உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

இருமொழி போதும்

பகுதி 2 · 2 / 2

வாதிடுவது சுலபம். ஏனென்றால் வாதிடுபவர்கள் அவைகளைப் புதிதாக கற்றுக் கொள்ளப் போவதில்லை. அவை இளந்தலைமுறையினரின் தலைகளில் சுமத்தப்படுவதை நாம் மறந்து விடக்கூடாது.

இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் இரண்டு மொழிதான் படிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு மொழிப் பிரச்சினையால் பதவிகளைப் பறிகொடுத்த ஒரு வயதான பெரியவர், தான் இனிமேல் படிக்கத் தேவையில்லை என்பதால், இந்தி இந்தியாவுக்கு - தமிழ் தமிழ்நாட்டுக்கு - இங்கிலீஷ் அகில உலகத் தொடர்புக்கு - என்று பேசுகிற நேரத்தில், தமிழ் நாட்டிலிருக்கிற நம் வீட்டுப் பிள்ளைகள் நம் மாநிலப் பயனுக்காகத் தமிழையும், இந்தியத் தொடர்புக்காக இந்தியையும், அகில உலகத் தொடர்புக்காக ஆங்கிலத்தையும் - ஆக மூன்று மொழிகளைப் படிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகிறார்கள்.

அதே நேரத்தில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையோ - மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையோ, பீகாரைச் சேர்ந்த ஒரு பிள்ளையோ படிக்க வேண்டியது, தனது தாய் மொழியான இந்தி, அடுத்து ஆங்கிலம்! இரண்டே மொழிகள்தான். அவர்களுடைய சுமை முடிகிறது அதோடு.

நம்முடைய பிள்ளைகள் மூன்று மொழிகளைப் படித்துப் பிறகு இரண்டு மொழி படித்தவர்களோடு போட்டிபோட வேண்டியிருக்கிறது.

தாய்மொழியான இந்தி மொழியைப் படிக்கிறவர்களோடு நாம் பிற மாநில மொழியான இந்தியைப் படித்துப் போட்டி போட வேண்டியிருக்கிறது.

இதைச் சொன்னால் அனைவருக்கும் ஆங்கிலம் இருப்பதைப்போலப் பிற மாநிலங்களோடு தொடர்பு கொள்ள இந்தி வேண்டாமா என்று கேட்கிறார்கள்.

ஒரு வேடிக்கையான கதை. ஒரு பெரிய விஞ்ஞானியின் வீட்டில் நடைபெற்றதாகச் சொல்வார்கள்.

அந்த மகத்தான விஞ்ஞானி ஒரு அழகான பூனை வளர்த்தான். அது உள்ளே வந்து போவதற்காகச் கதவில்

ஒரு பெரிய ஓட்டையைச் செய்தான். அந்தப் பூனையும் அதன் வழியே வந்து போய்க் கொண்டிருந்தது. சில நாளில் அந்தப் பூனை ஒரு குட்டி போட்டது.

அந்தப் பெரிய விஞ்ஞானி, பெரிய துவாரத்திற்கு அருகே இன்னொரு சிறிய ஓட்டையைப் போட்டான். இது எதற்காக என்றார்கள் அவனுடைய நண்பர்கள். குட்டி வந்து போவதற்காக என்றான் அந்த விஞ்ஞானி. பூனைக்காக உள்ள பெரிய ஓட்டையிலேயே குட்டியும் வந்து போக முடியாதா என்று அவர்கள் கேட்ட பிறகுதான்... ஆகா, இந்த யோசனை நமக்கில்லாமல் போயிற்றே என்று நினைத்தானாம் அந்த விஞ்ஞானி!

அதைப் போல அகில உலகத் தொடர்புக்கு ஆங்கிலம் பொது மொழி என்றால், தொடர்பு மொழி என்றால், பக்கத்திலிருக்கிற மாநிலங்களோடு தொடர்பு கொள்ளவும் அந்த ஆங்கிலம் போதுமா, போதாதா?

பூனை போகிற அந்தத் துவாரத்தில் குட்டியும் போகுமா போகாதா? இதுதான் இன்று நாம் எழுப்புகிற வாதம். இந்த வாதத்தை மற்றவர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏற்கெனவே சொல்லிவிட்டோமே, இந்தி இந்தியாவில் இருக்க வேண்டும் என்று; அதிலிருந்து எப்படிப் பின் வாங்குவது என்ற சங்கடம் அவர்களுக்கு.

இரண்டாவதாக, இருமொழி போதுமென்று சொல்கிறார்களே, சாதாரணமானவர்கள் சொல்லுகிறார்களே, அதைக் கேட்பது தம்முடைய கௌரவத்திற்கு இழுக்காகும் என்று நினைப்பதால்தான் இன்று மீண்டும் இந்தி நுழைக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார்கள். அவர்களுடைய முயற்சிகள் வலிவை பெறுவதற்கான வேலைகள் இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றன.

முத்தமிழ் விழா நடைபெறுகிற இடத்தில், நம்முடைய சமுதாயத்திற்கு, நம்முடைய மொழிக்கு, மொழி உரிமைக்குத் தமிழர்களுடைய எதிர்காலத்திற்கு ஏற்பட்ட

விருக்கின்ற அந்த விபத்துக்களையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இதை எல்லாம் உங்கள் காதில் போட்டு வைத்தேனல்லாமல் வேறல்ல.

இப்படிப்பட்ட விழாக்களில் நம்முடைய பழம் பெரும் வரலாறுகளை எடுத்துக் காட்டும் வகையிலும், இலக்கியச் செல்வங்களை விளக்கும் தன்மையிலும், நம் வீரர்கள் பெற்ற வெற்றிகளை எடுத்துக் காட்டுகின்ற வகையிலும், நம் புலவர் பெருமக்கள் காட்டிய கல்வித் திறனை எல்லாம் எடுத்துச் சொல்கிற வகையிலும் நல்ல நல்ல நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

1972-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் நாள் பட்டினப்பாக்கத்தில் நடந்த முத்தமிழ் விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவு.

முதற் பதிப்பு : மே 2000