காஞ்சி மணிமொழியார் இல்ல மணவிழா
பகுதி 1 · 1 / 2
காஞ்சி மணிமொழியார் இல்ல மணவிழா
நம்முடைய உள்ளங்களில் எல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற காஞ்சி மணிமொழியார் அவர்களுடைய பேரனும், நம்முடைய பேராசிரியர் இளஞ்செழியன் அவர்களுடைய இளவல் நடராஜன் அவர்களுடைய அருமைச் செல்வனுமான, இளவரசுக்கும் பொறியாளர் அன்பிற்குரிய நண்பர் திருநாவுக்கரசு அவர்களின் செல்வி கலையரசிக்கும் நம்மனைவருடைய நல்வாழ்த்துக்களோடு மணவிழா நிகழ்ச்சி இங்கே நிறைவேறியிருக்கின்றது. இந்த மணவிழாவிலே இந்த மண்டபம் குழுமியிருக்கின்ற அளவிற்கு உங்களை யெல்லாம் காணும்போது மணிமொழியார் அவர்கள் பால் நீங்கள் எல்லாம் எந்த அளவிற்கு அன்பு கொண்டிருக்கின்றீர்கள், பற்று வைத்திருக்கின்றீர்கள் என்பது விளங்குகின்றது.
மணிமொழியார் அவர்கள் சென்னை மாவட்டத்திலே கழகத்தை வளர்த்தார் என்று தம்பி முரசொலி மாறன் இங்கே குறிப்பிட்டார். மாவட்ட அளவிலே மாத்திரமல்லாமல் மாநில அளவிலும் தி.மு.கழகம்
வளருவதற்கு, வலிமை பெறுவதற்கு விரிவாக எல்லா இடங்களிலும் பரவுவதற்கு பேரறிஞர் அண்ணா அவர்களுக்குத் துணையாக நின்றவர்களில் ஒருவர் பெரியவர் காஞ்சி மணிமொழியார்.
தம்பி மாறன் பேசும்போது “வழங்கிய பதவியைக் கூட வேண்டாமென்று மறுத்தவர் பேராசிரியர் இளஞ்செழியன்” என்று குறிப்பிட்டார். அதைப் போலவே அவருடைய தந்தை மணிமொழியார் அவர்களும் பதவிக்காக இந்த இயக்கம் அல்ல, தான் பணிபுரிந்து இந்த இயக்கத்தை மேலும் வளர்ப்பேன் என்று ஊக்கத்தோடு, உணர்வோடு அரும்பணியாற்றியவர்.
1967-ஆம் ஆண்டு தேர்தலில் யார் யார் எங்கெங்கே வேட்பாளர்கள் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பு சைதாப்பேட்டை தொகுதியில் காஞ்சி மணிமொழியார் அவர்கள் சட்டப்பேரவை வேட்பாளராக நிற்க வேண்டுமென்று அந்தப் பகுதியிலே உள்ள செயல்வீரர்கள் எல்லாம் அறிஞர் அண்ணா அவர்களிடத்திலே எடுத்துச் சொன்னார்கள். அண்ணா அவர்கள் எனக்குத் தெரியாமல் காஞ்சி மணிமொழியாரை அழைத்து “இந்த முறை நான் சைதாப்பேட்டை தொகுதியில் கருணாநிதியை நிற்க வைக்கலாம் என்று கருதியிருக்கிறேன்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டவுடன், மணிமொழியார் அவர்கள் தான் வேட்பு மனு செய்வதில்லை என்று அண்ணா அவர்களிடம் கூறிவிட்டு - கூறியது மாத்திரமல்ல, என்னுடைய பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு - நான்கூட சைதாப்பேட்டை தொகுதியிலே அத்தனை முறை மக்களைச் சந்தித்திருக்க மாட்டேன். என்னைவிட அதிகமாக வாக்காளர் பெருமக்களைச் சந்தித்து
அன்றைக்கு என் வெற்றிக்காக அரும்பாடுபட்டு அந்த வெற்றிக் கனியைப் பறித்துத் தந்தவர் காஞ்சி மணிமொழியார் என்பதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.
ஒவ்வொரு நாளும் நான் காலையிலே வாக்காளர்களைச் சந்திக்க அவரையும் அழைத்துக் கொண்டு செல்வதற்காக அவர் இல்லத்திற்கு வரும்போது எங்களுக்கெல்லாம் முன்னவராக அவர் தன்னைத் தயார் செய்து கொண்டு, புறப்படத் தயாராக இருப்பார். காலையிலிருந்து மாலை வரை பல பகுதிகளுக்கும் வீடு வீடாகச் சென்று வாக்குகளைக் கேட்போம். எனக்கு கால்வலி எடுத்து விடும்.
