உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

கம்பர் விழா (1)

பகுதி 1 · 1 / 2

கம்பர் விழா (1)

வழக்கம் போல் காரைக்குடியில் நடக்கின்ற கம்பர் விழாவுக்கு, வழக்கத்திற்கு மாறாக நான் வந்திருக்கிறேன்.

என்ன பேசப்போகிறேன் என்கிற வினாக் குறியோடு நீங்களெல்லாம் கூடியிருக்கிறீர்கள் என்பதை நானறிவேன்.

“ஒரு காலத்தில், கம்பராமாயணத்தை எரிக்க வேண்டுமெனச் சொன்னவனாயிற்றே! இவன் எப்படி இங்கு வந்தான்?” என்று நீங்கள் கேட்பதைவிட “கம்பராமாயணத்தை எரிக்க வேண்டுமென சொன்னவனாயிற்றே! எப்படி இவனை அழைத்தார்கள்?” என்று கேட்பதுதான் பொருத்தமான கேள்வியாகும்.

ஆகவே எனக்கு இருக்கிற துணிவைவிட என்னை இங்கு அழைத்தவர்களுக்கு இருக்கிற துணிவு அதிகம் என்று கருதுகிறேன்.

கம்பராமாயணம், சுமார் பதினைந்து இருபதாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலே பிரச்சினைக்குரிய ஒன்றாக ஆயிற்று. அதனை எரிக்க வேண்டும் என்கிற புயல்வேகப் பிரச்சாரம் தமிழ்நாட்டிலே பெரியார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுப் பல சொற்போர்கள் தமிழகத்தில் நடைபெற்றன. நாவலர் சோமசுந்தர பாரதியாரை எதிர்த்தும், சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளையை எதிர்த்தும் பேரறிஞர் அண்ணா அவர்கள் சொற்போர் புரிந்தார்கள். இறுதியாக அண்ணா அவர்களின் கருத்துக்களை எதிர்ப்பதற்காக வந்தவர்கள், கம்பராமாயணத்தை அதனுடைய கவி நயத்திற்காக

எரிக்காமல் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்களே தவிர அந்தக் கதாபாத்திரங்களின்பால் தங்களுக்கு உள்ள பக்தியை வெளிப்படுத்தவில்லை. அன்று கிடைத்த அந்த வெற்றியின் காரணமாகத்தான் எரிக்கின்ற முயற்சி கைவிடப்பட்டது.

எரிப்பதிலே பலவகை உண்டு. அடுப்பெரிப்பது நல்ல அறுசுவையான உணவு கிடைப்பதற்காக; விளக்கு எரிப்பது வீட்டிலே ஒளி கிடைப்பதற்காக; அதைப் போலவே கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும் என்று கூறியதும் கம்பனுடைய கவியுள்ளத்தை மட்டும் புலவர்கள் நாட்டு மக்களிடத்திலே எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் என்பதைப் புலவர் பெருமக்கள் புரிந்து கொண்டார்கள்.

ஆகவே, புலவர்கள் புரிந்துகொண்ட பிறகு அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியதில்லை என்றுதான் அந்த முயற்சி கைவிடப்பட்டது!

இங்கே தலைமை வகித்துப் பேசிய நண்பர் அவர்கள் மிகத் தெளிவாக ஒன்றைக் குறிப்பிட்டார்கள்.

இந்த விழா இராமனைப் பாராட்டுவதற்காகவோ - இலக்குவனைப் பாராட்டுவதற்காகவோ நடைபெறுவது அல்ல - இது கம்பனைப் பாராட்டுகிற விழா என்று குறிப்பிட்டார்கள். நானும் அதற்காகத்தான் வந்திருக்கிறேன்!

நாங்கள் கம்பனைப் பாராட்டுகிறோம் என்பது, திரு. சா. கணேசன் அவர்கள் அழைத்து நான் இங்கே வந்த பிறகு புரிந்து கொள்கிற ஒன்றல்ல. உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபொழுது தமிழ்நாட்டுப் புலவர் பெருமக்களுக்கெல்லாம் சென்னை கடற்கரையில் சிலைகள் வைத்த நேரத்தில், கம்பருக்கும் ஒரு சிலை வைத்துள்ள நாங்கள் கம்பனைப் பாராட்டத் தவறியவர்களல்லர்-கம்பனுடைய தமிழைப் பாராட்டத் தவறியவர்களல்லர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இராவணனை இரக்கமற்ற அரக்கன் என்று கம்பர் கூறியதை எதிர்த்து அவன் நீதிமன்றத்திலே ஒரு வழக்குத் தொடுக்கிறான்.

