மதுரை தீண்டாமை ஒழிப்பு மாநாடு
பகுதி 1 · 1 / 2
மதுரை தீண்டாமை
ஒழிப்பு மாநாடு
மற்றவர்கள் எல்லாம் பேசும்போது, அரசியல் கட்சித் தலைவர்களே என்று சுருக்கமாக விளித்தார்கள். ஆனால் நான் மாநாட்டுத் தலைவர் என்பது மாத்திரமல்ல; இந்த மாநாடு நடத்த வேண்டுமென்று விரும்பி உங்களை எல்லாம் அழைத்தவன் என்பதால் ஒவ்வொருவராக விளித்து, அவர்களுக்கெல்லாம் வழங்க வேண்டிய நன்றியையும் அவர்களோடு இணைத்து என்னுடைய உரையைத் தொடங்குகிறேன்.
இன்று காலையில் நடைபெற்ற மனிதச் சங்கிலி, மாலையில் தியாகச் செம்மல் கக்கன் அவர்களுடைய சிலை திறப்பு விழா, அதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவிலிலும், தேவாலயத்திலும், மசூதியிலும் நடைபெற்ற சமபந்தி விருந்துகள், அதனைத் தொடர்ந்து இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பெருமைக்குரிய இந்த மாநாடு, இவற்றை எல்லாம் சீரும், சிறப்பும், எழுச்சியும், எழிலுற அமைத்திட வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவ்வாறே செயல்பட்டு முடித்துள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், செய்தித் துறை அமைச்சகத்துக்கும், அவர்களோடு ஒத்துழைத்த ஏனைய அலுவலர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் சிறப்பாகப் பல்வேறு அலுவல்கள் இருந்த போதிலும் அவரவர்களுடைய கட்சிகளுக்குரிய பல பணிகளில் ஈடுபட வேண்டிய நெருக்கடியான நிலை இருந்தபோதிலும், அவற்றையெல்லாம்விட இது பெரும் பணி, தொடர வேண்டிய பணி என்ற தூய உள்ளத்தோடு இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு சிரமம் பாராமல் வந்துள்ள கட்சிகளின் தலைவர்களையும் சமயச் சான்றோர்களையும் நான் மீண்டும் மீண்டும் வரவேற்று நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இங்கு நடைபெற்றது ஒரு மாநாடு அல்ல; ஒரு கருத்தரங்கம் என்ற கருத்தினை முன்னால் பேசியவர்கள் எல்லாம் வெளியிட்டார்கள்.
எனக்கேகூட, வந்து அமர்ந்ததிலிருந்து, நான் பேசவேன் என்று அழைக்கப்படுகிற வரையில் என்ன பேசுவது என்று சிந்தனை செய்வதற்கே நேரமில்லாமல் போயிற்று. காரணம், சில மாநாடுகளில், சில கருத்தரங்குகளில், சில பேச்சரங்குகளில் பேசுகின்ற நண்பர்கள் அல்லது தலைவர்கள், நம்மைப் போன்றவர்கள் மேடையில் அமர்ந்து சிந்திப்பதற்கு நேரம் தருவார்கள். ஆனால் இங்கே பேசிய தலைவர்கள் யாரும் அந்த நேரத்தை எனக்குத் தரவில்லை. காரணம் அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் நான் ஒன்றிப் போனேன்; இணைந்தேன்; கலந்தேன்; கரைந்துருகினேன்.
ஐம்பதாண்டு காலமாகிறது; இந்தியத் திருநாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து; நாம் விடுதலை பெற்று ஐம்பதாண்டு காலத்திற்குப் பிறகும் நாம் நம்முடைய சமுதாய மக்கள் மற்றொரு சுதந்திரத்திற்காகப் போராட வேண்டிய சூழ்நிலை இருக்கிறதே, என்பதை எண்ணிப் பார்க்கும் போதும், அந்தச் சூழ்நிலையை எப்படிச் செயல்பட்டு
செயல்படுத்துவது, எவ்வாறு அவர்களுக்கு அந்த விடுதலையைப் பெற்றுத் தருவது? என்பதை எண்ணும் போதும், ஒரு பொறுப்பில் இருக்கிற என்னைப் போன்றவர்களுக்கு எவ்வளவு கவலையும் வேதனையும் இருக்கும் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
பல திட்டங்கள், பல முறைகள், பல பணிகள், வேண்டுகோளாகவும் அன்புக் கட்டளையாகவும் எனக்கு இங்கே பிறப்பிக்கப்பட்டன. பேராசிரியர் பேசும் போதும் குறிப்பிட்டதைப் போல தத்துவங்களுக்கும் அவைகளை நடைமுறைப்படுத்தி வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை எண்ணிப் பார்க்கும்போதுதான், நடைமுறைப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிற ஒரு அரசு எத்தனை எத்தனை சிக்கல்களுக்கு இடையே, பிரச்சினைகளுக்கு இடையே இந்தப் பணியை ஆற்ற வேண்டியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது அனுபவ ரீதியாக!
