உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

மொழிமானம் பெறுவோம்

பகுதி 1 · 1 / 2

மொழிமானம் பெறுவோம்

இன்று கல்லூரிப் பாடநூல்களை வெளியிடும் இனிய விழா. பொங்கல் திருநாளைத் தொடர்ந்து இன்றைய தினம் திருவள்ளுவர் திருநாளில் இது அமைந்திருக்கிறது. இதன் சிறப்புக் குறித்து விழாத் தலைமை ஏற்றிருக்கின்ற கல்வியமைச்சர் நாவலர் அவர்களும் மற்றவர்களும் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.

எனக்கு இருக்கின்ற வியப்பெல்லாம் தமிழ்ப் பாடநூல்களை வெளியிடுவதற்காக ஒரு விழா நடத்துவதும், அந்த விழாவில் “தமிழ்ப்பாட நூல்களை வாங்குங்கள்!” என்று கேட்டுக் கொள்வதும், தமிழ்நாட்டிலேயே நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறதே என்பதுதான்!

இது திருவள்ளுவர் நாளில் நடைபெறுவது சிறப்புக் குரியது என்றெல்லாம் சொன்னாலும், இந்த நாளிலும் தமிழில் எழுதப்பட்டுள்ள பாடநூல்களை அறிமுகப்படுத்தி வெளியிட்டு, இதை வாங்குங்கள் என்று கேட்டுக் கொள்கிற சூழ்நிலையில்தான் தமிழகம் இருக்கிறது! அந்தக் காரணத்தினால்தான் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் பேரறிஞர் அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தாம் ஆற்றிய பேருரைக்கு ‘ஏ! தாழ்ந்த தமிழகமே!’

என்று தலைப்புக் கொடுத்தார்கள்.

தாழ்ந்த தமிழகமாக இருக்கின்ற காரணத்தினால்தான் இன்று தமிழ்ப் பாட நூல்களை வாங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிற நிலை, மாதம்

இத்தனை புத்தகங்களாவது வாங்குங்கள் என்று கேட்டுக் கொள்கிற நிலை! ‘மாதந்தோறும் வாங்காவிட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் நாளிலாவது ஒரு முப்பது ரூபாய் இதற்காக ஒதுக்குங்கள்!’ என்று சொல்கின்ற அவலம்! ஆகிய இவைகளெல்லாம் இன்னும் தமிழ்நாட்டிலே இருக்கின்ற நிலைமை! இந்த நிலை நீடிக்கலாமா என்பதை இந்த ஒரு நாளிலாவது நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்கேற்ப நாம் நம்முடைய நடைமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற மாமன்றங்களிலே கூடுவதும், எழுச்சியும் ஏற்றமும் விளக்கமும் பொருந்திய விரிவுரைகளை ஆற்றுவதும், எதிரே அமர்ந்திருப்போர் மகிழ்வதும் குதூகலிப்பதும் கையொலி செய்வதும், அவைகளோடு விழாக்கள் முடிந்து விடுவதும் ஆகிய பணிகள் மாத்திரம், தமிழுக்குத் தமிழர்களுக்கு ஆற்றுகின்ற தொண்டாகி விடாது.

மேடையில் அமர்ந்திருப்பவர்களை மட்டுமன்றி, எதிரிலே அமர்ந்திருக்கின்ற அத்துணைப் பேரையும் நான் கேட்டுக் கொள்வேன்; இந்த விழாவில் எடுத்துச் சொல்லப்பட்ட கருத்துக்கள் ஏடுகளில் வருகின்றபோது அவற்றைப் படித்துப் பார்க்கின்றவர்கள் பலர் இருப்பர் அவர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வேன்; தமிழை வளர்க்க - தமிழைக் காக்க - உண்மைகள் எல்லாவற்றையும் கற்றத் தமிழர்கள் முன்வர வேண்டும். இந்தக் கருத்தினை செயல்படுத்துவதற்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும்!

