மதுரை தீண்டாமை ஒழிப்பு மாநாடு
பகுதி 2 · 2 / 2
இன்று காலையிலே நான் கண்ட காட்சியிலிருந்து ஒரு நம்பிக்கை எனக்கேற்படுகிறது. காலையிலே நடைபெற்ற மனிதச் சங்கிலியில் பெரும்பாலான மாணவி-
மாணவியர் சற்றொப்ப பதிமூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு நின்றார்கள். கை கோத்து நின்றார்கள். கை கோத்து நிற்க முடியாமல் நெருங்கி நின்றார்கள். தோளோடு தோள் சேர்த்து நின்றார்கள். இடமில்லாத காரணத்தால் அவர்கள் அனைவரும் கைகோத்து நின்றிருப்பார்களேயானால் இரண்டு அடுக்காக பல இடங்களில் நின்றார்கள். அப்படி இரண்டு அடுக்காக நில்லாமல் ஒரே வரிசையில் நின்றிருப்பார்களேயானால் மனித சங்கிலியின் நீளம் பதிமூன்று கிலோமீட்டர் தூரத்தோடு முடியாமல் 25 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மனித சங்கிலி என்று நாம் கணக்கிட்டிருக்க முடியும்.
அவ்வளவு எழுச்சி. பெரியவர்கள், பெண்மணி, மாணவ-மாணவியர், தொழிலாளர்கள், அலுவலர்கள் அத்தனை பேரும் இன்றைக்கு இருந்ததை என்னால் காண முடிந்தது.
எனவே நான் நிச்சயமாக இந்த உறுதிமொழி மாணவர்கள் மனதில் பதியும் என்று நம்புகிறேன். ஒரளவு பதிந்திருக்கின்ற காரணத்தால்தான் இன்றைக்கு கைகோத்து நின்றார்கள். மனித சங்கிலியாக நின்றார்கள்.
மாநாடு மாத்திரமல்ல; ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் மனித சங்கிலியும் நடைபெற வேண்டும். இந்த மாநாடும் நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே இங்கு எடுத்து வைக்கப்பட்ட தலைவர்களின் இந்த கோரிக்கை தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்பதையும் நான் இங்கே உங்கள் முன்னால் அறிவிக்கின்றேன்.
இந்த உறுதிமொழியை பள்ளிக்கூடங்களில் - கல்லூரிகளில் கூட வாரம் ஒரு முறையாவது ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பறையிலும் படிக்க மாணவர்கள் திரும்பச் சொல்லி இந்த உறுதிமொழி வாரம்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான தாக்கத்தை நம்முடைய
கல்வியமைச்சர் அவர்கள் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி வைப்பார் என்பதையும் இந்த மாநாட்டில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதி ஒழிவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள். சங்கரய்யா மேலவையைப் பற்றி குறிப்பிட்டார். அதைப்போல பல இடங்களில் தேநீர் கடையிலே இரண்டு கிளாஸ்கள் வைக்கப்படுவதும், சில இடங்களில் ஒரு கிளாஸ், இன்னொன்று கொட்டாங்குச்சி என்று இருப்பது போன்ற நிலைமை பழைய காலத்திலே ஆரம்பமாகி இன்றைக்கு எல்லா இடங்களிலும் இல்லாவிட்டாலும் ஒருசில இடங்களில் இருக்கத்தான் செய்கின்றன.
நான் டாக்டர் அம்பேத்கார் அவர்களுடைய புத்தகம் ஒன்றைப் படித்தேன். அந்தப் புத்தகத்தினுடைய தலைப்பு அம்பேத்கருடைய எழுத்தும் - பேச்சும் என்பதாகும். ஆங்கிலப் புத்தகம் அது. அந்தப் புத்தகத்தின் ஐந்தாம் தொகுப்பில் 118-ஆம் பக்கத்தில் அண்ணல் அம்பேத்கார் அவர்கள் ஒரு இணைப்பை வைத்து அந்தப் புத்தகத்தை தொடங்குகிறார்.
