மதுரை வழக்கறிஞர் சங்க 125-ஆவது ஆண்டுவிழா
பகுதி 1 · 1 / 2
மதுரை வழக்கறிஞர் சங்க 125-ஆவது ஆண்டுவிழா
என்னை உரையாற்ற அழைக்கும்போது, “அரங்கத்திற்கு உள்ளேயும் எதிர்பார்ப்பு - வெளியிலேயும் எதிர்பார்ப்பு” என்று சுட்டிக்காட்டி அழைத்திருக்கின்றார்கள்.
“எதிர் பார்ப்பு” என்ற சொல்லில் இடையில் சில எழுத்துக்களை எடுத்து விட்டால், ‘எதிர்ப்பு’ என்று வரும். (கைதட்டல்)
அரங்கத்திற்கு உள்ளேயும் எதிர்ப்பு, வெளியிலேயும் எதிர்ப்பு (கை தட்டல்). நான் முதலமைச்சராக இருக்கிற காரணத்தால் சட்டசபையிலும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியவன். வெளியிலேயும் ஆங்காங்கு தோன்றுகின்ற எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியவன். இந்த இரண்டு எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலை நீங்கள் எல்லாம் வழங்கியிருக்கிறீர்கள் என்ற அந்தத் தெம்போடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
மதுரை பார் அசோசியேஷன் - வழக்கறிஞர் சங்கம் 1915-ஆம் ஆண்டு - வரவேற்புரையிலே எடுத்துக் காட்டியதைப்போல பதிவு செய்யப்பட்டது. அப்போது நூறு வழக்கறிஞர்கள்தான் இந்த சங்கத்திலே இடம் பெற்றிருந்திருக்கிறார்கள். ஆனால் இந்த சங்கம் 1872-ஆம் ஆண்டிலே நான்கு பாரிஸ்டர்களையும், ஏறத்தாழ
50 வழக்கறிஞர்களையும் கொண்டு தொடங்கப்பட்டது என்றாலும், தற்போது இந்தச் சங்கத்தில் நாமெல்லாம் மகிழத்தக்க வகையில் - 2500 வழக்கறிஞர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்பொழுது, நான் பெருமை அடைகிறேன்.
இந்த அளவுக்கு இந்தச் சங்கம் வளர்ச்சி பெற்றிருக்கிற காரணத்தால்தான் சில முக்கியமான கோரிக்கைகளை எல்லாம் நீங்கள் இங்கே வைத்திருக்கிறீர்கள் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
அமைச்சர்கள் செல்கிற விழாக்களில் கோரிக்கை இல்லாவிட்டால், அந்த விழா சுவைக்காது என்பதை நீங்களும் அறிவீர்கள். விழாக்களில் கலந்து கொள்கிற நானும் மிக நன்றாக அறிவேன்.
வழக்கறிஞர்களுக்குள்ள பொறுப்பை, நீதிமன்றங்களுக்கு உள்ள பொறுப்பை - விழாத் தலைமை ஏற்றிருக்கின்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களும், நீதிபதி ராஜூ அவர்களும் எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.
சட்டத்துறை அமைச்சர் ஆலடி அருணா அவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு - பக்கத்திலே நடைபெறுகின்ற வழக்கறிஞர்கள் கிளர்ச்சிகளை எல்லாம் சுட்டிக்காட்டாமல் சுட்டிக்காட்டி அவர்கள் எல்லாம் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் முன் மொழிந்ததை நான் வழி மொழிகிறேன். (கை தட்டல்)
“அது எப்படி? அவர் அமைச்சர்களில் ஒருவர். அவர் முன் மொழிந்ததை முதலமைச்சர் எப்படி வழி மொழியலாம்?” என்று கேட்கலாம். நான்தான் முன் மொழியச் சொல்லி, அதை நான் வழிமொழிகிறேன் என்பதை உங்களுக்குக் குறிப்பிட விரும்புகிறேன். (கை தட்டல்)
எந்த ஒரு பிரச்சினை ஆனாலும், வழக்கறிஞர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் போராட்டத் திறமையை நீதிமன்றங்களிலே வாதத்திலே காட்டினால் அதை நான் வரவேற்கக் கூடியவன். எந்தப் பகுதியில் இருந்து, எந்தத் தரப்பில் இருந்து வாதிட்டாலும் - அது அநியாயத்திற்காக வாதிட்டாலும், ஒருவேளை தொழிலின் காரணமாக, தொழிலின் அடிப்படையிலே நியாயமற்ற ஒன்றுக்காக வாதிட்டாலும் அந்த வாதத் திறமையை நான் வெகுவாகப் பாராட்டக் கூடியவன்.
