உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

மாணவர்களும் அரசியலும்

பகுதி 2 · 2 / 2

விதிவிலக்குகள் வழிகாட்டிகளாகமாட்டா. விதிவிலக்கு வேறு; வழிகாட்டி வேறு.

படிக்காத மேதையாகத்தான் இருந்தார் பெருந்தலைவர் காமராஜர்; எனவே நாமும் படிக்காமல் இருந்தால் பெருந்தலைவர்களாக ஆகிவிட முடியாது. எனவே விதிவிலக்குகள் வேறு; வழிகாட்டிகள் வேறு. விதிவிலக்குகளை வழிகாட்டிகளாக நீங்கள் தயவுசெய்து எடுத்துக் கொள்ளக் கூடாது.

அப்படி எடுத்துக் கொண்டால் நம்முடைய வாழ்வை மாத்திரமல்ல நம்முடைய எதிர்கால சந்ததிகளுடைய வாழ்வையும் நாம் பாழாக்கி விடுகிறோம். சமுதாயத்தினுடைய எதிர்காலத்தை இருளடையச் செய்கிறோம்.

நமக்கு இருக்கின்ற வேலைகள் ஏராளம், ஏராளம். மகாத்மா காந்தியடிகள் மாணவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடலாம்; நாடு மீட்கும் பணியில் ஈடுபடலாம். எனவே மாணவர்களே வாரீர் என்று அழைத்தார்.

மாணவர்கள் ஈடுபடக்கூடிய போராட்டம் கல்லூரிகளில் அவர்களுடைய கோரிக்கைகளுக்காக நடத்துகின்ற அமைதி வழிப் போராட்டங்களைத் தவிர, அவர்கள் ஈடுபட்டுத்தான் தீர வேண்டும் என்ற நிலையிலே தவிர்க்க முடியாத போராட்டங்கள் உலகத்திலே எந்த நாட்டிலும் இரண்டுதான் இருக்க முடியும்.

ஒன்று, அவர்களுடைய மண்ணை மீட்கின்ற போராட்டம்; அல்லது மண்ணை யாரும் அடிமை கொள்ளாமல் பாதுகாக்கின்ற போராட்டம்.

இரண்டு, கண்ணுக்கு நிகரான மொழியைக் காக்கின்ற போராட்டம். இந்த இரண்டு போராட்டத்திலும் மாணவர்கள் தவிர்க்க முடியாதவர்கள். ஆனால்,

நான் இதை சொல்லுகிற காரணத்தால் வருகிற 25, 26 ஆகிய தேசிய போராட்டத்திற்காக உங்களை ஓடையாக நான் அழைக்கிறேன் என்று யாரும் கருத்தத் தேவை இல்லை. ஏனென்றால் நாம் இப்போது போராட்டத்தைத் தொடங்கவில்லை. நம்முடைய மனக்குறையை தமிழ் மக்களுடைய மனக்குறையை உரியவர்களுக்குக் காட்டிக் கொள்ள அந்த நாட்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

ஜனவரி 26-ஆம் நாள் குடியரசு நாள். அரசியல் அமைப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டு அது பிரகடனப்படுத்தப்பட்ட நாள் குடியரசு நாள்.

விடுதலை நாள் வேறு; குடியரசு நாள் வேறு; இந்த இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாத சிலர் நாட்டில் இருக்கிறார்கள்; அது வேறு.

ஜனவரி 26, குடியரசு நாளை நாம் துக்க நாளாக அறிவிக்கிறோமா என்றால் இல்லை. 1965-ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் குடியரசு நாளை, துக்க நாள் என்று அறிவித்தார். அதற்கு முன்பு நேரு அவர்கள் காலத்தில் மேற்கு வங்கத்தில் முதலவராக அப்போது இருந்த டாக்டர் பி.சி. ராய், இந்திய நாட்டு விடுதலைப் போராட்ட வீரர், காங்கிரஸ் தியாகி, முதலமைச்சராகவே இருந்து கொண்டு, மேற்கு வங்கத்தில் ஜனவரி 26 குடியரசு நாளை துக்க நாள் என்று அரசு ரீதியிலே பிரகடனப்படுத்தினார்.

ஆனால், இப்போது வருகிற ஜனவரி 26, குடியரசு நாளை நாங்கள் துக்க தினம் என்று சொல்லவில்லை. ஆனால் குடியரசு நாளில் நம்முடைய துக்கத்தை வெளியே சொல்கிறோம்; அவ்வளவுதான்.

இந்த வேறுபாட்டைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி நம்முடைய துக்கத்தை வெளிக்காட்டிக் கொள்வது கிளர்ச்சியாகாது; ஆரவாரம் ஆகாது; ஆர்ப்பாட்டம் ஆகாது.

யாரோ சிலர் சொன்னதால் - பத்திரிகைகளில் எழுதியதாகக் கூட நான் கேள்விப்பட்டேன்.

மத்திய சர்க்காருக்கும், இங்கேயிருக்கிற மாநில சர்க்காருக்கும் இடையில் மோதலை உண்டுபண்ணவும், ஜனவரி 26-ம் தேதியன்று பிறமொழி ஆதிக்கம் கூடாது. தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக ஆக வேண்டும் என்பதற்காக ஊர்வலம் நடத்த அனுமதித்தால் மத்திய அரசுக்கு, இங்கே இருக்கிற மாநில அரசின் மீது கோபம் ஏற்பட்டு-மாநில அரசை மத்திய அரசு கலைத்து விடும். அதற்காக கருணாநிதி மொழியின் பெயரால் இந்தச் சூழ்ச்சியைச் செய்கிறான் என்று சிலர் யூகித்துச் சொல்வதாக நான் கேள்விப்பட்டேன்.

அப்படி குறிப்பாக ஜனவரி 26-ஆம் தேதி தி.மு.க. நடத்துகிற கருப்புக் கொடி நிகழ்ச்சிக்காக இங்கேயுள்ள மாநில அரசைக் கலைக்க மத்திய அரசு முன்வருமேயானால் - அதை எதிர்த்து இங்குள்ள மாநில அரசுக்கு ஆதரவாக தோள் கொடுக்கின்ற முதல் ஆளாக கருணாநிதி இருப்பான் என்பதை மாத்திரம் நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவைகளையெல்லாம் நான் பேசக் காரணம் மொழி பற்றிப் பேசுகிற தொடர்பில் அந்த மொழிக்குத் தொடர்பான சில விஷயங்களைப் பற்றி பேச வேண்டியதால் இதைப் பேசினேனே அல்லாமல் வேறல்ல.

12.1.79 அன்று தாம்பரம் கிறித்துவக் கல்லூரி வள்ளுவர் விழாவில் ஆற்றிய உரை.

முதற் பதிப்பு : மே 2000