தமிழ்ப் பாடநூல் நிறுவனம், 1969-ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. தொடக்கத்தில் மூன்றாண்டுக் காலத்தில் 35 நூல்களையும், அதற்கடுத்து 1969 முதல் 70 வரை 231 நூல்களையும், 1970 முதல் 73 வரை 334

நூல்களையும், இன்றைக்கு வெளியிடுகின்ற 166 நூல்களையும், உள்ளடக்கி அறுநூறு நூல்களை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.

கல்லூரி நூல்கள் அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்கிற கருத்துக்கு ஏற்ப, இந்தியாவின் வேறு மாநிலங்களை ஒப்பிடும்போது, குஜராத் மாநிலம் 104 நூல்களை வெளியிட்டிருக்கிறது. கர்நாடகம் 160 நூல்களை வெளியிட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசம் 77 நூல்களை வெளியிட்டிருக்கிறது. ஆந்திரம் 135 நூல்களை வெளியிட்டிருக்கிறது. மற்ற மாநிலங்கள் குறைவான நூல்களைத்தான் வெளியிட்டிருக்கின்றன.

நாம் அறுநூறு நூல்களை வெளியிட்டிருக்கிறோம். இது பெருமைப்படத்தக்க ஒன்று.

ஆனால் இதே புள்ளி விவரத்தை நாம் கொஞ்சம் நீட்டிப் பார்த்தால் ஆந்திராவிலே 135 நூல்கள் வெளியிட்டாலும் சென்ற ஆண்டு மாத்திரம் 76 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இரண்டு இலட்ச ரூபாய்க்குத்தான் விற்பனையாகியிருக்கிறது என்று இங்கு இயக்குநர் அவர்கள் குறிப்பிட்டு வருத்தப்பட்டார்கள். எனக்குள்ள ஆறுதல் அந்த அளவுக்காவது விற்றதே என்பதுதான். விற்கவில்லை என்று வருந்துகிற நேரத்தில், பலரும் வாங்கவில்லையே என்று வேதனைப்படுகிற அதே நேரத்தில், இதை வாங்கத் தேவையில்லை என்று சொல்கிற ஒரு கூட்டமும் தமிழ்நாட்டிலே இருக்கிறது; அதை யாரும் மறந்து விடக்கூடாது!

இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது; விற்கவில்லை என்பதும் - வாங்கவில்லை என்பதும் எதனால் ஏற்படுகிறது என்றால், அதை வாங்கத் தேவையில்லை என்று செய்கிற பிரச்சாரத்தால்தான் - என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அந்தப் பிரச்சாரம் பகிரங்கமாக நடைபெறுகிறதா - மேடை போட்டு

நடைபெறுகிறதா - பல்லாயிரக்கணக்கான மக்களைக் கூட்டி வைத்து நடைபெறுகிறதா - கடற்கரைப் பெருவெளியிலா - பசும்புல் தரையிலா - மண்டபத்திலா - மன்றங்களிலா என்றால் இல்லை! அந்தப் பிரச்சாரம் எப்படி நடைபெறுகிறது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை; நீங்களே புரிந்து கொள்வீர்கள். ஆகவே அதை நாம் முடக்கிட வேண்டும். அதை நாம் வெற்றி காண வேண்டும்.

அந்த வெற்றியில்தான் தமிழின் வளர்ச்சி, தமிழர்களின் வளர்ச்சி நிச்சயமாக ஏற்படும்.

அது மாத்திரமல்ல; தமிழைப் படிப்பது என்பது வேறு, தமிழில் படிப்பது என்பது வேறு! இந்த இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழைப் படிப்பது என்பது இலக்கியங்களைச் சங்க கால இலக்கியங்களைக் - காவியங்களைக் - கவிதைகளைக் - புறநானூறு, அகநானூறு போன்ற நம் பழங்காலப் பனுவல்களைப் படிப்பது! தமிழைப் படிப்பது தேவை!

தமிழில் படிப்பது என்பது வரலாறு படிப்பது, நிலநூல் படிப்பது, பொருளியல் படிப்பது, பல துறைகளையும் படிப்பது - இவைகளையெல்லாம் தமிழில் படிப்பது. ஆகவே தமிழில் படிப்பது என்பதற்கும் - தமிழைப் படிப்பது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

முதற் பதிப்பு : மே 2000