மாநகராட்சியில் சுதந்திரப் பொன்விழா
பகுதி 1 · 1 / 2
மாநகராட்சியில்
சுதந்திரப் பொன்விழா
சுதந்திர பொன்விழா நிகழ்ச்சியை இந்தியத் திருநாடு அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் தமிழகம் எந்த மாநிலத்துக்கும் சளைக்கவில்லை என்பதுகூட அல்ல - எல்லா மாநிலத்திற்கும் வழிகாட்டக் கூடியது என்ற அளவில் இந்த சுதந்திரப் பொன்விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதில் ஒரு கூறாக, சென்னை மாநகராட்சி மன்றம் இன்றைய இனிய விழாவை ஏற்பாடு செய்து நன்றி தெரிவிக்கின்ற - பெரியவர்களுக்கு மரியாதை காட்டுகின்ற - வழிகாட்டியாக இருந்தவர்களுக்கெல்லாம் அன்பினை வழங்குகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளை இணைத்து சுதந்திர பொன்விழா நினைவுத் தூண் ஒன்றை நிறுவுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவையும், அறிஞர் அண்ணா பெயரால் அமைந்துள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கான துவக்க விழாவையும் நடத்துகின்ற பாங்கினைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இங்கே இந்த மாமன்றத்தில் ஆளுகிற தரப்பில் மன்றத்தின் தலைவராக இருப்பவருக்குப் பெயர் மலையன். எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவருக்குப்
பெயர் வெற்றிவேல். எதிர்க்கட்சி வேலாக இருக்குமென்ற காரணத்தால் மலையை ஆளும் கட்சித் தலைவராக அமர்த்தியிருக்கிறோம். மலையை வேல் பிளந்த புராண கதை எல்லாம் உண்டு. என்றாலுங்கூட, இந்த வேல் அப்படிப்பட்ட வேல் அல்ல. (கைத்தட்டல்) இது பழனி மலை மீது அடக்கமாக அமர்ந்திருக்கின்ற பழனி வேலைப் போன்ற வேல் இந்த வெற்றிவேல் என்பது (கைத்தட்டல்) எனக்கு நன்றாகத் தெரியும்.
அடக்கம் இருந்தாலும், இலட்சியங்களை விட்டுக் கொடுக்காமல், கொள்கை பிறழாமல் தன்னுடைய கட்சியை எடுத்துரைப்பதிலே எந்தவகையில் தயக்கமும் காட்டாமல் பணியாற்றக்கூடிய வெற்றிவேலை எதிர்க்கட்சியின் தலைவராகவும், வந்து தாக்குகின்ற வேலும் முறுங்காமல், மலையிலும் சிறிதும் சேதாரம் ஏற்படாமல் காக்கின்ற மன்றத் தலைவராக மலையனையும் பெற்று மாநகராட்சி மன்றத்திலே எல்லா கட்சிகளையும் சார்ந்த உறுப்பினர்களையும் - இவர் இன்ன கட்சிக்காரர், இவர் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என்ற வேறுபாடு எள்ளளவும் இல்லாமல் அவர்களை இன்றைக்கு தலைமை ஏற்று அவர்களுடைய பெரும் துணையோடு மாநகரத்தின் பணிகளை மேயர் மு.க. ஸ்டாலின் நடத்திக் கொண்டிருப்பதையும் - அவருக்கு துணையாக துணை மேயர் இருப்பதையும் நான் எண்ணியெண்ணி மகிழ்வதைப் போலவே நம்முடைய பெரியவர் செங்கல்வராயன் அவர்களும் அந்த மகிழ்ச்சியிலே திளைத்து இந்தப் பொன்விழாவிலே தன்னுடைய பொன்னான வாயால், சில பொன்னான பாராட்டுச் சொற்களையெல்லாம் வழங்கியிருக்கிறார்.
அவர்கள் இன்றைக்கு தமிழகத்திலே நடைபெறுகின்ற ஆட்சியைப் பற்றியும் நல்லாட்சி நடைபெறுகிறது என்று
சொன்னார்கள். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று பட்டம் வாங்குவது சுலபம் அல்ல. வசிஷ்டர் வாயாலேயே இது நல்லாட்சிதான் என்று இன்றைக்கு பட்டம் பெற்ற பிறகு வேறு யார் சொன்னாலும் நான் அதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை. ஏனென்றால் இந்த நாட்டிற்கு சுதந்திரம் பெறுவதற்காக எதையும் எதிர்பாராமல், இவருக்கு இன்னது கிடைக்குமென்று பலர் எதிர்பார்த்த நேரத்தில் எல்லாம் கிடைக்காமல் போன போது கூட, தான் ஏற்றுக் கொண்ட கொள்கையிலே உறுதியாக இருந்து லவலேசமும் தடம் பிறழாமல் தன்னுடைய பொது வாழ்க்கையை ஆரம்பித்த இடத்திலேயிருந்து இந்த முதுமைக் கோலத்திலே - முதுமைக் காலத்திலே கூட உறுதியாகப் பின்பற்றி வருகின்ற ஒரு தியாகச் சுடர் டி.
