உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

மதுரை வழக்கறிஞர் சங்க 125-ஆவது ஆண்டுவிழா

பகுதி 2 · 2 / 2

அதுமட்டுமல்ல; இந்த வழக்கறிஞர்கள் சங்கத்திலே இடம்பெற்றிருந்த பண்பாளர் தமிழவேள் பி.டி. ராஜன் அவர்கள், சென்னை மாகாணமாக தமிழ் நிலம் விளங்கியபோது நீதிக்கட்சி அரசில் அமைச்சராகத் திகழ்ந்தார். இப்படிப் பல அமைச்சர்களைத் தந்த பெருமைக்குரிய சங்கம் மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் என்பதை நான் மிகுந்த பூரிப்போடு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

பி.டி. ராஜன் அவர்களுடைய மைந்தர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் அவர்களும் இந்தச் சங்கத்திலே இடம் பெற்றவர். அவர் இன்று தமிழக சட்டப்பேரவையின் தலைவராக அமர்ந்திருக்கிறார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

நண்பர் மாதவன் இங்கே வழக்கறிஞர் சங்கத்திலே இருந்தவர் - தமிழக சட்ட அமைச்சராகக் கழக அரசிலே விளங்கினார்.

ஓ.பி. ராமன் - இங்கே வழக்கறிஞராக இடம் பெற்றிருந்தவர். கழக அரசில் மீன்துறை அமைச்சராக இடம் பெற்றிருந்தவர். தம்பி பொன் முத்துராமலிங்கம் இந்த வழக்கறிஞர் சங்கத்திலே இடம்பெற்றிருந்தவர் - கழக அரசில் உணவு அமைச்சராக, செய்தித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தவர்.

அவ்வாறு அ.தி.மு.க. அரசில் சத்தியமூர்த்தி அமைச்சராகப் பணியாற்றி உள்ளார். அவரும் இந்த வழக்கறிஞர் சங்கத்திலே இருந்தவர். சந்தோஷம் தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினராக மிகுந்த பொறுப்போடு பணியாற்றியவர். அதைப் போல பல வழக்கறிஞர்கள், பல அறிஞர் பெருமக்கள், பல தியாகிகள் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

இங்கே நம்முடைய நண்பர், மூத்த வழக்கறிஞர் வை. சங்கரன் அவர்கள் மரியாதைக்குரியவராக இங்கே அழைக்கப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது. அவர் மதுரை வைத்தியநாத ஐயருடைய மகன் என்பதும், மதுரை வைத்தியநாதன் அவர்கள் எந்த அளவுக்கு தியாகச் செம்மல் என்பதும், விடுதலைப் போராட்டத்திலே ஈடுபட்டவர் என்பதும், மதுரை ஆலயத்திலே தாழ்த்தப்பட்ட மக்களை தான் தலைமையேற்று ஆலயப் பிரவேசம் செய்த அற்புதத்தை அந்தக் காலத்திலேயே நிகழ்த்திக் காட்டியவர் என்பதையும் நீங்களெல்லாம் மிக நன்றாக அறிவீர்கள்.

அப்படிப்பட்ட பெருமக்களைக் கொண்டதுதான் இந்த வழக்கறிஞர் பேரவை. அதனுடைய 125-ஆவது ஆண்டு விழாவை சீரோடும் சிறப்போடும் நாம் இங்கே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

நீதிமன்றத்தைப் பற்றி இங்கே உருவாக வேண்டிய, உயர்நீதிமன்றத்தின் கிளையைப் பற்றி எல்லாம், நீங்கள் விரிவாக எடுத்துரைக்கிறீர்கள். இப்பொழுது மாத்திரமல்ல; நான் மதுரைக்கு வரும்போதெல்லாம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாகக் கேட்டிருக்கிறீர்கள். நிருபர்கள் மூலமாகக் கேட்டு அறிந்திருக்கிறீர்கள். சென்னைக்கே வந்து கேட்டிருக்கிறீர்கள். நாங்களும் ஆலடி அருணா குறிப்பிட்டதைப் போல அந்த முயற்சியிலே நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறோம்.

மதுரையைப் பொறுத்தவரையில் நீதிமன்றங்கள் தொடங்கி இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகிறது. 1803-ஆம் ஆண்டிலேயே மதுரையில் தமிழில் தீர்ப்புகள் வழங்கியன என்ற பெருமையையும் உடையவைகளாக ஒரு காலத்திலே திகழ்ந்திருக்கின்றன. தொடக்கத்திலே இங்கே பெரிய நீதிமன்றங்களே கூட சிறிய கட்டிடங்களிலேதான் இயங்கி இருக்கின்றன. அதற்குப் பின்னர் மதுரை நாயக்கர்களுக்கு அரண்மனையாகத் திகழ்ந்த திருமலை நாயக்கர் மகாலுக்கு அந்த நீதிமன்றங்கள் எல்லாம் மாற்றப்பட்டு, திருமலை நாயக்கர் மகாலிலே அந்த நீதிமன்றங்களெல்லாம் நடைபெற்றன.

