‘இசைத்தமிழின் உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டுவிழா
பகுதி 1 · 1 / 2
‘இசைத்தமிழின் உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டுவிழா
நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய திருமதி ரேவதி சங்கரன் அவர்கள் நான் பேச வருவதைப் பாயாசம் என்று குறிப்பிட்டார்கள். எந்த உணவு அருந்துகின்ற நேரத்திலும் பாயாசம் இறுதியாக வருவதில்லை. இறுதியாக தயிர் சாதம்தான். அந்தத் தயிர் சாதம் உள்ளே இறங்குவது என்றால் ஊறுகாய் இல்லாமல் முடியாது என்பதை இங்கே தன்னை ஊறுகாய் என்று உவமைப்படுத்திக் கொண்ட நண்பர் சத்தியசீலனுக்கு நான் கூறி அவருக்கு ஆறுதல் வழங்குகின்றேன்.
(சிரிப்பு)
சேக்கிழார் மன்றத்தின் சார்பில் ராகப்பிரியாவின் ஒத்துழைப்போடு நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சி பி.டி.ஆர். கமலத் தியாகராஜன் எழுதிய “இசைத் தமிழின் உண்மை வரலாறு” என்ற நூலை வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இந்த நிகழ்ச்சியிலே ஆற்றிய உரைகளையெல்லாம் நானும் கூர்மையாகக் கவனித்தேன். நீங்களும் கூர்மையாகக் கவனித்திருக்கிறீர்கள்.
திருப்பாம்பரம் சண்முகசுந்தரம் அவர்கள் கடந்த சில நாட்களாகவே தயார்செய்துகொண்டு இங்கே ஒரு போட்டி மனப்பான்மையோடு பட்டிமன்றம் நடத்த அதிலும் தனக்குச் சரி என்று பட்டதை எடுத்தியம்பப் போகவே வந்ததைப் போல வந்து கருத்துக்களை
உதிர்த்தார். நான் அவரைப் பெரிதும் பாராட்டுகிறேன். இன்னொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தாருங்கள், அங்கே பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். எனக்கு இதுபோன்ற சுவையான விவாதங்களைக் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். ஏனென்றால் நமக்குத் தெரியாதவற்றை, தெரிந்தவர்கள் விவாதித்து, ஒரு முடிவுக்கு கொண்டு வரும்போது அதையேற்றுக் கொள்கிற இடத்திலே உள்ள நமக்குப் பெரும் இன்பம். அந்த இன்பத்தை விரைவிலே பெறுவதற்கான ஏற்பாட்டை நானும் செய்வேன்.
நண்பர்களும் செய்வார்கள் என்று அவருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு முதலமைச்சர் என்பதால் எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பார் என்று நீங்களும் எண்ணக் கூடாது. ஏனென்றால் இங்கே நன்றியுரை ஆற்றிய தியாகராஜன் குறிப்பிட்டதைப் போல, ஒரு இசைக் குடும்பத்திலே பிறந்தவன் நானென்றாலும், என்னுடைய தந்தை அந்தக் காலத்தில் சிறந்த இசை மேதை என்றாலும் - திருவாவடுதுறையார், திருவெண்காட்டார் போன்றவர்கள் எல்லாம் தங்கள் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள திருக்குவளைக்கு வந்து என் தந்தையிடம் விவாதித்து சிலவற்றைக் கற்றுச் செல்வார்கள் என்ற நிலையிலே வாழ்ந்த மேதை என்றாலுங்கூட, நான் அந்தத் துறையில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
அதற்கான காரணத்தை சில நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறேன். நான் இளம்பிள்ளையாக வளர்ந்த அந்தக் காலத்தில் இசைப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டேன். ஆனால் எனக்கு இசை கற்றுத் தந்த ஆசிரியர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் எல்லாம் அந்த ஊரிலே இருக்கின்ற பெருந்தனக்காரர்கள், பெரிய மனிதர்கள், உயர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வீதியிலே வருகிற நேரத்தில்
தங்கள் தோளிலே இருக்கின்ற துண்டையெடுத்து இடுப்பிலே கட்டிக் கொள்கின்ற அந்த நிலையை கண்டேன். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை.
