உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

மாநகராட்சியில் சுதந்திரப் பொன்விழா

பகுதி 2 · 2 / 2

இன்றைக்கு மாநகராட்சி மன்றத் தேர்தல் ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றிருக்கின்றது. அதற்கே கூட ஒரு வெள்ளி விழா கொண்டாடலாம். 25 ஆண்டுகள் மாநகராட்சி மன்றங்கள் செயல்படாமல் இருந்து இன்றைக்கு ஆறு மாநகராட்சி மன்றங்கள் தமிழ்நாட்டிலே செயல்படுகிறதென்றால் அது தேர்தல் நேரத்திலே நாங்கள் அளித்த வாக்குறுதியைச் செயல்படுத்தியதுதான். ‘சொன்னதை செய்வோம்’, ‘செய்வதை சொல்வோம்’ என்ற அந்த வாக்குறுதியை நிறைவேற்றிய காரணத்தால்தான் இன்றைக்கு மாநகராட்சி மன்றம் சென்னையில் சுதந்திரப் பொன்விழா நாளைக் கொண்டாடுகின்ற இந்தக் காட்சியை நாமெல்லாம் காண்கிறோம்.

ஆனால், நான் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். சென்னையைப் பொறுத்த வரையிலே

25 ஆண்டு காலமாக மாநகராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவில்லை. அப்படி நடைபெறாமல் இருந்த மதுரை மாநகராட்சி, கோவை மாநகராட்சி, மற்ற மாநகராட்சி மன்றங்களுக்கும், பல்வேறு ஊராட்சி மன்றங்களுக்கும், ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெற்று பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கிய பஞ்சாயத்து சட்டம், பஞ்சாயத்து திட்டத்திற்கு மாறாக ஒரு குழப்பமான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதிலே பஞ்சாயத்தும், பஞ்சாயத்து யூனியனும், மாவட்டப் பஞ்சாயத்தும் ஒன்றோடொன்று இணையாமல் தனித் தனியாக திரிசங்கு சொர்க்கம் போல தொங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்தபோதே, அதை எதிர்த்த பெருமை எங்களுடைய இயக்கத்திற்கு உண்டு; எனக்கும் உண்டு.

எதிர்த்ததற்குக் காரணம் - இன்றைக்குச் சொல்கிறோமே, காமராஜர் வழி என்று - அந்தக் காமராஜர் வழியிலேதான் அன்றைக்கு எதிர்த்தோம். அவர் வழி நின்றுதான் எதிர்த்தோம். ராஜீவ்காந்தி கொண்டு வந்த அந்தத் திட்டத்தை நாங்கள் காமராஜர் வழிநின்று எதிர்த்தோம்.

என்ன சொல்லி எதிர்த்தோம்? காமராஜர் இந்தச் சமுதாய நலத் திட்டத்தில் ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம் என்ற இந்த இரண்டு தட்டுக்களோடு நிறுத்திவிட்டார். ஜில்லா போர்டுகள் தேவையில்லை என்று ஒழித்து விட்டார். அவர் கொண்டு வந்த திட்டம்தான் தமிழகத்திலே வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது; அதை மேலும் திருத்த வேண்டுமென்றால், செப்பனிட வேண்டுமென்றால், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தேர்தல் ஒன்றை அறிமுகப்படுத்தினால் போதுமென்று எண்ணி அண்ணா அவர்கள் ஊராட்சி மன்றங்களுக்கு நேரடித் தேர்தலைக் கொண்டு வந்தார்.

பிறகு எம்.ஜி.ஆர் முதலவராக இருந்தபோது

ஒன்றியங்களுக்கும், நகர மன்றங்களுக்கும் நேரடித் தேர்தலைக் கொண்டு வந்தார். அதோடு நிறுத்தியிருந்தால் இன்றைக்கு குழப்பங்களே வந்திருக்காது. அவருக்கு அதிகாரம் இல்லை. இவருக்கு அதிகாரம் இல்லை என்றெல்லாம் இன்றைக்கு சொல்கிறோம்.

ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்காதே என்று ஒரு சட்டமன்ற உறுப்பினரே எங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. இந்த அதிகாரத்தை - கல் எடுக்கின்ற - குவாரி கொண்டுகின்ற அதனால் வருகின்ற வருமானத்தைப் பெறுகின்ற அதிகாரத்தை ஊராட்சி மன்றங்களுக்குத் தரக்கூடாது என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் எழுதிய கடிதமே என்னிடத்திலே இருக்கிறது.

என்ன காரணம்? அதிகாரங்களை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கின்ற எண்ணம் பலருக்கு சுபாவத்திலே வருவதில்லை. அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கும்போது, அது மிகப் பரவலாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். மாவட்ட ஊராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்து கொடுத்தால் 29 இடங்களோடு அந்த பகிர்ந்தளிப்பு முடிந்து விடும். ஊராட்சி மன்றங்களுக்குப் பகிர்ந்து கொடுத்தால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களுக்கு அது பகிர்ந்தளிக்கப்படும்.

