கம்பர் விழா (1)
பகுதி 2 · 2 / 2
ஆனால், தன்னுடைய மனைவியை வாலி அபகரித்துக் கொண்டான் என்று குற்றஞ்சாட்டி
அதற்காக அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தானே சுக்கிரீவன், அந்தச் சுக்கிரீவன் வால்மீகி இராமாயணத்திலே என்ன செய்தான்? வாலி இறந்த பிறகு அவனுடைய மனைவி தாரையைத் தன்னுடைய மனைவியாக ஆக்கிக் கொண்டான். இது வால்மீகி இராமாயணத்தின்படி. ஆனால், கம்பர் இதற்கு இடம் தரவில்லை.
வால்மீகி இராமாயணத்தில் வாலி இறந்ததும் அவனுடைய மாளிகைக்கு இலக்குவன் செல்கிறான். அப்படிச் செல்கிற நேரத்தில், வாலியினுடைய மனைவியான தாரை - கணவனை இழந்த தாரை - மிக அழகாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு - ஆண்கள் பார்த்தால் - கவர்ந்திடத் தக்கவண்ணம் மிக ஒயிலாக இலக்குவனுக்கு முன்னால் வருகிறாள். அப்படி வருகிற நேரத்தில் இலக்குவனுக்குக்கூட அயோத்தியிலிருக்கிற தன்னுடைய மனைவி ஞாபகம் வந்துவிடுகிறது என்று வால்மீகி எழுதுகிறார்.
ஆனால் கம்பரோ தாரையை அப்படிப்பட்ட பெண்ணாகச் சித்தரித்துக் காட்ட விரும்பவில்லை. இலக்குவன் வாலியினுடைய மாளிகைக்குச் செல்கிற நேரத்தில், தாரை வெள்ளுடை பூண்டு, தமிழ்நாட்டுப் பெண்களுக்குரிய விதவைக் கோலத்தோடு, தலைமுடி கோலத்தோடு வருகிறாள்! இவ்வாறு தாரையைப் பற்றிக் கம்பர் வர்ணிக்கிறார்.
ஆனால் வால்மீகி இராமாயணத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு ஏற்றவாறு அந்தப் புனைவினைக் கையாண்டு, கம்பர் தமிழர்களுக்காக இராமாயணத்தை யாத்தார். அதில் குறிப்பிட்டிருக்கிற கதாபாத்திரங்களைப் பற்றி ஓரிடத்திலே நியாயமாகப் பேசுகிறார். பிறிதோரிடத்தில் அவர்களைப்பற்றி நியாயக் குறைவாகப் பேசுகிறார்கள்.
கதாபாத்திரங்கள் அல்ல முக்கியம்; நானேகூட எத்தனையோ கதைகளை எழுதியிருக்கிறேன்.
நான் எழுதிய கதாபாத்திரங்களைப் பாராட்டுவதற்காகச் சிறப்புக் கூட்டங்கள் நடத்தியதில்லை. எத்தனையோ கதைகளை எழுதிய பிறகு, எழுத்தாளர் என்ற அளவிலேதான் என்னைப் பாராட்டியிருக்கிறார்கள்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள், எத்தனையோ அருமையான நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் எத்தனையோ பாத்திரங்களை எல்லாம் படைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் பாராட்டுவதற்காக விழா நடந்ததில்லை. இப்படியெல்லாம் பாத்திரங்களைப் படைத்திருக்கிறாரே - இன்னின்ன கருத்துக்களை எடுத்து இயம்பியிருக்கிறாரே! என்பதற்காகத்தான் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களை நான் பாராட்டுகிறேன்.
அதைப் போலவே நமது சா. கணேசன் அவர்கள் பல பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார். அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்காக அல்ல, அப்படிப்பட்ட பாத்திரங்களை உருவாக்குகின்ற திறமை பெற்றமைக்காகத்தான் பாராட்டப் பெற்றிருக்கிறார்.
சிலம்புச் செல்வர் எழுதியிருக்கின்ற ‘கம்பர் கவியின்ப’த்திலேகூட ஓரிடத்திலே கண்ணனையும் இராமனையும் ஒப்பிடுகிறார்.
யுத்த களத்திலே இராவணன் நிராயுதபாணியாக நிற்கிறான். அந்த நேரத்திலே இராமன், “இன்று போய் நாளை வா” என்று சொல்லி இராவணனை அனுப்பி வைக்கின்றான். இதுவன்றோ யுத்த மரபு? இதுவன்றோ யுத்த தர்மம்? என்று இராமனை சிலம்புச் செல்வர் பாராட்டுகிறார். அங்கே பாராட்டி விட்டுக் கண்ணனை இழுத்து நிறுத்தி, யுத்த களத்தில் நீதியுடன் நடந்து கொள்ளவில்லை. இந்தக் கண்ணன் தந்திர முறைகளால் யுத்த நெறிக்கு முரண்பாடாகக் கர்ணனைக் கொல்வதற்கு உடன்பாடாக இருந்தான்.
ஆகவே கண்ணன் காட்டிய
வழியை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்; யுத்த தந்திரங்களில் கண்ணன் சிறந்தவனாக இருக்கின்றான். ஆனால் பிடிக்க வேண்டிய முறைகளும் நல்ல முறைகளாக இருக்க வேண்டும் என்று ம.பொ.சி. அங்கே வாதிட்டுக் கண்ணனைக் குற்றவாளியாக்கி, இராமனைத் தர்மவானாக ஆக்கிக் காட்டுகிறார்.
மறுபடியும் ஒரு பத்துப் பக்கம் புரட்டினால் அங்கே பழையபடியும் அவர் கண்ணனையும் இராமனையும் சந்திக்க வைக்கிறார்; வாலி வதைப் படத்தில்!
