உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கலைவாணர்/பகுதி 1
சொற்பொழிவுகள்

கலைவாணர்

பகுதி 1 · 1 / 2

கலைவாணர்

இன்று கலைவாணர் விழா நடத்துவது போலவே, இதே குழுவினால் ஆண்டுதோறும் கலைவாணர் விழா நடத்தப்படும்!

கலைவாணரோடு நெருங்கியிருந்து - கலைப்பணி ஆற்றிய பெரியவர்கள், கலையுலகத் தோழர்கள் ஆகியோருக்கு அந்த விழாக்களில் ஏற்ற வகையில் பாராட்டும் பொற்கிழியும் அளிக்கப்படும்.

கலைவாணர் அவர்கள் இந்த நாட்டில் செய்து விட்டுப்போன காரியங்கள் என்றென்றும் நம் மனத்திரையில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

உலகத் தமிழ் மாநாடு முடிந்து - ஊர்வலக் குழுவில் அங்கம் வகித்த மறைந்த பெரியவர் எஸ்.எஸ். வாசனும், திரு. ஏ.வி.எம். செட்டியாரும் என்னிடம் வந்து, “ஊர்வலக் குழுவில் மிகுதியான பணத்தை என்ன செய்வது?” என்று கேட்டார்கள்.

“கலைவாணர் சிலை அமைக்கலாமே!” என்று யோசனை கூறினேன்.

பத்தே நாட்களில் சிலையை அற்புதமாக அவர்கள் தயாரித்தார்கள்.

“கலைவாணர் சிலையைத் திறந்து விட்டுத்தான் மறைவேன்” என்றுதான் போலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் கலைவாணரின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் மறைந்தார்கள்! அவரது கடைசிப் பொதுநிகழ்ச்சி அதுதான்!

அதுபோலவே கலைவாணரும் சேலம் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்களது உருவப் படத்தைத் திறந்து விட்டுத்தான் மறைந்தார்! அதுதான் அவரது கடைசிப் பொது நிகழ்ச்சி!

கலைவாணர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பற்றிப் பலர் கூறினார்கள்.

என்னுடன் தொடர்பு கொண்டுள்ள செய்திகளை நான் கூறுவது தற்பெருமைக்கு என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

மறைந்தவர்கள் திரும்பி வந்து இல்லையென்றா கூறப் போகிறார்கள் என்ற நினைப்பிலும் இது கூறப்படுவதல்ல!

கலைவாணர் அவர்களே தம் கைப்பட்ட எழுதிய கட்டுரையில் உள்ளதைக் கூறுகிறேன்.

“மணமகன்” திரைப்படம் கலைவாணரால் தயாரிக்கப்பட்டு கிருஷ்ணன் பஞ்சு ஆகியோரால் இயக்கப்பட்டது. நான்தான் உரையாடல் தீட்டியவன்.

ஒருநாள் என் அறையில் அமர்ந்து-மின் விசிறிக்கு கீழே காட்சிகளை வேக வேகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மின்விசிறியின் வேகத்தால், எழுதப்பட்ட காகிதங்கள் கீழே பறந்து விழத் தொடங்கின. அவற்றை எடுத்து வைத்துவிட்ட பிறகு எழுத முடியாத காரணத்தால் அதைப் பற்றிக் கவனியாமல் எழுதிக் கொண்டேயிருந்தேன்.

இரண்டு மூன்று காட்சிகள் எழுதிவிட்டுப் பார்க்கிறேன்! கீழே பறந்து விழுந்த காகிதங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டு மேசையில் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து பின்னால் திரும்பிப் பார்த்தேன், யார் இதை அடுக்கியது என்று? கலைவாணர் நின்று கொண்டிருந்தார்.

நான் பதறிப் போய் “நீங்கள் இதைச் செய்யலாமா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர் “நீங்கள் எழுதுவதைப் பார்க்க ரொம்ப நாளாக ஆசை! இன்று இது நிறைவேறியது!” என்றார்.

இந்த நிகழ்ச்சியை அவர் ‘மணிமகுடம்’ நூறாவது நாடக விழா மலரில் கட்டுரையாக எழுதியிருக்கிறார்.

அத்தகைய பெருந்தன்மை மிக்க கலைவாணரின் ஆதரவில் இருந்து அரிய கருத்துக்களைத் தமது பாடலின் மூலம் தந்தவர் உடுமலை நாராயணக் கவிராயர் அவர்கள்! இவருக்குப் பொற்கிழி அளித்து ஊக்கப்படுத்திட வேண்டும் என்று விரும்பிய நடிப்பிசைப் புலவரை நாம் மறக்க முடியாது.

வேலூர் மருத்துவமனையில் சாவோடு போராடிக் கொண்டிருந்த நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமியை நான் காணச் சென்றபோது - அவர் கூறிய கடைசி ஆசைதான் இன்று இந்த நிகழ்ச்சியாக இங்கு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

முதற் பதிப்பு : மே 2000