உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

மனப்புரட்சி தேவை

பகுதி 2 · 2 / 2

ஆனால் சில சட்டங்கள் பெரும்பான்மையோர் அபிப்ராயத்தை அறிந்துதான் செய்ய வேண்டுமா என்றால் - அதற்காக மனத்தைப் பக்குவப்படுத்தித்தான் செய்ய வேண்டுமா என்றால் - இல்லை - இயல்பாகவே சில கருத்துக்கள் நாட்டிலே - பெரும்பாலும் பெரும்பான்மையோர் உள்ளத்திலே, உலகத்திலே உள்ள சமுதாயத்திலே ஏற்படுகின்றன.

திருடுதல் கூடாது - இதை உலகமெல்லாம் பிரச்சாரம் செய்து பெரும்பான்மையோர் ஏற்றுக் கொண்ட பிறகுதான் சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற அவசியமில்லை. அதைப் போலவே கொலை செய்தல் கூடாது என்பதைப் பெரும்பான்மையோரிடத்திலே பிரச்சாரம் செய்து அவர்கள் ஏற்றுக் கொண்ட பிறகுதான் அச்சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்றில்லை.

இயல்பாகவே ஒரு சாதாரண ஆறு வயது, ஏழு வயதுக் குழந்தையினிடத்தில் தமக்கு எதிரே ஒரு இம்சை

நிகழுமேயானால் - ஐயோ அவர்களை இம்சிக்கிறார்களே என்கிற எண்ணம் எந்த மனமாற்றத்தையும் சமுதாயத்திலே உருவாக்காத நேரத்திலேயே - அக்குழந்தைக்கு ஏற்படுகிறது என்றால் - தெரிந்தும் தெரியாமலும் - யாரும் விளங்க வைக்காமலும் அந்தக் குழந்தையினுடைய உள்ளத்திலே நல்ல நோக்கம் சட்ட வடிவத்திலேயே இளமையிலேயே பதிந்திருக்கிறது என்று பொருள்.

அதைப் போலத்தான் கொலை - கொள்ளை - களவு இப்படிப்பட்ட தீய காரியங்களைப் பெரும்பான்மையான மக்கள் வெறுக்கிறார்கள் - அப்படி வெறுக்கிற நேரத்திலே - அவர்களையெல்லாம் கேட்டறிந்துதான் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றில்லாமல் இயல்பாகச் சட்டங்கள் வருகின்றன.

இப்படி இயல்பாகச் சட்டங்கள் எழுவது உண்டு. மக்களுடைய மனம் மாற்றப்பட்டு அந்த மாற்றத்துக்கு முத்திரை குத்துவது போலச் சட்டங்கள் இயற்றப்படுவதும் உண்டு.

இன்றைக்குத் தமிழிலே அர்ச்சனை செய்ய வேண்டும் என்கிற நிலைமை உருவாகி இருக்கிற தென்றால், இதையே பதினைந்தாண்டுகளுக்கு முன்பு பிரச்சாரமாக தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று - தேவாரம் - திருவாசகத்தைப் படித்திருப்பவர்கள் கோரிக்கை வைத்தார்கள். அவர்களது உள்ளத்திலே இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று - அதை இழிவுபடுத்தவில்லை.

புதிய வைதீகை இன்றைக்கு அவர்களே வந்து அர்ச்சனையை ஆரம்பித்து வைக்கின்ற நிலைமையை உருவாக்கிய பிறகுதான், தமிழ் அர்ச்சனை எல்லா ஆலயங்களிலும் நடைபெற வேண்டும் என்று நம்மால் சொல்லப்படுகிறது.

சுயமரியாதைத் திருமணங்கள் இன்றைக்குச் சட்ட

சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகாமல் இருந்த அந்தக் காலத்திலேயே அதைப் பற்றிக் கவலைப்படாமல் பெரியார் அவர்களது அறிவொளிப் பிரச்சாரத்தால், அண்ணா அவர்களது பகுத்தறிவுப் பிரச்சாரத்தினால் சட்டமிருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி, என்று நாட்டிலே பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன.

இப்போது வந்த சட்டம் ஏற்கனவே செய்து கொண்ட சுயமரியாதைத் திருமணம்கூடச் செல்லுபடியாகும் என்று வந்த காரணத்தினால் சில பல இடங்களில் கோளாறு இருந்தாலும் அவர்களையெல்லாம் கட்டுப்படுத்துகிற அளவுக்கு இன்றைக்கு அந்தச் சட்டம் பயன்பட்டிருக்கிறது.

