காஞ்சி மணிமொழியார் இல்ல மணவிழா
பகுதி 2 · 2 / 2
நாங்கள் விரும்புகின்ற சீர்திருத்தத் திருமணம் எங்கள் மொழிக்கு அங்கே மரியாதை செலுத்தப்பட வேண்டும். அங்கே அறிவுக்கு மரியாதைத் தரப்பட வேண்டும். அதே நேரத்தில் எங்கள் கருத்துக்களுக்கு மாறுபட்டவர்கள் அல்லது வேறு கருத்துடையவர்களுக்கு இங்கே இடமில்லை என்று நாங்கள் சொல்ல மாட்டோம்.
நம்முடைய இல்லத் திருமணங்கள் சீர்திருத்தத் திருமணங்களானாலும் சுயமரியாதைத் திருமணங்களானாலும், தமிழ் முறையிலே நடத்தப்படுகின்ற திருமணங்கள் ஆனாலும் எல்லாத் திருமணங்களிலும் நாம் நம்முடைய
தன்மான உணர்வு பட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறோமேயல்லாமல் வேறல்ல.
நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி சுருக்கமாக வாழ்த்திய போது குழந்தைகளை அளவோடு பெற வேண்டுமென்று வழக்கம்போல் - எல்லா திருமணங்களிலும் வாழ்த்துவதைப்போல் - அவருக்குரிய மக்கள் நல்வாழ்வுத் துறைக்கேற்ற வாழ்த்துரையை வழங்கினார். அதுமாத்திரமல்ல, இது இரண்டாவது தலைமுறைத் திருமணம் என்று மாறன் குறிப்பிட்டார்.
முதல் தலைமுறை திருமணம் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றாலுங்கூட, கலப்புத் திருமணமாக நடைபெறவில்லை. சாதிக்குள் சாதி திருமணமாகத்தான் நடைபெற்றது. இப்போது இரண்டாம் தலைமுறையும் அப்படித்தான் நடைபெறுகின்றது. எனவே நம்முடைய இளவரசு, கலையரசி பெறுகின்ற குழந்தைச் செல்வங்கள் மூன்றாம் தலைமுறையிலாவது கலப்புத் திருமணத்தைத் தங்கள் இல்லங்களிலே அறிமுகப்படுத்த வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். (கைத்தட்டல்)
சுயமரியாதைக்காரன், பகுத்தறிவுக்காரன், பெரியாருடைய அடிச்சுவட்டிலே வளர்ந்தவன், பேரறிஞர் அண்ணாவுடைய நிழலிலே வளர்ந்தவன் சுயமரியாதைத் திருமணத்தை மாத்திரம் நடத்தினால் போதாது, இதனுடைய தாத்பரியங்களையும் உணர்ந்து சாதி பேதம் அகல, மத பேதம் அகல கலப்புத் திருமணங்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். ஒரு வீட்டில் ஒரு கலப்புத் திருமணம் நடைபெற்றால் சாதி அகன்று விடுமா என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
அதற்காக இந்த முயற்சியைச் செய்யாமல் இருக்க முடியாது.
என்னுடைய இல்லத்திலே இதுவரை நடைபெற்ற திருமணங்களில் பல திருமணங்கள் காதல் திருமணங்கள், கலப்புத் திருமணங்கள். இனியும் அப்படிப்பட்ட திருமணங்கள்தாம் என் இல்லத்திலே நடக்கக்கூடும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனால் ஐந்தாறு பேருடைய இல்லங்களிலே கலப்புத் திருமணம் நடைபெற்றால் தமிழ்நாட்டிலே சாதி அகன்று விடுமா என்று கேட்பவர்கள் உண்டு.
இன்றுகூட ஒரு வாரப் பத்திரிகையிலே பார்த்தேன். மதுரையிலோ, திருச்சியிலோ ஒரு நூறு வீடுகளை சமத்துவபுரம் என்று கட்டி விட்டால் தமிழ்நாடு முழுக்க சமத்துவபுரம் வந்து விடுமா? என்று ‘துக்ளக்’ வார இதழில் ஒரு கேள்வி கேட்டு கட்டுரை எழுதியிருந்தார்கள்.
நான் திருப்பிக் கேட்க முடியும். ராஜாஜி அவர்கள் நூறு ஆதி திராவிடர்களை அழைத்துக்கொண்டு ஆலயப் பிரவேசம் செய்த காரணத்தால் சாதி ஒழிந்து விட்டதா? இல்லை, அதற்காக ஆலயப்பிரவேசம் செய்தது தவறு என்று கூற முடியுமா? முடியாது.
மதுரை வைத்தியநாதய்யர், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நூறு ஆதி திராவிடர்களை அழைத்துக் கொண்டு ஆலயப் பிரவேசம் செய்ததால், சாதி அகன்று விட்டதா என்றால் அகலவில்லை. அதற்காக அந்த முயற்சியை, அந்தச் செயலைக் குறை கூற முடியுமா?
அவ்வளவு ஏன்? சுப்பிரமணிய பாரதியார் புதுவையில் கனகலிங்கம் என்கிற ஒரு அரிஜனப் பையனை அழைத்து வந்து - ஐயர்களையெல்லாம் சுற்றி நிற்க வைத்து, அந்த ஆதி திராவிடப் பையனுக்குப் பூணூல் கல்யாணம் செய்து வைத்தார். அந்த ஆதி திராவிடப் பையனை அய்யராக ஆக்குகிறேன் பார், பூணூல் போட்டால் அய்யராகி விடுவான் அல்லவா? - என்று பூணூல்
திருமணம் செய்து வைத்தார். கனகலிங்கத்தை அய்யராக ஆக்கினால் நாடு பூராவும் இருக்கின்ற கனகலிங்கங்கள் எல்லாம் அய்யராக ஆகி விடுவார்களா? - என்று யாரும் கேட்கவில்லை.
ஆனால் நான் செய்தால் மாத்திரம் கேட்கிறார்கள். பாரதி செய்தால் அதை ஒத்துக் கொள்கிறார்கள். பாரதி வழி நின்று நான் செய்தால் அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். இராஜாஜி செய்தால் அதை ஏற்றிப் போற்றுகிறார்கள். மதுரை வைத்தியநாத அய்யர் செய்தால் பாராட்டுகிறார்கள், புகழ்கிறார்கள். ஆனால் நாம் செய்தால் அதை ஏற்க மறுக்கிறார்கள். மறுப்பவர்கள் சிலர்தான், எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்ள இருப்பவர்கள் பலர் என்ற நம்பிக்கையோடு தான் இந்த இயக்கம் இன்றைக்கு நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது.
தந்தை பெரியார் சொன்னார் - “குடியரசு பத்திரிகை நடத்துகிறேன். இதை வாங்கி யார் படித்தாலும் படிக்காவிட்டாலும் எனக்குக் கவலையில்லை. இது ஆயிரம் பிரதி போகிறதா, பத்தாயிரம் பிரதி போகிறதா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. யாரும் படிக்காவிட்டாலுங்கூட, நானே எழுதி, நானே அச்சடித்து, நானே அந்தப் பத்திரிகையை குடியரசு அலுவலகத் திண்ணையிலே உட்கார்ந்து நான் ஒருவனே படிப்பேன், அது போதும் எனக்கு. அந்தத் திருப்தி போதும் எனக்கு” என்று பெரியார் சொன்னார்.
அப்படிச் சொல்லித் தொடங்கப்பட்ட இயக்கம்தான் இன்றைக்குத் தமிழகம் முழுதும் பரவியிருக்கின்றது. இந்தக் கொள்கை இன்றைக்கு ஆல் போல் பரந்து விரிந்து நிழல் தந்து கொண்டிருக்கின்றது.
அப்படிப்பட்ட கொள்கைக்குரிய குடும்பம் - உறுதி படைத்த குடும்பம் - குன்று போல நிமிர்ந்து நிற்கின்ற குடும்பம் காஞ்சி மணிமொழியாருடைய குடும்பம். அந்தக் குடும்பத்துச் செல்வங்களிலே ஒருவராகத் திகழ்கின்ற இளஞ்செழியன் அவர்களின் இளவல் நடராஜன் அவர்கள் இல்லத்தில் அவருடைய மகன் இளவரசும் திருநாவுக்கரசின் மகள் கலையரசியும் இன்று பெறுகிற இதே இன்பத்தை என்றென்றும் பெற்று வாழ்வில் எல்லா வகையான வளங்களையும் பெற்று வீட்டிற்கு விளக்குகளாய் நாட்டிற்குத் தொண்டர்களாகத் திகழ வாழ்த்துகின்றேன்.
28-8-98 அன்று காஞ்சி மணிமொழியார் இல்ல மணவிழாவில் ஆற்றிய உரை
