உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

இருமொழி போதும்

பகுதி 1 · 1 / 2

இருமொழி போதும்

தமிழை வளர்க்க வேண்டும். அதனுடைய வலிமைப் பொலிவை நாடு அறியச் செய்ய வேண்டும். தமிழால் வளர்ந்தவர்கள் நாம்-தமிழால் செழித்தவர்கள் நாம் - அந்தத் தமிழை வளர்ப்பதிலும் செழிக்க வைப்பதிலும் நமக்கு நீங்காத கடமை உணர்ச்சி உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஆளுகிற பொறுப்பை ஏற்றுக்கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்களும், அவர் மறைவுக்குப்பின் அவர் வழி நின்று அவரது பொன்னான கொள்கைகளை நிறைவேற்றச் சூளுரைத்துச் செயல்படுகின்ற நாங்களும் எங்களால் இயன்ற அளவு தமிழைத் தமிழகத்திலும், வேறு பிற இடங்களிலும் பரப்புவதற்கு முனைந்து முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.

அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டாகத்தான் பல நாட்களாக ‘போர்ஷோர் எஸ்டேட்’ என்று அழைக்கப்பட்ட பகுதி பட்டினப்பாக்கம் என்ற புதிய - அல்ல அல்ல, பழைய தமிழ்ப் பெயரைப் பெற்ற நிகழ்ச்சியாகும்.

பாக்கங்கள் என்பவை தமிழ்நாட்டில் பண்டை நாட்களில் மக்கள் வாழ்கின்ற குறிப்பிட்ட பகுதிக்கு வைக்கப்படுகிற பெயர்களாகும்.

குப்பங்கள் என்றும், பாக்கங்கள் என்றும் அந்த நாளில் தமிழர்கள் தாங்கள் வாழ்கிற இடங்களுக்குப் பெயர்களை அமைத்துக் கொண்டார்கள். பெரும்பாலும்

கடற்கரையோரங்களில் வாழ்கிற தமிழ்ப் பெருங்குடி மக்கள் அப்பகுதியைப் பாக்கம் என்றே அழைத்தார்கள்.

காவிரிப் பூம்பட்டினத்தில் - மருவூர்ப்பாக்கம் என்ற அழகிய தமிழ்ச் சொல், அப்பகுதியில் கடற்கரையோரத்தில் மக்கள் வாழ்கிற பகுதிக்கு இடப்பட்டிருந்ததைச் சிலப்பதிகாரம் மூலம் அறியலாம்.

ஆகவே கடற்கரைப் பகுதியில் இருக்கிற இந்தப் பகுதிக்குப் பட்டினப்பாக்கம் என்ற பெயரை வைப்பது மிகப் பொருத்தம் என்று இந்த அரசு கருதுகிறது. பல பேர் இது புரியுமா என்று கேட்டார்கள். வாயில் நுழையுமா என்று வினா எழுப்பினார்கள். வழக்கத்திற்கு வருமா என்றார்கள்.

அதைப் போலவே கெல்லீஸ், கிண்டியூர் ஆகியது. பாரிஸ் பாரிமுனை ஆகியது. இவையெல்லாம் இன்று வழக்கத்திற்கு வந்துவிட்டன. இதுபோலவே மற்ற இடங்களின் பெயர்களையும் மாற்றிட வேண்டும் என்கிற எண்ணம் இன்றைய தினம் மக்களிடையே ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

தமிழுக்குப் பொற்காலம் ஒன்றிருந்தது. அதன் பிறகு கற்காலம் - அது நாம் தமிழைக் கவனிக்காமலிருந்த காலம். இப்போது மீண்டும் தமிழுக்குப் பொற்காலம் வந்துவிட்டது.

குழந்தையைக் கோகிலமே என்று கொஞ்சு; மழலையை மாணிக்கமே என்று கொஞ்சு; என்று தாயிடத்திலே சொல்லுவது எவ்வளவு நகைப்பிற்குரியதோ, அதே போன்றுதான் தமிழனிடம் தமிழை ஓம்பு, தமிழைக் காப்பாற்று என்று கூறுவதுமாகும்.

முத்தமிழ், முக்கடல், மும்முரசு என்றெல்லாம் பழம் பெருமையை நாம் அவனிக்குச் சொல்லிச் சொல்லி வீங்கு புகழ்பெற்ற நாடு நம்முடைய நாடு என்ற அந்தப் பழம் பெருமையை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால் பேசுவதோடு விட்டால் நம்முடைய தமிழ் வெறும்

காப்பியத் தமிழாக, இலக்கியத் தமிழாக, செய்யுள் தமிழாக இந்த அளவோடு முடங்கி விட்டால் போதாது என்பதற்காகத்தான் தமிழ் பயிற்று மொழியாக வரவேண்டும் என்று நாம் கருதுகிறோம்.

தமிழில் விஞ்ஞானச் சொற்கள் வந்தாக வேண்டும். அறிவு உலகில் விரைந்து நடைபெோட்டக்கூடிய அளவில் தமிழில் புதிய புதிய சொற்கள் வளர்ந்தாக வேண்டும். அவை கண்டுபிடிக்கப்பட வேண்டாம்.

ஆங்கிலமென்றால்-உலகத் தொடர்புக்கு-அனைத்து நாடுகளின் தொடர்புக்குத் தேவை. இதே நேரத்தில் நம்முடைய நாட்டில் நம்முடைய தாய்மொழி வளர்ந்திடல் என்பது இன்றியமையாத ஒன்று. ஆகவே தான், நாம் இருமொழிக் கொள்கையை வலியுறுத்துகிறோம்.

நம் மாநிலத்தில் தேவையானது தமிழ். மற்ற மாநிலத்தோடு தொடர்பு கொள்ளவும், பிறநாடுகளோடு தொடர்பு கொள்ளவும், அனைத்து உலகிற்குத் தேவையானது ஆங்கிலம்.

ஆகவே, இந்த இரண்டு மொழி போதும் என்கிற வலிமை! மிகுந்த வாதத்தை நாம் எடுத்துச் சொல்லி வருகிறோம்.

“தமிழ் நாட்டுக்குத் தமிழ் - இந்தியாவிற்கு இந்தி - அனைத்து உலகத்திற்கு ஆங்கிலம்” என்று சிலர் வாதிடுகிறார்கள்.

முதற் பதிப்பு : மே 2000