உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

மனப்புரட்சி தேவை

பகுதி 1 · 1 / 2

மனப்புரட்சி தேவை

சமுதாய மாற்றம் மனப்புரட்சியினால்தான் என்று ஓர் அணியினரும், சட்டத்தினால்தான் என்று பிறிதோர் அணியினரும் இங்கே கருத்துப் போர் நடத்தினர். அந்தப் போராட்டத்திற்கிடையே நமக்குப் பொதுவான பல விஷயங்கள் கிடைத்திருக்கின்றன. இதே நண்பர்களை நாளைய தினம் வேறோர் ஊரிலே பட்டிமன்றம் அமைத்து இந்தப் பக்கத்திலே உள்ளவர்களை மனப்புரட்சி என்கிற தலைப்பிலே பேசச் சொல்லி, அந்தப் பகுதியிலே உள்ளவர்களைச் சட்டத்தினால்தான் என்கிற தலைப்பிலே பேசச் சொன்னால், இதே வேகத்தோடு இதே போன்ற ஆதாரங்களையும் தந்து ஒருவரையொருவர் எதிர்ப்பார்கள்.

வேறு ஊரில் என்ன; இதே ஊரில் - இதே மண்டபத்தில் - ஏற்பாடு செய்தால் கூட பேசுவதற்கான திறமை படைத்தவர்கள் தாம் அவர்கள்.

நான் கூடக் கேள்விப்பட்டேன் மனப்புரட்சியினால்தான் என்கிற தலைப்புக்குத் தலைவராக முதலில் நியமிக்கப்பட்டவர் நண்பர் வீரமணிதான் என்று. அதற்குப் பிறகுதான் அதன் தலைவராகக் கந்தப்பன் அவர்கள் கிடைத்ததும் இவர் இந்தத் தலைப்புக்குத் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார் என்று கேள்விப்பட்டேன்.

ஆக்கப்பட்டதாகச் சொல்கிறார். அதுவே ஒரு மனப்புரட்சிதான்.

சட்டங்கள் எப்படி உருவாகின்றன - உருவாக்கப்பட்ட சட்டங்கள் எப்படிக் காப்பாற்றப்பட வேண்டும்

என்பவைகளெல்லாம் முக்கியமான விஷயங்களாகும்.

மனித சமுதாயம் தோன்றியபோது முதலிலே அவர்கள் சட்டத்தின் துணை கொண்டு வாழத் தொடங்கவில்லை. முதலில் அவர்கள் உயிர் வாழ்கின்ற ஜந்துக்களாக அல்லது பிராணிகளாக - விலங்கினங்களோடு வைத்து எண்ணத்தக்க ஜீவராசிகளாக மனித சமுதாயத்திலே உள்ளவர்கள் இருந்த காலத்தில் எந்தச் சட்டமும் அப்போது உருவாக்கப்படவில்லை.

மெல்ல மெல்ல வளர்ந்த நாகரிகம்தான் சட்டத்தை உருவாக்கியது. சட்டம் உண்டாக்கப்பட்டதற்குப் பின்னர் பல்வேறு மாறுதல்களை நூற்றாண்டுக்கு நூற்றாண்டு ஏன் - ஆண்டுக்கு ஆண்டு அடைந்து வருகின்ற நிலைமைகளை எல்லாம் நாம் கண்டு வருகின்றோம்.

சட்டம் தேவையா - மனப் புரட்சியினால் எழுகின்ற நிலைமைகள் தேவையா - என்றால் - இரண்டும் தேவை என்கிற முடிவுக்குத்தான் நாம் அனைவரும் வந்தாக வேண்டும். ஆனால் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டு அந்தச் சட்டம் செயல்படுத்தப்படுகிற நேரத்தில் செயல்படுத்தப்படுகிற முறையால் ஏற்படுகிற விளைவுகளுக்கு எல்லாம் அஸ்திவாரமாக அமைவது மனப்புரட்சிதான் என்பதைச் சட்டத்தைப் பற்றிப் பேசியவர்கள் மறக்க மாட்டார்கள். அதே நேரத்தில் பலவாறாக ஓடித்த சுள்ளிகளையெல்லாம் ஒரு விறகுக் கட்டாகக் கட்டுவதற்குக் கயிறு பயன்படுத்துவதைப் போல் மனப்புரட்சியின் காரணமாக ஏற்பட்ட பல்வேறு கருத்துக்களையெல்லாம் - எப்படி விறகைக் கட்டாகக் கட்டுவதற்குக் கயிறு பயன்படுகிறதோ - அதைப் போலக் கட்டாக ஆக்குவதற்குச் சட்டம் பயன்படுகிறது என்பதை மனப்புரட்சிக்காக வாதிட்டவர்கள் மறக்க மாட்டார்கள்.

ஆலயப் பிரவேசத்திற்காகச் சட்டம் வந்ததென்றால் அதற்காக எத்தனை ஆண்டுக்காலம் மக்களிடையே மனமாற்றத்தை உருவாக்க வேண்டியிருந்தது.

ஆலயத்துக்குள்ளே நுழையக்கூடாது என்று மதம் தடுக்கிறது. வைதீகம் தடுக்கிறது. புராணம் தடுக்கிறது. என் சட்டம்கூடத் தடுக்கிறது என்ற நிலை இருந்தபோது, மக்களிடத்திலே - ஆலயத்துக்குள்ளே அனைவரும் செல்லலாம் - ஆண்டவன் முன், அனைவரும் செல்லலாம் - ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்கிற இந்தக் கருத்தை முதல் முதலாக எடுத்துரைத்தபோது; எடுத்துரைத்தவர்கள் எத்தனை அல்லல்களுக்கு ஆளானார்கள்? அப்படி ஆளான நேரத்தில் எதிர்ப்புக் காட்டியவர்கள் தொடுத்துக் காட்டிய காரணங்கள் என்னென்ன?

