உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

கூழாங்கல்லை வைரமாக்குவோம்

பகுதி 1 · 1 / 2

கூழாங்கல்லை வைரமாக்குவோம்

பல்கலைக்கழக வேந்தர்களே! இணை வேந்தர்களே! துணை வேந்தர்களே! பேராசிரியப் பெருமக்களே! மாணவர்களே!

“இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை இரவாய்ப்புப் புன்செய்யில் எருவாக்கிப் போட்டு மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம வழக்கெலாம் குழிகொட்டி மண்மூடிப் போட்டு தெருட்சாருஞ் சுத்த சன்மார்க்க நன் நீதி”

வழங்கிய அருட்சோதி வள்ளலார் காட்டும் தூயநெறி நின்று பணியாற்ற, வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் எனும் மகிழ்ச்சியுடன் அடிகளார் வாழ்ந்து சிறந்த தில்லை மூதூரில்:

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாய் காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய் வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய் மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியாய் நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய்

எழுந்து நிற்கும் அறிவுக்கூடமாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெறக் குழுமியுள்ள என் அன்பு உடன் பிறப்புக்களே!

உங்களையெல்லாம்,

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாகக் கூட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே தனித்த நறுந்தேன் பெய்து பசும்பாலும் தெங்கின் தனிப்பாலுஞ் சேர்த்தொரு தீம் பருப்பிடியும் விரவி இனித்த நறுநெய் அளைந்தே இளஞ்சூட்டில் இறக்கி எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடும் தெள்ளமுதாம்

என் தமிழ்மொழியால் வாழ்த்துகின்றேன். அறிவுத் துறைக்கு ஆக்கம் சேர்த்த ஆல்பிரட் நோபல், ராக் பெல்லர் போன்ற கல்வித் துறைக்குக் கரம் சிவக்க வாரி வழங்கியவர் அண்ணாமலை அரசர். அந்த ஏந்தலின் புகழ்பாடும் எழில் மாளிகையாகத் திகழ்வதே இந்தப் பல்கலைக் கழகம். அந்தப் பெரியவரின் கீர்த்திக்கொடி வான் முட்டப் பறந்திட அரும்பணியாற்றிடும் ஆசிரியப் பெருமக்களும் மாணவ நண்பர்களும் தமிழுலகின் பாராட்டுக்குரியவர்களாவார் என்பதில் வியப்பேது மில்லை.

விரிந்து மலர்ந்து தழைக்கும் அறிவுலகில் ஆற்றலாளர்களாய்ப் பீடுநடை போட்டுப் பட்டம் பெறுகின்றீர் இன்று. உமக்கிடையே வாழ்த்துரை தந்திட வந்துள்ள எனக்குமோர் பட்டமளிப்பினை நடத்துகின்ற நிகழ்ச்சிக்கு எவ்வாறு நான் நன்றி கூறுவேன்! சங்க காலத் தமிழகத்தில் விழுப்புண் படாது இயற்கையாக ஒருவன் இறந்திடுவானாயின், அவன் சடலத்தைப் புதைப்பதற்கு முன்னர்; கத்தியால் ஒரு காயத்தைச் செய்து அவனை விழுப்புண் பெற்றவனாய் ஆக்குதல் மரபாம்.

அவ்வாறே இன்று எனக்கு ஒரு பட்டத்தை அளித்து என்னையும் பட்டம் பெற்றவனாக ஆக்குகின்றீர் என எண்ணுகின்றேன். என் உழைப்பில் நான் மேலும் உற்சாகம்

பெற்றிட - கொள்கைகளில் நான் மேலும் உறுதி கொண்டிட - இந்தச் சிறப்பு எனக்குக் காட்டப்பட்டதாகக் கருதி, இந்த விருது தமிழ் உணர்வுக்கும், கலையார்வத்துக்கும், பண்பட்ட பகுத்தறிவுக் கொள்கைக்கும் அளிக்கப்பட்ட விருது எனக்கொண்டு, இந்தப் பெருமையை என்னருந் தமிழர்க்கும் எனை வளர்த்த தலைவர்க்கும் காணிக்கையாக்குகின்றேன்.

இந்தப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலே பேருரையாற்றிட அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்ட ஒன்றை நானும் இப்போது நினைவு கூறுகிறேன்.

“என்னுடைய வரம்புகள் எனக்குத் தெரிவது எனக்கு ஆறுதலாக இருக்கிறது. ஏனெனில் நான் புதிதாகச் சுயமாக என்னால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கருத்துக்களையோ தத்துவங்களையோ உங்களுக்கு இப்போது வழங்கப் போவதில்லை; அறிஞர் பலோரின் அறிவுரைகளையே உங்களுக்கு நினைவு படுத்தப் போகிறேன். கல்வித் துறையில் சம்பந்தப்பட்ட வல்லுநர்களின் கருத்துக்களை, சாமான்ய மனிதனின் பார்வையிலே நோக்க விரும்புகிறேன். இது சாமான்யர்களின் யுகம்.

இது சிலருக்கு வருத்தம் தருவதாக இருக்கலாம். ஆனால் இது மறுக்க முடியாத உண்மை. நான் அந்தச் சாமான்யர்களின் பிரதிநிதி.”