அந்த இணைப்பு என்னவென்றால் “சுவாமி ஆனந்த்தீர்த். அகில இந்திய அரிஜன சேவா சங்கத்தின் பிராந்திய அதிகாரி அவர்.” அவர் தமிழ்நாட்டில் தன்னுடைய அனுபவம் குறித்து எழுதிய ஒரு டைரி அது. அது 9.3.1952-ஆம் ஆண்டு ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. அப்படி வெளியான கட்டுரையை டாக்டர் அம்பேத்கார் அவர்கள் தன்னுடைய எழுத்தும் பேச்சும் என்ற புத்தகத்திலே இணைத்து வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் என்ன சொல்கிறார். 52-ஆம் ஆண்டு அகில இந்திய சேவா சங்கத்தின் பிராந்திய அதிகாரி
சுவாமி ஆனந்த்தீர்த், மதுரை மாவட்டம் வருகிறார். இதே மேலவளவுக்கு செல்கிறார். அப்போது இங்கு சிலையாக திறந்து வைக்கப்பட்ட தியாகச் செம்மல் கக்கன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர். 52-ஆம் ஆண்டு ஆனந்த்தீர்த் அந்தப் பகுதிக்கு வந்தபோது மேலவளவில் சங்கரய்யா அவர்கள் குறிப்பிட்டதைப் போல ஆதி திராவிட தோழர்களுக்கு கொட்டாங்குச்சியிலேதான் தேனீரோ, காப்பியோ கடையிலே விற்கப்பட்டது.
இதைப் பார்த்த சுவாமி ஆனந்த் தீர்த் அந்த கடைக்காரர்மீது வழக்குத் தொடர்ந்தார். ஆனால் அன்றைக்கு அந்த வழக்கில் நீதிபதி விதித்த அபராத தொகை வெறும் பத்து ரூபாய்தான். அதை மிகுந்த ஆதங்கத்தோடு அங்கலாய்ப்போடு சுவாமி ஆனந்த் தீர்த் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிடுகின்றார். அதை அம்பேத்கார் எடுத்துக்காட்டுகிறார்.
மறுபடியும் இரண்டு சிறுவர்களை அழைத்துக் கொண்டு கீழவளவு என்ற பகுதிக்கு ஆனந்த் தீர்த் செல்கிறார். அதே 52-ஆம் ஆண்டு, அந்த இரண்டு பேருக்கும் கொட்டாங்குச்சியில் தேனீர் கொடுக்கக்கூடாது, கிளாசிலே கொடு என்று கேட்கிறார். அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள். மறுத்தது மட்டுமல்லாமல் அவர்களை அடித்ததோடு நிற்காமல் சுவாமி ஆனந்த் தீர்த் அவர்களையும் அடித்து உதைக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு வன்முறைச் செயல் அங்கே நடைபெற்றதை அவர் தன்னுடைய கட்டுரையிலே குறிப்பிடுகிறார். எனவே 52-ஆம் ஆண்டு முதல் சுதந்திரம் பெற்ற ஐந்தாவது ஆண்டிலே இந்த நிலைமை இருந்திருக்கிறது.
இன்றைக்கு அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் கூட இருகாடு, கருகாடு என்ற இடங்களில் சாதி, பேத உணர்வு, வேற்றுமை உணர்வு, தாழ்வு மனப்பான்மை, பிளவு மனப்பான்மை இவைகள் எல்லாம் கொடிகட்டிப் பறக்கின்ற காட்சியை நாம் காண்கிறோம். எல்லோரும் ஒரே குரலில் சொன்னோம். நானும் சொல்கிறேன். இதில் மனதளவில்தான் மாற்றம் வேண்டும்.
நம்முடைய ஆர்.எம்.வீ. அவர்கள் ஆரம்பித்து தொடர்ந்து பேசிய அனைவரும் மனதளவில்தான் இந்த மாற்றம் ஏற்பட வேண்டுமென்று நாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அதற்கு அம்பேத்கார் இந்த சாதி ஒழிப்புக்கு ஒரு வழி சொல்லியிருக்கிறார். “சாதி ஒழிப்புக்கு உண்மையான வழி கலப்புத் திருமணம்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ரத்தக் கலப்பின் மூலம்தான் உற்றார், உறவினர் என்ற உணர்வு ஏற்படும். இந்த உறவு, இந்த உணர்வு ஏற்பட்டு வலுவடைந்தாலன்றி சாதியினால் ஏற்பட்டிருக்கும் வேற்றுமையுணர்வு ஒருவருக்கொருவர் அந்நியராக நினைப்பது மறையவே மறையாது.
சாதியை உடைப்பதற்கு உண்மையான தீர்வு கலப்புத் திருமணமே. வேறு எதுவும் சாதியை கரைக்க முடியாது.” சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் சாதாரண நடைமுறையாகும் போதுதான் சாதியின் சக்தி அழியும். எனவே நாம் இன்றைக்கு சமபந்தி போஜனம் நடத்தினோமென்றால் அது அம்பேத்கார் அவர்களுடைய வழியில் அவர் சொன்ன அந்த கருத்தின்படி நடத்தியிருக்கின்றோம்.