எனவேதான் இந்த அரசு ஊராட்சி மன்றங்களுக்கு பல அதிகாரங்களை இன்றைக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கின்றது.

ஆனால் பஞ்சாயத்து ராஜ் சட்டத்திலே உள்ள சொத்தை சோடைகள், ஓட்டை உடைசல்கள் - இவைகளின் காரணமாக, பஞ்சாயத்து ராஜ், இன்றைக்கு நாம் எண்ணியவாறு சீரோடும் சிறப்போடும் நடைபெற

வில்லை என்பது உண்மை. எனவேதான் நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். மத்தியிலே நடைபெற்று கொண்டிருக்கின்ற ஆட்சியாளர்கள் இந்தப் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை மறு பரிசீலனை செய்து, அதிலே திருத்தம் கொண்டு வந்து - காமராஜர் ஆட்சியை இங்கே உருவாக்குவது கூட பிறகு இருக்கட்டும், காமராஜர் கொண்டு வந்த உள்ளாட்சித் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு - பஞ்சாயத்து ராஜ் சட்டத்திலே கொண்டு வருவதற்கு முனைய வேண்டும்.

அப்படி முனைந்தால் அவர்களுக்கு நான் தோளோடு தோள் நின்று குரல் கொடுப்பேன் என்ற உறுதியையும் இந்த விழாவிலே நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த விழாவிலே வெற்றிவேல் அவர்கள் ஒரு கோரிக்கை வைத்தார்; எதிர்க்கட்சி அல்லவா; அமைச்சர்கள் வரும்போது கோரிக்கை வைக்காமல் இருக்க முடியுமா? ஆகவே வைத்தார். என்ன கோரிக்கை என்றால் - நிரம்ப பணியிடங்கள் காலி இருக்கின்றன; அவைகளை நிரப்ப வேண்டும்; அப்படி நிரப்புவதற்கு, தேசத் தியாகிகளுடைய வாரிசுகளுக்கும், மொழிக் காவலர்களுடைய வாரிசுகளுக்கும் அந்த வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க முடியுமா என்பதை அரசு பரிசீலித்து மேயர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரிவிக்கும் என்பதை வெற்றிவேல் அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

(கைத்தட்டல்)

நான் இந்த விழாவிலே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இது சென்னை மாநகராட்சி மன்றத்திற்காக அல்ல; பொதுவாக உள்ளாட்சி மன்றங்களுக்காகச் சொல்கிறேன். காலையிலே பத்திரிகையிலே ஒரு செய்தி படித்தேன். தஞ்சை மாவட்டத்திலே சீராவூர் என்கிற ஒரு ஊராட்சி மன்றத்திலே தலைவர், துணைத் தலைவர் இரண்டு பேருமே சேர்ந்து ஒரு நல்லகாரியம்(?) செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரம் அளித்திருக்கிறோம். ‘செக்’கிலே கையெழுத்துப் போடும் அதிகாரம்.

உங்களுக்குத் தெரியுமா? நான் நான்கு, ஐந்து கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு முதலமைச்சர். ஆனால் அரசு காசோலையில் கையெழுத்துப் போடுகின்ற அதிகாரம் எனக்குக் கிடையாது. ஊராட்சித் தலைவர்களுக்கு அந்த அதிகாரம் உண்டு. பஞ்சாயத்து யூனியன் தலைவருக்கு அந்த அதிகாரம் கிடையாது. மாவட்ட ஊராட்சித் தலைவருக்கும் கிடையாது. “செக்”கிலே கையெழுத்துப் போடுகின்ற அதிகாரம் - முதலமைச்சருக்குக்கூட கிடையாது - ஊராட்சித் தலைவர்களுக்கு உண்டு.

அதைப் பயன்படுத்திக் கொண்டு - அந்த சீராவூர் ஊராட்சி மன்றத் தலைவரும், துணைத் தலைவரும்

இரண்டாயிரம் ரூபாய் எடுக்க வேண்டியதற்குப் பதிலாக நாற்பதாயிரம் ரூபாய் எடுத்து தங்கள் வீட்டுத் தேவையான பீரோ, மேஜை, நாற்காலி, மின்சார விசிறி எல்லாம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவைகள் எல்லாம் இல்லாத இடத்திற்கு இப்போது அவர்கள் போயிருக்கிறார்கள். அதாவது சிறைச்சாலைக்கு அவர்கள் போயிருக்கிறார்கள். எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி - அவர்கள் போய்த்தான் தீர வேண்டும்.