இப்படி அண்ணா அவர்கள் தன்னைப் பற்றிக் கூறிக் கொண்டது முற்றிலும் எனக்கும் பொருத்தமென்றே மதிக்கிறேன்! நீங்கள் வழங்கிடும் “டாக்டர்” விருது மேலும் என்னை அடக்கமுடையவனாக ஆக்கிடும் என்று உறுதி கூறுகின்றேன்.

நம் நாடு, கல்வித் துறையில் வியக்க முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. சமூகத்தில் செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்த ஒரு சிலரின் - வசதியும் வளமையும் படைத்திருந்த உயர் குடி மக்கள் ஒரு சிலரின்

- தனி உரிமையாகக் கல்வி இருந்த காலம் மாறி, இன்று சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள சாமான்யர்களும், தலைமுறை தலைமுறையாக அறிவாலயத்தில் நுழைய அருகதையற்றவர்களாயிருந்தவர்களும், கல்வி பயிலும் உரிமையும் வசதியும் பெற்று ஒளிவிளக்குகளாய் மின்னிடும் காட்சி காண்கிறோம். தகுதி, திறமை என்பவை எந்த ஒரு பிரிவினருக்கும் ஏகபோகமானவையல்ல; உரிய வாய்ப்பும் வசதியும் ஊக்கமும் அளித்தால் உயர்வடையும் தகுதியுள்ள மாணவர்கள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றனர் எனும் உண்மை உணர்ந்து அவ்வழி செயல்படும் காலம் இது.

இன்று பழைய கொள்கைகளும் கோட்பாடுகளும் தங்கள் செல்வாக்கை இழந்து விட்டன. ஆனால் அவற்றின் இடத்தில் புதிய குறிக்கோள்களும் இலட்சியங்களும் இன்னும் நிலைநிறுத்தப்படவில்லை. இன்று சமூகத்தில் நமக்கு ஏற்பட்டுள்ள பல சோதனைகளையும் சாதனைகளாக மாற்றும் அறைகூவலை ஏற்றுக் காலத்தோடு ஒட்டிய நெறிமுறைகளை - வாழ்க்கைப் பண்புகளை - வகுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். புதுமை வேகத்துடனும், புரட்சிக் கருத்துடனும் பொது நல நோக்குடனும் இளைஞர் சமுதாயம் நாட்டின் நல்வாழ்வில் பங்கு கொள்ள வகை செய்வதில் முன்னணியில் நிற்க வேண்டியவர்கள் மாணவர்களேயாவர்.

பல்கலைக் கழகம், தேசிய வாழ்க்கையின் கண்ணாடியாக இருக்க வேண்டும். சமுதாய வளர்ச்சியைப் பிரதிபலித்திட வேண்டும். மாறும் உலகிற்கேற்பப் புதிய தலைமுறையினரைத் தயாரிக்க வேண்டும்.

வாலிபம் ஒரு வசந்தம், மிக வசீகரமானதுங்கூட! ஆனால் அதில் உள்ள ஒரு குறை என்னவென்றால்; ஒவ்வொரு நாளும் - ஒவ்வொரு மணித் துளியும் - ஒவ்வொரு விநாடியும்-வாலிபத்தை, வயோதிகம் வாகை

சூடிக்கொண்டே இருக்கிறது. இளமை சிரஞ்சீவியாக இருக்க வேண்டுமெனில், அது உலைவிட்டு உள்ளத்தை அடைக்கலம் புகுந்திட வேண்டும். “வயதில் அறிவில் முதியோராய் வாய்மைப் போருக்கு என்றும் இளையோராய்” தங்கள் சிந்தனையோட்டத்தின் திசை திருப்பிட வேண்டும்.

ஏட்டுக் கல்வி, வளரும் தருவுக்கு வாகான உரம் என்பேன். அதற்காக உரம் மட்டுமே மரம் என இயம்பிடத் தவறன்றோ! கொடி பற்றும் கிளையும், கொழுந்தும் பழுப்புமாக இலையும், காய் கனிக் குலையும் கொண்டு, களைத்தோர்க்கு நிழலும் அளிப்பதன்றோ நன்மரமாகும்! கல்வியின் பயனும் அங்ஙனம் இருந்திடல் வேண்டும். பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை பயின்றாலும் பிறருக்கு நன்மைப் பயன்படுத்தும் கல்வி பெறாவிட்டால் நாட்டுக்கு ஏது நன்மை?

ஏட்டறிவு மட்டும் போதாது; இயற்கை அறிவும் வளர்ப்படுத்தப்பட வேண்டும்.

சிறந்த கல்வி மேதை திரு. ஏ.எல். முதலியார் அவர்கள் சுட்டிக் காட்டிய கருத்துப்பேழை ஒன்றினை உம் எதிரே திறந்திடல் பொருத்தமென எண்ணுகிறேன்.

“Success or failure at School or College supplies no standards by which the promise of the future may be estimated. Originality of thought or achievement is not measurable by the same units as those of absorbing power of a prescribed Pabulum usually tested by a written examination. To be able to reproduce the words of others or to shuffle mathematical symbols rapidly may be creditable but it is not to be compared with the power of originating ideas or devising new solutions to problems.

A student may possess many examination certificates and yet be only a kind of Text-Book Gramophone.”

“Unless he also acquires the desire to see and do things independently he knows nothing of the scientific spirit which yearns for new knowledge gained by new inquiry.”

கூழாங்கற்களை வைரமாக்கும் கல்விமுறை வேண்டும்-வயிற்றில் எண்ணெய் இறங்கிட வைத்திடும்

முதற் பதிப்பு : மே 2000