இராவணன் நீதிமன்றத்தில் கம்பனைக் குற்றஞ் சாட்டி வழக்குத் தொடர்ந்து பேசுகிற நேரத்தில் அவனுடைய அந்த வாதத் திறமையையும் கம்பனுடைய கவிதைத் திறமையையும் பார்த்து, என்ன தீர்ப்புச் சொல்வதென்று புரியாமல் திகைத்து நீதிதேவன் மயங்கி விழுந்து விடுகிறான் - திரை விழுகிறது; நாடகம் முடிகிறது.

அந்த வாதத்தைக் கேட்டவர்கள் அனைவரும் மயங்குகிறார்கள்; ஆகவே நீதிதேவன் மயங்குவதில் வியப்பில்லை என்று கருத்துப்பட அண்ணா அவர்கள் “நீதிதேவன் மயக்கம்” என்ற அந்த நாடகத்தை முடித்திருக்கிறார்கள். இதிலே அண்ணாதான் இராவணனாக நடித்தார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.

வால்மீகி இராமாயணத்தில் வருகின்ற கதாபாத்திரங்களுக்கெல்லாம் கம்பர் தமிழ் வடிவம் கொடுத்து - தமிழர்களது கலாச்சாரம், தமிழர்களுடைய பண்பாடு, தமிழர்களுடைய நெறி - இவைகளுக்கு ஒப்புக் கொண்டு வர மிகவும் முயன்றிருக்கின்றார்.

கோடிட்டுக் கொள்ள வேண்டும் - முயன்றிருக்கிறார் என்றுதான் நான் கூறினேன்.

இறுதியாக, அவர்களைத் தமிழ்க் கதாபாத்திரங்களாகக் கம்பர் கொண்டு வந்துவிடவில்லை. அதற்கு ஆதாரம் தேவை என்றால் எனக்குப் பாதுகாப்பாகச் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களை எதிரிலே வைத்துக் கொண்டுதான் நான் இந்த விவாதத்தைத் துவக்குகிறேன். எனக்கு ஒரு நண்பர் கடிதம் எழுதினார்: “கம்பர் விழாவில் கலந்து கொள்கிறீர்களாமே! மிகவும் நன்று! வியப்படைகிறோம்! ஆனாலும் மகிழ்ச்சி கொள்கிறோம்! விழாவிலே உங்களுக்குப் பயன்படுகிற வகையிலே சிலம்புச் செல்வர்

ம.பொ.சி. அவர்களுடைய ‘கம்பர் கவியின்பம்’ என்ற புத்தகத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்”, என்று தெரிவித்து, அந்தப் புத்தகத்தையும் அனுப்பி வைத்தார். அதை நான் நேற்றுப் புகைவண்டியில் வருகிற நேரத்தில் முழுவதும் படித்துப் பார்த்தேன்.

தலைவர் அவர்கள் இராமன் வாலியைக் கொன்றது சரிதான் என்று அவரே வாதாடியதாகக் குறிப்பிட்டார். இன்று எனக்குப் பிறகு பேசவிருக்கிற சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் அந்த நிகழ்ச்சி பற்றி என்ன கூறுகிறார்கள் என்று கவனித்தால் ‘இராமன், வாலியைக் கொன்றது நீதியற்ற செயல் என்ற முடிவுக்கு நான் வர வேண்டியவனாக இருக்கிறேன்!’

என்றுதான் புத்தகத்தையே முடிக்கிறார்.

அதற்கு மேல் அவர் என்ன நினைக்கிறார் என்பதற்குப் புத்தகத்தில் இடமில்லை.

கம்பனிலும் இடமில்லை என்கிறார் திரு. சா. கணேசன் அவர்கள். ஆகவேதான் பின்னால் இருந்து தாக்குவது - மறைந்திருந்து தாக்குவது - தமிழர்களது போர் முறையல்ல என்பதால்தான், கம்பர், வாலியின் வாயுரையாகவே வீரத்தினுடைய மகிமையைப் பற்றி பேசச் செய்கிறார்.

“இவ்வளவு பெரிய மாவீரனான இராமனே என்னை மறைந்திருந்து தாக்கலாமா?” என்ற கேள்வியை வாலியின் மூலமாகக் கம்பரே எழுப்புகிறார் போலும்!

அதற்கு இராமனால்கூடப் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த விழாவினுடைய தலைவர் அவர்கள், “சுக்கிரீவனுடைய மனைவியை வாலி அபகரித்துக் கொண்டான், அதற்காக வாலியை இராமன் மறைந்திருந்து கொன்று ஓராவிற்கு நியாயந்தான்” என்று விவரித்தார்;

முதற் பதிப்பு : மே 2000