மறுநாளே இசை கற்றுக் கொடுக்கின்ற அந்த இல்லத்திற்குச் செல்வதை நானாகவே நிறுத்திக் கொண்டேன். என் பெற்றோரும் உறவினர்களும் என்னை வலியுறுத்தி மீண்டும் அங்கே அனுப்பி வைக்க முனைந்தபோது “சுயமரியாதை பறிக்கப்படுகின்ற இடத்திற்கு நான் செல்ல மாட்டேன். இசை கற்று நான் ஒரு மேதையானாலும் என் தோளிலே துண்டு போட்டுக் கொள்ள எனக்கு உரிமை இல்லையென்றால் அந்த இசை எனக்குத் தேவையில்லை” என்று சொன்னேன்.
(கைத்தட்டல்) இல்லாவிட்டால் இன்றைக்கு நான் உங்கள் முன்னால் ஒரு திருப்பாம்பரம் சண்முகசுந்தரமாக, ஒரு திருவெண்காடு சுப்பிரமணியமாக, ஒரு குளிக்கரை பிச்சையப்பாவாக, ஒரு திருவாடுதுறை ராஜரத்தினமாக அல்லது ஒரு சீர்காழி கோவிந்தராஜனாக விளங்கியிருக்க முடியும்.
ஆனால் இன்றைக்கு இசை அந்த அளவிற்கு மதிப்பற்றுப் போய் விட்டதா என்றால் இல்லை. அது மதிப்பற்றுப் போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் கமலத் தியாகராஜன் இசைத்தமிழின் உண்மை வரலாறு என்ற இந்த நூலை யாத்துத் தந்திருக்கிறார்.
அவர்களைப் பற்றி உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தி உரையாற்ற வேண்டிய அவசியமில்லை. தமிழகத்திலே ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் கமலத் தியாகராஜன். திராவிட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய பண்பாளர் பி.டி. ராஜன் அவர்களுடைய புதல்வர். நம்முடைய பேரவைத் தலைவர் பழனிவேல்ராஜன் அவர்களுடைய சகோதரர்.
அவர் இந்த நூலை எழுதி என்னிடம் தந்து, அணிந்துரை கேட்டபோது இதனைப் படித்துப் பார்த்த நேரத்தில் நான் வியப்படைந்தேன். ஏனென்றால் நான் மதுரையிலே அந்த இல்லத்திற்குப் பலமுறை சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் கமலத் தியாக ராஜன் அவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவருடைய இயல்பு, அதிகம் பேசாத தன்மை, பழக்க வழக்கம் இவைகளையெல்லாம் கண்டபோது இவ்வளவு பெரிய கருவூலத்தைத் தன்னுடைய மூளையிலே வைத்துக் கொண்டிருப்பார் என்றெல்லாம் அப்போது நான் தெரிந்து கொள்ளவில்லை.
இந்த நூலைப் படித்த பிறகு தான் அவர் எத்தகைய வித்தகர் என்று தெரிந்துகொள்ள முடிந்தது.
பி.டி. ராஜன் அவர்களுடைய குடும்பம் தமிழகத்திலே எல்லோருக்கும் தெரிந்த குடும்பம். அவர்கள் பெரும் பதவியிலே வீற்றிருந்தார்கள். அவருடைய இனிமையான சுபாவமும், எளிய வாழ்க்கை முறையும் எல்லோரையும் அரவணைத்துச் செல்கின்ற அந்தப் பண்பும் அவரைப் பண்பாளராக ஆக்கியது. தமிழவேளாக அவர்கள் திகழ்ந்தார்கள். அவருடைய வீட்டுச் செல்வங்களாக இன்றைக்கு விளங்குபவர்கள் தான் பேரவைத் தலைவராக வீற்றிருக்கின்ற பழனிவேல் ராஜன் அவர்களும், இந்த நூலாசிரியராக உங்களுடைய அன்பையும் போற்றுதலையும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ள கமலத் தியாகராஜன் அவர்களும் ஆவார்கள்.
