கூழாங்கல்லை வைரமாக்குவோம்
பகுதி 2 · 2 / 2
கல்வி முறை கூடாது. “வைரமாகுகின்றீர் எம்மை! ஏழையின் வீட்டில் வைரத்திற்கு மதிப்பு ஏது? சீமாட்டியின் மூக்குத்தி போல் வைரமாயினும் கோதினார் என்பார்! குப்பை மேட்டில் வைரத்திற்குக் கொளரவம் உண்டோ?” எனக் கேட்கும் பட்டை தீட்டப்பட்ட வைரமெனப் பட்டம் பெற்ற நீவீர்; வேலை எங்கே பணம் தேடிட எனக் குழுமுவது யாருக்கும் தெரியாமல் இல்லை. படிப்பின் இலட்சிய நோக்கு வேலை ஒன்றுதான் எனக்கூறிட இயலாதாயினும் வேலை வாய்ப்பு அளித்திடும் திட்டத்தையும் விரைவுபடுத்தி விரிவுபடுத்தினால்தான் நாடு வறுமைக் காட்டாகும் நிலையிலிருந்து விடுபடும் என்பதை உணர்ந்தே செயல்பட வேண்டும்.
பட்டம் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தேடித் தருவதற்குப் பல்கலைக் கழகத்தில் வேலை தேடித்தரும் தனிப்பிரிவு ஒன்றினை ஏற்படுத்துவது அவசியம் என்று இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நம் நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் இத்தகைய பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய பிரிவினால் உருப்படியான நன்மை ஏற்பட வேண்டுமென்றால், பொதுத் துறையிலும் தனியார் துறையிலும் இயங்கிவரும் தொழில் நிறுவனங்களிலுள்ள வேலைகளுக்குத் தகுதியுடையோரைத் தேர்ந்தெடுக்கும்போது இப்பிரிவின் தொடர்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேனாடுகளில் தனியார் தொழில்களில் ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அத்தொழில் நிறுவனங்கள் கல்லூரிகளுடன் தொடர்பு கொண்டு, சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் கல்லூரியிலிருந்து தேர்வு பெறுவதற்கு முன்பாகவே அவர்களுக்கு வேலை உத்தரவாதம் அளிக்க முன்வருகின்றன. அத்தகைய நிலை நம் நாட்டில் உருவாவதற்கு இன்னும் பல ஆண்டுகள் செல்லக்கூடுமென்ற போதிலும், இதில் உடனடியாக ஒரு தொடக்கம் காண்பது அவசியமாகிறது.
பல்கலைக்
கழகங்கள் வேலைதேடித்தரும் பிரிவை அமைக்கும்போது தனியார் தொழில் நிறுவனங்களின் அதிபர்களைக் கொண்டு ஆலோசனைக் குழு ஒன்றினை அமைத்தல் நலம். தென் பகுதியில் உள்ள எல்லாப் பல்கலைக் கழகங்களும் ஒன்று சேர்ந்து பொதுவான ஒரு குழுவினை அமைப்பது நல்ல பலன் தரும். தனியார் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான தேர்ச்சியுடைய மாணவர்களைத் தயார் செய்யும் வகையிலும் பல்கலைக்கழகங்கள் தம்முடைய பாடத் திட்டங்களையும் திருத்தியமைத்துக் கொள்வது அவசியம்.
ஐந்தாண்டுத் திட்டப் பணிகளையொட்டி, வேலை வாய்ப்புகள் பெருகி வருகின்றன. இருந்த போதிலும் படித்தவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளிக்கும் நிலையினை நாம் உடனடியாக எய்திட முடியாது. இன்னும் ஒரு சில ஆண்டுகளாகிலும் படித்தவர்கள் அனைவரும், அரசாங்க அமைப்புகளிலோ தனியார் தொழில் நிறுவனங்களிலோ, வேலை கிடைக்கும் வாய்ப்பை மட்டும் எதிர் பார்த்துக் கொண்டிராமல் தாங்களே சொந்தமாகத் தொழில் முயற்சிகளைத் தொடங்கிடல் வேண்டும்.
அவ்வாறு தொழில் மேற்கொள்ள வரும் படித்தவர்களுக்குப் பண உதவி அளிப்பதற்கு இப்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் முன்வந்துள்ளன.
வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்றவர்கள் கூடச் சொந்தத்தில் வேளாண்மைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்குதல் ஏனோ? இவர்கள் பயிற்சியும் படிப்பும் நாட்டுக்குப் பயனுள்ளவையாக அமைந்திட வேண்டுமென்றால், அவர்கள் வேளாண்மையில் ஈடுபட முன்வர வேண்டும். அது போலவே பொறியியல் பயிற்சியில் பட்டம் பெற்றவர்களும் கிராமங்களுக்குச் சென்று, சிறு சிறு தொழிற் கூடங்களும் பட்டறைகளும் அமைத்துக் கொள்வது, அவர்களுக்கும் நல்லது; சமுதாயத்திற்கும் பெரும் உதவியாயிருக்கும்.
நம் வளர்ச்சித்
திட்டங்களையொட்டி, கிராமங்களில் பலவாயிரக் கணக்கான நீர் இறைவை இயந்திரங்களும், பூச்சி மருந்து தெளிப்பான்களும், இதர முற்போக்கு வேளாண்மைக் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் பல இன்று பழுதாகியுள்ளதை நாம் காண்கிறோம். இந்த இயந்திர சாதனங்களுக்குத் தேவைப்படும் பழுதுபார்க்கும் வேலையைச் செய்வதற்கு உள்ளூரிலேயே திறமையுள்ளவர்கள் கிடைக்காத காரணத்தினால் இக்கருவிகள் பல, இயங்காமல் முடங்கிக் கிடக்கின்றன.
இந்தக் குறையினைப் போக்கிட வேண்டுமென்றால், பொறியியல் பயிற்சி பெற்ற மாணவர்கள் கிராமப் புறங்களுக்குச் சென்று கிராமத்திலேயே தொழிற் கூடங்கள் அமைத்து, அங்குள்ள வேளாண்மைக் கருவிகளைப் பழுது பார்த்துச் செம்மையாக அவை இயங்குவதற்கு உதவி செய்திட முன்வர வேண்டும்.
இப்போது அறிவியல் படிப்பில் மாணவர்கள் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர். இது வரவேற்கத் தக்கது. ஆயினும், அறிவியல் படித்த மாணவர்கள் வரலாறு, கலையியல் ஆகியவற்றைப் பற்றி அக்கறை கொள்ளாத ஒரு நிலையும், நாம் காண்கிறோம். மாணவர்கள் முழுமையான ஆற்றல் பெற்றிட இந்தநிலை உகந்தது அல்ல. பள்ளிப் படிப்பு வரை, அறிவியல், கலையியல் எல்லாப் பாடங்களையும், பொதுவாகக் கற்று வரும் மாணவர்கள், கல்லூரியில் புதுமுக வகுப்பு நிலைக்கு வந்தவுடன் கலையியல் பாடப் பயிற்சியையோ அறிவியல் பாடப் பயிற்சியையோ தேர்ந்தெடுத்து, இரு தனிப் பிரிவுகளாகச் சென்று விடுகின்றனர்.
கல்லூரி மட்டத்தில் கலையியல் பாடத்தை அவர்கள் படிக்கும்போது அறிவியல் அனுபவம் பெறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு எதுவுமே இல்லாமல் போய்விடுகிறது. அதுபோலவே அறிவியல் பயிற்சியைத் தேர்ந்தெடுப்பவர்கள், கலையியல், வரலாறு, பொருளியல், ஆகிய பாடங்களோடு சிறிதும் தொடர்பில்லாத நிலை
ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலையினைப் போக்கிட, அறிவியல் பாடங்களில் சிறப்பாகத் தேர்ச்சி பெறுபவர்களும், கலையியல், வரலாறு, பொருளியல் போன்ற பாடங்களில் ஒன்றினைக் கட்டாயமாகக் கல்லூரிப் பயிற்சிக் காலம் முழுவதும் படிக்க வேண்டுமென்று விதிப்பதும், வரலாறு, கலையியல் போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்தவர்கள், இயற்பியல், வேதியல், உயிரியல் போன்ற அறிவியல் பாடங்களில் ஒன்றினைக் கற்றிட வேண்டுமென்று விதிப்பதும் அவசியம் என்று நான் கருதுகிறேன்.