இன்னொரு ஊர் - கூரக்கோட்டை - அங்கே உள்ள ஊராட்சியில் ஒருவர்; நான் கட்சிப் பெயரையெல்லாம் சொல்ல விரும்பவில்லை. முதலிலே நான் கூறிய அந்த இருவரும் தி.மு.க. அனுதாபிகள் என்று தினமலரிலே போட்டுள்ளது. அது உண்மையோ பொய்யோ தெரியாது. எந்தவித அனுதாபியாக இருந்தாலும் சரி - எங்கள் அனுதாபம் கிடையாது. (கைத்தட்டல்) சட்டத்தின் அனுதாபம் கிடையாது; ஊழலை ஒழிக்கிறது மாத்திரமல்ல; ஊழலைத் தடுக்க வேண்டும். அதுதான் தி.மு.கழக ஆட்சியின் குறிக்கோள்.

தவறு செய்தவர்களைத் தப்ப விடக் கூடாது. தப்ப விடு என்று சிபாரிசு செய்யவும் யாரும் வரக்கூடாது. அப்படி வந்தால், முதலில் சிபாரிசு செய்ய வருகின்றவர்களைத்தான் பிடித்து உள்ளே போட வேண்டும்.

தூரக்கோட்டையில் - இன்னொரு கட்சியைச் சேர்ந்தவர் - நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. விரைவில் பெயர் வெளியே வரும். ஆனால் ஊராட்சி மன்றத்திலே நிற்கும்போது சுயேச்சையாகத்தான் நின்றார்கள். அவர் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் அல்ல; ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாயை சுரண்டிக் கொண்டு, முன் ஜாமீன் பெறுவதற்காக சென்னைக்கு

வந்து சுற்றிக் கொண்டிருக்கிறார். ஆகவே, மக்களாட்சியின் மாண்பை வளர்க்க வேண்டும். அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்று எண்ணுகின்ற நேரத்தில், அதற்குத் தடையாக, இடையூறாக, முட்டுக்கட்டையாக இன்றைக்கு இப்படியும் சிலபேர் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

நான் இதிலே எவ்வளவு கண்டிப்பானவன் என்பதை சென்னை மாநகராட்சி மன்றத்திலே 1974-ஆம் ஆண்டு வாக்கிலே நான் எடுத்த நடவடிக்கையிலேயிருந்தே நீங்கள் எல்லாம் புரிந்து கொண்டிருக்கலாம். பெரியவர் செங்கல்வராயன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதே மாமன்றத்தில் நடைபெற்ற ஒரு ஊழல், சட்டமன்றத்திலே டாக்டர் ஹண்டே அவர்கள் அதை வெளிப்படுத்திய போது - அதைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருந்த காரணத்தால் உடனடியாக நான் மன்றத்திலே எழுந்து சொன்னேன்.

“இன்று முதல் சென்னை மாநகராட்சி மன்றம் கலைக்கப்படுகிறது” என்று கூறி எனக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்றில்லாமல் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று சொன்னேன். என் ஆருயிர் நண்பர்களாக இருந்த முன்னாள் மேயர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் எல்லாம் சிறையிலே வாடினார்கள்.

எனவே, உங்களுக்கு நான் நிச்சயமாகச் சொல்கிறேன். இங்கே பேசும்போது பெரியவர் செங்கல்வராயன் குறிப்பிட்டார். கலைஞருக்கு அவருடைய பெற்றோர் வைத்த பெயரின்படி - அவர் பெயர் கருணாநிதி, கருணையும் இருக்கிறது, நிதியும் இருக்கிறது என்று சொன்னார். ஐயா, செங்கல்வராயன் அவர்களே, என் பெற்றோர்கள் சரியாகத்தான் பெயர்

வைத்தார்கள். கருணை அதிகம் இருக்கிறது. அது மூன்றெழுத்து - கருணை; நிதி குறைவாகத்தான் இருக்கின்றது. அதனால் தான் இரண்டு எழுத்து - நிதி. நிதி குறைவாக இருக்கின்றது. கருணை அதிகம் இருந்தாலும்கூட, தவறு செய்பவர்களைக் கண்டால், அந்த “கருணை” - “கடுமை”யாக மாறும் என்பதையும் தவறு செய்யாதவர்கள்தான் தமிழகத்தை, இந்தியத் திருநாட்டைக் காப்பாற்றக் கூடியவர்கள் - வருங்காலத்தை நிர்மாணிக்கக் கூடியவர்கள் - புதிய சமுதாயத்தை உருவாக்கக் கூடியவர்கள் என்பதையும் நான் இங்கே எடுத்துச் சொல்லி, இந்த இனிய நிகழ்ச்சியிலே என்னுடைய தலைவர் அறிஞர் அண்ணாவின் பெயரால் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைத் தொடங்கி வைக்கின்ற சென்னை மாநகராட்சி மன்றத்துக்கும், மேயர் அவர்களுக்கும், துணை மேயர் அவர்களுக்கும், மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த அன்பினை, பாராட்டினை வாழ்த்தினைத் தெரிவித்து இந்த அளவில் விடைபெறுகிறேன்.

- முரசொலி 20-8-97

முதற் பதிப்பு : மே 2000