‘இசைத்தமிழின் உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டுவிழா
பகுதி 2 · 2 / 2
குடும்பத்திற்கே உரிய பண்பு, அந்தக் குடும்பத்திற்கே உரிய அடக்கம் இந்த நூலில் தொனிக்கின்றது. இந்த நூலிலே எழுதுகிறார்...
“இசையின் வரலாறு மறக்கப்பட்டிருக்கிறது; மறைக்கப்பட்டிருக்கிறது. உண்மை விளக்கம் எந்த நூலிலும் காண முடியாது. ஆதலின் நான் ஏற்றுக் கொண்ட முதற்கடமையாக இதுகாறும் தமிழிசை வரலாற்றைக் கூறிய நூல்கள் இந்த ஒரே காரணத்தினால் உண்மை வரலாற்றைக் கூறவில்லை என்று திட்டவட்டமாகக் கூறுவேன். அதை யாரும் மறுக்க முடியாதென்றும் நான் அறிவேன். இசையின் உண்மை வரலாறு கூறப்படவில்லை என்பதை உணர்ந்து, அதன் பிறகு அதைத்தேடி உங்களுக்கு நான் கூறுகிறேன் என்று சொன்னால் அதுவும் உண்மையாகாது.”
எவ்வளவு அடக்கமான சொற்றொடர் என்பதை எண்ணிப் பாருங்கள்.
இந்த உண்மையான வரலாறு நான் தேடிச் செல்லாமலேயே என் மடியில் வந்து தானே விழுந்தது என்று கூறலாம்.
இதற்கு உவமையும் கூறுகிறார்... அவர் இசை வாணர் மாத்திரமல்ல. குழல் மேதை மாத்திரமல்ல. இசையைப் பற்றி மிக அருமையாக எழுதியிருக்கின்ற இந்த நூலாசிரியர் மாத்திரமல்ல. ஒரு நல்ல எழுத்தாளர். (கைத்தட்டல்) அந்த எழுத்து வன்மையிருந்தால்தான் சொல்ல வந்த கருத்தைப் பதிய வைக்கமுடியும். எவ்வளவு அழகாக இந்தக் கருத்தைப் பதிய வைக்கிறார் என்று பாருங்கள். சொல்கிறார்.
“பல ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவிகடன் என்ற இதழில் தேவன் என்பவர் துப்பறியும் சாம்பு என்ற கதையை எழுதினார். இச்சாம்பு குற்றவாளிகளைத் தேடி
அலைய மாட்டார். தடயங்களைத் தேடிச் செல்ல மாட்டார். குற்றத்திற்குரிய தடயங்கள் தாமாகவே அவரிடம் வந்து சேரும். குற்றவாளிகளும் தாமாகவே அவரிடம் அகப்பட்டுக் கொள்வார்கள். அப்படி ஒரு நிபுணர் இருந்ததாகக் கதை சித்தரிக்கும். அதுபோல இந்த உண்மை வரலாற்றை நான் தேடிச் செல்லவில்லை. அது தானாகவே என்னை நாடி வந்தது. இசைத் தமிழின் உண்மை வரலாற்றைப் பொறுத்த வரை அதை உணர்த்தும் என் பங்கு, துப்பறியும் சாம்புவின் பங்கு போலத்தான்.”
இப்படி மிகுந்த அடக்கத்தோடு தன்னை உயர்த்திக் கொள்கின்ற மனப்பான்மை இல்லாமல் தன்னால்தான் இதைச் செய்ய முடிந்தது. இதற்காக இத்தனை நூல்களைப் படித்தேன் என்கிற அந்த மனப்பான்மை இல்லாமல் தனக்கே உரிய, அந்தக் குடும்பத்திற்கே உரிய பண்பாட்டோடு இந்தச் சொற்றொடர்களை அவர் கையாண்டிருக்கிறார்.
இந்த நூலாசிரியர் மேலும் எழுதியிருக்கிறார்.
“கர்நாடக இசையின் அடிப்படையில் எழுந்த நூல்களைப் பார்த்தோ தமிழ் இசையின் அடிப்படையில் மட்டும் எழுந்த நூல்களைப் பார்த்தோ நான் மன நிறைவு கொள்ள முடியவில்லை. கர்நாடக இசையைப் பற்றி எழுதியவர்களை நம்பவேண்டுமாயின் இந்த இசை மரபு எங்கோ வடநாட்டில் பிறந்து வளர்ந்து பல தேசங்கள் வழியாகத் திரென்று நமது நாட்டில் வந்து குதித்து விட்டதைப் போல ஒரு தோற்றத்தை நமக்கு அளிக்கிறார்கள். அதனால் நாம் மன நிறைவு கொள்ள முடியவில்லை.