ஆலயத்துக்குள்ளே ஒரு தாழ்த்தப்பட்ட குடிமகன் செல்வானேயானால் - தீண்டத்தகாதவன் நுழைவானேயானால் - ஆண்டவன் ஆத்திரமடைவான் - ஊருக்குக் கொடுமை விளையும் - பாவம் சம்பவிக்கும் என்கிற வைதீகக் காரணங்கள் எடுத்துக் காட்டப்பட்டன.

இல்லையில்லை, ஆண்டவன் அனைவரையும் ஒன்றாகத்தான் காண்கிறான் என்று மக்களிடத்திலே எடுத்துச் சொல்லி - அதை மக்கள் ஒத்துக் கொண்டு - ஆதரவு பெரும்பான்மையான பிறகும் எதிர்ப்பு சிறுபான்மையான பிறகும்தான் பெரும்பான்மையோர் சார்பில் சட்டம் இயற்றப்பட்டு - சிறுபான்மையோர் அந்தச் சட்டத்திற்கு அடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இன்றைக்குக் குடும்பக் கட்டுப்பாடு என்று பேசுகிறோம். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறாதீர்கள் என்று அறிவுரை கூறுகிறோம். இதையேகூடச் சட்டமாக்கலாம் - நம் கையிலே சட்டமன்றம் இருக்கிற காரணத்தால்! அதிகாரம் இருக்கிற காரணத்தால் - இரண்டுக்குமேல் பெற்றால் தண்டிக்கப்படுவார்கள் என்று கூடச் சொல்லலாம்.

ஆனால், அதைச் சட்டமாக ஆக்க முடியவில்லை. காரணம்? - பிறப்பதைக் கட்டுப்படுத்தே ஒரு பாவம் - அது ஆண்டவனுக்கு விரோதமான ஒரு காரியம். நாமா

பெறுகிறோம்? ஆண்டவனல்லவா தருகிறான்! என்கிற அளவுக்கு மக்கள் மத்தியிலே ஒரு தவறான எண்ணம் இருந்து வருகிற காரணத்தினாலேதான், பல்லாண்டுக் காலமாகக் குழந்தை பெறுவது தவறல்ல - கருத்தடை செய்வது தவறல்ல என்று எடுத்துக் கூறிக் ‘காதலுக்கு வழி வகுத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்; இதிலென்ன குற்றம்’ என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடலைப் பாடிச் சுயமரியாதை இயக்கத்தின் சார்பாக - பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையின் சார்பாக - அறிஞர் அண்ணாவின் அறிவியக்கக் கருத்துக்களின் சார்பாக - நாட்டில் பிரச்சாரம் செய்து அரசின் சார்பாகவும் பிரச்சாரம் செய்து, பெருமளவில் இதனை மக்கள் ஒத்துக் கொள்கிற காலம் வந்த பிறகு, மக்களில் ஒரு பகுதியினர் அதனை மீறிச் செயல்படுவார்களேயானால் அப்போது சட்டம் வந்தால் அது மதிக்கப்படும்.

ஆகவே, எந்தச் சட்டம் உருவாவதாயிருந்தாலும் - எந்தச் சட்டம் உயிர் பெறுவதாயிருந்தாலும் - அந்தச் சட்டம் நிறைவேற்றப்படுகிற நேரத்திலே மக்களின் மனம் பெருவாரியாக அவ்வித மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் மறக்கக்கூடாது.

நில உச்சவரம்புச் சட்டம் 1958-ல் அரைகுறையாகக் கொண்டு வரப்பட்டது என்றாலும், இன்றைக்கு ஒரே அடியாக நிலத்துக்கு உச்சவரம்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில் அந்தச் சட்டத்தை செய்து முடித்துவிடவில்லை. எதிர்ப்பு நில உடைமையாளர்களிடம் இருந்து மாத்திரம் வரவில்லை. பகிர்ந்தளிக்கிற நேரத்திலே அதைப் பெற்றுக் கொள்கிறவர்களே, அவர்களேகூட எதிர்த்தார்கள். அதனால் பயன் அடைகின்றவர்கள் கூட அதனை எதிர்த்தார்கள்.

இவன் கஷ்டப்பட்டுப் பரம்பரை பரம்பரையாக பாடன் பூட்டன் காலத்திலிருந்து சேர்த்த சொத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டு, அதற்கு உச்சவரம்பு

கட்டி, பகிர்ந்தளிப்பதாகச் சொல்கிறார்களே - என்ன அக்கிரமம் என்று ஐம்பது ஏக்கருக்குச் சொந்தக்காரன் சொல்லியிருந்தால் நாம் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டோம்.

அவனிடத்திலே அடிமையாக வேலை செய்து கொண்டிருக்கிறானே அவன் சொன்னான். அவனுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு அவனது மனத்தை மெல்லாம் திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவனைத் திருத்தித்தான் அதற்கேற்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர முடிந்தது.

ஆகவே சட்டம் என்பது பெரும்பான்மையோர் மனம் திருத்தப்பட்ட பிறகு அமுல்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். அவசரப்பட்டு ஒரு சில நேரத்திலே திருத்திவிடுகிற காரணத்தால் அதனைச் செயல்படுத்துவதினால் அதற்கு எதிரான மாற்றங்கள் நாட்டிலே, சமுதாயத்திலே ஏற்படுவதைக் காண்கிறோம்.

முதற் பதிப்பு : மே 2000