வாலி வதைப் படலத்தில் இராமன் செய்தது தவறுதான்; இரு சகோதரர்களின் பிரச்சினையில் தலையிட்டு, ஆயுதத்தால் ஒருவனைக் கொன்று முடிவு கட்டுவது நல்லதல்ல என்று கூறி இராமனைக் குற்றவாளியாக்கிவிட்டுப் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் சகோதரச் சண்டை என்று வந்த பிறகு - கண்ணன் தன் கையில் ஆயுதம் தாங்காமலேயே - அதில் குறுக்கிடாமலிருந்தார், அவர் ஆயுதம் தாங்கவில்லை. ஆகவே கண்ணனுடைய செயல் இந்த இடத்தில் சிறந்தது; இராமனுடைய செயல் ஒப்புக் கொள்ளத் தக்கதல்ல என்று இதே புத்தகத்தில் இரண்டு இடங்களில் இத்தகைய இருவேறு கருத்துக்களைக் கூறுகிறார் சிலம்புச் செல்வர்.
நான் சிலம்புச் செல்வரைக் குறை கூறவில்லை. அந்தக் கதாபாத்திரங்கள் இப்படிப்பட்ட முரண்பாடான நிலையில் படைக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த நூலாக இருந்தாலும் எப்படி அந்தக் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருந்தாலும் விமர்சிக்கிற நாமே குழப்பங்களுக்கு ஆளாகிற அளவுக்கு அந்தக் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்தக் கதாபாத்திரங்கள் மூலமாகப் பேசப்படுகின்ற தமிழ் இருக்கிறதே, அந்தக் கதாபாத்திரங்கள் மூலமாகக் கம்பர் வடித்திருக்கின்ற உண்மை இருக்கிறதே, அதன் மூலமாக அவன் தமிழுக்கு ஆற்றியிருக்கின்ற தொண்டு இருக்கிறதே, அது தமிழ் உள்ளளவும் தமிழ்நாடு உள்ளளவும் தமிழகத்திலே கடைசித்
தமிழன் உள்ளளவும் பாராட்டத் தக்கதாகும் என்பதை நான் மறுக்கவில்லை.
திரு. ம.பொ.சி. எங்கே சிறு தவறு நடந்தாலும் மன்னிக்க மாட்டார். ஆகவேதான் பக்கத்திற்குப் பக்கம் அவருடைய “கம்பர் கவியின்பம்” என்ற நூலில் கம்பராமாயணத்தின் கதாபாத்திரமானாலும் வால்மீகியினுடைய கதாபாத்திரமானாலும் தனது வன்மையான கண்டனங்களைப் பொழிகிறார்; அதே நேரத்தில் சமாதானங்களையும் சொல்கிறார்.
இராமாயணத்தின் வாலி வதைப் படலம் கம்பராமாயணத்திற்கே களங்கம் என்று கூறிவிட்டு அடுத்துச் சொல்கிறார்; “என்ன செய்வது? சந்திரனிலேயே களங்க மில்லையா?” என்று.
ஆகவே சந்திரனில் களங்கம் இருப்பதனாலேயே சந்திரனுக்கு அழகு என்று குறிப்பிட்டு, அவர் கம்பராமாயணத்தைக் காப்பாற்ற விரும்புகிறார். எதற்காக? தமிழுக்காக!
ஆக, எரிக்க வேண்டும் என்று சொன்ன நேரத்தில் நாங்கள் என்னென்ன கருத்துக்களைச் சொன்னோமோ; இன்னமும் சொல்கிறோமோ அதே கருத்துக்களை, எரிக்க வேண்டாம் என்ற தரப்பிலே சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் அன்றைக்கே மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். ஆகவே, அவர் குற்றம் இருக்கிற இடத்தில் கண்டிக்கும் ஆற்றல் படைத்தவர் என்று நான் பெரிதும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்று இந்த விழாவில் கலந்து கொள்கிற சிலம்புச் செல்வர் ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தை எதிர்த்து மாநாடு நடத்தினார். இன்று திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு உறுதுணையாக இருக்கிறார்! என்ன காரணம்?
திராவிட-நாடு பிரிவினைக் கொள்கையை நாங்கள் விட்டுவிட்ட காரணத்தால் எங்களுடன் இணைந்திருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார்; இணைந்தார்.
அதைப் போலவே நான் கம்பர் விழாவிலே பேச வந்திருக்கிறேன் என்றால், இப்போது பெரும்பாலான புலவர்கள் கம்பருடைய கவிநயத்தை மாத்திரம் பாராட்டுகிறார்கள்; பாத்திரங்களை விட்டு விட்டார்கள் என்ற காரணத்தினால் நான் இங்கு வந்திருக்கிறேனே அல்லாமல் வேறல்ல; ஆக, விட்டுக் கொடுக்கின்ற தன்மை இருசாராருக்கும் வருகின்ற நேரத்தில், ஒருவரோடொருவர் கலந்து அணுகி நெருங்கிட வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த முறையில்தான் இந்த விழாவிலே கலந்து கொள்கிற வாய்ப்பினை நான் பெற்றேன்.
இந்த விழா மூலமாகக் கம்பனுடைய புகழை ஒருவருக்கொருவர் எண்ணி மகிழ்கிற அதே நேரத்தில், கம்பன் வளர்த்த புகழ்த் தமிழ் மேலும் வளர்க்கப்பட, அந்தத் தமிழுக்கு மேலும் ஆக்கம், ஊக்கம் அளிக்கப்படக் கம்பனைப் பாராட்டிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது! அந்தத் தமிழ் ஏற்றம் பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
1969-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் காரைக்குடி கம்பர் விழாவில் ஆற்றிய உரை.