இது பல்கலைக் கழகப் பாடத் திட்டத்திலேயே முற்றிலும் புதிய ஒரு மாற்றம் என்று சிலர் தயங்கலாம். ஆனால் நம்முடைய மாணவர்கள் ஒரு சீரான அறிவைப் பெற்று, எல்லாத் துறைகளிலும் ஓரளவு ஈடுபாடு கொண்டு, அதனை அடிப்படையாக வைத்துச் சில சிறப்புப் பாடங்களில் நுட்பத் தேர்ச்சி பெற வேண்டுமென்றால், இந்தச் சீர்திருத்தம் இன்றியமையாதது என்பது என்னுடைய திடமான எண்ணம். அறிவியல், கலையியல் இரண்டு துறைகளிலுமே இணைந்த அறிவு, மாணவர்களுக்கு இன்றியமையாததாகிறது.
அந்த இரண்டு அறிவுகளையும் இணைத்து நாம் வழங்கத் தவறுவதால்தான், மாணவர்களிடையே தேர்ச்சிக் குறைவும், வேலை வாய்ப்புகள் பெறுவதில் சிரமங்களும் ஏற்படுகின்றன. கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட வல்லுநர், நான் கூறியுள்ள இக்கருத்தைப் புதிய கருத்து என்ற காரணத்திற்காகவே புறக்கணித்து விடாமல் அறிவியல், கலையியல் ஆகிய இரண்டு துறைகளிலும் மாணவர்களுக்கு முழுமையாகப் பயிற்சி அளிப்பதற்கு இப்போதுள்ள பாடத் திட்டங்களில் மாற்றல்கள் செய்திட முன்வர வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலே படிக்க இளைஞர்கள் சமுதாயப் பணியில் ஈடுபடுவதற்காக, அமைதிப்படை இயக்கம், தொண்டர்படை இயக்கம்
போன்ற இயக்கங்கள் இயங்கி வருகின்றன. இது போலவே நம் நாட்டு இளைஞர்கள் சமுதாய உயர்வுப் பணியில் ஈடுபடத் திட்டங்களைத் தீட்டுவது அவசியமாகிறது. பட்டம்பெற்ற அனைவரும் ஓராண்டாகிலும் சமூகத் தொண்டினில் ஈடுபடுவதைக் கட்டாயமாக்க வேண்டுமென்று சிலர் ஆலோசனை கூறியுள்ளார்கள். தொண்டினைக் கட்டாயப்படுத்திச் செயல்படுத்திட முடியாது. அதே சமயத்தில் மாணவர்கள் கிராமங்களுக்குச் சென்று சேவை செய்ய வேண்டுமென்று மேடையில் முழங்குவதாலும், அறிவுரைகள் கூறி, அறைகூவல் விடுவதாலும் மட்டுமே நாம் எதையும் சாதித்துவிட முடியாது.
உண்மையிலேயே உருப்படியான பலன் ஏற்பட வேண்டுமென்றால் மாணவர்களைத் தொண்டில் ஈர்த்துத் தாமாகவே விரும்பி முன்வந்து இந்த சேவைத் திட்டங்களில் பங்கு கொள்வதற்குச் சாதகமான சூழ்நிலையினை நாம் உருவாக்கித் தர வேண்டும். அதற்காக அவர்களுக்குப் பண உதவிகளும் சலுகைகளும் அளிக்க வேண்டும்.
இதை மனத்திற் கொண்டுதான் தமிழ்நாட்டில் 2,000 படித்த இளைஞர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று தொண்டு செய்வதற்கு ஊக்கம் அளிக்கும் திட்டம் ஒன்றினைத் தமிழக அரசு இந்த ஆண்டு கொண்டு வந்துள்ளது. இலட்சியத் துடிப்பும், ஆர்வமும், ஆற்றலும் கொண்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று விழைகிறேன்.
வேலை வாய்ப்புகள் - அதன் வாயிலாக வருவாய் - இவையெல்லாம் இளந் தலைமுறையை இயந்திரமாகச் செய்துவிடல் கூடாது. தானுண்டு தன் பெண்டு பிள்ளையுண்டு என ஒவ்வொரு இளைஞனும் மாதந்தோறும் ஊதியக் கணக்கு வரவு - செலவுகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் நாட்டின் பொதுவான முன்னேற்றம் தடைப்பட்டுப் போய்விடும். அந்த முன்னேற்றம் முகிழ்க்க முனைந்து நிற்க வேண்டியது இளைஞர் பேரணியே யாகும்.