இந்த நூலைப் பற்றி நான் பேசுவதென்றால் என்னுடைய இயலாமையை முதலிலேயே வெளியிடுவது தான் நாகரிகமாகும். எனக்கும் இசையைப் பற்றி எல்லாம் தெரியும் என்பதைப் போல பேசுவது நாகரிகமாகாது. எல்லாம் தெரியுமென்று யாரும் இருக்க முடியாது. சிலருக்கு சில விஷயங்கள் தாம் தெரியும். அதைப் போலத்தான் நானும். ஒரு முதலமைச்சர் என்பதற்காக ஒரு மருத்துவமனைக்குச் சென்று எனக்குத் தெரியாத
விஷயத்தில் தலையிட்டு, டாக்டரைப் பார்த்து எப்படி ஆப்பரேஷன் செய்கிறீர்கள் என்று அறுவை சிகிச்சையின் நுணுக்கங்களைப் பற்றிப் பேசினால் அது அமைச்சர் பதவியிலே இருக்கின்ற காரணத்தால் செய்யப்படுகின்ற அதிகாரப் பிரசங்கித்தனமே தவிர வேறல்ல. அதைப் போல இங்கேயும் நான் இசை நுணுக்கங்களை - இப்படியெல்லாம் இந்த நூலை கமலத் தியாகராஜன் எழுதியிருக்கலாம் என்பது போன்ற ஆய்வுகளை நான் இங்கே நடத்திக் கொண்டிருந்தால் அது வீண் வேலை, வேண்டாத வேலையும் கூட.
ஒரு கிரேக்க நாட்டு கதை உண்டு. அங்கே ஒரு ஓவியன் ஒவ்வொரு நாளும் தான் எழுதுகின்ற ஓவியங்களை தன்னுடைய ஓவியக் கூடத்திற்கு வெளியே வீதியிலே செல்பவர்களெல்லாம் பார்க்கத்தக்க வகையிலே வைப்பான். ஒரு நாள் ஒரு ஓவியத்தை எழுதி ஓவியக்கூடத்தின் வாசலிலே வைத்திருந்தான். அந்த வழியாகச் சென்ற ஒரு செருப்புத் தைக்கின்ற தொழிலாளி அந்த ஓவியத்தை உற்றுப் பார்த்துவிட்டு, அந்த ஓவியனிடம் ‘இந்த ஓவியத்தில் ஒரு குறை இருக்கிறது.
அதாவது இந்த ஓவியத்தின் காலிலே நீங்கள் போட்டிருக்கின்ற காலணி (செருப்பு) சரியாக இல்லை’ என்று அந்தத் தவறைச் சுட்டிக் காட்டினான். ஓவியனும் அதைப் பார்த்துவிட்டு, ‘ஆமாம் தவறுதான், திருத்திக் கொள்கிறேன்’ என்று நன்றி கூறி அனுப்பிவிட்டான்.
இதற்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஓவியன் ஓர் அழகான பெண்ணின் ஓவியத்தை வரைந்து அதையும் வழக்கம்போல் ஓவியக் கூடத்தின் முகப்பிலே வைத்தான். அன்றைக்கும் அந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி அந்த வழியாக வந்தான். ஓவியத்தைப் பார்த்து விட்டு நின்றான். ஓவியன் நெருங்கி
வந்து இதிலே என்ன குறை என்று கேட்டான். அப்பொழுது அந்தத் தொழிலாளி, ‘ஒன்றுமில்லை. இந்தப் புருவத்தை இன்னும் கொஞ்சம் ஒழுங்காக எழுதியிருக்கலாம்’ என்றான். உடனே ஓவியனுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘அப்பா. நீ செருப்போடு நில், இதற்கெல்லாம் வராதே’ என்று சொன்னான்.