அது நமக்குச் சற்றும் ஏற்றதாகத் தோன்றவில்லை.”
இது அவர் திராவிட இயக்கப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர் என்பதற்காக எழுதப்பட்ட வரிகள் அல்ல. உண்மை வரலாறு என்பதற்காக எழுதப்படுகின்ற வரிகள்.
“தமிழிசையைப் பற்றி எழுதுகிறவர்கள் ஏதோ ஓர் அசைக்க முடியாத நம்பிக்கையில் கர்நாடக இசை, தமிழ் இசை என்று கூறுகிறார்களே ஒழிய, அதற்குரிய காரணங்களை அவர்கள் எடுத்துரைக்கத் தவறியது மட்டுமின்றிக் கர்நாடக இசையை ஒரு சந்தேகக் கண்ணுடனே பார்க்கிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது.”
என்றும் குறிப்பிடுகிறார்.
“இந்த நூலை நான் எழுதுவதற்கு முன், சென்னை மியூசிக் அகாடமி என்றழைக்கப்படும் வித்வத் சபையினர், திருமதி செல்லம்மா நடராசன் அவர்கள் ஏற்படுத்திய அறக் கட்டளையின் கீழ் என்னை இசையைப் பற்றி ஒரு கட்டுரை வழங்குமாறு அழைத்தனர். அவர்கள் கொடுத்த தலைப்பு Contribution of Tamil to Karnatic Music - என்பது, அஃதாவது கர்நாடக இசை வளர்ச்சியில் தமிழின் பங்கு என்ற தலைப்பாகும். நானும் மேற்கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதினேன்.
எழுதி முடித்த பிறகு தான் அவர்கள் கொடுத்த தலைப்பு - அதற்குப் பொருந்தாது என்று அறிந்தேன். கர்நாடக இசை என்பது வேறு. தமிழ் இசை என்பது வேறு. தமிழ் அந்த இசை மரபில் ஒரு பங்கு எடுத்துக் கொண்டது என்பதை இக்கட்டுரை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழிசைதான் கர்நாடக இசையாகப் பரிணமித்து என்பது என் கட்டுரையின் முடிவாக இருந்தது. ஆதலின் மீண்டும் அவர்களுக்கு எழுதினேன். நான் எழுதிய கட்டுரைக்கு நீங்கள் கொடுத்த தலைப்பு பொருந்தவில்லை.
ஆகையால் அதை - New light on the Musical History of Tamil Nadu - என்று மாற்றியமைக்கலாம் என்று கேட்டுக் கொண்டேன். இந்த
வேண்டுகோளுடன் கட்டுரையின் நகல் ஒன்றையும் அவர்களுக்கு அனுப்பிவைத்தேன். அவர்களும் என்னுடைய உணர்வுகளையும் எண்ணத்தையும் உணர்ந்து இந்தப் புதுத் தலைப்பை ஏற்றுக் கொண்டார்கள். இந்தத் தலைப்பைத் தென்னக இசையிலே ஒரு புதிய பார்வை என்று கொள்ளலாம். இதே தலைப்பை மாற்றித் தான் - இசைத் தமிழின் உண்மை வரலாறு - என்று இந்நூலில் நான் அளிக்கிறேன்.”
என்று எழுதியிருக்கிறார்.
இது மிக மிக முக்கியமான ஒரு பகுதி, இந்த நூலில் என்று நான் திட்டவட்டமாகச் சொல்வேன். ஏனென்றால் தமிழிசை வேறு, கர்நாடக இசை வேறு. தமிழிசையின் பங்கே கர்நாடக இசைக்கு இருந்தது என்ற வாதத்திற்கு மாறாக - எதிராக தமிழிசைதான் கர்நாடக இசையாகப் பரிணமித்து என்ற கட்டுரை தீட்டிய பிறகு - Contribution of Tamil to Karnatic Music - என்ற தலைப்பு நிச்சயமாகப் பொருந்தாது. உண்மை வரலாற்றைச் சொல்கின்ற வகையிலே கமலத் தியாகராஜன் உலகத்திற்கு எடுத்துக் கூறியிருக்கிறார்.