1970-ஆம் ஆண்டு வரை மதுரை மாநகரத்தின் மத்தியிலே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள திருமலை நாயக்கர் மகாலில் நீதிமன்றங்கள் செயல்படுவது பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. சிக்கலுக்குரியதாக இருக்கிறது. எனவே தனித்தனியாக இவை இயங்க திருமலை நாயக்கர் மகாலிலுள்ள நீதிமன்றங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோதுதான் இவைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சிறந்த முறையிலே செயல்படுத்துவதற்காக முதன்முறையாக கழக அரசு, அறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, நான் பொறுப்பேற்ற கால கட்டத்தில், அண்ணா அவர்கள் காலத்திலே தொடங்கிய அந்த முயற்சியை மேலும், மேலும் பெரிதாக்கி, விரைவுபடுத்தி 1970-ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 16-ஆம் நாள் மதுரை நீதிமன்றங்களுக்குக் கட்டிடங்கள் கட்டப்பட்டு முடித்து அந்த நீதிமன்ற வளாகத்தை நான்தான் திறந்து வைத்தேன் (கைத்தட்டல்) என்பதை வரவேற்புரையில் கூட நம்முடைய நண்பர் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டினார்.

“நீதிமன்றத்தையே திறந்து வைத்தவன். அதனுடைய கிளையைத் திறந்து வைக்க வேண்டாமா?” என்று கேட்டார். நீங்கள் கையொலி எழுப்பி, “ஆமாம்” என்று

சொன்னீர்கள். திறந்து வைத்தேன். தொடர்ந்து இருந்தாலும், வந்து திறந்து வைப்பேன். (கைதட்டல்) தொடர்ந்து இல்லாவிட்டாலும் மீண்டும் வந்து திறந்து வைப்பேன் (பலத்த கைதட்டல்) என்ற உறுதியை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை ஒன்றை, அதாவது ஆயம் ஒன்றை நிறுவிட வேண்டும் என்று, ஜஸ்டிஸ் ஜஸ்வந்த் சிங் கமிஷன் பரிந்துரை செய்திருக்கிறது உங்களுக்கெல்லாம் தெரியும். 1972-ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்த அந்தக் காலகட்டத்தில் மதுரையில், அந்தப் பரிந்துரையை ஏற்று கிளை ஒன்றை நிறுவிட வேண்டும் என்று மத்திய அரசோடு வாதாடி, போராடி பல ஆண்டுகளுக்குப் பிறகு அதற்குரிய அனுமதியை நாங்கள் பெற்றிருக்கிறோம்.

அதையும் நீங்கள் அறிவீர்கள்.

தற்போது அந்த உயர்நீதிமன்றக் கிளை அமைக்கப்படுவதற்கு மதுரை மாவட்டத்தில் உலகநேரி கிராமத்தில் ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்குரிய நில எடுப்புப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. நில எடுப்பு சட்டப்பிரிவு 6-ன் கீழ் 6 அறிவிக்கைகள் 11-3-98 அன்று தமிழ்நாடு கெசட்டில், அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மே மாத இறுதிக்குள் அந்தப் பணிகளெல்லாம் முடியும் என்ற நம்பிக்கையை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நில எடுப்புச் செலவுக்காக 16-4-98 அன்று இரண்டு கோடியே 52 லட்சம் ரூபாய் அரசு அனுமதித்திருக்கிறது; ஆணையிட்டிருக்கின்றது (பலத்த கைதட்டல்) என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, இங்கே கிளை அமைக்கப்படும் என்று நானாகச் சொல்ல முடியாது. இப்போது யார் யாரோ சொல்ல வேண்டியதை, யார் யாரையோ சொல்கின்ற காலகட்டத்தில் (பலத்த

கைதட்டல்) இருக்கிறோம். ஏனென்றால் தலைமை நீதியரசர் லிபரான் அவர்கள் நிர்ணயித்து முடிவெடுத்து, அறிவிக்க வேண்டிய ஒன்று இது. அதை நானாகச் சொல்லிவிட முடியாது. அவர்தான் அதை அறிவிக்க வேண்டும்.

இப்போது இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று, அவசரமாக, விரைவாக அந்தக் கிளை இங்கே உருவாக வேண்டுமென்றால், ஏற்கனவே இருக்கின்ற பழைய கட்டிடத்தில் தற்காலிகமாக அந்தக் கிளையை உருவாக்கி அது நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே புதிய கட்டிடத்தை, புதிதாக வாங்கப்பட்டுள்ள இடத்தில் அமைத்து அங்கே உயர்நீதிமன்றக் கிளையை அமைத்திட முடியும். இந்த இரண்டு வழிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்தாக வேண்டும். அந்தப் பொறுப்பை நாம் எல்லோரும் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திலே வழங்குகிறோம்.

அவர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து உடனடியாக அதை செய்து தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

எனவே இந்தக் கோரிக்கையைப் பொறுத்த வரையில் இது என் கையில் இல்லை; ஆனால் நம் கையில் இருக்கிறது. அந்த ‘நம்’ என்பதில் நம்முடைய உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் லிபரான் அவர்கள் இருக்கிறார்கள். எனவே நம் கையில் இருக்கின்ற இந்தப் பிரச்சினையை விரைவிலே முடிப்பதற்கு நம்மால் ஆன முயற்சிகளையெல்லாம் மேற்கொள்வோம் என்று இந்த இனிய விழாவிலே உறுதி தெரிவித்து உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்து விடை பெறுகிறேன்.

18-4-98 அன்று மதுரையில் வழக்கறிஞர் சங்க 125-ஆவது ஆண்டு விழாவில் ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000