சமபந்தி விருந்து நடத்திவிட்டோம். ஆனால் எத்தனை பேர் கலப்புத் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறோம். ஆனவர்களைக் கேட்கவில்லை (திருமணம்) இன்னும் ஆகாதவர்களைக் கேட்கின்றேன். ஆனவர்கள்
நான் தயார் என்று கையை உயர்த்திவிடாதீர்கள். நான் கேட்பதற்கு உரிமை படைத்தவன். நம்முடைய பேராசிரியர் தீரன் அவர்களும், ஜனதா தளத்தின் தலைவர் வடிவேலு அவர்களும் இங்கே பேசும்போது குறிப்பிட்டார்கள். என்னுடைய குடும்பத்திலேயே பல கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்தவன் நான்; அதிலும் குறிப்பாக ஆதிதிராவிடப் பெண்ணை என்னுடைய மகனுக்குக் கட்டி வைத்தவன். இன்றைக்கும் ஆதிதிராவிட பேரக் குழந்தையை, பேத்திக் குழந்தையை எடுத்துக் கொஞ்சுகின்றேன்; முத்தமிடுகின்றேன்.
ஒரு பெண்ணை எடுத்து மாத்திரமல்ல; என்னுடைய வீட்டுப் பெண்ணை, என்னுடைய பேத்தியை ஒரு தலித் (சொன்னால்தான் உங்களுக்குப் புரியும்) ஆதி திராவிடருக்கு கலப்புத் திருமணம் செய்து வைத்ததும் நான்தான். எனவே அந்த உரிமையோடு கூடத்தான் நான் சொல்லுகின்றேன். கலப்புத் திருமணம் சாதியை ஒழிப்பதற்கு பெரும் கருவியாகப் பயன்படுத்துவதை யாரும் மறுத்துவிடக் கூடாது.
அந்த கலப்புத் திருமணத்தை ஊக்கப்படுத்துகின்ற வகையில் ஒரு அறிவிப்பை அரசின் சார்பாக இங்கே செய்ய விரும்புகிறேன்.
கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு ஏற்கனவே அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு பிறகு 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
சுதந்திர பொன்விழா ஆண்டையொட்டி நான் ஒரு அறிவிப்பு செய்கிறேன். இப்பொழுது தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும் இந்த நேரத்தில் சாதியற்ற சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற நோக்கத்தில்
கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியருள் மணமகனோ அல்லது மணமகளோ இருவரில் ஒருவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அந்தத் தம்பதியருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். வெறும் கலப்புத் திருமணம் மட்டும் போதாது? அதற்கு 10 ஆயிரம் ரூபாய்தான். ஏழைப் பெண்கள் எட்டாவது வரை படித்திருந்தால் அவர்களுடைய வருமான வரம்பை மையமாக வைத்து அவர்களுக்கு இப்பொழுது 10 ஆயிரம் ரூபாய் திருமண உதவியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த 97, 98 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு மாத்திரம் 46 ஆயிரம் பெண்களுக்கு 46 கோடி ரூபாய் இதற்காக வழங்கப்பட்டு வருகிறது. இதனினியில் கலப்புத் திருமணம் என்றால், அதிலே மணமகன் ஆதி திராவிடராக இருக்க வேண்டும் அல்லது மணமகள் ஆதி திராவிடராக இருக்க வேண்டும். இருவரில் ஒருவர் ஆதி திராவிடராக இருந்து நடைபெறும் திருமணத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் அரசின் நிதியாக வழங்கப்படும் என்பதை இந்த மாநாட்டில் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
எனவே இந்த மாநாடு எல்லா வகையிலும் ஒரு உணர்வை நம்மிடையே எழுப்ப உதவியிருக்கின்ற மாநாடாகும். இந்த மாநாட்டின் மூலமாக மதுரை தருகின்ற இந்தச் செய்தியின் வாயிலாக மாநிலம் முழுவதும் “தீண்டாமை ஒழிப்போம்” என்கிற அந்தக் குரல் ஒலிக்குமென்று எதிர்பார்க்கின்றேன். இருந்தாலும் கூட மாவட்டத் தலைநகரங்களில் அடுத்து கோவை, நெல்லை, திருச்சி இவ்வாறாகப் பல மாவட்டத் தலைநகரங்களில் மனிதச் சங்கிலிகளும் சமபந்தி விருந்துகளும் தீண்டாமை
ஒழிப்பு மாநாடுகளும் நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகளை இந்தப் பொன்விழா ஆண்டில் அரசு செய்திடும் என்பதை தெரிவித்துக் கொண்டு இந்த மாநாட்டின் வெற்றி உண்மையிலேயே தீண்டாமை ஒழிவதிலேதான் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
- முரசொலி 1-9-97