இளைஞர்கள்தான் முற்போக்கு எண்ணங்களின் முன்னோடிகள். இளைஞர்களின் அமைதியின்மை - இந்தியப் பிரச்சினை அல்ல; அனைத்துலகப் பிரச்சினை! ஒவ்வொரு பழைய தலைமுறையும், புதிய தலைமுறையை பழித்தே பழக்கப்பட்டிருக்கிறது. பிளேட்டோ காலத்திலிருந்து இப்படித்தான்; இன்று நேற்றல்ல!
“இந்தத் தலைமுறை முன்புபோல் இல்லை; தரம் குறைந்து விட்டது.”
இது நமது பாட்டனார் காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்படும் குறை! குடும்பித் தலையில் மாற்றம் ஏற்பட்ட போதும் குழுமல் - இப்போது உடலைப் பிடிக்கும் உடைகளை காணும்போதும் குழுமல் - நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்களல்ல; மனதில் ஏற்படும் மாற்றங்கள்தான் சமுதாயத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் புதிய கோணங்களை ஏற்படுத்த வல்லவை! ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலைமுறைக்கும் வேறுபாடு இருப்பது தவறில்லை.
ஆனால், இடையில் ஆக்கபூர்வமான வளர்ச்சி அமைந்திடல் தேவை. பிளேட்டோ காலத்தில் சில நூறு மாணவர்கள் இருந்தார்கள்; ஆனால் இன்று அமெரிக்க நாட்டின் மக்கள் தொகையில் பாதிப்பேர் மாணவர்கள்.
இந்தியாவில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருக்கும் மாணவர்களின் தொகை, பிரான்ஸ் நாட்டு மக்கள் தொகைக்குச் சமம். மாணவர்களில் ஒரு சிலரது உள்ளத்தில் தீவிரவாதம் பொங்கியெழுந்து வழிந்தோடுகிறது. நான் தீவிரவாதத்தின் பகைவனல்ல. முகத்திலே இருக்கும் பருக்கள் அழகைக் கெடுக்கின்றன. உண்மைதான். அதற்கு அடிப்படைக் காரணமுணர்ந்து மருந்திடல்தான் முறையே தவிரச் சந்திரபிம்பமெனும் வதனத்தை விகாரமாக்கும் பருக்களைக் கிள்ளி எறிகிறேன் என நகம் கொண்டு பெயர்த்தெறிந்தால் ரத்தம் கொப்பளிக்கும்.
தழும்புகள் தோன்றும். சில வேளைகளில் புண்பட்டுப் புரையோடி உயிர்க்கே உலை வைக்கும். குறு மருந்துகளை
அகற்றும் கொள்கையில் வேறுபாடில்லை. முறையில் தானே முரண்பாடு! இலட்சியத்தைப் போலவே இலட்சியத்தை அடையும் வழிமுறைகளும் நன்முறைகளாகவே இருத்தல் வேண்டும்.
பல்கலைக் கழகத்திற்கு வரும் பாதையிலே பால் வடியும் முகத்தினன் - மாணவன் ராஜேந்திரன் சிலையாக நின்று கொண்டிருக்கிறான். தன்னை வளர்த்த மொழியைக் காக்க அவன் தன்னுயிரைத் தாரை வார்த்தான். இலட்சியம் ஈடேறப் பிறரை வருத்தல் - பிறரை அழித்தல் - முறையல்ல! கூடாது! கூடவே கூடாது!
“கொலைவாளினை எட்டா; மிகு கொடியோரைச் செயல் அறவே!” என்றார் பாரதிதாசன். கவிதையை உற்றுக் கவனியுங்கள்!
கொடியோரைச் செயல் அறவே கொலைவாளினை எட்டா என்றாரே தவிர; கொடியோர் தலை அறவே கொலைவாளினை எட்டா எனக் கூறினார் இல்லை! சிலர் செயல் அறத்தான் அந்தச் சிங்கநாதம் செய்தார்.
அந்தச் சிங்கக் கூட்டத்தைத்தான் என் எதிரே காணுகின்றேன். இறும்புதெய்துகின்றேன்.
கருமுகில் கண்டு திருமயில் ஆடுமென்பர். கதிரொளி கண்டு தாமரை மலருமென்பர். என் நிலையும் அதுதான்!
உமது விழியொளி கண்டு மகிழ்கின்றேன் - விடைபெற முடியாது பிரிகின்றேன். வணக்கம்.
1969-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் நாள் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவு. (முதல்வர் கலைஞருக்கு டாக்டர் பட்டம் வழங்கப் பெற்றது அன்றுதான்.)