(சிரிப்பு)
அதைப்போல நான் அரசியலோடு, கவிதையோடு, கலையோடு நிற்கவேண்டும். இசைக்கு வந்துவிட்டால், ஓவியன் அந்தத் தொழிலாளியைப் பார்த்துச் சொன்ன அந்தச் சொல்லை கமலத் தியாகராஜன் கூட என்னைப் பார்த்துச் சொல்லக் கூடும். (பலத்த சிரிப்பு)
இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசியவர்கள் தமிழ் மொழிக்கு இருந்த ஏற்றம் இன்றைக்குள்ள நிலை பற்றியெல்லாம் கூட சங்கடத்தோடு எடுத்துக் கூறினார்கள். முதலில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து - “நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்” - எனத் தொடங்குகின்ற மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடலை 1969-ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நமக்கென்று தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் ஒன்று தேவை என்று தேடிப்பார்த்து - இந்தப் பாடலையெடுத்து அதில் வருகின்ற ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா என்ற அமங்கலச் சொற்களையெல்லாம் வாழ்த்திலே இடம் பெறச் செய்ய வேண்டாம், ஏனென்றால் நல்ல விழாக்களில் அமங்கலச் சொற்கள் இடம் பெறக் கூடாதென்பதற்காக அவைகளை மாத்திரம் ஒதுக்கி வைத்துவிட்டு அந்தப் பாடலை அரசாங்க விழாக்களில் பாடுகின்ற தமிழ்த்தாய் வாழ்த்தாக அன்றைக்கு ஆக்கினோம்.
அந்தப் பாடலை நீங்கள் கவனித்தால் தெரியும். எத்திசையும் புகழ் மணக்க “இருந்த” பெரும் தமிழணங்கே என்று இருக்கின்றது.
அதாவது “இருந்த” தமிழ் என்றும் கூறலாம். எத்திசையும் புகழ் மணக்க அன்றைக்கு இருந்தது. ஆனால் (கைத்தட்டல்) இன்றைக்கு இல்லை என்ற பொருளும் இதற்குண்டு.
இன்றைய நிலையைச் கருதி அன்றைக்கு அப்படி இருந்ததே, இன்றைக்கு இப்படியிருக்கிறதே, என்று கவலைப்பட்டு - அதைப் புகழ்மிக்கதாக, போற்றுதற்குரியதாக, மதிப்பிற்குரியதாக, மாண்புக்குரியதாக ஆக்குவதற்கான முயற்சிகளிலே ஈடுபட வேண்டும் என்பதற்கான சூளுரையையும் நாம் மேற்கொள்ளலாம்.
இந்த நூலில் மிக அதிகமாக இடம் பெற்றிருக்கின்ற கருத்து யாழ் என்ற இசைக்கருவி எப்படி தமிழ் நிலத்தை விட்டு அகன்றது. தமிழ் இசையை விட்டு எப்படி அகன்றது என்பதற்கான காரண காரிய விளக்கங்களை கமலத் தியாகராஜன் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். யாழ் என்ற கருவி இப்போதில்லை என்று சொன்னாலுங்கூட, இன்றைக்கும் அந்த யாழ் என்ற சொல்லை நாம் விரும்புகிறோம். துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா என்று யாழ் இருக்கின்ற காலத்திலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடவில்லை.
யாழ் புழக்கத்தில் இல்லாத இந்தக் காலத்திலேதான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இந்தப் பாடலை பாடியிருக்கிறார். ஏனென்றால் யாழ் என்ற சொல்லை உச்சரிக்கும்போதே அவ்வளவு இனிமை இருக்கின்றது.
யாழ் இன்றைக்குப் புழக்கத்தில் இல்லை. அது எப்படித் தமிழகத்திலிருந்து போய்விட்டது என்பதற்கான காரணங்களையெல்லாம் இந்த நூலாசிரியர் ஆராய்ந்திருக்கிறார். அதற்காக நூற்றுக்கணக்கான நூல்களை எல்லாம் படித்திருக்கிறார். அப்படிப் படித்து ஆராய்ந்து அறிந்து இந்த நூலை எழுதியிருந்தாலுங்கூட, அந்தக்