எனவே அந்தப் போராட்டம் வாதத் திறமையிலே இருக்க வேண்டுமே அல்லாமல், சட்டத்தை வழக்கறிஞர்களே கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை மிகுந்த பணிவன்போடு இந்த விழாவில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்காக, “எங்களுடைய குரலை எப்படித்தான் எதிரொலிப்பது? எங்களுடைய எண்ணங்களை எப்படித்தான் வெளிப்படுத்துவது? அரசாங்கத்தின் கவனத்தை எப்படித்தான் திருப்புவது?”
என்று நீங்கள் கேட்கக் கூடும்.
கவனத்தைத் திருப்ப நடந்து சென்று கொண்டிருக்கும் போது சற்று தொலைவில் இருந்து கைகளைத் தட்டினாலே திரும்பிப் பார்ப்பேன். என் கவனத்தை நீங்கள் ஈர்க்கலாம். அதற்காக என் முதுகிலே தட்டித்தான் கூப்பிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்தப் பிரச்சினை குறித்த உங்களுடைய எண்ணம் ஆனாலும் அதற்காகக் கிளர்ச்சிகள் தேவையில்லை; போராட்டங்கள் தேவையில்லை; ஒரு டெலிபோன் போதும். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவிலேயே டெலிபோன் மணி அடித்ததும், அதை உதவியாளர்கள் எடுத்துக் கொடுக்காமல் தானே
நேரடியாக எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரே ஒரு முதல்வர் நான்தான். ஆகவே எந்தப் பிரச்சினையானாலும் என்னிடத்திலே நீங்கள் தொடர்பு கொண்டு பேசலாம்.
எந்த ஊருக்கு நீதிமன்றம் வேண்டும். எந்த ஊரில் நீதிமன்றத்தை எடுக்கக் கூடாது. எந்த ஊரில் நீதிமன்றம் புதிதாகக் கட்ட வேண்டும். இவைகளுக்கெல்லாம் போராட்டத் தேவையில்லை. பேசுங்கள்; பேச்சுவார்த்தை நடத்துங்கள். இருசாராரையும் அழைத்துப் பேச வேண்டிய நிலைமை எனக்கு ஏற்படலாம். எதிலுமே உங்கள் பக்கம் நியாயம் கிடைக்காவிட்டால் அந்தப் போராட்டத்திற்குத் தலைமை வகிக்க என்னையே அழையுங்கள். நான் வரத் தயாராக இருக்கிறேன் (பலத்த கைதட்டல்) என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியவனாக உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
சட்டத்தை, சட்டத்தின் பயனை வழக்கறிஞர்கள் மூலமாகத்தான் நாம் பெற வேண்டியிருக்கிறது. அதனால் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள்; “சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு. அந்தப் பிரகாசமான விளக்கை சாமான்ய மக்கள் பெற முடியவில்லை” என்று குறிப்பிட்டார்.
அந்தப் பிரகாசமான விளக்கை சாமான்ய மக்களும் பெறக் கூடிய அளவுக்கு தங்களைப் பக்குவப்படுத்திக் கொண்ட வழக்கறிஞர்கள் இன்றைக்குத் தமிழகத்திலே ஏராளம் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட வழக்கறிஞர்களில் பெரும்பாலோர் இந்தச் சங்கத்திலே இடம்பெற்று - இந்தச் சங்கம் 125 ஆண்டு காலமாக வளம் பெற்று, புகழ் பெற்று, புகழ் பெற்ற மனிதர்களையெல்லாம் தமிழகத்திற்கு, இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது என்பதை எண்ணி நான் பேருவகை கொள்கிறேன்.
பெரிய நிபுணர்களெல்லாம் இந்தச் சங்கத்திலே இருந்து வெளியே வந்தார்கள் என்று இங்கே குறிப்பிட்டார்கள். இன்னும் இங்கே சில மூத்த வழக்கறிஞர்களை யெல்லாம் அழைத்து, நானும் நம்முடைய நீதியரசர் லிபரான் அவர்களும், ராஜூ அவர்களும் மரியாதை செய்த காட்சிகளை எல்லாம் நீங்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தீர்கள். வாழ்த்தினீர்கள். அத்தகைய வழக்கறிஞர் பெருமக்கள் மாத்திரமல்ல; சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களையும் இங்கே அழைத்து மரியாதை செய்யப்பட்டது.
அதையும் நீங்கள் கண்டீர்கள். நானும் பார்த்து மகிழ்ந்தேன்.