செங்கல்வராயன் அவர்கள் ஆவார்கள். அவர்கள் இன்றைக்கு நடைபெறுகின்ற மாநில ஆட்சியையும், மாநகராட்சியையும் புகழ்ந்து பேசியிருப்பது இந்தப் பொன்விழாவிலே எங்களுக்குத் தியாகிகளால் சூட்டப்பட்ட பொற்பதக்கங்கள் என்று நான் கருதுகிறேன். அதற்கான என்னுடைய நன்றியை, வணக்கத்தை அவருக்குத் தெரிவித்துக் கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழகம்தான் பல இந்திய திருநாட்டின் நிகழ்வுகளுக்கெல்லாம் முன்னோடியாக இருந்திருக்கின்றது. இங்கே உள்ளாட்சித் துறை அமைச்சர் தம்பி கோ.சி. மணி எடுத்துக்காட்டியதைப் போல, மேயர் தன் உரையிலே குறிப்பிட்டதைப் போல இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கான திட்டங்கள் கூட உத்தமர் காந்தியடிகள், மூதறிஞர் இராஜாஜி இவர்கள் எல்லாம் கலந்து ஆலோசித்த இடமாகவே தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரம் இருந்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும்போதும், முதல் சுதந்திரப்
போராட்டம் வேலூர் பகுதியிலேதான் தொடங்கியது என்பதை வரலாறு ரீதியாக அறிகின்ற போதும் காந்தியடிகள் இந்தியாவிலே உள்ள வறுமை நிலையை அடையாளம் காணுகின்ற பகுதியாக மதுரை மாவட்டப் பகுதி இருந்தது; அதற்குப் பிறகுதான் அவர் முழு வேட்டியும், முழுத் துண்டும் அணியத் தொடங்கினார் என்ற அந்தச் சரித்திரமும், தமிழகத்திலே இருந்து தொடங்கின.
நான் பல நிகழ்ச்சிகளிலே குறிப்பிட்டதைப் போல, தென்னாப்பிரிக்கா இன வெறி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காந்தியடிகளுக்கு துணையாக இருந்தவர்கள் தில்லையாடியைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்ற ஆதி திராவிடப் பெண், நாகப்பன், நாராயணசாமி என்ற இரண்டு ஆதி திராவிடத் தோழர்கள் காந்தியடிகளோடு தென்னாப்பிரிக்கா போராட்டத்திலே ஈடுபட்டு சிறைச்சாலைக்குச் சென்றவர்கள்; சிறைச்சாலையிலே அனுபவித்த கொடுமைகளின் காரணமாக வெளியே வந்த சில நாட்களுக்கெல்லாம் மறைந்து போனவர்கள், மாண்டு போனவர்கள்.
அந்த நிகழ்ச்சியை வைத்து காந்தியடிகள் சொன்னதாக வரலாறு கூறுகிறது. “தில்லையாடி வள்ளி அம்மாளும், நாகப்பனும், நாராயணசாமியும் என்னோடு இணைந்து நடத்திய இந்த இனவெறி எதிர்ப்புப் போராட்டம், இந்தியாவிலே விடுதலைப் போராட்டத்திற்கு என்னைத் தாண்டவிட்ட தூண்டுகோலாகும்” என்றும் காந்தியடிகள் குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே இந்தியாவில் இன்று சுதந்திரப் பொன்விழா நாளை - பொன்விழா ஆண்டை நாம் கொண்டாடுகிறோம் என்றால், அதற்கு தமிழகம்தான் அன்றைக்குத் தாயகமாக இருந்திருக்கின்றது - விடுதலைப் போராட்டத்திற்கு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
இந்தத் தமிழகம் புரட்சிக்காக மாத்திரமல்ல; விடுதலைப் போராட்டத்திற்காக மாத்திரமல்ல, சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், சுதந்திரம் பெற்ற பிறகும் கூட பல ஆக்க ரீதியான செயல்பாடுகளுக்கும் முன்னோடியாக இருந்திருக்கின்றது. இதோ நம் முன்னால் நின்று கொண்டிருக்கின்ற வெள்ளுடை வேந்தர், திராவிட இயக்க முன்னோடி சர்.பி.டி.