மாலை 6 மணிக்கு அவரைப் பார்த்து “மணிமொழியார் அவர்களே, இன்றைக்கு இதோடு போதும். மீதமுள்ள இடங்களை நாளைக்குப் பார்க்கலாம்” என்று கூறுவேன். அதற்கு அவர், “இல்லையில்லை. என்ன, என்னைவிட வயதிலே இளையவர் நீங்கள். இப்படிக் களைத்துப் போகிறீர்கள்? இன்னும் இரண்டு தெருக்களில் வாக்கு கேட்டு விடலாம், வாருங்கள்” என்று வலுக்கட்டாயமாக என்னை அழைத்துச் சென்று அத்தனை வீடுகளிலும் வாக்கு கேட்டு முடித்தால்தான் அவருக்கு நிம்மதியாக இருக்கும்.
அதுமாத்திரமல்ல; மறுநாள் எந்தெந்த இடங்களுக்கு வாக்கு கேட்கச் செல்ல வேண்டும், எந்தெந்தப் பகுதியிலே இருக்கின்ற பெரியவர்களைச் சந்திக்க வேண்டும், யார் யாரை அணுகி அவர்களுடைய ஆதரவைப் பெற வேண்டும் என்கிற இந்தக் கணக்குகளையெல்லாம் மிகத் துல்லியமாகக் குறித்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப என்னை அந்தத் தேர்தலில் வழி நடத்தியிருக்கிறார்.
அண்ணா அவர்கள் தென் சென்னையிலே நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறுவதற்கும் அதைப்போல நான் சைதாப்பேட்டை தொகுதியிலே சட்டப் பேரவை உறுப்பினராக வெற்றி பெறுவதற்கும் கழகத்தின் செயல்வீரர்கள் பலரும் காரணமாக இருந்தாலும் கூட, அதற்கு வழிகாட்டிய பெருமை; தனக்குப் பதவி வேண்டாம், உங்களை அரியாசனத்தில் அமர்த்துகிறேன் - என்று உறுதி எடுத்துக் கொண்டு உழைத்த பெருமை காஞ்சி மணிமொழியாரையே சேரும்.
எனவே அந்த வகையில் காஞ்சி மணிமொழியாருடைய அந்தத் தியாக உள்ளத்தை திராவிட முன்னேற்றக் கழகத்திலே உள்ள எல்லா நண்பர்களும் - எல்லா அமைப்புகளிலும் உள்ளவர்களும் பின்பற்ற வேண்டுமென்பதுதான் இந்தத் திருமண விழாவிலே நான் விடுக்கும் செய்தியாகும்.
அவர் பதவியே வேண்டாமென்று வெறுத்தவரல்ல. அதைத் துறந்து விட்டவரல்ல. அதிலே சன்னியாசியாக இருக்க வேண்டுமென்று கூறியவருமல்ல. ஆனால் வேண்டாம், சற்று ஒதுங்கி இன்னாருக்கு வழி விடுங்கள் என்று தலைமை சொன்ன போதெல்லாம் அவ்வாறு வழிவிட்டு மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அவர்கள் விளங்கியவர்கள் என்பதற்காகத்தான் இன்னமும், அவர் மறைந்து பல ஆண்டுகளானாலும் கூட அந்தப் பெருமையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோமென்றால் அதுதான் காஞ்சி மணிமொழியார் என்று சொன்னால் அது மிகையாகாது.
அவருடைய அருமை மகன் நம்முடைய இளஞ்செழியன் நடத்திய ‘போர்வாள்’ ஏடு உள்ளபடியே தமிழகத்திலே உள்ள தன்மான வீரர்களுக்கு, திராவிட
இயக்க வீரர்களுக்கு, குறிப்பாக தி.மு.கழகத் தோழர்களுக்கெல்லாம் போர்வாளாகவே அவர்களுடைய கரங்களிலே மின்னிக் கொண்டிருந்ததை நாமெல்லாம் மிக நன்றாக அறிவோம். இளஞ்செழியன் எழுதிய ‘தமிழன் தொடுத்த போர்’ என்கிற அந்த நூலும் இன்னமும் தமிழகத்திலே இந்தி ஆதிக்க எதிர்ப்புக்கு நமக்கெல்லாம் பக்க பலமாக இருக்கக்கூடிய ஒரு பெட்டகமாகும். அப்படிப்பட்ட தமிழ்க்குடும்பம், தமிழுக்காக வாழ்ந்த குடும்பம், வாழ்ந்து கொண்டிருக்கிற குடும்பம், எதிர்காலத்திலும் வாழப் போகின்ற குடும்பம்.
அந்தக் குடும்பத்து நிகழ்ச்சி ஒன்றில் மணவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எங்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றாகும்.
இதை சீர்திருத்தத் திருமணம் என்று நண்பர் சுத்தானந்தம் குறிப்பிட்டு ஆனாலும் முருகனை வேண்டிக் கொள்கிறேன். இந்த மணமக்கள் வாழ வேண்டுமென்று அவர்கள் வாழ்த்தினார். சீர்திருத்தத் திருமணம் தி.மு.கழகத்தினால் நடத்தப்பட்டால் கூட அங்கே ஆஸ்திகர்களுக்கு இடம் இல்லை என்று நாங்கள் சொல்ல மாட்டோம்.
