உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

மாணவர்களும் அரசியலும்

பகுதி 1 · 1 / 2

மாணவர்களும் அரசியலும்

கிறித்துவக் கல்லூரி வள்ளுவர் மன்றத்தின் சார்பில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகின்ற வள்ளுவர் விழாவின் நிறைவு நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இங்கு ஒவ்வொரு நாளும் இயல், இசை, கூத்து என்ற வகையில் முத்தமிழின் பெருமையை விளக்குகின்ற நிலையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு எனக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியிலேகூட என்னுடைய அருமை நண்பர் குமரி அனந்தன் அவர்கள் தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற்றதாக அறிந்தேன்.

இந்த விழாவின் மூலம் மாணவ உடன்பிறப்புகளுக்கு நான் ஒன்று எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். மாணவர்கள் என்று பொதுவாகக் குறிப்பிடுகிறேன். கிறித்துவக் கல்லூரி மாணவர்களை மாத்திரம் சுட்டிக் காட்டுவதாகக் கருதத் தேவையில்லை.

மாணவர்கள் தங்களுடைய மாணவப் பருவத்தில் அரசியலைக் கற்றிருந்தாலும் கற்க வேண்டியவைகளை எல்லாம் கசடறக் கற்றுத் தேர்ந்து, அதற்குப் பிறகுதான் இந்த நாட்டிற்கு ஆற்ற வேண்டிய அரசியல் பணிகளுக்காகத் தங்களை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும். அதுவரையில் படிப்பில் கவனம் செலுத்திட

வேண்டும். எதிர்க்கட்சித் தலைவனாக இருந்து கொண்டும் இவன் இதைத்தானே சொல்கிறான் என்று மாணவர்கள் யாரும் தயவுசெய்து கருதிக்கொள்ளாதீர்கள்.

எந்தவொரு கல்லூரியானாலும், பல்கலைக் கழகமானாலும் கல்விக் கூடமானாலும் அங்கேயெல்லாம் தயாரிக்கப்படுகின்ற போர்வாள்கள் - உருவாக்கப்படுகின்ற ஈட்டி முனைகள் - வடித்தெடுக்கப்படுகின்ற வேல்கள் அவைகள் முழுமையாக - கூர்மையாக வடித்தெடுக்கப்படாத நேரத்தில் - அவை எந்தக் கட்சிக்காரர்களுக்குக் கிடைத்தாலும் அவை சரியான போர்க் கருவிகளாக இருக்கமாட்டா.

எனவே கூர் ஏற்றப்பட்டவர்களாக - நல்ல முறையில் வடித்தெடுக்கப்பட்டவர்களாக - செம்மைப்படுத்தப்பட்டவர்களாக மாணவர்கள் - அவர்களுக்கு என்று எத்தனையோ கொள்கைகள் உள்ளத்தில் இருந்தாலும் இன்ன கட்சியைச் சேர்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இதயத்தில் இருந்தாலும் அவைகளையெல்லாம் மாணவப் பருவம் கடந்த பிறகு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவில் தங்களை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளைத்தான் இங்கே நான் உங்கள் முன்னால் வைக்க விரும்புகிறேன்.

ஏனென்றால் சிலர் ஐயத்தோடும், அச்சத்தோடும் வெளியே இருக்கக்கூடும். வெளியே என்றால் இந்தக் கூட்டத்திற்கு வெளியே இருப்பவர்களை அல்ல; (கைதட்டல்) நான் சொல்லுவது யாரை என்பது உங்களுக்கே தெரியும்.

நான் இந்தக் கல்லூரிக்கு வந்துவிட்ட காரணத்தினாலே இங்குள்ள மாணவர்களை எல்லாம் தூண்டிவிட்டுப் போய் விடுவேனோ என்கிற ஐயமும்,

அச்சமும் நான் இப்படிப் பேசினாலும்கூட கருணாநிதி கிறித்துவக் கல்லூரிக்குச் சென்று மாணவர்களை எல்லாம் தூண்டிவிட்டு வந்தான் என்று சொல்லுகிறவர்கள் நாட்டிலே இருப்பதை இன்றைக்கு நீங்கள் காண்கிறீர்கள். எனவே அதற்குப் பயந்தல்ல, இன்று நேற்றல்ல பேரறிஞர் அண்ணா அவர்கள் மாணவர்களுக்காகச் சொன்ன கருத்தினை நெஞ்சிலே பதிய வைத்துக் கொண்டு இருப்பவன் நான். கல்லூரிகளிலும், கலாசாலைகளிலும் பயிலுகின்ற மாணவர்கள் நாற்றங்காலிலே இருக்கின்ற பயிர்கள்.