தியாகராயர், சென்னை மாநகரத்தின் தலைவராக இருந்தபோதுதான் - சென்னை மாநகரத்திலே பள்ளிப் பிள்ளைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அந்தத் திட்டத்தின் வளர்ச்சியாகத்தான் அதற்குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பின் முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மதிய உணவுத் திட்டத்தை - தியாகராயர் மாநகராட்சி மன்றத்திலே அறிமுகப்படுத்தியதை தூண்டுகோலாகக் கொண்டு முழுதும் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அந்தத் திட்டம் அரசின் சார்பாகவே தனித்து செயல்படாமல் ஆங்காங்குள்ள பெற்றோர்கள் - பெற்றோர்களிடத்தில் ஆசிரியர்கள் சென்று பணம் வசூலித்து அதன் மூலமாக நடைபெற்ற திட்டமாகும். அதற்குப் பிறகு திராவிட இயக்கத்திலே ஆட்சிக்கு வந்த என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதற்குப் பிறகு 89ல் நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது - முன்னவர் கொண்டு வந்த திட்டத்தை பின்னால் வந்தவர்கள் சிதைக்கக் கூடாது என்ற அரசியல் நாகரிகத்தோடு, அதை மேலும் வளர்க்க வேண்டுமென்ற அடிப்படைப் பண்போடு சத்துணவு - முட்டையோடு கூடிய சத்துணவு என்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வளவிற்கும் பிறகுதான் தமிழ் நாட்டிலே சத்துணவு துறையிலே - மதிய உணவுத் துறையிலே
இந்தப் புரட்சி ஏற்பட்ட பிறகுதான் அகில இந்திய அளவிலே இப்படி மக்களுக்கு மாணவர்களுக்கு சத்துணவு அளிக்க வேண்டுமென்ற ஒரு திட்டத்தை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அவர்கள் அறிவித்தார்கள் என்பதை நீங்கள் எல்லாம் மறந்திருக்க முடியாது.
தம்பி கோ.சி.மணி இங்கே சுட்டிக்காட்டியதைப் போல, 1974-ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்த அந்தக் காலகட்டத்தில் ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக காங்க்ரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அறிவித்து இரண்டாண்டு காலத்திலே ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்பட வேண்டுமென்று திட்டமிட்டு - திட்டம் 74-ஆம் ஆண்டு தொடங்கி ஒன்றரை ஆண்டுக்காலத்திலே 35,000 வீடுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாக காங்க்ரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டு - பிறகு ஆட்சி கலைக்கப்பட்ட காரணத்தால் அந்தத் திட்டத்திலே தொய்வு ஏற்பட்டு, மீண்டும் 89-90இல் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்தத் திட்டம் வேகமாகச் செயல்படுத்தப்பட்டு இப்போது மீண்டும் அந்தத் திட்டம் அகில இந்தியாவிலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டு - மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு ‘இந்திரா காந்தி நினைவு வீடு கட்டும் திட்டம்’ என்று பெயர் வைத்திருப்பதாக கோ.சி.
மணி இங்கே சொன்னார்.
நான் அந்தத் திட்டத்தின் பெயரைப் பற்றிக் கவலைப்படவில்லை. திட்டம், திட்டமாக இருந்தால் போதும் என்பதுதான். அந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு தொகை தருகிறது. மாநில அரசு ஒரு தொகை ஈடு செய்கிறது. அதுவும் போதாமல், அந்தத் தொகுப்பு வீடுகளுக்கெல்லாம் ஆதி திராவிட மக்களுக்கு சாதாரண வீடுகளாக இருக்கக் கூடாது. காங்க்ரீட் தளம் வேண்டும்
மென்பதற்காக ஏறத்தாழ 11,000 ரூபாயை அந்த வீடுகளுக்காக தமிழக அரசு செலவழிக்கின்றது.
மாநில அரசு செலவழித்தாலும், மத்திய அரசு செலவழித்தாலும் இரண்டும் மக்கள் பணம்தான். அதை நானும் மறந்துவிடக் கூடாது. மக்களிலே இருப்பவர்களும் மறந்துவிடக் கூடாது. மத்தியிலிருந்து பணம் கொடுக்கிறோம் என்று சொல்வார்களானால், மாநிலங்களிலேயிருந்து வசூலிக்கப்படுகின்ற வரிதான் மத்தியிலே குவிந்து, அங்கிருந்து இங்கே வருகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதைப்போல மாநில அரசாகிய நாங்கள் செய்கிறோம் என்று சொல்கிற நேரத்தில், மக்களிடமிருந்து வசூலிக்கப்படுகின்ற வரிதான் எங்களிடமிருந்தும் உங்களுக்கு மீண்டும் பலன்களாக கிடைக்கின்றது என்பதை நானும் மறந்துவிடக் கூடாது நீங்களும் மறந்துவிடக் கூடாது.