இந்த ஒன்றரையாண்டு காலத்தில் தமிழகத்தில் எத்தனையோ நலத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி அது ஏழை, எளிய மக்களுக்கு வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு, சாதாரண, சாமானிய மக்களுக்கு, நடுத்தர மக்களுக்கு, பாட்டாளி மக்களுக்கு, விவசாயிகளுக்கு சென்றடைய வேண்டுமென்று எண்ணுகிற நேரத்தில் சென்றடைய முடியாமல் ஏற்படுகிற இடர்பாடுகள் எவை என்பதை இங்கே பேசிய தலைவர்கள் சில பேர் சுருக்கமாக, அதே நேரத்தில் மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார்கள்.
நம்முடைய இளையபெருமாள் பேசுகிறபோது ஒன்றைச் சொன்னார்கள். டிசம்பர் 6-ஆம் தேதிக்குள் இதைச் செய்து முடிக்காவிட்டால் நான் என்ன ஆவேனோ தெரியாது என்று மிகுந்த உருக்கத்தோடு, உணர்ச்சியோடு
குறிப்பிட்டார்கள். அதை நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சுட்டிக்காட்டி, அவர் பொறுமை காட்ட வேண்டும் என்று சொன்னார்கள். இளையபெருமாள் அவர்கள் குறிப்பிட்டது ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்ட வாரியாக, அதாவது தாலுகா ரீதியாக நல்லிணக்கக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுக்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களை, சட்டமன்ற உறுப்பினர்களை, நிர்வாகப் பொறுப்புகளில் மக்களுடைய பிரதிநிதிகள் இருந்தால் அவர்களை உள்ளடக்கியதாக அந்தக் குழுக்கள் அமைந்திட வேண்டும்.
அந்தக் குழுக்கள் அந்தப் பகுதிகளில் அமைதியை உருவாக்கவும், அமைதி கெடக் கூடிய சூழ்நிலை ஏற்படுமானால் அதைத் தடுக்கக் கூடியதாகவும் அமைந்திட வேண்டுமென்று குறிப்பிட்டார்கள்.
இந்தக் கருத்தை அவர்கள் என்னிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள். நான் அதைப் பற்றிக் கலந்து பேசிக் கொண்டிருக்கிறேன். இது கலந்து பேசி காலம் கடந்து அறிவிக்க வேண்டிய ஒன்றல்ல என்பதை நான் நன்றாக அறிவேன். இப்போதே அறிவிக்கிறேன். டிசம்பர் 6-ஆம் தேதி வரையில் இளையபெருமாள் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. இளையபெருமாள் அவர்கள் குறிப்பிட்ட அந்தக் குழு இன்னும் ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படுவதற்கான ஆணை இந்த அரசின் சார்பில் இடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்றொன்று, இங்கே நாம் சமுதாய ரீதியாக உள்ள மாற்றங்கள், ஏற்பட வேண்டிய நிலைகள் இவைகளை எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் போதே வைக்கப்படுகிற கோரிக்கைகள் என்னென்ன என்பதையும், இன்றைக்கு சில பிரிவு மக்களிடத்தில் அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கின்ற அதிருப்திக்கு என்ன காரணம் என்பதையும் ஆராய்ந்து
பார்த்தால், மிக முக்கியமாக இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் ஏற்கனவே 16 சதவிகிதம் என்று இருந்ததை நான் 1969-ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, 16 சதவிகிதம் என்பதை 18 சதவிகிதம் என்று உயர்த்தினேன்.
பிறகு எண்பத்து ஒன்பதில் பொறுப்பேற்ற போது 18 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் என்று இருந்ததை மேலும் ஒரு சதவிகிதம் அதிகமாக்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதவிகிதம் என்றும், பழங்குடி மக்களுக்கு ஒரு சதவிகிதம் என்றும் 19 சதவிகிதம் இரு பிரிவினருக்கும் என்று உயர்த்திய பிறகும்கூட அந்த சதவிகிதத்தின்படி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் உரிய இடம் கிடைக்கவில்லை என்கிற மன நிறைவற்ற தன்மை அவர்களை இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது.
அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் அதற்கான காரணத்தை தயவு செய்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். காலியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பது தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், படித்தவர்கள் இவர்களிடம் எடுத்துச் சொல்லப்படுகிற வாதம். அதன் காரணமாக கிளர்ச்சிகள், போராட்டங்கள் - ஆர்ப்பாட்டங்கள்! நான் அவைகளையெல்லாம் தவறு என்று சொல்லமாட்டேன். அது எண்ணக் குழுமல். ஜனநாயக நாட்டில் எண்ணக் குழுமல்களுக்கு இடம் தர வேண்டும்.
அது நம்முடைய அடிகளார் குறிப்பிட்டதைப் போல வன்முறை விளிம்பை தொட்டுவிடக் கூடாது. அந்த அளவிலே அந்த எண்ணக் குழுமல்களை மதிக்க வேண்டிய கடமை ஒரு ஜனநாயக அரசுக்கு உண்டு.
காலியிடங்கள் நிரப்பப்படவில்லை; பதினெட்டு அல்லது பத்தொன்பது சதவிகிதம் இடங்கள் நிரப்பப்படவில்லை என்று இருக்கின்ற அந்தக் குறைபாட்டை இந்த அரசு நன்றாக உணர்ந்து இருக்கிறது. அதற்காக நான்
மாநாட்டில் ஒரு அறிவிப்பை செய்ய விரும்புகிறேன். அத்துடன் ஒரு விளக்கத்தையும் சேர்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.
அரசு வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு பதினெட்டு சதவிகிதமும், பழங்குடியினருக்கு ஒரு சதவிகிதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கும், பழங்குடியினர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்ப குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் பயிற்சித் தகுதி உடையவர்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு அரசுத் துறைகளில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படாமல், கடந்த காலங்களில் அவை காலியாகவே விடப்பட்டுள்ளன.
ஆதி திராவிடர்களுக்கு தேவையான கல்வித் தகுதியையும், பயிற்சித் தகுதியையும் வழங்குவதிலும் வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கென உள்ள ஒதுக்கீட்டின் முழுமையாக நிரப்பிட வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறையுடைய இந்த அரசு நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களை நிரப்ப சிறப்பு பணி அமர்த்தும் தீவிர முயற்சியை (ஸ்பெஷல் ரெக்ரூட்மெண்ட் டிரைவ்) மேற்கொண்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கல்வி மற்றும் பயிற்சித் தகுதி பெற்றோர் தேவையான எண்ணிக்கை இல்லை என்பதை அறிந்து விதிகளைத் தளர்வு செய்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் பி.எட்.
பயிற்சி பெற்றவர்களையும் நியமனம் செய்து கொள்ள இப்பொழுது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு, தேவையான அளவுக்கு இடைநிலை பயிற்சி பெற்ற ஆசிரியர்களை உருவாக்கிட 13 இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் ஐந்து கோடி ரூபாய் செலவில் அண்மையிலே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப்படி ஆதிதிராவிடர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களை முழுமையாக நிரப்பிட கழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் இதைக் கண்காணிக்க குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது. அந்த கோரிக்கையை ஏற்பதில் திறந்த, வெளிப்படையான மனதோடு செயல்பட்டு வருகின்ற கழக அரசுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை.
ஆதிதிராவிடர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் முறையாக நிரப்பப்படுவதை கண்காணிப்பதற்கும், கடந்த காலங்களில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களை ஒரு கால வரையறைக்குள் நிரப்புவதற்குரிய வழிவகைகளை காண்பதற்கும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சரை கன்வீனராக, அமைப்பாளராகக் கொண்டு குழு ஒன்று உருவாக்கப்படும். அந்தக் குழுவில் சட்டமன்றப் பேரவையிலுள்ள கட்சிகளின் ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்தோர் இடம் பெறுவார்கள்.
அந்த உறுப்பினர்கள் யார் யார் என்று பிறகு அறிவிக்கப்படும் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை இந்த மாநாட்டில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
மற்றொன்று, ஒரு கோரிக்கை என்ன? ஒரு அறிவுரையாக அருமை நண்பர் சங்கரய்யா இங்கே சொன்னார்கள். தீண்டாமைப் பழக்கத்தை கைவிட மேற்கொள்ளும் உறுதிமொழி மாநாட்டின் தொடக்கத்தில் என்னால் படிக்கப்பட்டு ஒவ்வொரு சொல் தொடராக நீங்களும் திரும்பச் சொல்லி நாம் அனைவரும் இந்த மாநாட்டிலே அந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இது மாணவர்களுடைய மனதிலும் பதிய வேண்டுமென்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