தமிழிசைதான் கர்நாடக இசையாகப் பரிணமித்து என்பது என் கட்டுரையின் முடிவாக இருந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். இப்படித் தமிழிசையின் மேன்மையைப் பரப்புகின்ற வகையிலே இந்த நூல் அமைந்திருக்கின்றது.
இங்கே திருப்பாம்பரம் சண்முகசுந்தரம் குறிப்பிட்டார். கமகம் பற்றி குறிப்பிட்டுப் பாடியும் காட்டினார்கள். அந்தக் கமகம் யாழிலே பொருந்தாத காரணத்தால் - பொருந்திவராத காரணத்தினால்தான் யாழே ஒழிந்தது என்ற நிலையை கமலத் தியாகராஜன் குறிப்பிடுகிறார்.
கமகம் இல்லாமல் பாட்டுப்பாடினால் அந்தப் பாட்டு சுவைக்காது என்பதை மிக அழகாக இந்த நூலிலே எழுதியிருக்கிறார்.
- இசை தெரிந்தவர்கள் கமகம் இல்லாமல் பாடினால் அவர் மொட்டையாகப் பாடுகிறார் என்று கூறுவது வழக்கம். பொது வழக்கில் மொட்டை என்றால் மயிரில்லாத ஒரு நிலையைக் குறிக்கும். இலக்கியத்தில் கவரிமான் மயிரை நீக்கினால் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. (சில விஷயங்களைக் கூறும்போது Out of the Way என்று கூறுவார்கள்.)
அதைப்போல இதைச் சொல்லும்போதே கவரிமானின் அந்தத் தன்மையைப் பற்றி எடுத்துக் கூறுகிறார். ஒரு மயிரை இழந்தால் கூட கவரிமான் உயிர் வாழாதென்று மானத்தின் அந்த உயர்வை எடுத்துக் காட்டுகிறார். சிலபேர் முழுக்க மொட்டை அடித்தால்கூட மானம் போகவில்லை என்று இருப்பவர்கள் எல்லாம் நாட்டிலே உண்டு. சிலர் திருக்குறளையே மாற்றிப் பாடுகிறார்கள் - மயிர் நீப்பின் வாழா கவரிமான் அனையர் உயிர் நீப்பர் மானம் வரின் - என்ற பாடலை மாற்றி - உயிர் நீப்பின் வாழா கவரிமான் அனையர் மயிர் நீப்பர் மானம் வரின் - என்று பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் கமலத் தியாகராஜன் குறிப்பிடுகிறார்.
‘இலக்கியத்தில் கவரிமான் மயிரை நீக்கினால் தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. மனிதனும் மயிர் தன் தலையில் இருக்கும்வரை அதற்குப் பெருமதிப்பு கொடுக்கிறான். தலையிலிருந்து நீங்கி விட்டால் அதைக் கண்டு அருவருப்புக் கொள்கிறான் - தலையின் இழிந்த மயிரனையார் மாந்தர் நிலையின்
இழிந்தக்கடை - என்ற குறள் தலையின் நீங்கிய மயிரை மனிதன் எவ்வாறு மதிக்கிறான் என்பதையும் காட்டுகிறது. மொட்டை என்பது தலையில் மயிர் இல்லாத நிலையை மட்டும் குறிப்பதில்லை. ஒரு பெண்ணைக் குறிக்கும்போது மொட்டைக் கழுத்து, மொட்டைக்கை என்று சொல்லும்போது அவ்வுறுப்புகளில் ஆபரணம் அணியாத நிலையைக் குறிக்கும். முன்னர் கூறப்பட்ட உவமைகளை நோக்கும்போது கமகம் இல்லாமல் பாடுவது மொட்டையாகப் பாடுவதாகக் கூறுவது பொருத்தமாகவே தெரிகிறது” என்று கமகம் இல்லாமல் பாடுகின்ற பாட்டு, மொட்டைப் பாட்டு என்று சொல்லுவதற்காக இவ்வளவு உவமைகளை எடுத்துக் கையாண்டுள்ளார்.
எனவே ஒரு சிறந்த மேதையாக மாத்திரமல்ல. அவர் சிறந்த பொறியாளராக மாத்திரமல்ல. சிறந்த எழுத்தாளராகவும் எனக்குப் போட்டியாக அவர் விளங்குகிறார் (கைத்தட்டல்) என்பதை எடுத்துக்கூறி அவருடைய தொண்டு வாழ்க, சிறந்திடுக என்று குறிப்பிட்டு இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.
5-10-98 அன்று சென்னையில் ‘இசைத்தமிழின் உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை
