உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

மொழிமானம் பெறுவோம்

பகுதி 2 · 2 / 2

தமிழைப் படிப்பது தேவை - அதைவிடத் தமிழில் படிப்பது மிக மிகத் தேவை. அது தமிழ்நாட்டின் எல்லா வகையான எதிர்கால வளர்ச்சிக்கும் தேவை.

ஆங்கிலத்தை - மற்ற மொழிகளை - அறவே புறக்கணித்து விடவேண்டுமா என்று சொன்னால் - இங்கே மாத்திரம் ஆங்கிலத்தைப் படிப்பது அல்லது

இந்தியைப் படிப்பது அல்லது தெலுங்கைப் படிப்பது அல்லது வங்கமொழியைப் படிப்பது என்று வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே மாத்திரம் தமிழைப் படிப்பது - தமிழ்ப் படிப்புதான் என்று ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் எடுத்துக் கொண்டிருக்கிற இந்த முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறக்கூடும்.

600 நூல்கள் வெளியிட்டிருப்பதில் எனக்கும் நம் கல்வியமைச்சருக்கும் உள்ளபடியே ஒரு பெருமகிழ்ச்சி. முன்பெல்லாம் நாங்கள் வேதனைப்படுவதுண்டு. முன்பு வெளியிடப்பட்ட நூல்கள் பெரும்பாலும் மொழி பெயர்ப்பு நூல்களாகவே அமைந்துள்ளன. மூலநூல் ஆசிரியர் ஒருவராகவும், அதை மொழி பெயர்ப்பவர் இன்னொருவராகவும் இருப்பதால் மூலநூலில் இருக்கின்ற சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களைப் புரிந்து கொள்வதற்கு நாம் அதற்கான அகராதிகளைக் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு - இப்படிப்பட்ட மொழி பெயர்ப்புக்களாக அமைந்து விடுகின்றனவே என்று வருந்தியதுண்டு.

பெரும்பாலான நூல்கள் - கூடுமான வரையில் எல்லா நூல்களுமேகூட மூல ஆசிரியரால் தமிழில் எழுதப்பட்டு, நமக்குக் கிடைக்க வேண்டும் என்பது நம் ஆசை. அந்த ஆசை மகிழத்தக்க அளவுக்கு இன்று நிறைவேறியிருக்கிறது.

இந்த 600 நூல்களில் 150 நூல்கள்தான் மொழி பெயர்ப்பு நூல்கள் என்பதும், 450 நூல்கள் மூல ஆசிரியர்களால் தமிழிலேயே எழுதப்பட்டிருக்கின்றன என்பதும் பெருமைக்குரியதாகும்.

600 நூல்கள் வெளியிட்டோம்; இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவிட்டோம் என்ற அந்தப் பெருமை மாத்திரம் போதாது. இங்கே பேசியவர்கள் தெரிவித்த கவலையைக் கேள்விப்பட்ட நான், தமிழ்நாட்டு மக்கள் - மாணவர்கள் - வாங்குவதில்லையா என்று கேட்டேன்.

“வாங்குகிறார்கள் - ஆனால் அவர்கள் இந்த நூலை வாங்குவதில்லை - இதற்கான புதிய புதிய நோட்டுக்களை, வாங்கிக் கொள்கிறார்கள்” என்று சொன்னார்கள்.

நான் இந்த விழாவின் மூலமாகத் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டிருக்கிற மாணவச் செல்வங்களுக்கு எல்லாம் வேண்டுகோள் விடுக்கின்றேன். வேறு நாடுகளில் மொழி மானம் இருக்கின்ற காரணத்தினால் - மான உணர்வோடு வாழ வேண்டும் என்று எண்ணுகின்ற காரணத்தினால் - அந்த மொழியை வளர்ப்பதிலே அக்கறை கொண்டிருக்கிறார்கள். நாம் மொழி மானம் அற்றவர்களாக இருக்கின்றோம் என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாம் மொழி மானத்தைப் பெற்றாக வேண்டும்!

புகுமுக வகுப்பில் பயிலும் மாணவர்கள் இவற்றை வாங்குவதை ஊக்கப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் சார்பில் 50 ரூபாய் வேறு தருகிறோம், இந்த ஐம்பது ரூபாயையும் வாங்கிக் கொண்டு அவர்கள் ‘நோட்’கள் வாங்குகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டுமா? வேண்டாமா? நம் மாணவ நண்பர்கள் - தமிழில் எல்லாம் நடைபெற வேண்டும் என்று எண்ணுகிறவர்கள் - சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று மிகுந்த பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நாவலர் அவர்கள் பேசும்போது ஓர் அச்சத்தைத் தெரிவித்தார்கள். இந்தியாவில் இந்தியைப் பரப்புவதற்காக 22 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறது என்றும், அதைத் தவிர ஒவ்வொரு மொழியையும் வளர்ப்பது என்கிற பாவனையில் தமிழ் மொழிக்கு ஒரு கோடி ரூபாய் என்றும் ஒதுக்கி, நான்கு மாநிலங்களில் பேசப்படுகிற இந்தி மொழியை 4 மாநிலங்களுக்கும் தனித் தனியாகப் பிரித்து, அதற்கு நான்கு கோடி தந்து இப்படி ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் இந்தி மொழியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாவலர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

இந்தியாவில் இன்றைக்கு ஒரே ஒரு மொழி இந்தி மொழிதான் என்றும் - ஒரே ஒரு வளரவேண்டிய மாநிலம் உத்திரப்பிரதேசம்தான் என்றும் ஓர் எண்ணம், மத்தியில் இருப்பவர்களுக்கு உருவாகியிருப்பதை, அரசியல் கண்ணோட்டத்தோடு அல்ல - இந்திய நாட்டின் எதிர்காலக் கண்ணோட்டத்தோடு - குறுகிய மனப்பான்மை, சுயநலம் என்று எடுத்துக் கொண்டால் கூடக் கவலையில்லை - நம்முடைய தமிழ்நாடு, தமிழ் மொழி ஆகியவற்றின் வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தோடு - பார்த்துத்தான் தீரவேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு மகிழ்ச்சியான செய்தி மத்திய அரசிடமிருந்து வெளியிடப்பட்டது.

புதுவையில் அரசு இருந்த வரையில் புதுவை அரசின் சார்பாகப் புதுவைக்கு ஒரு பல்கலைக் கழகம் வேண்டுமென்று கோரப்பட்டது. புதுவையின் அந்த வேண்டுகோள் நீண்ட நெடுங்காலமாக ஊறுகாய்ப் பானையில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. புதுவையில் குடியரசுத் தலைவரின் ஆட்சி உருவாக்கப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புதுவையில் ஒரு பல்கலைக் கழகம் வரும் என்றும் அதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளது என்றும் செய்தி வந்திருக்கிறது.

புதுவைக்கு ஒரு பல்கலைக் கழகம் தேவை என்பதை நானும் உணர்கிறேன். அனைவருமே உணர்வார்கள். அதை வரவேற்கிறோம்.

ஆனால் இதுடன் சேர்ந்து ஓர் ஆபத்தும் வரும். அது தவிர்க்கப்பட வேண்டிய சூழ்நிலையில்தான் புதுவைக்குப் பல்கலைக் கழகம் வரவேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் புதுவை மாநிலத்தில் வாழ்பவர்கள் தமிழர்கள் என்கிற அந்த நிலையில் அதை நான் தெரிவிக்க வேண்டியவனாக இருக்கிறேன்.

புதுவை மாநிலம் மாநில அந்தஸ்துப் பெற்ற பகுதியல்ல. புதுவை - மத்திய அரசின் நேரடித் தொடர்பு

கொண்ட இடம். பாரதிதாசன் குடும்பத்திற்கு மாதம் 250 ரூபாய் உதவி அளிக்க வேண்டுமென்று புதுவை அரசு கருதிய நேரத்தில்கூட, அதற்கான அனுமதியை மத்திய சர்க்காரிடமிருந்துதான் அவர்கள் பெற வேண்டியிருந்தது. ஆகவே மத்திய அரசின் நேரடித் தொடர்பு இருக்கிற ஒரு மாநிலத்தில் மத்திய அரசின் கல்வி இலாகாவின் நேரடித் தொடர்பினால்தான் இந்தப் பல்கலைக்கழகம் அமையும். அப்படி அமைகிற நேரத்தில், மத்திய அரசின் கல்வி இலாகா நேரடித் தொடர்பின் விளைவாக இந்தி பாடமொழியாக நிச்சயமாய் வரும்.

புதுவைக்குப் பல்கலைக் கழகம் தேவைதான். ஆனால், இந்திப் பாடமொழியாக அமைக்கப்பட மாட்டாது என்ற உறுதிவாதத்தோடுதான் புதுவைக்குப் பல்கலைக் கழகம் வர வேண்டும். இல்லாவிட்டால் நாமே ஆபத்தை வாங்கி அடிமடியில் கட்டிக் கொண்டதைப் போல் தமிழகத்தைச் சுற்றியிருக்கிற பகுதியில், தமிழகத்தின் ஓரத்தில் இருக்கிற பகுதியில், இந்தியைக்கொண்டு வந்து உட்கார வைப்பது - பல இடங்களில் தாங்கள் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டுமென்று எதிரிகள் கருதுகிற நாட்டிற்கு அருகில் தங்களுக்கு இராணுவ தளம் வேண்டுமென்று கருதுகிறார்களே அதைப்போல இந்தி ஆதிக்கப் படையெடுப்புக்குப் புதுவை மாநிலம் இராணுவ தளமாக ஆகிவிடக்கூடும்.

அது கூடாது, என்பதுதான் நமது ஆழமான கருத்தாகும்.

புதுவைக்குப் பல்கலைக் கழகம் வேண்டும்; அங்கே இந்தி பாடமொழியாக வைக்கப்பட மாட்டாது என்ற உறுதியோடு அதனை நிறுவ வேண்டும். அதற்கு ஒரேயொரு வழி, புதுவை, மாநில அந்தஸ்துப் பெறுவது தான். புதுவை, மாநில அந்தஸ்தைப் பெற்று விடுமேயானால் இந்தத் திணிப்பைத் தடுக்க வழி ஏற்படும். ஆகவே இவைகளையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொண்டு மத்திய அரசு புதுவையிலே பல்கலைக் கழகம் அமைப்பதில் மிகுந்த நிதானத்தோடும், எச்சரிக்கை

யோடும் நடந்து கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு 1938-ம் ஆண்டையும் 1965-ஆம் ஆண்டையும் நான் மீண்டும் ஞாபகப்படுத்துவதற்குத் தேவையில்லை என்றே கருதுகிறேன். ஆகவே தமிழர்கள் பிறமொழி ஆதிக்கத்தால் பட்டபாடு போதும் என்றும், மேலும் மேலும் ஆதிக்கங்களை அவர்கள் தாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை என்றும் எடுத்துக் கூறுவது தமிழனுடைய தலையாய கடமை என்ற முறையில் இங்கே இதனை எடுத்துக் கூறி முடித்துக் கொள்கிறேன்.

1974-ஆம் ஆண்டு சனவரி 16-ஆம் நாள் கல்லூரிப் பாடநூல்கள் வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய உரை.

முதற் பதிப்பு : மே 2000