நாற்றங்காலில் நீங்கள் செழித்து வளருங்கள். அதற்குப் பின் நாற்றங்கால் பருவம் கடந்த பிறகுதான் உங்களை எல்லாம் வயலில் எடுத்து நட வேண்டும். எனவே கலாசாலைகளில், கல்லூரிகளில், கல்வி பயிலுகின்ற மாணவர்கள் நாற்றங்காலில் இருக்கிற பயிருக்கு சமமானவர்கள் என்று அண்ணா சொன்னதை நான் நெஞ்சிலே பதிய வைத்துக் கொண்டுதான் இந்தக் கருத்தை உங்களிடத்திலே எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.

நாட்டில் பல அரசுகள் வரலாம், மாறலாம். இங்கே வரவேற்புப் பேசிய நண்பர்கூட, இதற்கு முன்பு இரண்டு முறை கருணாநிதி இந்த மண்டபத்திற்கு வந்து பேசினார். கடைசியாக வந்தபோதுகூட முதல்வராக வந்து பேசினார். இன்றைக்கு எதிர்க் கட்சியினுடைய தலைவராக வந்து இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

முதல்வராக வந்தபோதும் இந்த மண்டபத்திலே இருந்த மாணவர்களையும் ஆசிரியர் பெருமக்களையும் சந்தித்த நேரத்திலே அதே மனோநிலைதான். இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவனாக வந்த நேரத்திலும் அதே மன

நிலைத்தான். திரைப்பாடல் கூட கேட்டு இருப்பீர்கள்! “அன்று வந்ததும் இதே நிலா! இன்று வந்ததும் அதே நிலா!” அதே நிலையில்தான் அன்றைக்கும் இருக்கிறேன்; இன்றைக்கும் இருக்கிறேன். முதலமைச்சராக இருக்கிற காரணத்தால் ஒன்று; எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற காரணத்தால் ஒன்று என்கிற இரண்டு நிலைமைகளைக் கொண்டவனல்ல நான்.

இங்கு உரையாற்றிய நண்பர்கள் எல்லாம் மையப்படுத்திச் சொன்னார்களே, அந்தத் தமிழ் உணர்வு, நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தாலும், ஆட்சிப் பொறுப்பிலே இல்லாவிட்டாலும் என்னுடைய குருதியோடு கலந்து மணம் கமழ்ந்து கொண்டிருக்கின்ற உணர்வு என்பதை நான் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

மாணவப் பருவத்திலே அரசியலிலே முழுக்க முழுக்க ஈடுபட்டு விடாதீர்கள் என்று சொல்கிற நான் என்னைப் பொறுத்தவரை மாணவப் பருவத்திலேதான் அரசியலில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

திருவாரூர் உயர்நிலைப் பள்ளியிலே படிக்கிற நேரத்திலே நான் அரசியல்வாதியாக மாறினேன். நான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதாக வீட்டிலே சொல்லி விட்டு தஞ்சை மாவட்டத்திலே சுற்றுப் பயணம் செய்த பெரியாரோடு கிளம்பி விட்டேன்; ஒரு வார காலம் பெரியாரோடு சுற்றுப் பயணம் செய்துவிட்டு வீட்டிலே கேட்டபொழுது தேர்வு நன்றாக எழுதி இருக்கிறேன் என்று சொன்னேன்.

நீங்கள் எண்ணலாம்; இப்படி எல்லாம் நாமும் செய்தால் முதலமைச்சராகி விடலாம் என்று; ஆனால் இவை எல்லாம் விதி விலக்குகள்.

முதற் பதிப்பு : மே 2000