் அவர்களும், நாவலர் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். இருவரும் அந்த ஆண்டு விழாவிலே ஆற்றிய உரை இன்னும் என்னுடைய செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கின்றது.
பேராசிரியர் அவர்களையும், நாவலர் அவர்களையும் அந்த ஆண்டு விழாவிற்கு அழைத்து விட்டு, ‘ராஜரத்தினம் படிப்பகம்’ என்ற ஒரு படிப்பகத்தில் அவர்களைத் தங்க வைத்து மாலையிலே கூட்டம் நடத்தி, மறுபடியும் அவர்களைச் சிதம்பரத்திற்குத்தான் அனுப்ப வேண்டும் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர்கள் பயின்று கொண்டிருந்த காலகட்டம். அங்கு தான் அனுப்ப வேண்டும். அனுப்புவதற்குக் கூட பேருந்து வரத்துக்கான செலவுக்குக் கொடுப்பதற்குப் பணம் இல்லாமல் திண்டாடினோம்.
என்னுடைய வீட்டில் இருந்த ஒரு நகையை நானே திருடி, அதை அடமானம்
வைத்து, சொற்பொழிவாளர்களை வழியனுப்பி வைத்த நிகழ்ச்சிகள் எல்லாம் பொது வாழ்க்கையிலே ஈடுபட்டவன் சந்திக்க வேண்டிய சிரமங்கள் என்பதற்காகத்தான் அதை குறிப்பிடுகின்றேன்.
அன்று பேராசிரியரும், நாவலர் நெடுஞ்செழியனும் அந்த விழாவிலே கலந்து கொள்வதற்காக முதல் நாளே வந்து விட்டார்கள். அப்பொழுது இரயிலடியில் அவர்கள், “எங்களை அழைத்த கருணாநிதி எங்கே?” என்று கேட்கிறார்கள். நானும் தேடுகிறேன், “அன்பழகன் எங்கே? நெடுஞ்செழியன் எங்கே?”
என்று. அப்படி அறிமுகம் இல்லாமலே, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமலே நாங்கள் அழைக்க அவர்கள் வந்தார்கள் என்றால், எங்களை விட முந்திக் கொண்டு அறிமுகமானது; பெரியாரின் கொள்கை - அண்ணாவின் கொள்கை! அது எங்களை அறிமுகப்படுத்தி வைத்தது! (பலத்த கைத்தட்டல்)
இன்றைக்கு இந்தக் கால கட்டத்தில் அந்தக் கொள்கைகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ, என்ற அச்சத்தோடு இந்த மாமன்றத்திலே நாம் இனிய விழா நடத்திக் கொண்டிருந்தாலும், இதயம் துணுக்குறுகிற நிலையிலே நின்று கொண்டிருக்கிறோம், அமர்ந்திருக்கின்றோம் என்பதை மறந்து விடக் கூடாது.
1944-ஆம் ஆண்டு நான் குடியரசு அலுவலகத்திலே தந்தை பெரியாருடைய அரவணைப்பில் ஓராண்டு காலம் இருந்தேன். 44-45-ஆம் ஆண்டுகளில் அப்படி இருந்தபொழுது எனக்குத் துணை ஆசிரியர் பொறுப்புக்குத் தரப்பட்ட மாத ஊதியம் 40 ரூபாய். சாதாரணமாகக் கருதக்கூடாது. அந்தக் காலத்தில் 40 ரூபாய் என்றால் இந்தக் காலத்தில் உள்ள 400 ரூபாய்க்குச் சமம்.
நான் ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால் அதற்கு முன்பு அந்த அலுவலகத்தில் விடுதலை அலுவலகத்திலே ஆசிரியராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு 50 ரூபாய் சம்பளம். எனக்கு 40 ரூபாய் சம்பளம். அங்கே ஓராண்டு காலம் பணியாற்றினேன். அதற்கு பின்னர்தான் ஏ.எஸ்.ஏ. சாமி அவர்களுடைய அழைப்பு எனக்கு வந்தது.
திருச்சியிலே வானொலி நிலையத்திலே பணியாற்றிக் கொண்டிருந்த தபேலா முத்துக்கிருஷ்ணன் என்று ஒருவர் இங்கே வீற்றிருக்கிற ஆர்.எம்.வீ. அவர்களுக்கும், எஸ்.எஸ்.ஆர். அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அவர்தான் ஏ.எஸ்.ஏ. சாமி அவர்கள் அழைப்பதாக ஈரோட்டுக்கு வந்து என்னை அழைத்தார். பெரியாரிடத்திலே அனுமதி பெற்று ஈரோடு சுப்பையனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கோவைக்குச் சென்றேன். கோவையிலே ஏ.எஸ்.ஏ. சாமி அவர்களைச் சந்தித்தேன்.
அப்பொழுது அவர் 30 அல்லது 35 வயதுகூட நிரம்பப் பெறாத வாலிபர். நான் அவரை விட ஒரு ஒன்பது வயது இளையவன். வசனம் எழுத வேண்டும், தான் இயக்குகின்ற படங்களுக்கு என்று சொன்னார். ராஜகுமாரி படம் அப்போது இயக்குவதாக இருந்தது. அன்றைக்குத்தான் எனக்கும் என்னுடைய - அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் அந்தப் படத்திலே தான் முதல் அறிமுகமே. அந்தப் படத்திலேதான் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்தார்.
இன்னமும் உங்களில் சில பேருக்கு, பெரியவர்களுக்கு நினைவிருக்கலாம். அதிலே எம்.ஜி.ஆர். வாள் சண்டை போடுவதற்காக ஒரு மேடையில் குதித்து வரும்பொழுது, திரைப்பட அரங்கம் முழுதும் அதிரும். அந்த அளவிற்குக் கையொலி எழும். காரணம், எம்.ஜி.ஆர். அவர்கள் அப்படி அறிமுகமாகிற நேரத்தில் கறுப்பு உடை தரித்துக்
கொண்டு அறிமுகமாவார். கறுப்பு உடையை திரைப் படத்திலே காண்பதே கூட அன்றைக்கு நம்முடைய கழகத்தினருக்கு, இயக்கத்தினருக்கு அவ்வளவு மகிழ்ச்சியைத் தந்த ஒரு நிகழ்ச்சியாக அன்றைக்கு இருந்தது.