ஆகவே மனப்புரட்சியும் சட்டமும் தேவை. ‘சட்டம் ஒரு இருட்டறை; வக்கீலின் வாதம் ஒரு விளக்கு’ என்று அண்ணாவே சொல்லிவிட்டார். ஆகவே சட்டம் தேவையில்லை என்று மனப்புரட்சிக்காக வாதாடிய நண்பர்கள் எல்லாம் சொன்னார்கள்.

அண்ணா சொன்னது உண்மைதான். இங்கே வாதாடியவர்கள் அது ஏழைகளுக்கு எளிதிலே கிடைத்து விடுவதில்லை என்று வாதாடினார்கள். அதுவரை கூட நான் அழைக்க விரும்பவில்லை.

சட்டம் ஒரு இருட்டறை - வக்கீலின் வாதம் ஒரு விளக்கு என்பதோடு அண்ணா நிறுத்திக் கொண்டால் மனப்புரட்சிக்காரர்கள் சொன்னதைப்போல் ஏதோ அண்ணா சட்டத்தை இழித்துரைத்துச் சொன்னதாக நான் ஏற்றுக் கொள்ள முடியாது.

சட்டம் ஒரு இருட்டறை என்று அண்ணா சொன்னாரென்றால் - ஒரு அறை என்பதை அவர் எடுத்துக் கொண்டிருக்கிறார் - அது இருட்டாயிருக்கிறது. அங்கு விளக்கு தேவை என்பதை அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார். அந்த விளக்கு வக்கீலின் வாதத்தால்

ஏற்படுகின்ற விளக்கு என்று அண்ணா ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நாம் வக்கீலின் வாதத்தை மக்களின் மனப்புரட்சி என்று வைத்துக் கொள்வோம். சட்டம், அறை என்று வைத்துக் கொள்வோம். அதில் மனப்புரட்சி உள்ளே நுழையாத காரணத்தால் இருள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். சட்டத்திற்குள் மனப்புரட்சி நுழைகிறது - இருள் விலகுகிறது - ஒளி பிறக்கிறது - என்று அண்ணா அவர்கள் இரு சாராருக்கும் சேர்த்துத்தான் எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறாரே அல்லாமல் சட்டம் இருட்டறை என்று அதை இழிவுபடுத்தவில்லை.

சட்டம், மனப்புரட்சியைப் போலவே, மாறுகின்ற நிலைமைகளை உடையதுதான். மனம் எப்படிக் காலத்துக்கேற்றவாறு சட்டத்தையும் மாற்றுகின்ற நிலைமை கொண்டிருக்கிறதோ அதற்கேற்றவாறு சட்டத்தையும் மாற்றுகின்ற நிலைமையும் - அதற்கேற்ப மாற்றிக் கொண்டிருக்கிற நிலைமையும் சட்டத்துக்கு இருக்கிறது.

அந்த நிலைமையிலேதான் - மனப் புரட்சியின் அடிப்படையிலேதான் - சட்டம் உருவாகிறது. மனப் புரட்சி சட்டத்தை உருவாக்குகிறது. சட்டம் சமுதாய மாற்றத்தை உறுதிப்படுத்துகிறது என்று என் தீர்ப்பை அளிக்க விரும்புகிறேன். மனப்புரட்சி இல்லாவிட்டால் சட்டம் உருவாவதில்லை. ஆனால் சட்டம் உருவான பிறகுதான் சமுதாய மாற்றம் உறுதிப்படுத்தப்படுகிறது. இதை இரு கட்சியினரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இருவரிடையே எத்தனை மோதல்கள் நடந்தாலும் அவர்கள் ஒருமித்த கருத்திலேதான் பேசினார்கள்.

ஒரே இடத்தை நோக்கித்தான் சென்றார்கள்.

இருவரும் சமுதாயத்திலே பெரும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று விரும்பினார்கள். இந்தச் சமுதாய மாற்றத்தை மனப்புரட்சி மூலம் மெல்ல மெல்ல வளர்த்துச் சட்டத்தின் மூலமாக நிலைநாட்ட வேண்டும்.

அந்தச் சட்டம்கூடப் பத்தாண்டுகளில் மாற்றப்படலாம். இன்றைக்கு நம் மனதிலே தோன்றும் எண்ணங்கள் பத்தாண்டு கழித்து மாற்றிக் கொள்ளத் தக்கனவாக இருக்கலாம். ஆகவே சமுதாய மாற்றத்திற்கு மனப்புரட்சி தேவை - அதனை நிலை நிறுத்தச் சட்டம் தேவை என்கிற தீர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1971-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் ராஜாஜி மண்டபத்தில் பட்டிமன்ற நடுவர் தீர்ப்புரை.

முதற் பதிப்பு : மே 2000